Published:Updated:

மிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார்

மிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார்

மிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார்

மிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார்

மிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார்

Published:Updated:
மிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார்
மிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார்

ழுகார் உள்ளே நுழைந்ததும் தனது சிறகுகளுக்குள் இருந்து துண்டுக் காகிதங்களை எடுத்தார்.

காத்திருந்தோம்.

‘‘பி.ஜே.பி., அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா ஆகிய நான்கு கட்சிகளும் சேர்ந்து ஓர் அணியை அமைக்க உள்ளன’’ என முதல் குறிப்பைக் கொடுத்தார்.

‘‘அதற்குள் தேர்தலுக்குத் தயார் ஆகிறார்களா?’’

‘‘டெல்லி பி.ஜே.பி தலைமை இப்போதே உஷாராகக் காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டது. தமிழக ஆட்சியை தினகரன் எப்போது வேண்டுமானாலும் கவிழ்ப்பார் என்பதுதான் மத்திய உளவுத்துறை அனுப்பி இருக்கும் தகவல். எனவே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னிலைப்படுத்தி சில முயற்சிகளைச் செய்யப் போகிறார்கள். ‘அமித் ஷாவின் தமிழக வருகை அதற்கு அடித்தளம் போடுவதாகவே அமையும்’ என்கிறார்கள். நம்புவதற்குச் சிரமமாக இருக்கலாம். ஆனால், இப்படித்தான் அரசியல் பாதை போகிறது. இதுவரை பி.ஜே.பி இங்கு ஏதாவது ஓர் அணியுடன் தன்னை இணைத்துக்கொள்ளும். இப்போது பி.ஜே.பி தலைமையில் அணி உருவாகப் போகிறதாம். அந்த அணியில் அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா இடம்பெறுவது உறுதி.’’

‘‘அ.தி.மு.க-தான் மூன்று அணிகளாக இருக்கிறதே... பிறகு எப்படி பி.ஜே.பி அமைக்கும் அணியில் இணையும்?’’

‘‘விரைவில் அ.தி.மு.க ஒரே அணியாகிவிடும். சுதந்திர தினத்துக்கு முன் டெல்லியில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகியோரிடம் பி.ஜே.பி மேலிடம் அதற்கான உத்தரவுகளைக் கறாராகப் பிறப்பித்துவிட்டது. குறிப்பாக ஓ.பி.எஸ்-ஸுக்கு அதிகமாக அர்ச்சனைகள் செய்யப்பட்டு, சில கட்டளைகளும் கொடுக்கப்பட்டதாம். அதன்படி, முதல்வர் எடப்பாடி அணியோடு ஓ.பி.எஸ் அணியை இணைத்துவிடுவது நடக்கும். கட்சியில் ‘வழிகாட்டுக் குழு’ எனப் புதிதாக ஒரு குழுவை உருவாக்குவார்கள். இதில் இரண்டு அணிகளில் இருந்தும் தலா மூன்று பேர்கள் இடம்பெறுவார்களாம். ஆட்சியைப் பொறுத்தவரையில், ‘ஓ.பி.எஸ்-ஸுக்குத் துணை முதல்வர் பதவியும் நிதி மற்றும் பொதுப்பணித் துறைகளையும் கொடுப்பது. ஓ.பி.எஸ் அணியில் உள்ள இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது’ என நாம் முன்பு சொன்ன விஷயங்கள்தான் அடுத்தடுத்து நடக்க இருக்கின்றன!”

மிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ம்ம்ம்...”

‘‘இந்த வேலைகளைக் கச்சிதமாக ஓ.பி.எஸ் அணியும், இ.பி.எஸ் அணியும் செய்யப் போகின்றன. ‘சசிகலாவைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்தது செல்லாது’ என்ற அறிவிப்பு விரைவில் டெல்லியிலிருந்து வரும். அதனைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு ஓ.பி.எஸ் போட்டியிடலாம் என்றும் முடிவாகி உள்ளது. அதன்பிறகு ஒன்றுபட்ட அ.தி.மு.க இருக்கும் அல்லவா? அதனோடுதான் கூட்டணி வைக்க பி.ஜே.பி திட்டமிடுகிறது. இதெல்லாம் இடையூறுகள் இல்லாமல் நடந்தால் தமிழகத்தில் ஆட்சி நிலைக்கும். தினகரன் ஏதாவது செய்தால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும். அ.தி.மு.க-வாகப் பார்த்து ‘பி.ஜே.பி-க்கு எத்தனை இடங்கள்’ என்று ஒதுக்கும் நிலை இப்போது இல்லை.   பி.ஜே.பி சொல்லும் எண்ணிக்கையில் அ.தி.மு.க போட்டியிடும். பி.ஜே.பி நினைத்த இடங்களை வாங்கிக்கொண்டு, அ.தி.மு.க-வின் தோள்களில் சவாரிசெய்து, வாக்குகளை வாங்கி தனக்கான இடத்தைத் தமிழகத்தில் உறுதிப்படுத்தலாம் என்பதுதான் டெல்லியின் திட்டம்.”

‘‘ம்ம்ம்... இதற்கு பா.ம.க ஒப்புக்கொண்டதா?”

‘‘மத்தியில் ஆட்சி அமைத்ததுமே, அனைத்து சாதிக் கட்சித் தலைவர்களோடும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது பி.ஜே.பி. தமிழகத்தில் அந்த வேலையைச் செய்தவர் ஆடிட்டர் குருமூர்த்தி. அவர் தொடர்ந்து பா.ம.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். அதற்குப் பலனும் இருந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ‘திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை’ என்ற முடிவை எடுத்து, அதில் இன்றுவரை உறுதியாகவும் இருக்கிறார். முரசொலி பவள விழாவில்கூட அவர் கலந்துகொள்ளவில்லை. அவர் கட்சி சார்பிலும் யாரும் பங்கேற்கவில்லை. அவரைச் சந்தித்து அழைப்பிதழ் கொடுக்கப் போன தி.மு.க முன்னணித் தலைவர் ஒருவரிடம், ‘உங்கள் சகவாசமே வேண்டாம் என்றுதான் ஒதுங்கி இருக்கிறேன். மீண்டும் அதற்குள் இழுத்துவிடாதீர்கள்’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். அன்புமணியும் தி.மு.க-வோடு போக விரும்பவில்லை. தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணி என்பதால், வட மாவட்டங்களைப் பொறுத்தவரை பா.ம.க-தான் பெரியண்ணனாக இருக்கும். அந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் அதன்பிறகு தனி லாபியும் செய்யலாம் என்பது அவர்களுடைய எண்ணம்.”

‘‘த.மா.கா-வினர் பி.ஜே.பி அணியில் இணைவது குறித்து தயக்கம் இருப்பதாகக் கடந்த இதழில் சொல்லி இருந்தீரே?’’

‘‘ஜி.கே.வாசனின் மனமாற்றத்துக்கான காரணத்தைச் சொல்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே ஓ.பி.எஸ்ஸின் வழிதான், ஜி.கே.வாசனின் வழியாகவும் இருக்கிறது. அவர் சசிகலா தலைமையிலான அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து வந்தபோதே, ஜி.கே.வாசன் முதல் ஆளாகப் போய் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்தார். அதோடு, அவர் தி.மு.க-வோடும் தற்போது இணக்கமாக இல்லை. ‘ஐந்து இடங்கள், ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கிறேன்’ என்று ஜெயலிதா சொன்னார். ‘எனக்கு ராஜ்ய சபா சீட் கேட்டு நான் வரவில்லை. ஆனால் காங்கிரஸுக்கு இணையான சட்டமன்றத் தொகுதிகள் எனக்கு வேண்டும்’ என்று சொன்னார் ஜி.கே.வாசன். அதனை ஜெ. ஏற்கவில்லை. அதனால் மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தார். தேர்தல் முடிந்த பிறகு பன்னீர்செல்வத்துடன் கைகோத்தார். அது இன்றுவரை தொடர்கிறது. சமீபத்தில், முரசொலி பவள விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் போனில் பேசி இருக்கிறார். ‘கலந்துகொள்ள இயலாது. வாழ்த்துச் செய்தி தருகிறேன்’ என்று அனுப்பி வைத்தாராம் வாசன்.’’

‘‘தே.மு.தி.க-வை இணைக்க விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடக்குமா?”

‘‘தே.மு.தி.க-வுடன் இன்னும் யாரும் பேசவில்லை. அதை இவர்கள் யாரும் செய்யவும் மாட்டார்கள். விஜயகாந்த் இந்த அணிக்குள் வருவதை பா.ம.க-வும் விரும்பவில்லை. அ.தி.மு.க-வும் விரும்பாது. ஜி.கே.வாசனும் விரும்பவில்லை. விஜயகாந்த் வந்துவிட்டால், தங்கள் முக்கியத்துவம் குறைந்துவிடும் என மற்ற அனைவரும் கருதுகின்றனர்” என்று சொல்லி நிறுத்திய கழுகார், இரண்டாவது சீட்டை சிறகுகளில் இருந்து எடுத்துப் போட்டார்.

‘‘ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை, போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்றுவது என இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி. காரணம், சசிகலா குடும்பத்தைக் கட்சியைவிட்டு வேரோடு பிடுங்கி வெளியில் எறிவதுதான்.’’

மிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார்

‘‘விளக்கமாகக் கூறும்?”

‘‘ஜெயலலிதா மரணத்தைப் பொறுத்தவரை, அதில் நீதி விசாரணை கேட்டது பி.ஜே.பி-யின் பிளான். அதை ஓ.பி.எஸ் மூலம் கேட்க வைத்தது பி.ஜே.பி-தான். ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தபோதுகூட, ‘அம்மா மரணத்தில் மர்மம் இருப்பதாக எண்ணவில்லை’ என்றுதான் ஓ.பி.எஸ் சொன்னார். மறுநாள் டெல்லியில் இருந்து உத்தரவு வந்ததும், ‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது... எனவே, நீதி விசாரணை வேண்டும்’ எனக் கேட்க ஆரம்பித்தார். உச்சகட்டமாக ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின்போது, ஜெயலலிதாவின் உயிரிழந்த உடலைப்போல் பொம்மை செய்து வாக்குக் கேட்டனர். ‘சசிகலா குடும்பத்தை டேமேஜ் செய்வதற்கு வீரியமான அஸ்திரம் இதுதான்’ என பி.ஜே.பி கருதுகிறது. இப்போது அதையே எடப்பாடி பழனிசாமியும் சொல்கிறார் என்றால், அதற்கும் காரணம் பி.ஜே.பி-தான்.’’

‘‘இவ்வளவு நாள்கள் பொறுமையாக இருந்த முதல்வர் எடப்பாடி இப்போது அந்த அறிவிப்பை வெளியிடக் காரணம்?’’

‘‘ஓ.பி.எஸ் கேட்டபடி சசிகலா குடும்பத்தை வெளியேற்றியாகிவிட்டது. இன்னும் பாக்கி இருப்பது இந்த நீதி விசாரணைதான். அதையும் அறிவித்துவிட்டால், அதன்பிறகும் அணிகள் இணைப்பை ஓ.பி.எஸ் தாமதப்படுத்த முடியாது. மேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய தினகரனும், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த திவாகரனின் மகன் ஜெயானந்தும் ‘நீதி விசாரணை வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தனர். ‘சசிகலா குடும்பத்தில் இருந்தே நீதி விசாரணைக் குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது... இதற்கு மேலும் அதைச் செய்யவில்லை என்றால், பழி தங்கள் மீதே திரும்பிவிடவும் வாய்ப்பு உள்ளது’ என்ற எண்ணமும் ஒரு காரணம். மேலும்,  அ.தி.மு.க-வை முழுமையாகக் கைப்பற்றும் நடவடிக்கையிலும் இது ஒன்று என்கின்றனர்.’’

‘‘எப்படி?’’

‘‘அ.தி.மு.க-வின் பவர் சென்டர்கள் இரண்டு இடங்கள்தான். ஒன்று, ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகம். மற்றொன்று, போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா நிலையம். இதில் தலைமைக் கழகம் இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசம்தான் உள்ளது. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், போயஸ் கார்டன் அப்படி இல்லை. இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி அது, ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் தீபக் மற்றும் தீபாவுக்குச் சொந்தம் என்றாலும், போயஸ் கார்டன் வீடு சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதையும் பறித்துவிட்டால், அதன்பிறகு கட்சி, ஆட்சி, கட்சியின் பவர் சென்டர் அனைத்தும் தன் வசம் வந்துவிடும். அதுபோல, அனைத்திலிருந்தும் சசிகலா குடும்பத்தை அகற்றியதாகிவிடும் என்ற கணக்கில்தான் எடப்பாடி பழனிசாமி அந்த அறிவிப்பை வெளியிட்டார்.’’

‘‘நமது எம்.ஜி.ஆர் விவகாரம் என்ன ஆயிற்று?’’

‘‘நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்த மருது அழகுராஜ் நீக்கப்பட்டார். இப்போது அந்தப் பொறுப்புக்கு சசிகலாவின் உறவினர் மண்டபம் சிவக்குமார் என்பவர் கொண்டுவரப்பட்டுள்ளார். ஆனால், 17-ம் தேதி வெளியான ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழின் முதல் பக்கத்தில் சசிகலா பொதுச் செயலாளராக வேண்டும் என மருது அழகுராஜ் கடந்த டிசம்பர் மாதம் எழுதியிருந்த கவிதையைப் பிரசுரித்து இருந்தனர். காரணம், ஆகஸ்ட் 18-ம் தேதி சசிகலாவின் பிறந்தநாள். இதற்காக வெளியான கவிதையில், சித்ரகுப்தன் என்ற மருது அழகுராஜின் பெயர் மட்டும் மிஸ்ஸிங்” என்றபடி கழுகார் பறந்தார்.

படம்: ஈ.ஜெ.நந்தகுமார்
அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி

எடைக்கு எடை புத்தகங்கள்!

ல்லா கட்சிகளிலும் தலைவர்களுக்கு எடைக்கு எடை நாணயம் கொடுப்பார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 55-வது பிறந்த நாள் விழாவுக்கு புத்தகம் கொடுத்திருக்கிறார்கள். சென்னை பெரியார் திடலில், ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெற்ற விழாவில் திருமாவளவனுக்கு 100 கிலோ எடை கொண்ட, 433 தலைப்புகளிலான 555 நூல்கள் வழங்கப்பட்டன. அவரைத் தராசில் அமர வைத்து இந்த நூல்களை வழங்கினார், விடுதலைச் சிறுத்தைகளின் மண்டல அமைப்புச் செயலாளர் பெரம்பலூர் கிட்டு. ஒவ்வொரு ஆண்டும் திருமாவளவனுக்கு வித்தியாசமான பிறந்த நாள் பரிசு தருவதை இவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.

தொழிலதிபர்களைச் சந்திக்கும் அமித் ஷா!

மிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார்

மிழக பி.ஜே.பி-யைத் தேர்தலுக்குத் தயாராக்கும் விதமாக, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை வருகிறார். மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார். கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நூலகம் மற்றும் மின் நூலகத்தை அவர் தொடங்கி வைக்கிறார். மீனவர் குடும்பங்களைச் சந்திப்பது, பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்களைச் சந்திப்பது என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்ப்ரைஸாக சில பிரபலங்கள், அவர் முன்னிலையில் கட்சியில் இணையக்கூடும் என்கிறார்கள். 23-ம் தேதி மாலையில் கோவை செல்லும் அமித் ஷா, மறுநாள் அங்கு தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசுகிறார். ‘‘வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஸ்பெஷல் சந்திப்பு இது’’ என்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார்

தினகரன் செய்த வடுகபைரவர் பூஜை!

மே
லூரில் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த உற்சாகத்துடன், மறுநாள் மனைவி மற்றும் மகளுடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றார் தினகரன். கோயில் தக்கார் கருமுத்து கண்ணனும் அதிகாரிகளும் தினகரனை வரவேற்றனர். அதன்பின் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள தேனம்மை உடனுறை மங்கைபாகர் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்றார். இங்குள்ள வடுகபைரவர் மிகவும் உக்கிரமானவர். அவருக்குப் பூஜைகள் செய்தால், எதிரிகள் அனைவரையும் அழித்துவிடுவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இங்கு வடுகபைரவருக்கு சத்ருசம்ஹார பூஜையும், கோபூஜையும் செய்தார் தினகரன். அடுத்து சில நாள்களுக்கு தஞ்சை மாவட்டத்தில் சில பரிகாரக் கோயில்களில் சிறப்பு பூஜைகளை தினகரன் செய்ய உள்ளார். பொதுக்கூட்டங்களுடன் பூஜைகளும் தொடர்ந்து நடக்குமாம். ‘‘தேனி பொதுக்கூட்டத்துக்குப் பிறகு, கட்சியில் உங்களை எதிர்க்க யாரும் இல்லாதபடி இந்த பூஜைகள் செய்துவிடும்’’ என ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்களாம்.