Published:Updated:

வெட்கக்கேடு

வெட்கக்கேடு
பிரீமியம் ஸ்டோரி
வெட்கக்கேடு

ப.திருமாவேலன்

வெட்கக்கேடு

ப.திருமாவேலன்

Published:Updated:
வெட்கக்கேடு
பிரீமியம் ஸ்டோரி
வெட்கக்கேடு

‘‘மானமுள்ள ஆயிரம் பேருடன் சண்டை போடலாம். மானத்தைப் பற்றி கவலைப்படாத ஒரே ஒருவனுடன் சண்டை போட முடியாது’’ எனச் சொன்னார் தந்தை பெரியார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் யோசிக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது. இவர்களுக்கெல்லாம் அந்த மாதிரியான அருங்குணங்கள் உண்டா எனத் தெரியவில்லை.

நாய் கதை, நரிக் கதை சொல்லி ஓ.பன்னீர்செல்வத்தைக் கிண்டல் அடித்தார் எடப்பாடி. ‘‘இந்த ஆட்சி ஊழல்மயமாகிவிட்டது’’ என்று சொல்லி ஆர்ப்பாட்டத்துக்குத் தேதி குறித்தார் பன்னீர். இன்று ஊழல் ஆட்சியின் துணை முதல்வர் ஆகிவிட்டார் பன்னீர். ஊழல் பட்டம் கொடுத்த பன்னீரைப் பக்கத்தில் சேர்த்துக் கொண்டார் எடப்பாடி. இவை அனைத்தும் நான்கைந்து மாதங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டன. இரண்டு பேருக்கும் முகத்தில் கூச்சமோ, வெட்கமோ இல்லை.

‘‘பன்னீர்செல்வம் வந்தால் நான் வகிக்கும் நிதி அமைச்சர் பதவியை விட்டுத்தரத் தயார்’’ என்று அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதும் வந்தது பார் கோபம் பன்னீருக்கு. ‘‘இவர் யார் எனக்கு நிதி அமைச்சர் பதவியை விட்டுத் தருவதற்கு? அம்மாவால் இரண்டு முறை முதல்வர் ஆக்கப்பட்டவன் நான்’’ என்று திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் பொங்கிய பன்னீர்செல்வம்தான், ராஜ்பவனில் பதுங்கி நின்றபடி நிதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்.

வெட்கக்கேடு

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சசிகலாவை எடப்பாடி அணி மெள்ள மெள்ள ஒதுக்கி வைக்க ஆரம்பித்தது. ‘‘நான் வைத்த கோரிக்கையால்தான் ஒதுக்கி வைத்துள்ளார்கள்’’ என்று பன்னீர் மகிழ்ந்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார், ‘‘போகிற போக்கைப் பார்த்தால் அமெரிக்காவில் ட்ரம்ப் ஜெயித்ததற்கும் தான்தான் காரணம் என்று பன்னீர் சொன்னாலும் சொல்வார்’’ என்று கிண்டல் அடித்தார். இதோ இப்போது ட்ரம்ப் காமெடியை விட இந்த டமாரங்களின் காமெடி அதிகம் ஆகிவிட்டது. இது வெறும் காமெடி அல்ல; ட்ராஜிடி!

‘‘அம்மாவின் ஆன்மாதான் எங்களை இணைத்துள்ளது’’ என்று பன்னீர், கண்ணீர் விட்டுள்ளார். அம்மா கொடுத்துவிட்டுப் போன அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரையும், இரட்டை இலைச் சின்னத்தையும் டெல்லி தேர்தல் ஆணையத்தின் ட்ரங்க் பெட்டியில் முடக்கிய மனிதர்கள்தான் பன்னீரும் எடப்பாடியும். இவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா எப்படி மன்னிக்கும்?

136 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கொண்ட பெரும்பான்மை அரசைக் கொடுத்துச் சென்றார் ஜெயலலிதா. லட்டு போல அதை வைத்துக் காப்பாற்றத் தெரியாமல், பூந்தியாக உடைத்த பொறுப்பற்ற மனிதர்கள் ஜெயலலிதாவின் ஆன்மாவைப் பற்றிப் பேசலாமா?

ஜெயலலிதா இருக்கும்வரை பி.ஜே.பி-யினரின் வால் ஆடியது உண்டா? அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் பிரதமர் மோடியை எத்தனை முறை போய் பார்த்தார்? ‘மோடியா, லேடியா?’ என்று அகில இந்திய அளவில் தனிமனுஷியாக இருந்து சேலஞ்ச் செய்தவர் ஜெயலலிதா. அவரிடம் நான்கு நாடாளுமன்றத் தொகுதியை வாங்கி விடலாமா என்று போயஸ் கார்டன் வந்த மோடியை, அந்தத் தலைப்பையே தொட விடாமல் திருப்பி அனுப்பியவர் ஜெயலலிதா. அவர் இறந்ததும் மொத்தக் கட்சியையும் ஆட்சியையும் மோடி, அமித் ஷா காலடியில் கொண்டுப் போய் வைத்த எடப்பாடியும் பன்னீரும் ஜெயலலிதாவின் ஆன்மாவைப் பற்றிப் பேசலாமா?

‘இவர்கள் இதுவரை செய்துள்ள தகிடுதத்தங்களைச் சொல்லி டெல்லி மிரட்டியது’ என்று காரணம் சொல்லலாம். ஜெயலலிதாவின் தலைக்கு மேல் சொத்துக்குவிப்பு என்ற கத்தி தொங்கிக்கொண்டுதான் இருந்தது. அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. பயப்படவில்லை. யாரையும் எதிர்கொள்ளும் ஆளுமைத் திறன் ஜெயலலிதாவுக்கு இருந்தது. இவர்களோ, எல்லா நிழலையும் பார்த்து நடுங்குபவர்களாக இருந்தார்கள். அதனால்தான் ‘ஒரு காலத்தில் சேர்ந்து செய்த காரியங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடக் கூடாது’ என்பதற்காகச் சேர்கிறார்கள். ‘மீண்டும் சேர்ந்தால் பழைய காரியங்களைப் பார்க்கலாம்’ என்று உள்ளங்கை அரிக்கிறது. அதனால் சேர்க்கிறார்கள். மான, அவமானம் பற்றி கவலையே படவில்லை. ஒருவரை ஒருவர் திட்டியது அனைத்தையும் துடைத்துப் போட்டுவிட்டு தோள் சேர்ந்துவிட்டார்கள், அல்லது திட்டுவது மனசுக்குள் இறங்காத அளவுக்குத் தடித்துவிட்டது தோல்.

‘‘இந்த ஆட்சி குறித்த எங்களின் விமர்சனங்களுக்கெல்லாம் கடந்த சில நாள்களாக நடந்த பேச்சுவார்த்தையில் பரிகாரம் செய்யப்பட்டுவிட்டது’’ என்கிறார் பொன்னையன். என்ன பரிகாரம்? வேண்டுதல் வைத்து, பரிகாரமாக சிலர் முடியைக் கொடுப்பார்கள். இவர்கள் எதைக் கொடுத்தார்கள்?

இவை அனைத்தையும் விட, புதிய இந்தியாவைப் படைக்க புறப்பட்டு உள்ள பிதாமகர் பிரதமர் மோடி, ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் இருவருக்கும் வாழ்த்துகள். உங்களது இணைப்பால் புதிய உயரங்களைத் தமிழ்நாடு தொடும் என நம்புகிறேன்’ என்று சொல்லி இருக்கிறார். இவர்கள் இன்னும் தமிழ்நாட்டைப் பள்ளத்தில் இறக்காமல் இருந்தால் போதாதா?

வெட்கம்! மகா வெட்கம்!

படம்: கே.ஜெரோம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism