Published:Updated:

“ஜெயலலிதா இறந்த அன்று சாவி என் கையில்தான் இருந்தது!”

“ஜெயலலிதா இறந்த அன்று சாவி என் கையில்தான் இருந்தது!”
பிரீமியம் ஸ்டோரி
“ஜெயலலிதா இறந்த அன்று சாவி என் கையில்தான் இருந்தது!”

திவாகரன் தடாலடி

“ஜெயலலிதா இறந்த அன்று சாவி என் கையில்தான் இருந்தது!”

திவாகரன் தடாலடி

Published:Updated:
“ஜெயலலிதா இறந்த அன்று சாவி என் கையில்தான் இருந்தது!”
பிரீமியம் ஸ்டோரி
“ஜெயலலிதா இறந்த அன்று சாவி என் கையில்தான் இருந்தது!”

‘‘பணத்தால் எல்லோரையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கக் கூடாது. ‘எங்களிடம் இரண்டு எம்.எல்.ஏ-க்கள்தான் குறைவாக இருக்கிறார்கள். பாதாளம் வரை செல்லும்’ என ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். மீடியாவை, மக்களை, தொண்டர்களை முட்டாளாக நினைத்து இப்படிச் செல்கிறார். அமைச்சர் சொல்லக்கூடிய வார்த்தையா அது? இது மைனாரிட்டி கவர்ன்மென்ட் ஆகிவிட்டது’’ எனச் சூடாக ஆரம்பிக்கிறார் திவாகரன்.

‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்’ என 19 எம்.எல்.ஏ-க்கள் தினகரன் பக்கம் வந்துவிட்டார்கள். இந்தச் சூழலில், ‘அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்’ என்ற கேள்வியுடன் தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் சசிகலா குடும்பத்தின் மீது உள்ளது. இந்தச் சூழலில், மன்னார்குடி சுந்தரக்கோட்டை பங்களாவில், சசிகலாவின் சகோதரர் திவாகரனைச் சந்தித்தோம். எந்தக் கேள்விக்கும் தயக்கமின்றிப் பதில் சொன்னார்.

“ஜெயலலிதா இறந்த அன்று சாவி என் கையில்தான் இருந்தது!”

“33 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலாவையும், அவருடைய குடும்ப உறுப்பினர்களையும் அ.தி.மு.க-வினரே ஏற்றுக்கொள்ளவில்லையே... ஏன்?”

“எல்லோருக்கும் அரசியல் எதிரிகள் இருக்கத்தானே செய்கிறார்கள். ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பாக இருந்த சசிகலா, தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவில்லை. சசிகலா மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஜெயலலிதாவுக்காக உழைத்தவர்கள். புரட்சித்தலைவர் இறந்தபோது சசிகலாவும் நானும் தினகரனும்தான் அச்சுறுத்தல்களிலிருந்து ஜெயலலிதாவை மீட்டுக் கொண்டுவந்தோம். அப்போது என் தலையில் விழுந்த அடி, ஜெயலலிதா மீது விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று ரிப்போர்ட் கொடுத்ததுதான், ஜானகி ஆட்சிக் கலைக்கப்பட்டதற்குக் காரணமானது.

28 எம்.எல்.ஏ-க்களை வெற்றி பெறவைத்து எதிர்க்கட்சித் தலைவராக அவரை உட்கார வைத்தோம்.ஜெயலலிதாவைப் பொதுச்செயலாளராகக் கொண்டுவந்ததும் நான்தான்.இப்போது எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், ஏதோ சூழ்ச்சியின் காரணமாக அது நடக்கிறது. நாங்கள் ஜெயலலிதாவோடு சேர்ந்து பட்ட கஷ்டங்களைப் பெரிய புத்தகமாகவே எழுதலாம். ‘ஜெயலலிதாவை இல்லாமல் செய்ய வேண்டுமென்றால், இந்தக் குடும்பத்தை இல்லாமல் செய்தால் போதும்’ என்றுதான் அ.தி.மு.க-வின் எதிரிகள் நினைத்தார்கள். அது இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.”

“இரண்டு அணிகளும் இணைந்துவிட்டனவே?”

“இக்கட்டான சூழ்நிலையில் எடப்பாடி இருக்கிறார். அவர் இதை சுயசிந்தனையோடு செய்யவில்லை. யாரோ ஆட்டிப் படைக்கிறார்கள். 10 எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு இரட்டை இலைச் சின்னத்தை முடக்கிய, ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட ஆட்சியை ஊழல் ஆட்சி என்று விமர்சித்துப் போராட்ட மெல்லாம் அறிவித்த பன்னீர்செல்வத்துக்குத் துணை முதல்வர் பதவியை ஏன் கொடுத்தார் என்று தெரியவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால், தன்னையும், ஊழல் அமைச்சர்களையும் காப்பாற்றிக்கொள்ளவே கொடுத்திருப்பார். கட்சியையும், தொண்டனையும் காப்பாற்ற அல்ல. இதை ஒரு இணைப்பாகவே நான் எடுத்துக்கொள்ளவில்லை. ‘அணிகளை இணைக்கச் சொன்னது யார்... தினகரனைக் கட்சியை விட்டே நீக்க வேண்டுமென நிர்பந்தம் செய்தது யார்?’ என்பதையெல்லாம் எடப்பாடி சொல்ல வேண்டும். யார் பக்கம் மக்கள் இருக்கிறார்கள் என்பது மேலூர் பொதுக்கூட்டத்திலேயே தெரிந்துவிட்டது. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவிக்குப் பிறகு மிகப்பெரிய கூட்டத்தை நாங்கள் கூட்டியிருக்கிறோம். அரசு தடை போட்டது. முதலமைச்சர் எடப்பாடியே ‘மேலூர் கூட்டத்துக்குப் போகவேண்டாம்’ என எல்லா பொறுப்பாளர்களுக்கும் தடை போட்டும், பிரமாண்டக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம். எங்களை நீக்கவும் முடியாது, அ.தி.மு.க-வை வீழ்த்தவும் முடியாது.”

“உங்கள் பக்கம் உண்மையில் எத்தனை எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்?”

“இப்போது 19 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார்கள். மேலும் எட்டு எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் இந்த நிலையில், ஆட்சியைக் கலைக்கலாம். என்னிடம் எட்டு  எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களும் ரெடியாக இருக்கிறார்கள். . கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேரும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். ஆகவே, இந்த ஆட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டது. எதிர்க்கட்சிக்காரர்கள் இனி சும்மா இருக்கமாட்டார்கள். மெஜாரிட்டியை நிரூபிக்கச் சொல்ல வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருக்கிறது. சபாநாயகர் தனபாலை முதல்வராக ஏற்றுக்கொண்டால் எங்களுடைய ஆதரவு கிடைக்கும். இல்லாவிட்டால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது எங்கள் ஆதரவு எடப்பாடி அரசுக்குக் கிடையாது.”

“சபாநாயகர் தனபாலை முதல்வராகக் கொண்டு வரவேண்டுமென சொல்வதற்கு என்ன காரணம்?”

“ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அமைச்சராக இருந்தவர். அற்புதமாக சட்டசபையை வழிநடத்திச் செல்லக் கூடியவர். எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய நேரத்தில், அவருடைய பெருந்தன்மை தெரிந்தது. முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வருவது இந்த மாதிரியான நேரத்தில்தான் முடியும். அப்போதுதான் சமதர்மம் காக்கப்படும்.”

“ஓ.பி.எஸ்., எடப்பாடி போல தனபாலும் உங்களுக்கு எதிராகப் போகமாட்டார் என்பது என்ன நிச்சயம்?”

“தனபால் அப்படியெல்லாம் போகமாட்டார். அவர், பேராசை பிடித்தவர் அல்ல. அவர் மீதான அளவுகோல்கள் நல்லவிதமாக உள்ளன. அதனால்தான் அவரை முன்னிறுத்துகிறோம். ஓ.பி.எஸ்-ஸை நான் கொண்டுவரவில்லை. அவரை தினகரன் கொண்டு வந்தார். ஜா. அணி, ஜெ. அணி எனப் பிரிந்திருந்த நேரத்தில், போடியில் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டார். அப்போது, ஜெயலலிதாவுக்கு ஏஜென்ட்டாக இருந்தவர் மைத்துனர் நடராசன். ஜெயலலிதாவை எதிர்த்து நின்ற வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஏஜென்ட்டாக இருந்தவர் ஓ.பி.எஸ். ஜெயலலிதாவைக் கெட்ட வார்த்தைகளால் மேடையில் பேசியவர் அவர். நாங்கள் அதையெல்லாம் பெரிதுபடுத்தவில்லை. ஜெயலலிதா இறந்த டிசம்பர் 5-ம் தேதி, சாவி என் கையில் இருந்தது. நான்தான் டிசைடிங் அத்தாரிட்டியாக இருந்தேன். அன்று நினைத்திருந்தால் ஓ.பி.எஸ்-ஸை முதல்வராக உட்கார விட்டிருக்கமாட்டோம். ‘நம்மால் கட்சிக்கு ஏதும் ஆபத்து வந்துவிடக்கூடாது’ என்ற பெருந்தன்மையோடு நடந்தோம். ஒரு நிமிஷம் ஆகியிருக்குமா?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஜெயலலிதா இறந்த அன்று சாவி என் கையில்தான் இருந்தது!”

“எடப்பாடியையும் பன்னீரையும் பி.ஜே.பி-தான் வழிநடத்துவதாகச் சொல்லப்படுகிறது. உங்கள் குடும்பத்தின்மீது பி.ஜே.பி-க்கு அப்படி என்ன கோபம்..?”

“பி.ஜே.பி-க்கு எங்கள்மீது கோபம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண்டவன் புண்ணியத்தில் சசிகலா வெளியே வந்தால், உட்கார்ந்து பேசி ஊழல் அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதிய அமைச்சரவையை உருவாக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தோம்.அதற்குள் அவசரப்பட்டுவிட்டார்கள். இந்த ஆட்சி  நீடிப்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. இப்போதும் அவர்கள் தினகரனிடம் பேசிவிட்டு வந்தால், சமாதானம் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். ஆனால், எடப்பாடியும், பன்னீர்செல்வமும், ஊழல் நிறைந்த ஆறு அமைச்சர்களும் அமைச்சரவையில் இருக்கக்கூடாது. இப்போதும் எங்களைப் பேச அழைத்தால், என்ன நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும். அ.தி.மு.க இப்போது எங்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள் கட்சியை வழிநடத்தாமல், வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் கான்ட்ராக்ட்டுக்கு கமிஷன் கேட்பதெல்லாம் ரெக்கார்டு ஆகிக்கொண்டு இருக்கிறது. கண்டிப்பாக வெளியில் வரும்.’’

“இதுவரை ‘அரசியலுக்கு வரமாட்டேன்’ எனச் சொல்லிவந்த நீங்கள், இப்போது ‘நேரடி அரசியலுக்கு வந்துவிட்டேன்’ என்கிறீர்கள்... உங்கள் மகன் ஜெயானந்த்தும் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார். குடும்ப அரசியலா?’’

“இப்போதும் அரசியலுக்கு வர எனக்கு விருப்பமில்லை. எம்.ஜி.ஆர் காலத்துக் கட்சிக்காரன் நான். இப்போது வியாபாரிகள் எல்லாம் கட்சிக்குள்ளே வந்துவிட்டார்கள். வியாபாரிகளிடம் போட்டியிடும் தகுதி என்னிடம் இல்லை. ஆனால், என் சகோதரியைக் காப்பாற்ற வேண்டும். அவர் எப்படிப்பட்டவர் என்பதைச் சமுதாயத்துக்குக் காட்ட வேண்டும். அதற்காகவே அரசியல் சாக்கடையில் நீந்துவதற்குத் தயாராகிவிட்டேன். அமைச்சர் பதவிக்கெல்லாம் போகமாட்டேன்.என்னைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் பணியில் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் மக்கள் பணி செய்வார்கள்.

இங்கு எல்லோரும் குடும்ப அரசியல் செய்யும்போது, ஏன் எங்களை மட்டும் ‘குடும்ப அரசியல்’ என்று கேட்கிறீர்கள். என் மகன் அரசியலுக்குள் வந்தால் தடைபோடுவதற்கு நான் யார்?”

“நீங்கள், நடராசன், தினகரன், ஜெயானந்த் எனத் தனித்தனியாக பேட்டி கொடுக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தினர் ஒன்றாகத்தான் இருக்கிறீர்களா?”

“எல்லாருடைய கருத்துகளும் ஒன்றாகத்தானே இருக்கின்றன. மன்னார்குடியில் முக்கியமான காலகட்டம் வரும்போது எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பேட்டி கொடுப்போம். எல்லோரும் போனில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். இன்றுகூட ஒரு ஐடியாவை தினகரனிடம் சொல்லியிருக்கிறேன். நான் சொல்லக்கூடிய வியூகங்களை தினகரன் எடுத்துக்கொள்கிறார்.

ஜெயலலிதா மரணமடைந்த அன்று இரவே சசிகலா முதல்வராகப் பதவி ஏற்று இருந்தால் இவ்வளவு குழப்பங்கள் வந்திருக்காது. எல்லோரும் வாயைப் பொத்தியிருப்பார்கள். ஜெயலலிதாவின் சடலத்தைப் போட்டுவிட்டு முதல்வர் பதவியை ஏற்கும் அளவுக்கு சசிகலா தரம் தாழ்ந்தவர் கிடையாது. அதற்குப்பிறகு ‘கட்சியே போய்விடும்’ என்று காலில் விழுந்து கேட்டு, பொதுச்செயலாளர் ஆக்கினார்கள். சசிகலா இந்த உலகத்தை, கட்சிக்காரர்கள் மூலமாகவும், குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவும் பார்ப்பவர். கட்சிக்காரர்கள் சொல்வதை உண்மையென நம்புகிறவர். அதனால், ஒவ்வொரு காலகட்டத்திலும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார். பொதுக்குழுவில் ‘பொதுச்செயலாளர்’ எனத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, தேர்தல் கமிஷனிடம் கொடுத்த அஃபிடவிட்டில் ‘தற்காலிக பொதுச்செயலாளர்’ என்று கொடுக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் சதி நடந்திருக்கிறது, யாரோ மிகப்பெரிய சதிகாரர்கள் உள்ளே புகுந்து இதை நடத்தியிருக்கிறார்கள்.”

“ஜெயலலிதா இறந்த அன்று சாவி என் கையில்தான் இருந்தது!”

“பொதுக்குழுவைக் கூட்டி சசிகலா பொதுச்செயலாளர் பதவியிலிருந்து  நீக்கப்படுவார் என  வைத்திலிங்கம் சொல்கிறாரே..?”

“பொதுக்குழுவைக் கூட்ட வேண்டியவரே சசிகலாதான். இதில் என்ன வந்தாலும் சந்திக்கத் தயார். வைத்திலிங்கத்தின் கஷ்டம், அவரைப் பேச வைக்கிறது. இதற்குமேல் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அன்புநாதன் விஷயத்தில் அவரும் வருகிறார் என்பதால்கூட இருக்கலாம். வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தவர். கோப்புகள் போகவேண்டிய இடத்துக்குப் போயிருக்கின்றன. சுயநலத்துக்காகப் பேசுகிறார்.”

“இணைப்பு பற்றி ‘தமிழன் தலையில் கோமாளிக் குல்லா’ என்று விமர்சனம் செய்திருக்கிறாரே கமல்ஹாசன்?”

“மிகப்பொருத்தமான வார்த்தை. மிகச் சிறந்த அறிவாளி என்பதைக் காட்டியிருக்கிறார் கமல்.”

“கட்சியின் நாளேடும், டி.வி-யும் உங்கள்வசம் இருப்பதால், கட்சியும் உங்களிடம் இருப்பதாகச் சொல்கிறீர்களா?’’

“ஜெயா டி.வி என்பது ஒரு பிரைவேட் கம்பெனி. அதனால் அதை அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழை ஆரம்பித்ததே நானும் தினகரனும்தான். ஜெயலலிதா ஆசிரியர். பத்திரிகை ஆரம்பிப்பதற்கான அஃபிடவிட்டில் கையெழுத்துப் போட்டிருப்பது நானும் தினகரனும்தான். அதற்கெல்லாம் பிரச்னை வராது. ஜெ., ஜா. அணிகளாக அ.தி.முக பிரிந்தபோது ஜா. அணியிடம்தான் தலைமைக்கழக அலுவலகம் இருந்தது. நாங்கள் வாடகைக்கு எடுத்துதான் அலுவலகம் நடத்திக்கொண்டு இருந்தோம். பாருங்கள்... காலம் எப்படி மாறுகிறது. இதுவும் நிச்சயம் மாறும்.”

- ஏ.ராம்
அட்டை மற்றும் படங்கள்: க.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism