Published:Updated:

"இனி கைதிகளுக்குத்தான் சசிகலா கட்சி நடத்த முடியும்!”

"இனி கைதிகளுக்குத்தான் சசிகலா கட்சி நடத்த முடியும்!”
பிரீமியம் ஸ்டோரி
"இனி கைதிகளுக்குத்தான் சசிகலா கட்சி நடத்த முடியும்!”

வெடிக்கும் கே.சி.பழனிச்சாமி

"இனி கைதிகளுக்குத்தான் சசிகலா கட்சி நடத்த முடியும்!”

வெடிக்கும் கே.சி.பழனிச்சாமி

Published:Updated:
"இனி கைதிகளுக்குத்தான் சசிகலா கட்சி நடத்த முடியும்!”
பிரீமியம் ஸ்டோரி
"இனி கைதிகளுக்குத்தான் சசிகலா கட்சி நடத்த முடியும்!”

எங்களுக்குள் ஸ்லீப்பர் செல்களாம். தினகரன் சொல்கிறார். அவர்கள் 1991-லிருந்தே ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள்” என்று வெடிக்கிறார் அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிச்சாமி. இரண்டு அணிகளாக அ.தி.மு.க உடைந்தபோது, தேர்தல் ஆணையத்திடம் பஞ்சாயத்து போனது. ‘சசிகலாவைப் பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது’ என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து கட்சியின் பெயரும், இரட்டை இலைச் சின்னமும் முடக்கி வைக்கப்பட்டன.

ஆனால், சசிகலா குடும்பத்துக்கு எதிராக கே.பி.முனுசாமி பேட்டி கொடுப்பதற்கு முன்பே, ஓ.பி.எஸ் தியானம் மேற்கொள்வதற்கு முன்பே, முதன்முதலில் தனி ஆளாக தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் சசிகலா நியமனத்தை எதிர்த்து மனு போட்டவர் பழனிச்சாமி. பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் (!?) பிறகு தியானம் கலைத்து, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள் இணைந்துள்ளன. இந்தச் சூழலில், பழனிச்சாமியைச் சந்தித்தோம். 

"இனி கைதிகளுக்குத்தான் சசிகலா கட்சி நடத்த முடியும்!”

“முதல் ஆளாக சசிகலாவுக்கு எதிராக மனு போட்டவர் நீங்கள். என்ன காரணம்?”

“1991-லிருந்தே ஸ்லீப்பர் செல்களாக இருந்த அவர்களை, அவ்வப்போது கண்டுபிடித்து அம்மா களையெடுத்தார்கள். ஆனால், வேரோடு பிடுங்கியெறிய முடியாமலே இருந்தது. 1996 சட்டசபைத் தேர்தலில் தோற்றபோது, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் கூப்பிட்டு அம்மா கருத்துக் கேட்டார். அப்போது, சசிகலா குடும்பத்தின் மீது சொன்ன குற்றச்சாட்டுகளைக் கேட்டுவிட்டு, அந்தக் குடும்பம் குறித்து சில வருத்தங்களை என்னிடம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். அது, என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அப்போதிலிருந்தே எனக்கு சசிகலாவையும் அவர் குடும்பத்தையும் பிடிக்காமல் போய்விட்டது. அம்மா இறந்த பிறகு கட்சிக்காரர்களைக் கட்டாயப்படுத்தி, சசிகலா பொதுச்செயலாளர் ஆனார். அதைத் தடுக்க வேண்டும் என்றுதான், ‘பொதுச்செயலாளராக அவர் அறிவிக்கப்பட்டதே செல்லாது. அவர் கையெழுத்தை அங்கீகரிக்கக் கூடாது’ என்று முதல் ஆளாகத் தேர்தல் கமிஷனுக்கு மனு போட்டேன். அதன் பிறகுதான், கே.பி.முனுசாமி பேட்டி கொடுத்தார். ஓ.பி.எஸ் வெளியேறினார். ஒருமித்தக் கருத்துகொண்ட நாங்கள் எல்லாம் இணைந்து இப்போது வெற்றி கண்டிருக்கிறோம்.”

“சசிகலாவின் சகோதரர் திவாகரன், ‘இரட்டை இலையை இனி அவ்வளவு சீக்கிரம் மீட்க முடியாது. அ.தி.மு.க என்பது, சசிகலா இருக்குமிடம்தான். நானும் அரசியலில் குதிப்பேன்’ என்றெல்லாம் சொல்கிறாரே?”

“திவாகரனுக்கும் அ.தி.மு.க-வுக்கும் சம்பந்தமே இல்லை. அக்கா பாசத்தில் பேசும் அன்புத் தம்பி அவர். அவ்வளவுதான். சசிகலா இருக்குமிடம்தான் அ.தி.மு.க என்றால், பரப்பன அக்ரஹாரா சிறைதான் அ.தி.மு.க தலைமையகமா? அப்படியென்றால், கைதிகளுக்குத்தான் அவர் கட்சி நடத்த வேண்டும். நாங்கள் இப்போது கட்சி பெயரை மீட்பதிலும், இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதிலும் பெரிய சிக்கல் இருக்காது. அ.தி.மு.க விதிப்படி, சசிகலா பொதுச்செயலாளரே இல்லை. பொதுக்குழுவால் தற்காலிகப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர்தான் சசிகலா. அந்த சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர்தான் தினகரன். அப்படி ஒரு பதவியே அ.தி.மு.க-வில் கிடையாது.

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலேயே,  அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் என்ற இடம் காலியாகத்தான் உள்ளது. அதற்குக் காரணம், நான் கொடுத்த மனு. எந்தப் பொதுக்குழு கூடி சசிகலாவைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்ததோ, அதே பொதுக்குழு அவரை நீக்கும். அப்போது, தினகரனும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவார். அம்மாவால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள்தான், கட்சியில் இருப்பார்கள். அப்போது, இரட்டை இலை எங்களைத் தேடிவரும். அவர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால், அ.தி.மு.க-வுக்குள் அவர்களால் இனி வரமுடியாது.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"இனி கைதிகளுக்குத்தான் சசிகலா கட்சி நடத்த முடியும்!”

“எங்களால் பதவிக்கு வந்துவிட்டுத் துரோகம் செய்கிறார்கள் என்று சசிகலா தரப்பு குற்றச்சாட்டு சொல்கிறதே?”

“முதல்வரை நியமிப்பதற்கு அவர்கள் யார்? முதலில் இப்படிச் சொல்வதை அவர்கள் நிறுத்த வேண்டும். அது, முதலமைச்சர் பதவியையே களங்கப்படுத்துகிறது. இப்போது இருப்பவர்கள் எல்லாம் 1970-களிலேயே
அ.தி.மு.க உறுப்பினர்களாக இருந்தவர்கள். யாரும் சசிகலா தலைமையை ஏற்றுக்கொண்டு கட்சிக்கு வந்தவர்கள் அல்ல. ஒரு வீட்டுக்குள் செல்ல வேண்டுமென்றால் முதலில் வாட்ச்மேனைக் கடந்துதானே செல்ல முடியும். சசிகலா குடும்பத்தினர் போயஸ் கார்டனின் வாட்ச்மேன்கள்... அவ்வளவுதான். வீட்டின் வாரிசுகள், வாட்ச்மேன்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதைப் போல இருக்கிறது இவர்களின் பேச்சு.”

“ ‘இந்த இணைப்பு நீடிக்காது. ஆட்சியைக் கவிழ்ப்போம்’ என்றெல்லாம் சசிகலா தரப்பினரிடமிருந்து மிரட்டல் வருகிறதே?”

“தங்களுடைய ஸ்லீப்பர் செல்களை வைத்து ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று நினைக்கிறார்கள். ‘ஸ்லீப்பர் செல்களை அழிக்க வேண்டு மென்றால், அவர்களுடைய கமாண்டர்களை அழிக்க வேண்டும்’ என்று ‘துப்பாக்கி’ படத்தில் விஜய் சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது. பரப்பன அக்ரஹாராவில் இருக்கும் ‘சீஃப் கமாண்டர்’ சசிகலாவையும், அவரின் ‘அசிஸ்டென்ட் கமாண்டர்’ தினகரனையும் கட்சியிலிருந்து அழித்துவிட்டால், ‘உத்தரவு’ வரும் வரும் என்று காத்திருந்து, கட்சிக்குள் இருக்கும் ஸ்லீப்பர் செல்கள் களைத்துப் போவார்கள்.”

- எம்.புண்ணியமூர்த்தி
படம்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism