Published:Updated:

ஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை! #StalinVsAzhagiri

ஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை! #StalinVsAzhagiri
ஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை! #StalinVsAzhagiri

ஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை! #StalinVsAzhagiri

18 ஆண்டுகளுக்கு முன் துவங்கி... நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்து விட்டதாக நினைத்துக்கொண்டிருந்த ஸ்டாலின் - அழகிரி யுத்தம், தற்போது மீண்டும் துவங்கியிருக்கிறது. தி.மு.க.வின் தலைவராக இருந்த கருணாநிதி மறைந்து ஒரு வாரம் கூட நிறைவு பெறாத நிலையில், மீண்டும் ஸ்டாலினுக்கு எதிரான தனது மோதலைத் துவங்கியிருக்கிறார் மு.க.அழகிரி. கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த மு.க. அழகிரி, ``தற்போதைய அரசியல் சூழல் குறித்த என் ஆதங்கம் முழுவதையும் அப்பாவிடம் கொட்டிவிட்டேன். கலைஞரின் உண்மையான, விசுவாசமிக்க தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். என் ஆதங்கத்தை அவர்கள் உணர்வார்கள். இப்போது உங்களுக்குப் புரியாது. காலம் பதில் சொல்லும்," எனப்பேசி பரபரப்பை உருவாக்கியிருக்கிறார். ஸ்டாலின் செயல்படாத தலைவராக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். கட்சியில் உறுப்பினராக இல்லாத அழகிரி, `கலைஞரின் விசுவாசமிக்க தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள்' எனச்சொல்லியிருப்பதும், அது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதும் ஆச்சரியம் தான்.

அழகிரி நீக்கப்பட்டதற்கு காரணம் இதுதான்!

அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. ``கலைஞரைத் தவிர வேறு யாரையும் நான் தலைவராக ஏற்க மாட்டேன். கலைஞரே சொன்னாலும் ஏற்கமாட்டேன்" என 2014 ஜனவரி மாதத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி கொடுத்த மு.க.அழகிரி, ``தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை அரசியல் தலைவராகவே நான் கருதவில்லை. அவருடன் சேராமல் தற்போது இருக்கும் கட்சிகளுடன் தி.மு.க. இணைந்து போட்டியிட வேண்டும்" என்றார். 

தே.மு.தி.க.வுடன் கூட்டணிப் பேச்சை தி.மு.க. நடத்திக்கொண்டிருந்த நேரத்தில் அழகிரியின் இந்தப் பேட்டி பெரும் சிக்கலை ஏற்படுத்தியதாகச் சொல்லப்பட்டது. ஆனாலும் அழகிரியின் மீது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலில் மதுரை மாநகர மாவட்ட தி.மு.க. முழுமையாகக் கலைக்கப்பட்டது. அதன்பின்னர் அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் சிலர் அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கையையடுத்து, இருமுறை கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றார் அழகிரி. ஒருமுறை கருணாநிதியைச் சந்திக்காமல் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்து விட்டு கோபமாகத் திரும்பினார். இரண்டாம் முறை கருணாநிதியைச் சந்தித்துப் பேசிவிட்டு திரும்பினார். ஆனால், அன்றைய தினமே கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் அழகிரி. தே.மு.தி.க. குறித்து அவர் வெளியிட்ட கருத்துகளே தற்காலிக நீக்கத்துக்குக் காரணம் என முதலில் சொல்லப்பட்டது. 

நீக்கத்துக்குக் கருணாநிதி சொன்ன காரணம்!

ஆனால் சில நாள்களுக்குப் பிறகு அழகிரி நீக்கப்பட்டதற்கு வேறு காரணம் ஒன்றைச் சொன்னார் கருணாநிதி. ``அன்றைய தினம் அதிகாலை ஸ்டாலினைப் பற்றிப் புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளையெல்லாம் பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். ஸ்டாலின் இன்னும் மூன்று, நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடம் சொன்னார். எந்தத் தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக்கொள்ள முடியுமா. கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன்," எனத் தழுதழுத்த குரலில் கருணாநிதி கூறியது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்னரும் தி.மு.க.வை விமர்சிக்க அழகிரி தயங்கவில்லை. கட்சிக்கு எதிராக அவர் பேசியதும், நடந்துகொண்டதும் தொடர, 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி தி.மு.க.விலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் அழகிரி. ``நன்றி மறந்தவர்கள் யாராக இருந்தாலும்; அவர்கள் என் மகனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் மன்னிக்க மாட்டேன். தி.மு.க.வின் கொள்கையும், கட்சியின் கோட்பாடுமே எனக்கு முக்கியம்," என அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மறுதினம் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசினார் மு.கருணாநிதி. 

நிரந்தரமாக நீக்கப்பட்டதன் பின்னணி!

கருணாநிதியின் கோபத்துக்கு நியாயமான காரணங்கள் இருக்கவே செய்தது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோரை அழகிரி நேரில் சென்று சந்தித்தார். தி.மு.க.வுக்கு எதிராக தொடர்ச்சியாகப் பேசியும் வந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வந்த நிலையில், தி.மு.க.வுக்கு எதிரணியில் இருந்த ம.தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி., பா.ம.க. நிர்வாகிகளையும், வேட்பாளர்களையும் அழகிரி சந்தித்துப் பேசினார். தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வந்த வைகோவை அழகிரி அடுத்தடுத்து சந்தித்துப் பேசியது தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜே.எம்.ஆருண், வசந்தகுமார் பா.ஜ.க. வேட்பாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட தி.மு.க.வை எதிர்த்து களம்கண்ட பல வேட்பாளர்கள் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கோரினர். இவையெல்லாம், தி.மு.க. தலைமையைக் கோபம் கொள்ளச் செய்தன. இதன் காரணமாகவே அவர் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

அதன் பின்னரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தி.மு.க.வையும், ஸ்டாலினையும் விமர்சிக்க அழகிரி தயங்கவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலின் போது, ``திமுக - காங்கிரஸ் கூட்டணி பொருந்தாத கூட்டணி. தி.மு.க. எந்தக் கட்சியோடு கூட்டணி வைத்தாலும், பலம்மிக்க அதிமுகவை வீழ்த்த முடியாது," எனக் கூறினார். ஆறாவது முறை கருணாநிதி முதல்வராவார் என தி.மு.க.வினர் பிரசாரம் செய்து வந்த நிலையில், அதற்கு எதிராக அழகிரி பேசியது கருணாநிதிக்கு எதிராகப் பேசியதாகவே கருதப்பட்டது. 

18 ஆண்டுக்கு முன் துவங்கிய மோதல்

அழகிரி - ஸ்டாலின் மோதல் என்பது தற்போது உருவானதல்ல. அது பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவானது. மோதலுக்கான விதை எப்போது போடப்பட்டது என்பது தெரியவில்லை. முதல் மோதல் உருவாகி 18 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 1981-ம் ஆண்டு, தனது மூத்த மகனான அழகிரியைக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனித்துக்கொள்ள மதுரை அனுப்பினார். ஆனால், சில காரணங்களால் மதுரைப் பதிப்பு நிறுத்தப்பட... மீண்டும் சென்னை திரும்பினார். ஆனால் அடுத்த இரு ஆண்டுகளில் மீண்டும் மதுரைக்கே அனுப்பி வைக்கப்பட்டார் அழகிரி. அதுவரை அரசியலில் முழுமையாகக் கவனம் செலுத்தாத அழகிரி, 1989-ம் ஆண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த உடன் அதிகாரம் செலுத்தத் துவங்கினார். தென்மாவட்டங்களில் தனக்கென ஆதரவு வட்டத்தை உருவாக்க முற்பட்டார். 

1993-ம் ஆண்டு தி.மு.க.விலிருந்து முக்கிய நிர்வாகிகளுடன் வைகோ பிரிந்து சென்றபோது, தென்மாவட்டங்களில் அழகிரியின் ஆதிக்கம் பரவத்துவங்கியது. `தென்மாவட்டங்களில் அழகிரியின் ஆதரவு வட்டமே கட்சியில் சரிவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டது' என அழகிரியின் ஆதரவாளர்களும், `கட்சிக்குள் அழகிரியின் தலையீடுகள் அதிகளவில் இல்லாமல் இருந்திருந்தால் நிர்வாகிகள் பிரிந்து சென்றிருக்கவே மாட்டார்கள்' என ஸ்டாலின் ஆதரவாளர்களும் சொல்வார்கள்.

அழகிரி தனக்கென ஓர் ஆதரவு வட்டத்தை ஏற்படுத்த முயன்ற நேரத்தில், படிப்படியாக அரசியலில் வளர்ந்த ஸ்டாலின், இரு முறை எம்.எல்.ஏ.ஆகவும், சென்னை மாநகராட்சி மேயராகவும் ஆகியிருந்தார். ஸ்டாலினின் இந்த வளர்ச்சி இருவரிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியதாகவே சொல்லப்படுகிறது. ஸ்டாலினும், அழகிரியும் நேருக்கு நேர் வெளிப்படையாக மோதிக்கொண்டது 2000-ம் ஆண்டில்.

18 ஆண்டுகளுக்கு முன்னரே நீக்கப்பட்ட அழகிரி!

அப்போது மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடந்தது. ஒரு பதவிக்கு அழகிரியும், ஸ்டாலினும் தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தலைமையிடம் கோரினர். இதில் ஸ்டாலினே வென்றார். ஸ்டாலின் ஆதரவாளர் திருச்சி சிவாவுக்கே மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த அழகிரி, அப்போது சென்னையில் நடந்த `தி.மு.க. முப்பெரும் விழாவில் யாரும் பங்கேற்கக் கூடாது' எனத் தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இது கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதில் அழகிரி மீது கோபம் கொண்ட கட்சித் தலைமை அவரைக் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது.

இதைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக 12 தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களை அழகிரி நிறுத்தினார் அழகிரி. தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலிலும் தன் ஆதரவாளர்களைத் தனித்துக் களம் காணச் செய்தார். மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு அழகிரி தரப்பில் சிலர் வென்றனர். இவர்கள் ஆதரவு தி.மு.க.வுக்குத் தேவைபட மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார் அழகிரி. 

தா.கிருட்டிணன் கொலையும்; தினகரன் அலுவலக எரிப்பும்!

2003-ம் ஆண்டு, முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் வெட்டிக் கொல்லப்பட்டார். தி.மு.க. கோஷ்டி மோதல்தான் இதற்கு காரணமாகச் சொல்லப்பட்டது. கொல்லப்பட்ட தா.கிருட்டிணன் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர். இந்த வழக்கில் மு.க. அழகிரி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இது ஸ்டாலின் - அழகிரி இடையேயான மோதலை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றது. அதன் பின்னர் 2007-ம் ஆண்டு அடுத்த சர்ச்சை வெடித்தது.

2007-ம் ஆண்டு மே மாதம் தினகரன் நாளிதழில், மக்கள் மனசு என்ற பெயரில் கருத்துக் கணிப்பு வெளியானது. `தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக மக்கள் யாரை விரும்புகிறார்கள்' என்ற கேள்விக்கு `70 சதவிகிதம் பேர் ஸ்டாலினை ஆதரிப்பதாகவும், 2 சதவிகித பேர் மட்டுமே அழகிரியை ஆதரிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. `இதையடுத்து அழகிரியின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தினகரன் அலுவலகத்தைத் தீயிட்டு கொளுத்த 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் அழகிரி.

2009-ம் ஆண்டு திருமங்கலம் இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் பொறுப்பெடுத்து நடத்தினார் அழகிரி. இடைத்தேர்தலில் வெளிப்படையாகப் பணம் கொடுத்து வாக்குகளை பெறும் காட்சிகள் அரங்கேறின. திருமங்கலம் ஃபார்முலா என ஒன்றைத் தொடங்கி வைத்ததாகச் சொல்லப்பட்டார். இது கட்சிக்குக் கெட்டபெயரை உருவாக்கி விட்டதாக வருத்தப்பட்டது ஸ்டாலின் தரப்பு. இதுவும் மோதலை வளர்த்தது. ஆனால், திருமங்கலம் இடைத்தேர்தலில் வென்று கொடுத்ததற்காக அழகிரிக்குத் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்தார் கருணாநிதி. தெற்கில் மட்டுமே அழகிரி கவனம் செலுத்தட்டும் என்பதற்காகவே கருணாநிதி அந்த முடிவு எடுத்ததாகச் சொல்லப்பட்டது.

ஆனால், 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்ற இவர், அதில் வென்று மத்திய அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். இந்தக் காலகட்டத்தில் ஸ்டாலின் - அழகிரி யுத்தம் உச்சத்தை எட்டியது. ஸ்டாலினை தி.மு.க. தலைவராக்க கருணாநிதி முடிவு செய்தபோதும், அதை அறிவிக்காமல் பார்த்துக்கொண்டார் அழகிரி. 2013-ம் ஆண்டு, `அடுத்த முதல்வர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரை நானே முன்மொழிவேன்' என கருணாநிதி பேசியபோது அழகிரிக்கு கட்சியில் நெருக்கடி ஏற்படத்துவங்கியது. 2014-ம் ஆண்டு மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது என்ற தி.மு.க. தலைமையின் முடிவிலிருந்து வேறுபட்டார் அழகிரி. ஆட்சி அதிகாரம் போனதும் மீண்டும் தி.மு.க.வையும், ஸ்டாலினையும் விமர்சிக்கத் துவங்கினார். அப்படித்தான் 2014-ம் ஆண்டு அவரின் செயல்பாடு அவரைக் கட்சியிலிருந்து நீக்கக் காரணமாக அமைந்தது.

இன்றைய சூழலுக்கு வருவோம். 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டாலினுக்கு எதிராக வெளிப்படையாக யுத்தம் தொடங்கியிருக்கிறார் அழகிரி. கருணாநிதி மறைந்த சில தினங்களில் `கருணாநிதியின் ஆதரவாளர்கள் தன் பக்கம் இருப்பதாகச் சொல்லியிருப்பது தற்போதைய அரசியல் சூழலில் நிச்சயம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தவே செய்திருக்கிறது. இதற்கு பின்னணியில் டெல்லி அரசியல் இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

``ஜெயலலிதா இறந்த ஓரிரு மாதத்தில் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று `அம்மாவின் ஆன்மாவுடன் பேசினேன்' எனக் கூறி, அப்போதைய கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராகக் குரல் எழுப்பினார் ஓ.பன்னீர்செல்வம். இதனால் அ.தி.மு.க. உடைந்தது. சசிகலா நீக்கப்பட்ட பின்னர் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைந்து துணை முதல்வரும் ஆனார் பன்னீர்செல்வம். ``பிரதமர் மோடி, நான் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்று கூறினார். அதன் காரணமாகவே தற்போது அமைச்சரவையில் இருக்கிறேன்" எனப் பன்னீர்செல்வம் பேசியிருந்தார். அதுதான் இப்போதும் நடக்கிறது. அதேபோல் இப்போது அழகிரி கருணாநிதியின் சமாதியிலிருந்து புதிய சர்ச்சையைத் துவங்கியிருக்கிறார். இதற்குப் பின்னாலும் டெல்லி அரசியல் இருக்கவே வாய்ப்பு அதிகம். தி.மு.க., அ.தி.மு.க. பலவீனம் அடைவது என்பது ஒன்று மட்டுமே தமிழகத்தில் தேசியக் கட்சிக்கு வாய்ப்பை அளிக்கும். தற்போதைய சூழலில் தி.மு.க.வை பலவீனம் அடையச் செய்ய அழகிரியே அவர்களுக்கு வாய்ப்பாக இருப்பார். எனவே, இதன் பின்னணியில் டெல்லி அரசியல் இருக்க வாய்ப்புகள் அதிகம்," என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ஆனால், அழகிரியால் எந்தப் பாதிப்பும் தி.மு.க.வுக்கு ஏற்பட்டு விடாது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ``அழகிரிக்குக் கட்சியில் செல்வாக்கு, தொண்டர் பலம் எல்லாம் எப்போதோ பலவீனமாகிவிட்டன. 2013-ம் ஆண்டு அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலினை முன்மொழிவேன் எனக் கருணாநிதி பேசத்துவங்கியபோது பலவீனமடையத்துவங்கிய அழகிரியின் செல்வாக்கு, 2014 கட்சியிலிருந்து நீக்கப்பட்ட போதும், 2016 சட்டமன்றத் தேர்தலின் போது `எனது அரசியல் வாரிசு ஸ்டாலின்தான்' எனக் கருணாநிதி வெளிப்படையாகவே அறிவித்த போதும் கட்சியில் பெருமளவில் சரிந்தது . 

2017-ம் ஆண்டு தி.மு.க.வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டபோது அழகிரியின் செல்வாக்கு முற்றிலும் சரிந்து விட்டது. தி.மு.க.வின் 99 சதவிகிதம் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் விதிவிலக்கில்லாமல் ஸ்டாலின் ஆதரவாளர்களாகத்தான் இருக்கிறார்கள். ஸ்டாலின் விருப்பம் இல்லாமல் அழகிரியால் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் தற்போதைய நிலை. சென்னைத் தலைமை அழகிரியைக் கைவிட்டதும், மதுரையும் அவரை கைவிட்டு விட்டது.

குடும்பத்தில் அழகிரிக்காகப் பலமாக ஒலித்த குரல் தயாளு அம்மாளுடையது. அவரின் நிர்பந்தமே கருணாநிதியை அழகிரிக்கு ஆதரவாக சில முடிவுகளை எடுக்க வைத்தது. இப்போது கருணாநிதி இல்லை. தயாளு அம்மாளும் அழகிரிக்குப் பரிந்து பேச வாய்ப்பில்லாமல் உடல்நலம் குன்றியிருக்கிறார்.

மறுபுறம் அழகிரியின் செல்வாக்கு என்பது கட்சிக்குப் பெரிய பலனை அளித்து விடவில்லை. லீலாவதி கொலை, தா.கிருட்டிணன் கொலை, தினகரன் அலுவலக எரிப்பில் கொல்லப்பட்ட ஊழியர்கள், கிரானைட் ஊழல் என அழகிரியோடு தொடர்பு படுத்தப்பட்ட நிகழ்வுகள் தி.மு.க.வுக்கு நெருக்கடியையே அளித்தது. எனவே, அழகிரியின் இந்தப் பேட்டி தி.மு.க.வுக்குள் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை," என்ற பார்வையும் பலரால் முன்வைக்கப்படுகிறது.

18 ஆண்டுகளாக இந்தச் சகோதர யுத்தம் குறித்த செய்தியை தமிழக ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கி வருகின்றன. ஆனால், இப்போது இந்தச் செய்தி அவ்வளவு அழுத்தம் சேர்க்கவில்லை. தி.மு.க.வின் தலைமை நாற்காலி என்பது ஸ்டாலினுக்குத்தான் என்பது உறுதியாகியிருக்கிறது. இப்போது அழகிரியின் இந்தப் பேச்சு செய்தியாவதைத்தவிர எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.

அடுத்த கட்டுரைக்கு