Published:Updated:

“அ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையில்!”

“அ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையில்!”
பிரீமியம் ஸ்டோரி
“அ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையில்!”

தினகரன் வக்கீல் அதிரடி!

“அ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையில்!”

தினகரன் வக்கீல் அதிரடி!

Published:Updated:
“அ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையில்!”
பிரீமியம் ஸ்டோரி
“அ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையில்!”

.தி.மு.க-விலிருந்து சசிகலா குடும்பத்தைத் துடைத்தெறியும் வேலைகள் வேகம் பிடித்துள்ளன. அதற்காகவே எடப்பாடி பழனிசாமி மற்றும்  பன்னீர்செல்வம் தரப்பில் டெல்லியில் ‘டென்ட்’ அடித்துக் காத்துக் கிடக்கின்றனர். ஆளுநர் மாளிகை, தலைமைத் தேர்தல் ஆணையம் என அத்தனை அதிகார மட்டங்களிலும் அவர்களின் காய் நகர்த்தல்கள் முன்னேறிப் போய்க்கொண்டே இருக்கின்றன. அதே அதிகார மட்டங்களில் சசிகலா குடும்பத்தின் காய்கள் வீழ்த்தப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 12-ம் தேதி நடக்கப்போகும் அ.தி.மு.க பொதுக்குழு முடிவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை டெல்லி தீர்மானித்துவிட்டது. அது, முற்றிலும் தங்களுக்குப் பாதகமாகக்கூடும் என்பதை சசிகலா குடும்பமும் நன்றாகவே உணர்ந்துள்ளது.

எனவே, கட்சியைக் கைப்பற்றுவதற்கும் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும் சட்ட வழிமுறைகளை இப்போதே அவர்கள் தேடத் தொடங்கிவிட்டனர். இதுபற்றி தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் பேசினோம். ``நான் கட்சிக்காரன் கிடையாது. வழக்கறிஞர் மட்டுமே. அதனால், சட்டப்படியான நடைமுறைகளை மட்டுமே சொல்வேன்” என்ற நிபந்தனையோடு பேச ஆரம்பித்தார்.

“அ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையில்!”

“மத்திய அரசு, தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக கவர்னர் என யாராக இருந்தாலும்... நீதிமன்றங்களின் உத்தரவுக்குக் கட்டுப் பட்டவர்களே. இன்றைய தேதியில், தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம்தான் உள்ளது. இதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அ.தி.மு.க என்ற கட்சியின் அதிகாரம் முழுவதும் இந்த நிமிடம் வரையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் தினகரனிடமே உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சசிகலா யார்?

‘சசிகலா அ.தி.மு.க-வில் என்ன பொறுப்பில் இருந்தார்’ என்பதை எடப்பாடி மற்றும் பன்னீர் தரப்பினர் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கிறார்கள். அந்தக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக அவர் இருக்கிறார். தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் இது பதிவாகியுள்ளது. சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவணங்களிலும் இது பதிவாகியுள்ளது. அதனால், அந்த அடிப்படையில் சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை யாரும் எதிர்க்க முடியாது.

சசிகலாவே பொதுச்செயலாளர்!

‘சசிகலாவைப் பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது’ என இப்போது சொல்லும் பன்னீர்செல்வம், செம்மலை, மதுசூதனன் உள்ளிட்ட அனைத்து மூத்த நிர்வாகிகளும் சேர்ந்துதான், சசிகலாவைப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். 2016 டிசம்பர் 29-ம் தேதி ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழுவைக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி, அதில் கையெழுத்துப் போட்டு, அதைக் கொண்டுபோய் சசிகலாவிடம் கொடுத்து, பொதுச்செயலாளர் பொறுப்பை அவரை ஏற்க வைத்தனர். அதன்பிறகு, சசிகலாவின் தலைமை மீது இவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டால், அந்தக் கட்சியின் அடுத்தப் பொதுக்குழுவில் வேறொருவருக்கு வாக்களித்துப் பொதுச் செயலாளரை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், இங்கு அப்படி நடக்கவில்லை. தனி அணியாகப் போன ஓ.பி.எஸ் அணியினர், ‘சசிகலாவைப் பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது’ என அறிவிக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னத்தையும் பெயரையும் முடக்கிவைத்து, இருவரும் தனித்தனி அணிகளாகச் செயல்படலாம் என அறிவித்தது. ஆனால், அப்போதுகூட அந்த அணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியதாகவோ, துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து தினகரனை நீக்கியதாகவோ தேர்தல் ஆணையம் இந்த நிமிடம் வரை அறிவிக்கவில்லை. இன்றுவரை தேர்தல் ஆணையத்திலிருந்து அனுப்பப்படும் அறிக்கைகள், சசிகலாவின் பெயருக்கும் தினகரனின் பெயருக்கும்தான் அனுப்பப்படுகின்றன. இந்தச் சூழலில், அணிகள் இரண்டும் இணைந்துவிட்டன. அதனால், தேர்தல் ஆணையத்தில் உள்ள வழக்கு இயல்பாக ரத்தாகிறது. ஓ.பி.எஸ் அணியினர் தாக்கல் செய்த மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டால், அந்த நிமிடமே கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா என்பதும், துணைப் பொதுச்செயலாளர் தினகரன் என்பதும் மீண்டும் உறுதிப்படுத்தப்படும்.

‘அ.தி.மு.க-வின் பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே’ என்ற கட்சியின் சட்டதிட்ட விதிப்படி, எப்போது கூட்ட வேண்டும் என்பதையும் சசிகலாதான் முடிவு செய்வார். மாறாக, அவர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவைக் கூட்டவே முடியாது.

“அ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையில்!”

தற்காலிகப் பொதுச்செயலாளர் செல்லுமா?

தற்காலிகப் பொதுச்செயலாளர் என்பதே அ.தி.மு.க-வில் இல்லை என்பது தவறு. 1989 முதல் 1993 வரை ஜெயலலிதாவே அந்தக் கட்சியின் தற்காலிகப் பொதுச் செயலாளராகத்தான் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதற்கு அன்றைய அரசியல் சூழல், ஜா.அணி, ஜெ.அணி குளறுபடிகள் காரணமாக இருந்தன. பிறகுதான், அவர் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலா விவகாரத்திலும் இதுவேதான், அவர் தற்காலிகப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட காரணம். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் எதிர்பாராத சூழலில் நிகழ்ந்ததால், கட்சியை வழிநடத்த தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதிகாரத்தைப் பொறுத்தவரையில், நிரந்தரப் பொதுச் செயலாளருக்கு என்ன அதிகாரமோ, அதேதான் தற்காலிகப் பொதுச்செயலாளருக்கும். அதில் இம்மியளவும் வேறுபாடு கிடையாது.

அ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையில்தான் உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

“அ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையில்!”

துணைப் பொதுச்செயலாளர் தினகரன்!

‘கட்சியின் துணைப் பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர் பொதுச் செயலாளர்தான்’ என்று அ.தி.மு.க-வின் துணை விதி சொல்கிறது. ‘பொதுச்செயலாளர் இல்லாத நேரங்களில் துணைப் பொதுச்செயலாளர் கட்சியை வழிநடத்துவார்’ என்றும் தெளிவாகச் சொல்கிறது. தேர்தல் ஆணையத்தில் நாங்கள் கொடுத்துள்ள மனுவிலும் அ.தி.மு.க-வின் அந்தத் துணை விதி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் கொடுத்துள்ள மனுவிலும் அது குறிப்பிடப் பட்டுள்ளது. அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள துணை விதியிலும் அது தெளிவாக உள்ளது.

கவர்னர் செய்வது தவறே!

தமிழகச் சட்டமன்றத்தில் இப்போதுள்ள கணக்குப்படி ஒரு கட்சி, ஆட்சி செய்வதற்கு பெரும்பான்மையாக 117  எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. ஆனால், இப்போது 117 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இல்லை. தினகரன் ஆதரவு  எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், ‘நாங்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என தனித்தனியாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அவற்றைத் தவிர்த்து, தி.மு.க-வின் 89 எம்.எல்.ஏ-க்கள் சார்பிலும் ஆளுநரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் எட்டு எம்.எல்.ஏ-க்கள் சார்பிலும் முஸ்லிம் லீக் சார்பிலும் கடிதங்கள் தரப்பட்டுள்ளன. இப்படிக் கொடுக்கப்பட்ட 22 கடிதங் களிலும், ‘சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்’ எனக் கேட்கப்பட்டுள்ளது.

அதைவிட முக்கியமான விஷயம், இந்த 22 கடிதங்களின் மூலம், 232 எம்.எல்.ஏ-க்களில் (ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதி இப்போது காலியிடமாக உள்ளது, சபாநாயகர் இதில் கணக்கில் வரமாட்டார்) 117 எம்.எல்.ஏ-க்கள் இந்த ஆட்சிக்கு எதிராக உள்ளனர். அதாவது மெஜாரிட்டி எதிர்ப்பு, மைனாரிட்டி ஆதரவு என்ற சூழல் மட்டுமே நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையிலும் ஆளுநர் மௌனம் சாதிக்கிறார். இது ஜனநாயக விரோதம். இதில், வெளிப்படையாக தனது முடிவை ஆளுநர் அறிவிக்கவில்லை என்றால், அதிலும் நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும்” என்றார் ராஜா செந்தூர் பாண்டியன்.

யார் போடும் கணக்கு, சரியான விடை தரும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

- ஜோ.ஸ்டாலின்
படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism