Published:Updated:

"தமிழக பிரச்னை குறித்து பிரதமர் ஏன் பேசவில்லை?" தமிழிசை சௌந்தர ராஜன் பதில்

"தமிழக பிரச்னை குறித்து பிரதமர் ஏன் பேசவில்லை?" தமிழிசை சௌந்தர ராஜன் பதில்
"தமிழக பிரச்னை குறித்து பிரதமர் ஏன் பேசவில்லை?" தமிழிசை சௌந்தர ராஜன் பதில்

"தமிழக பிரச்னை குறித்து பிரதமர் ஏன் பேசவில்லை?" தமிழிசை சௌந்தர ராஜன் பதில்

ந்தியாவின் 72-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார். அதில், தமிழகத்தைச் சேர்ந்த மகாகவி பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டிப் பேசியிருப்பது அனைவரையும் உற்றுநோக்க வைத்துள்ளது.

இதுகுறித்து பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் பேசினோம். ``சுதந்திர தினத்தன்று பிரதமர் ஆற்றிய உரை மிகவும் புகழ்பெற்றுள்ளது. அவருடைய அந்தப் பேச்சை ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் பார்த்துள்ளனர். அவர் நிகழ்த்திய அந்த உரையைப் பலரும் ஒவ்வொரு வரியாகக் கேட்டு வருகின்றனர். அவர், சுதந்திர தினத்தில் மட்டும் தமிழைப் பற்றிப் பேசவில்லை. ஏற்கெனவே அவர் தமிழ் மொழி பற்றியும், தமிழர்கள் பற்றியும் பலமுறை பேசியுள்ளார். அவர், இலங்கைக்குப் பயணம் செய்தபோது தமிழ் மக்களையும், உலகப் பொதுமறையான திருவள்ளுவரின் திருக்குறள் பற்றியும் பெருமிதத்துடன் பேசியிருக்கிறார். அதேபோன்று, கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடந்த ராணுவத் தளவாடங்கள் கண்காட்சியின்போது உரை நிகழ்த்திய பிரதமர், திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார். 

பொதுவாக அவர், தமிழகத்தில் உள்ள தலைவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட ஆளுமைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துள்ளார். அப்படியான நிலைப்பாட்டில் பிரதமர் இருக்கும்போது தொடர்ந்து பி.ஜே.பி தமிழகத்தைப் புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டை இங்குள்ளவர்கள் வைத்து வருகின்றனர். மாதந்தோறும் வானொலி மூலம் `மன் கி பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் மக்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். கடந்த மாதம் பேசிய அந்த நிகழ்ச்சியில், தண்ணீர் சேமிப்பு குறித்துப் பேசினார். அதில், முக்கியமாகத் தமிழகத்தின் கோயில்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மேலும், `அன்றையை தமிழக அரசர்கள் கோயில்களில் நீர்மேலாண்மைக்கு உலகத்துக்கே வழிகாட்டும் வகையில் பலத் திட்டங்களைச் செயல்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள்' என எடுத்துக் கூறியதோடு, கட்டடக் கலை மற்றும் ஓவியங்கள் போன்றவற்றில் நீர் மேலாண்மை குறித்து தமிழகக் கோயில்களில் சொல்லப்பட்ட தகவல்களையும் சுட்டிக்காட்டிப் பேசினார். 

அதேபோன்று பண மதிப்பிழப்பு நடவடிக்கை முடிந்து, ஒருவழியாக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய காலத்தில் (மூன்று மாதம் கழித்து) பேசிய பிரதமர், `என்னுடைய இந்த நடவடிக்கையைப் பலர் விமர்சனம் செய்திருந்தாலும், இன்று ஒரே ஒரு தலைவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால், என்னுடைய இந்தத் திட்டத்தை வரவேற்றிருப்பார்; என்னையும் பாராட்டிப் பேசியிருப்பார்' என்றார். அவர், வேறு யாருமல்ல... நம் முன்னாள் முதல்வர் காமராஜர்தான். அப்படி, தமிழகத்தின் சிறப்புகளையும், பெருமைகளையும், தமிழர்களையும் தன்னுடைய உரையில் தொடர்ந்து எடுத்துப் பேசும் தலைவர்களிலும், பிரதமர்களிலும் மிகவும் முக்கியமானவராகவும், முதன்மையானவராகவும் இருப்பவர் நம் பிரதமர் மோடி மட்டுமே" என்றவரிடம், ``தமிழகத்தின் பெருமைகள் பற்றிப் பேசும் பிரதமர், இங்கு நிலவும் பிரச்னைகள் பற்றிக் கண்டுகொள்வதில்லையே" என்று கேள்வி எழுப்பினோம். 

அதற்குப் பதிலளித்த தமிழிசை செளந்தரராஜன், `` `பிடிக்காத மருமகள் கைபட்டாலும் குற்றம்... கால் பட்டாலும் குற்றம்' என்று சொல்வதுபோல, அதே நிலைப்பாட்டுடன்தான் இங்குள்ளவர்களும் மத்திய அரசைப் பார்க்கிறார்கள். அதனால், மத்திய அரசு என்ன செய்தாலும் அவர்களுக்கு அது குற்றமாகவே தெரிகிறது. எட்டுவழிச் சாலைத் திட்டம், நீட் தேர்வு இவற்றில் என்ன பிரச்னை இருக்கிறது? எட்டுவழிச் சாலைத் திட்டம் வந்தால், தொழில் பெருகும் என்று அரசாங்கம் சொல்லும்போது அதை நம்ப வேண்டும் அல்லவா? அதேபோன்று நீட் தேர்வால் டீக்கடை வைத்திருப்பவரின் மகள் மருத்துவம் படிக்கிற கனவு நிஜமாகியுள்ளது. அப்படி அனைத்துமே நாட்டில்  நல்லவிதமாக நடைபெறும்போது தமிழகத்தில் உள்ள சிலர்,  குறைசொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். இருப்பினும், ஏதேனும் ஒருசில திட்டங்களில் குறை இருந்தாலும் அதில் திருத்தம் கொண்டுவரவும் மத்திய அரசு தயார் நிலையில் இருக்கிறது. அப்படியிருந்தும் மத்திய அரசு மீது குறை சொல்கிறார்கள்'' என்றார், மிகத் தெளிவாக.

தமிழகத்தின் பெருமைகளோடு, பிரச்னைகளும் பேசப்பட வேண்டும் என்பதுதான் தமிழர்களின் எதிர்பார்ப்பு. 

அடுத்த கட்டுரைக்கு