Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

ஏ.கணேசன், தூத்துக்குடி-1.

இனி சசிகலா, தினகரனின் கதி என்ன?


சும்மா இவர்கள் காட்டும் பூச்சாண்டிகளுக்கு எடப்பாடியோ பன்னீரோ பயப்படத் தயாராக இல்லை. ‘‘ஆட்சியைக் கவிழ்ப்பேன்... பதவி இருப்பதால்தானே ஆடுகிறார்கள்’’ என்று தினகரன் சொல்லி வருவதாகக் கேள்வி. ஒருவேளை தினகரனால் அதைச் சாதிக்க  முடிந்தால்... பதவியை இழந்த நிலையில் எடப்பாடியும் பன்னீரும்கூட தினகரன் பக்கம் வரலாம்.

கழுகார் பதில்கள்!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

‘தி.மு.க-வுடன் கைகோக்கத் தயங்க மாட்டோம்’ என்கிறதே தினகரன் கோஷ்டி?


‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த விஷயத்தில் திவாகரனுக்கும் தினகரனுக்குமே கருத்து வேறுபாடு இருக்கிறது. ஒருவேளை தி.மு.க-வுடன் தினகரன் அணி கைகோத்தால், தினகரனை வீழ்த்துவதற்குப் பன்னீருக்கோ எடப்பாடிக்கோ வேறு ஆயுதம் தேவைப்படாது.

அ.குணசேகரன், புவனகிரி.


சசிகலாவின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதே?


 சீராய்வு மனு என்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தரப்படும் ஒரு சலுகை. இந்த வழியாக தண்டனையிலிருந்து தப்பியவர்கள், மிகக்குறைவான சதவிகிதத்தினர்தான். கொடுக்கப்பட்ட தீர்ப்பில் மிக முக்கியமான தவறு இருப்பதாகச் சுட்டிக் காட்டி, ‘இதனை நீதிமன்றம் கண்டுகொள்ளத் தவறியுள்ளது’ என்றால் மட்டும்தான் சீராய்வு மனுவைக் கவனத்தில் கொள்வார்கள். மற்றபடி, தீர்ப்பையே பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்காது. இது தெரிந்தும், சீராய்வை நீதிமன்றம் எடுத்துக்கொள்வதற்கு முந்தைய தினம் புதிதாக ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்கள். அதில், ‘சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டார்கள். மீண்டும் பல ஆண்டுகள் இழுப்பதற்கான முயற்சி இது. இப்படி எத்தனை இழுத்தடிப்புகளை நீதிமன்றம் பார்த்திருக்கும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கழுகார் பதில்கள்!

திருப்பூர் அர்ஜுனன்.ஜி., அவிநாசி-54.

தினகரனின் முரட்டு பக்தன் ஆகிவிட்டாரே நாஞ்சில் சம்பத்?

அவர் யாருக்குப் பக்தனாக இருந்தாலும் முரட்டு பக்தனாகத்தான் இருப்பார். யாருக்கு எதிரி ஆனாலும் முரட்டு எதிரியாகத்தான் இருப்பார்.

கு.முருகானந்தம், பருத்திக்குடி.

போராட்டக் களத்தின் விளைநிலமாக இருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, படுத்த படுக்கையாக இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறதே?

கருணாநிதி போராட்டம் செய்த காலம் முடிந்துவிட்டது. இப்போது அவர் முதுமைக் காலத்தில் இருக்கிறார், அவ்வளவுதான்!

அரிமா பூவேந்தரசு, சின்ன தாராபுரம்.

கட்சி தனது கட்டுப்பாட்டில் இருந்தால்தான், வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு எம்.எல்.ஏ சீட்டுகளைப் பேரம் பேசி விற்க சாத்தியப்படும் என்று தினகரன் நினைக்கிறார். இதுதான் அவரது கொள்கையே தவிர மற்றபடி அ.தி.மு.க.வைக் காப்பாற்றுவதாகச் சொல்வது எல்லாம் நாடகம்தானே?


தினகரன் மட்டுமா நாடகம் ஆடுகிறார்? எடப்பாடியும்தான்; பன்னீரும்தான். அவரவர் தனித்தனியாக நாடகங்களைத் தயாரித்து, தங்கள் பாத்திரங்களை நடித்துக்கொண்டிருக்கிறார்கள். வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கி வைத்துக்கொள்வது தினகரன் பாணி மட்டுமல்ல. ‘அம்மா’ பாணி. ‘சின்னம்மா’ பாணி. இவரும் தொடர்கிறார்.

காஞ்சி எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்.

தி.மு.க-வுடன் வைகோ காட்டும் நெருக்கம், யாருக்குப் பயனளிக்கும்?


இருவருக்கும்தான். தி.மு.க-வுக்குத் தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய ஒரு தலைவர் கிடைத்தார்.

ம.தி.மு.க-வுக்கு தி.மு.க போன்ற பெரிய கட்சியின் தோழமை கிடைத்துள்ளது. மற்றபடி இருவருக்குமே, யார், எப்போது, எப்படி நடந்துகொள்வார்கள் என்பது தெரிந்திருக்கும். யாருக்கும் வெட்கமில்லை!

கழுகார் பதில்கள்!

பாரதி முருகன், மணலூர்பேட்டை.

அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்துக் கருத்துச் சொல்லியிருக்கும் கமல்ஹாசன், ‘காந்தி குல்லா, காவி குல்லா, காஷ்மீர் குல்லா, கோமாளி குல்லா’ என்று கிண்டல் அடித்துள்ளாரே?


இந்தக் குல்லாக்கள் இருக்கட்டும். கமலும் குல்லா போடுபவராக இருக்கக்கூடாது. இதுபோன்ற கமென்ட்டுகளை மட்டும் அவ்வப்போது அடித்துவிட்டு தலைமறைவு ஆகிவிடாமல், அர்த்தமுள்ள அரசியலைத் தொடர்ச்சியாக கமல் பேசத் தொடங்க வேண்டும்.

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-10.

சபாநாயகர் தனபாலை முதல்வர் நாற்காலிக்கு திவாகரன் முன்மொழிவது எதற்காக?


சும்மா குட்டையைக் குழப்புவதற்காக. ஒரு குறிப்பிட்ட சாதியின் முத்திரை தங்களுக்கு விழுந்துவிடக்கூடாது அல்லவா? அதற்காகவும் இருக்கலாம்.

ஜி.மகாலிங்கம், காவல்கார பாளையம்.


மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்குக் கீழே துணை முதல்வராக செயல்படுவது சாத்தியமா?

‘எந்தப் பதவியும் இல்லாமல் இருப்பதற்கு இது கிடைத்தால் போதும்’ என்ற நினைப்பு காரணமாக இருக்கலாம். ‘எவ்வளவு நேரம்தான் நிற்பது? பெஞ்ச் கிடைத்தால் போதும், உட்காரலாம்’ என்ற நினைப்பாக இருக்கலாம். அதே நேரத்தில், ‘முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் அவ்வளவாக பேச்சுவார்த்தை இல்லை’ என்றும் சொல்கிறார்கள். புதிய பொறுப்புக்கு வந்த பன்னீரை வாழ்த்தி சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் எடப்பாடி படமே இல்லை. முதல்வரின் அறைக்குத் துணை முதல்வர் அவ்வளவாகச் செல்வதுமில்லை என்றும் சொல்லப்படுகிறது.

படங்கள்: ஆ.முத்துக்குமார்

வி.ஐ.பி கேள்வி

கழுகார் பதில்கள்!

ஜோதிமணி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்

அ.தி.மு.க-வின் அலங்கோல ஆட்சி, அதனைப் பின்னிருந்து இயக்கும் பி.ஜே.பி... இது இன்றைய இளைஞர்கள் மத்தியில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?

‘அரசியல் என்றால் இதுதானா?’ என்ற விரக்தியை ஏற்படுத்தும். அரசியல் மீது நம்பிக்கை இழக்க வைக்கும். அரசியலிலிருந்து இளைஞர்களை அந்நியப்படுத்தும்.

எடப்பாடியும் பன்னீரும் இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்தார்கள். குற்றச்சாட்டுகள் வைத்தார்கள். ‘‘ஸ்டாலினோடு பன்னீர் சேர்ந்துவிட்டார்’’ என்றார் எடப்பாடி. ‘‘இந்த அரசு ஊழல்மயமானதாக ஆகிவிட்டது’’ என்று சொல்லி போராட்டத்துக்குத் தேதி குறித்தார் பன்னீர். இரண்டு பேரும் எதுவுமே நடக்காதது மாதிரி ஒன்று சேர்ந்துவிட்டார்கள். எல்லா அழுக்கையும் ஒரே நாளில் துவைத்துவிட்டார்கள். மாறிமாறிப் பூசிய கரியை ஒரே நாளில் அழித்துவிட்டார்கள். ‘ஏன் சண்டை போட்டார்கள், ஏன் ஒன்று சேர்ந்தார்கள்’ என்பது தெரியாத இளைஞர்கள் குழம்பிப் போனார்கள்.

இந்த இரண்டு பேரையும் அடிக்கடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி. ‘இதற்குக் காரணம் என்ன?’ என்றும் இளைஞர்கள் குழம்பிப் போனார்கள்.

எடப்பாடி - பன்னீர் இணைப்புக்கும், இவர்களை மோடி சந்திப்பதற்கும் ஆதாய அரசியல்தான் காரணம் என்பதை அறியாதவர்கள் அல்ல இளைஞர்கள். எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்தத் தலைமையாக இருந்தாலும், சொந்த லாப நஷ்டங்களைத்தான் பார்க்கும் என்பதை அறியும் இளைஞர்களுக்கு இந்த அரசியல்வாதிகள் கசக்கவே செய்வார்கள். அரசியலும் கசக்கவே செய்யும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!