Published:Updated:

தினகரன் டீலும் எடப்பாடி கவனிப்பும்!

தினகரன் டீலும் எடப்பாடி கவனிப்பும்!
பிரீமியம் ஸ்டோரி
News
தினகரன் டீலும் எடப்பாடி கவனிப்பும்!

20 ரூம்கள்... 21 எம்.எல்.ஏ-க்கள்

‘முதல்வர் எடப்பாடியை மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையோடு புதுச்சேரி விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டுக்குக் குடிபெயர்ந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ஏறிக் கொண்டிருந்தது; இந்த வாரம் இறங்க ஆரம்பித்திருக்கிறது.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு அ.தி.மு.க-வுக்குள் கலகலப்பைப் கூட்டினாலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கலகத்தை ஏற்படுத்தினார்கள். துணை முதல்வர் பதவியைப் பெற்றுக் கொண்டு ‘தர்மயுத்தத்தை’ முடிவுக்குக் கொண்டு வந்தார் பன்னீர். ஆனால், ஆட்சியே ஆட்டம் காண ஆரம்பித்தது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி உயர்த்தினர். ஆளுநரைச் சந்தித்த அவர்கள், ‘முதல்வர் எடப்பாடிக்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக’ தனித் தனியே கடிதம் அளித்து அரசியல் சதுரங்க ஆட்டத்தைத் தொடங்கினார்கள். எதிரணி வளைத்துவிடாமல் இருக்க, அந்த 19 எம்.எல்.ஏ-க்களையும் ஆளுநர் மாளிகையில் அப்படியே அமுக்கிய தினகரன் தரப்பு, கூவத்தூர் பாணியில் புதுச்சேரிக்கு அள்ளிக் கொண்டு போனது.

தினகரன் டீலும் எடப்பாடி கவனிப்பும்!

இதற்கிடையில் விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வனும், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதியும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால், இந்த அணி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. கடந்த மாதம் 22-ம் தேதி ரிசார்ட்டுக்கு வந்த எம்.எல்.ஏ-க்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து எடப்பாடியை விளாசிவிட்டு, ‘‘தினகரன் எங்களைச் சந்திக்க வருவார்’’ எனப் பேட்டி கொடுத்தனர். ஆனால், 10 நாட்களாகியும் தினகரன் வந்து சந்திக்கவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதற்குள் ரிசார்ட்டில் சலசலப்புகள் எழ ஆரம்பித்தன. அங்கு வார இறுதி நாள்களில் ஏற்கெனவே புக்கிங் செய்தவர்கள் வந்ததால், ‘சன்வே மேனர்’ என்ற ஹோட்டலுக்கு மாற வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை மாலை அங்கு போவதும், ஞாயிற்றுக்கிழமை இரவில் மீண்டும் ரிசார்ட்டுக்கு வருவதுமாக இரண்டு வாரங்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள் எம்.எல்.ஏ-க்கள். இதற்கிடையில் தொகுதிகளில் ‘காணவில்லை’ போஸ்டர்களை அடித்து ஒட்டி எடப்பாடி தரப்பு காய் நகர்த்தியதால், டரியல் ஆனார்கள் எம்.எல்.ஏக்கள். இந்த விஷயம் தினகரனுக்குப் போக, மாணவி அனிதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகக் கிளம்பிய தினகரன், வழியில் புதுச்சேரிக்கு வந்து ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்தார். அவர்களிடம், “உடல்நிலை சரியில்லாததால்தான் இத்தனை நாள்கள் உங்களை வந்து பார்க்க முடியவில்லை. சீக்கிரம் நல்ல முடிவு வரும். அதுவரை காத்திருங்கள்” என்று நம்பிக்கை கொடுத்தார்.

தினகரன் கிளம்பியதும், நம்பிக்கை இழந்த எம்.எல்.ஏ-க்கள் சிலர், ‘‘தொகுதியைப் பார்த்துவிட்டு வருகிறேன்; வீட்டைப் பார்த்து விட்டு வருகிறேன்’’ என விதவிதமான காரணங்களைச் சொல்லிவிட்டுச் சென்று விட்டனர். செப்டம்பர் 3-ம் தேதியும், 4-ம் தேதியும் பிஸியான முகூர்த்த நாள்கள் என்பதால், தொகுதியில் திருமண நிகழ்வுகளில் பங்கேற்க பலரும் போய்விட்டனர். 21 எம்.எல்.ஏ-க்களில் 5-ம் தேதி திங்கட்கிழமை காலை நிலவரப்படி, செந்தில்பாலாஜி, ஜக்கையன், ஏழுமலை, மாரியப்பன், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட ஒன்பது பேர் மட்டுமே தங்கியிருந்ததாகச் சொல்கிறார்கள். ‘எத்தனை எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்’ என்ற தகவலை யாரும் சொல்ல மறுக்கிறார்கள். ‘‘அந்த எம்.எல்.ஏ-க்களின் சொந்தங்களிடம் எடப்பாடி தரப்பு நடத்திய ‘டீல்’ கனிந்துவிட்டது. ஆனால், எல்லா எம்.எல்.ஏ-க்களும் திரும்ப வருவார்கள் என்று நம்ப வைப்பதற்காகத்தான் 20 அறைகளை அப்படியே புக்கிங்கில் வைத்திருக்கிறார்கள். போனவர்களை எப்படியாவது ‘சரிக்கட்டி’ அழைத்துவருவதில் தீவிரம் காட்டி வருகிறது தினகரன் தரப்பு. ‘டீல்’ முடிவதைப் பொறுத்துத்தான் அவர்கள் வருவதும் வராததும்” என்றனர் விபரமறிந்த அ.தி.மு.க நிர்வாகிகள். இந்த நிலையில், தினகரன் தரப்பு தீவிர முயற்சி எடுத்ததால், திங்கட்கிழமை இரவே பல எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் ரிசார்ட்டுக்கு திரும்பிவிட்டனர்.

தினகரன் டீலும் எடப்பாடி கவனிப்பும்!

இது ஒருபுறமிருக்க, புதுச்சேரியின் அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரும் ஜெயலலிதா இறந்தவுடன் சசிகலா அணியை ஆதரித்தனர். அதன்பிறகு எடப்பாடி அணி உருவானதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு கடலூர் சென்ற அவரைச் சந்தித்து அந்த அணிக்குத் தாவினர். பின்னர் அதில் ஒருவரான பாஸ்கர் எம்.எல்.ஏ மட்டும் தினகரன் அணிக்குத் தாவியதோடு, ‘‘நான் தினகரன் அணிக்கு ஆதரவு. மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது’’ என்றார். கோகுலகிருஷ்ணன் எம்.பி மட்டும் தினகரன் விசுவாசியாக இருந்துவந்தார். தினகரன் புதுச்சேரிக்கு வந்த அன்று எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரும் சென்று அவரை சந்தித்து, ‘‘நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு, ‘‘ஆரம்பத்திலிருந்தே கோகுலகிருஷ்ணன் எங்களுடன்தான் இருக்கிறார். நீங்கள் எந்தப் பக்கம் துண்டு போடுவது என்று முடிவு எடுத்துவிட்டீர்களா?” என்று நக்கலாகக் கேட்டாராம் தினகரன்.

- ஜெ.முருகன், படங்கள்: அ.குரூஸ்தனம்