Published:Updated:

பொக்ரான் முதல் கிருஷ்ணமேனன் மார்க் வரை... இந்தியாவை ஒளிரவைத்த வாஜ்பாய்!

பொக்ரான் முதல் கிருஷ்ணமேனன் மார்க் வரை... இந்தியாவை ஒளிரவைத்த வாஜ்பாய்!
பொக்ரான் முதல் கிருஷ்ணமேனன் மார்க் வரை... இந்தியாவை ஒளிரவைத்த வாஜ்பாய்!

இந்த இளைஞன் நிச்சயம் ஒருநாள் பிரதமர் பதவியை அலங்கரிப்பான்" என்ற ஜவஹர்லால் நேருவின் கனவை நிஜமாக்கியவர் அடல் பிகாரி வாஜ்பாய்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

று வெவ்வேறு தொகுதிகளிலிருந்து 10 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 3 முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்றவர். இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர் வாஜ்பாய். `இந்தியா ஒளிர்கிறது' என உரக்க முழங்கியவரின் குரல்கள் இப்போது ஓய்வெடுக்கத்தொடங்கியுள்ளன . 

வாஜ்பாய் எனும் உன்னதத் தலைவரின் வாழ்க்கை இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத காலம். இந்தியாவில் பி.ஜே.பி காலூன்றக் காரணமாக இருந்த தலைவர். 1996-ம் ஆண்டு 13 நாள்கள், 1998-ம் ஆண்டு 13 மாதங்கள் எனப் பிரதமராகி பல சோதனைகளைச் சந்தித்தாலும் 1999 முதல் 2004 வரையிலான பி.ஜே.பி-யின் ஆட்சிக்கு அச்சாரம் வாஜ்பாய்தான். காங்கிரஸ் அல்லாத ஒரு பிரதமர் 5 ஆண்டுகள் ஆட்சிப் பீடத்தில் இருந்தார் என்றால் அவர் வாஜ்பாய் மட்டும்தான்.

வாஜ்பாய் எனும் கம்பீரமான மனிதனின் கணீர் குரலை இந்தியா கடைசியாக 2007-ம் ஆண்டு லக்னோ பாராளுமன்றத் தொகுதியில் கேட்டது. இந்தியாவின் நம்பிக்கை குரல், வளர்ச்சிக் குரல் என்று கூறப்பட்ட வாஜ்பாயின் குரல்கள் சிறு சத்தங்களாகக் கிருஷ்ண மேனன் மார்க்கில் அருகில் இருப்பவரின் காதுகளைக்கூட எட்டாத ஒலியாக இருந்தது. அவருக்குப் பாரத ரத்னா கிடைத்த போதுகூட அவரது ஒரு புகைப்படம் மட்டும் வெளியானது. அதிலும் முகம் தெளிவாகத் தெரியவில்லை. அதைத்தாண்டி எந்தப் புகைப்படமும் வெளியாகவில்லை. 9 ஆண்டுகளாக வாஜ்பாய் முகம் மக்கள் கண்ணில் படவே இல்லை. பி.ஜே.பி-யின் பிரசார விளம்பரங்களிலும் சிறியதாகவோ அல்லது சில நேரங்களில் பெயரோடோ சுருங்கிப்போனது வாஜ்பாய் எனும் இந்தியாவின் மூத்த அரசியல் முகம்.

2009-க்கு முன்பு வரை ஓரளவு செயல்பாட்டில் இருந்த வாஜ்பாயின் உடல்நிலை 2009-க்குப் பிறகு, சற்று தளர்ந்துபோனது. அவ்வப்போது பி.ஜே.பி-யின் இரண்டாம் கட்ட தலைவர்கள் வந்து சென்றுகொண்டிருந்தனர். பின்னர் அதுவும் குறைந்தது. கை, கால் செயல்பாடுகள் முற்றிலுமாகக் குறைந்து படுக்கையில் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதவராய் இருந்தார் வாஜ்பாய். வாஜ்பாய் உடல்நிலை மோசமாகத் தொடங்கிய போதும்கூட தினசரி செய்தி சேனல்களை பார்ப்பது. லதா மங்கேஷ்கர் இசையில் நனைவது எனத் தன்னை உற்சாகத்தோடு வைத்திருந்தார். 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 16 வாஜ்பாய் உடல்நலக்குறைவால் காலமானார். இந்தியாவை ஆளும் தேசியக் கட்சியும், இந்தியாவும் ஒரு மூத்த அரசியல்வாதியை இழந்து தவிக்கிறது. 

பொக்ரான் அணு சோதனைக்கு முன்னின்றவர். பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வித்திட்டவர். இன்று ஆளும் பி.ஜே.பி-யின் ஆதி. தங்க நாற்கரச் சாலைத் திட்டம்தான் இந்தியச் சாலைகளின் தரத்தை உயர்த்தியது. இன்னும் சொல்லப்போனால் இந்திய நகரங்களை இணைக்க இந்தத் திட்டம் பெரும் உதவியாக இருந்தது. `இந்தியா ஒளிர்கிறது' என்று உரக்க முழங்கினார், கல்விக்காக சர்வ ஷிக்‌ஷா அபியான் திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தியாவின் வளர்ச்சி என்பது அபரிமிதமாக இருந்தது இவரது காலத்தில்தான். ஜிடிபியை 7 புள்ளிகளுக்கு மேல் கொண்டு சென்ற இந்தப் பிரதமரும் இவர்தான். வளர்ச்சியை நோக்கிய இந்தியாவை வழிநடத்த விரும்பியவர். 

``இந்த இளைஞன் நிச்சயம் ஒரு நாள் பிரதமர் பதவியை அலங்கரிப்பான்" என்ற ஜவஹர்லால் நேருவின் கனவை நிஜமாக்கியவர் அடல் பிகாரி வாஜ்பாய். `பொக்ரான் நாயகன்', `தங்க நாற்கரச் சாலை நாயகன்' என்றெல்லாம் அழைக்கப்படும் வாஜ்பாய்க்கு இன்னொரு பெரும் புகழும் உண்டு. இந்தியப் பிரதமராக முழுப் பதவிக்காலத்தைப் பூர்த்திசெய்த முதல் காங்கிரஸ் கட்சியைச் சாராத பிரதமர் என்பதுதான். வாஜ்பாய் முழுநேர அரசியலிலிருந்து விலகி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆன பின்னும் அவரைப் பற்றிப் பேசுவதற்கு முக்கியக் காரணம் அவர் அறிவித்த திட்டங்களும், செய்த சாதனைகளும்தாம்.

வாஜ்பாய் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கியத் திட்டங்கள்/சாதனைகளின் தொகுப்பு இதோ...

தங்க நாற்கரச் சாலை  

நாட்டின் வளர்ச்சியில் சாலைகளுக்கும் முக்கியப் பங்கு இருப்பதை மனதில்கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டம்தான் தங்க நாற்கரச் சாலை  திட்டம். கொல்கத்தா, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நான்கு பெருநகரங்களை இணைக்கும் இந்தச் சாலை 5,846 கி.மீ தூரம் கொண்டது. உலகின் 5-வது நீளமான சாலையும் இதுதான். 2001-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2012-ம் ஆண்டு நிறைவுபெற்றது. இந்தச் சாலையானது அகமதாபாத், பெங்களூர், கிருஷ்ணகிரி, புவனேஷ்வர், கட்டாக், ஜெய்ப்பூர், கான்பூர், புனே, சூரத், விஜயவாடா, அஜ்மீர், விசாகப்பட்டினம், புத்தகயா, வாரணாசி, ஆக்ரா, காந்தி நகர், உதய்பூர் ஆகிய நகரங்களையும் கடந்து செல்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் எரிபொருள் சிக்கனம், விபத்துகள் குறைப்பு, பயண நேரம் குறைவு ஆகிய பலன்கள் எட்டப்பட்டு சாலை போக்குவரத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தார் வாஜ்பாய்.

சர்வ ஷிக்‌ஷா அபியான் 

6 முதல் 14 வயது கொண்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி என்பதுதான் இந்தத் திட்டம். இந்தத் திட்டம் 2001-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த 4 ஆண்டுகளில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 60% குறைந்தது குறிப்பிடத்தக்கது. 

தொலைதொடர்பு புரட்சி

பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. விதேஷ் சஞ்சர்நிகாம் நிறுவனம் மூலம் சர்வதேச தொலைத் தொடர்பையும் ஏற்படுத்தினார் வாஜ்பாய். கைப்பேசிகள் இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதும், அதற்கான கட்டணங்களை குறைத்து அலைபேசி தொலைதொடர்பை வலுப்படுத்தியதும் வாஜ்பாய் ஆட்சிதான்.
   
பொக்ரான் அணுகுண்டு சோதனை

1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில், பொக்ரான் என்ற பாலைவனப் பகுதியில் 5 அணுகுண்டுகளை அப்துல் கலாம் தலைமையிலான குழுவைக் கொண்டு சோதனை மேற்கொண்டனர். இந்த பொக்ரான் சோதனையின் மூலம் மிகப் பெரிய அணு ஆயுதம் கொண்ட நாடுகளையும், இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் வாஜ்பாய்.

பிரதான்மந்திரி கிராமின் சதக் யோஜனா

கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட திட்டம்தான் இது. அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை அமைப்பது போன்றவை இந்தத் திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது. மிகவும் பின் தங்கிய மாநிலங்களான வட கிழக்கு மாநிலங்களை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல அவர்களுக்கென தனி அமைச்சகம் ஒன்றையும் ஏற்படுத்தினார் வாஜ்பாய்.

டெல்லி மெட்ரோ

இன்று டெல்லி நகரத்தின் முக்கியப் போக்குவரத்தாக இயங்கி வருவது மெட்ரோ ரயில்கள்தாம். அந்த மெட்ரோ ரயில் சேவையை முதன்முதலாகத் தொடங்கிவைத்தவர் வாஜ்பாய். சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து என அனைத்திலும் உள்கட்டமைப்புகளை மேன்மைப்படுத்திய பெருமையும் இவரையே சாரும்.

தனியார்மயமாக்கல்

அரசு, தொழில் செய்வது மற்றும் தொழிற்சாலைகள் நடத்துவது ஆகியவற்றைக் குறைத்துக்கொண்டு, முதலீடுகளை திரும்பிப் பெறுவதற்கென தனியாக ஓர் அமைச்சகத்தை நிறுவினார் வாஜ்பாய். இதன் மூலம் பாரத் அலுமினியம் கம்பெனி, ஹிந்துஸ்தான் ஜிங்க், இந்தியன் பெட்ரோகெமிக்கல் கார்ப்பரேஷன், வி.எஸ்.என்.எல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் வரத்தொடங்கின.
 
நிதிப் பொறுப்புச் சட்டம்

நிதிப் பொறுப்புச் சட்டம் என்று ஒரு சட்டத்தை இயற்றி அதன் மூலம் நிதி பற்றாக்குறையைக் குறைத்தது வாஜ்பாய் அரசு. இந்தச் சட்டத்தின் மூலம் 2000-ம் ஆண்டு -0.8% ஆக இருந்த ஜி.டி.பி 2005-ம் ஆண்டு 2.3% ஆக உயர்ந்தது.

லாகூர் ஒப்பந்தம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே நட்புறவு ஏற்படுத்துவதற்காக லாகூர் - டெல்லி இடையே பேருந்து சேவையை 1999-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிவைத்தார் வாஜ்பாய். அதே ஆண்டு லாகூரில் நடைபெற்ற கூட்டத்தில் இரு நாடுகளும் ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. `லாகூர் ஒப்பந்தம்' எனப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான பிரச்னைகளைத் தீர்க்கவும், வர்த்தக உறவை மேம்படுத்தவும், இருநாட்டு நட்புறவை வலுப்படுத்தவும் உறுதியளிக்கும் விதமாக அமைந்தது.

கார்கில் விஜய் திவாஸ்

1999-ம் ஆண்டு ஜூன் மாதம் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், கார்கில் போர் நடைபெற்றது. ஆப்ரேஷன் `விஜய்' என்ற பெயரில் பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தி வெற்றிபெற்றது இந்தியா.

தற்போதும் பி.ஜே.பி ஆட்சிதான் நடக்கிறது. இந்தியாவின் சிறந்த தலைவர்களில் ஒருவரான இவரது கனவை நிஜமாக்கி இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள். இந்தியா வளர்ச்சியடையும் போதெல்லாம் வாஜ்பாய் பேசப்படுவார், வாஜ்பாய் இந்தியாவின் வளர்ச்சியில் வாழ்வார். ஓய்வெடுங்கள் வாஜ்பாய் இந்தியா நிச்சயம் ஒளிரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு