Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

இறையன்பு, உமாசங்கர், சகாயம் போன்ற அதிகாரிகள் இப்போது எந்தத் துறைகளில் பணியாற்றுகிறார்கள்?

நீங்கள் பூதக்கண்ணாடி வைத்து தேடும் துறையில் இருக்கிறார்கள். பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் கமிஷனர் மற்றும் முதன்மைச் செயலாளராக இருக்கிறார் இறையன்பு. ஒழுங்கு நடவடிக்கைத் துறையில் மாநில ஆணையராக இருக்கிறார் உமாசங்கர். அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக இருக்கிறார் சகாயம்.

ஐயோ பாவம்... இவர்களுக்கு எல்லாம் தமிழ்நாட்டின் கல்வித் துறையையோ, சுகாதாரத் துறையையோ, உள்துறையையோ கவனிக்கும் தகுதியோ, திறமையோ இல்லை என்று இந்த அரசாங்கம் நினைக்கிறது போல. கல்வித்துறைச் செயலாளராகத் தகுதிவாய்ந்த உதயசந்திரனை நியமித்து, இப்போது அவரை டம்மி ஆக்கிவிட்டது போலச் செய்யாமல் டம்மியான பதவியையே இறையன்பு, உமாசங்கர், சகாயம் போன்றவர்களுக்குக் கொடுத்திருக்கும் பெருந்தன்மையைப் பாராட்டத்தான் வேண்டும்.

கழுகார் பதில்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

‘கோமா நிலையில் இருந்த கட்சியைக் காப்பாற்றும் மருத்துவர் தினகரன்’ என்று கூறுகிறாரே நடிகர் செந்தில்?


ஓ! கட்சியை கோமா நிலையில் வைத்திருந்தாரா ஜெயலலலிதா? உண்மையில் செந்திலுக்கு தைரியம்தான்.

கி.தா.துரைசாமி, மேட்டுப்பாளையம்.


‘கொல்லைப்புற வழியாக ஆட்சி அமைக்க விரும்பவில்லை’ என்கிறாரே ஸ்டாலின்?


கொல்லைப்புறம் மட்டுமல்ல எந்தப்புற வழியாகவும் ஆட்சி அமைக்க தி.மு.க தயார் ஆகவில்லையோ என்று சந்தேகம் வருகிறது, எந்த ஆர்வமும் இல்லாமல் அவர்கள் அரசியல் செய்வதைப் பார்க்கும்போது!

கழுகார் பதில்கள்!

என்.முருகேஷ், மங்கைநல்லூர்.

பி.ஜே.பி-யின் அரசியல் சாணக்கியர் என்று யாரைச் சொல்லலாம்?


பி.ஜே.பி-யில் சாணக்கியனும் சந்திரகுப்தனும் ஒருவர்தான். அவர் பெயர் அனைவரும் அறிவர்.

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலை நடத்த முடியவில்லையே?


சட்டமன்றத் தேர்தலை நடத்த முடியாமல் அல்ல. நடத்த மனமில்லாமல் இருக்கிறார்கள். அதுதான் மத்திய அரசின் எண்ணம். மத்திய அரசின் மனம்கோணாதது மாதிரி தேர்தல் ஆணையம் நடந்துகொள்கிறது. ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் நடந்தால் தினகரன் போட்டியிடுவார். ஒருவேளை வென்றுவிடுவார். அவர் வெற்றிபெறுவது எடப்பாடி- பன்னீர் அரசியலுக்கு இடைஞ்சலாக அமையும். தினகரன் தலைமையை ஏற்று அ.தி.மு.க உறுப்பினர்கள் சென்றுவிட்டால் அது அவர்களின் திட்டத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால்தான் தேர்தலை நடத்தாமல் இருக்கிறார்கள். முடியாமல் அல்ல.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

கருணாநிதியை மற்ற கட்சித் தலைவர்கள் போய் சந்திப்பது தி.மு.க கூட்டணிக்கான அச்சாரம் என்று எடுத்துக்கொள்ளலாமா?


அதுவும் ஒரு சிக்னல்தான். கூட்டணிக்கான அச்சாரம்தான்.

எஸ்.காந்தி தியாகராஜன், மதுரை-2.

தமிழ்நாடு இப்படி ஆனதற்கு மக்களும் காரணமா?


மக்கள்தானே இந்தத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? ‘மக்கள், அவர்கள் தகுதிக்கேற்ற தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்’ என்றார் தந்தை பெரியார்.

கழுகார் பதில்கள்!

ஏ.கணேசன், தூத்துக்குடி.

‘ஊழல்வாதிகளை ஆட்சியில் அமர்த்தினால் சுயநலம்தான் மேலோங்கும்’ என்பதைத் தமிழகம் நிரூபித்துக் கொண்டிருக்கிறதே?


தமிழகம் மட்டுமா நிரூபிக்கிறது?

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

தமிழிசை செளந்தர்ராஜனை நாஞ்சில் சம்பத் அவதூறாகப் பேசியுள்ளாரே?

பெண் அரசியல்வாதிகளை விமர்சிப்பதாக இருந்தால், இப்படித்தான் அவதூறாகக் கொச்சைப்படுத்துவார்கள். இது கண்டிக்கத்தக்கது.நாஞ்சில் சம்பத்தை பி.ஜே.பி-யினர் மட்டும்தான் கண்டித்துள்ளார்கள். இது தவறு. அனைத்து அரசியல் தலைவர்களும் சேர்ந்து அவரைக் கண்டித்திருக்க வேண்டும். அரசியலில் நீதி, நேர்மையை விட இதுபோன்ற நாகரிகம் முக்கியமானது.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

இரட்டை இலைச் சின்னம் எந்த அணிக்குக் கிடைக்கும்?


இன்றைய சூழ்நிலையில் எந்த அணிக்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. பன்னீர் அணிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்யப்பட்ட ஆவணங்களில் சசிகலாவின் கையெழுத்து இருக்கிறது. இன்று எடப்பாடி அணி என்று சொல்லிக்கொள்வது எல்லாம் சட்டப்படி பார்த்தால், எடப்பாடி அணி அல்ல. அது சசிகலா தலைமையிலான அ.தி.மு.க-தான். எனவே, இரட்டை இலைச் சின்னம் குறித்து முடிவெடுப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல.

வி.ஐ.பி  கேள்வி

கழுகார் பதில்கள்!

கே.பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கல்வி போன்ற உரிமைகளை இழந்தபிறகு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்்பட 50 அ.தி.மு.க எம்.பி-க்களும் பதவியில் நீடிப்பது சரிதானா? ‘நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு வேண்டும்’ என்பதை உணர்வுபூர்வமாக வலியுறுத்த அவர்கள் ராஜினாமா செய்ய முன்வருவார்களா?


பதவியை ராஜினாமா செய்வதற்கு இவர்கள், மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்தவர்களா? சும்மா ஒப்புக்காக நாடகம் ஆடினார்கள். சொந்தக் கட்சியில் ஏற்பட்ட கோஷ்டி பஞ்சாயத்தைத் தீர்ப்பதற்காக மோடியைப் பார்த்த இவர்கள், அப்போது நீட்டுக்கு எதிரான மனுவையும் கொடுத்துவிட்டு வந்தார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

‘நிச்சயம் இந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கிவிடுவோம்’ என்று மைக் முன்னால் தொடர்ந்து கர்ஜித்துவந்த தம்பிதுரையிடம் இப்போது கேட்டால், ‘எதற்காக நீட் பற்றி மட்டுமே கேட்கிறீர்கள்? உங்களுக்கு வேறு கேள்வியே இல்லையா?’ என்று பத்திரிகையாளர்களிடம் சீறுகிறார். அவரிடம் வேறு என்ன கேட்பது? ‘பன்னீரை மனமாற்றம் செய்ய வைத்த சக்தி எது’ என்றா கேட்க முடியும். அதற்கான உண்மையான பதிலை தம்பிதுரையால் சொல்லவா முடியும்?

படங்கள்: சு.குமரேசன், கே.ராஜசேகரன், வீ.சிவக்குமார், ம.அரவிந்த்

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!