Published:Updated:

கருணாநிதியும்...வாஜ்பாயும்... ஒரு நட்பின் இலக்கணம்!

கருணாநிதியும்...வாஜ்பாயும்... ஒரு நட்பின் இலக்கணம்!
கருணாநிதியும்...வாஜ்பாயும்... ஒரு நட்பின் இலக்கணம்!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், தி.மு.க-வின் மறைந்த தலைவர் மு.கருணாநிதியும் மிகச் சிறந்த நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அவர்களின் மறைவுக்குப் பின்னரும், இருவருக்குமிடையே பல்வேறு ஒற்றுமைகள் இருப்பது தெரியுமா?

றைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் அமைந்தபோது, அந்தக் கூட்டணியில் தி.மு.க-வும் அங்கம் வகித்தது.

பி.ஜே.பி-யுடன் 1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தபோது, `பண்டாரம் பரதேசிகள்' என்று விமர்சனம் செய்த, தி.மு.க தலைவர் கருணாநிதிதான், 13 மாதங்களில் மத்தியில் ஆட்சி கவிழ்ந்ததும் பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தது. அதில் தி.மு.க. சார்பில் அமைச்சர்களும் இடம்பெற்றனர். ஆனால், தி.மு.க-வின் மறைந்த தலைவர் கருணாநிதி அப்போது, ஒரேயோர் உத்தரவாதத்தை மட்டும் வாஜ்பாயிடமிருந்து பெற்றுக்கொண்டார். ராமர் கோயில் தொடர்பான பிரச்னையை மத்தியில் ஆளும் அரசு எழுப்பக் கூடாது என்பதுதான் அந்த உத்தரவாதம். அதை அப்போது கருணாநிதிக்கு அளித்தவர் மறைந்த வாஜ்பாய்தான். அவர் உறுதியளித்தபடி, 5 ஆண்டுக்கால தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது ராமர் கோயில் தொடர்பாகப் பல்வேறு தருணங்களில் உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி எழுப்பிய நிலையிலும், பிரதமராக இருந்த வாஜ்பாய் அதுகுறித்து ஒருபோதும் பேசியதில்லை.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், தி.மு.க-வின் மறைந்த தலைவர் மு.கருணாநிதியும் மிகச் சிறந்த நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அவர்களின் மறைவுக்குப் பின்னரும், இருவருக்குமிடையே பல்வேறு ஒற்றுமைகள் இருப்பது தெரியுமா?

கருணாநிதியும், வாஜ்பாயும் ஒரே ஆண்டில்தான் (1924) பிறந்துள்ளனர். இருவரும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் 9 நாள்கள் இடைவெளியில் மரணமடைந்துள்ளனர். கருணாநிதி 7.8.2018 அன்று மரணமடைந்தார். வாஜ்பாய் மறைந்தது 16.8.2018.

கருணாநிதியும், வாஜ்பாயும் மிகச்சிறந்த பேச்சாளர்கள். இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மிகச்சிறந்த புலமை பெற்றவர் வாஜ்பாய். இந்த மொழிகளில் சரளமாகப் பேசவும், எழுதவும் செய்ததுடன், கவிதைகளையும் எழுதியுள்ளார் அவர். இதேபோல் கருணாநிதியின் மேடைப்பேச்சு குறித்து நாம் சொல்லவே வேண்டியதில்லை. முதலில் திராவிடர் கழகத்துக்காகப் பட்டிதொட்டியெல்லாம் பேசிய கருணாநிதி, பின்னர் அண்ணா தலைமையில் தி.மு.க. தோற்றுவிக்கப்பட்டதும் அந்தக் கட்சிக்காகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்க தனக்கே உரித்தான மொழி நடையில் பேசி, பார்வையாளர்களைக் கட்டிப்போட்டார். கருணாநிதியின் பேச்சைக் கேட்பதற்காகவே நள்ளிரவு தாண்டியும், சில நேரங்களில் விடிய விடியவும் தொண்டர்களும், மக்களும் காத்துக்கிடந்த வரலாறுகளும் உண்டு.

வாஜ்பாய் எந்தளவுக்குப் பேச்சாற்றல் மிக்கவரோ, அந்த அளவுக்கு எழுத்தாற்றலும் கொண்டவர். அதேபோல் கருணாநிதியின் திரைப்பட வசனங்கள், இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. தவிர ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர் போன்ற வரலாற்று நாவல்களையும் குறளோவியம், நெஞ்சுக்கு நீதி போன்ற ஏராளமான புத்தகங்களையும் எழுதியவர் கருணாநிதி. 1969-ல் அண்ணா மறைந்தபோது, கருணாநிதி எழுதிய இரங்கற்பா அனைவரையும் கலங்கடித்தது. 

நகைச்சுவை உணர்வு என்று எடுத்துக்கொண்டாலும் கருணாநிதியும், வாஜ்பாயும் ஒரே நேர்கோட்டில் வருபவர்கள் எனலாம். பொதுவாகவே கவிஞர்களுக்கு நகைச்சுவை உணர்வு இயல்பாகவே இருக்கும் என்றபோதிலும், எத்தகைய சூழ்நிலையிலும் சபையைக் கலகலப்பாக்குவதில் கருணாநிதி மிகவும் தேர்ந்தவர். அதற்குச் சான்று, தமிழக சட்டசபையில் அவர், முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் ஆற்றிய உரைகளே சான்றாகும்.

சட்டசபையில் ஒருமுறை காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், ``மெரினாவில் காதலர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா" எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, ``சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு எந்தச் சிரமமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்" என்று பதில்கூற அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர்.

கருணாநிதியைப் போன்றே வாஜ்பாயும் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அணுஆயுதம் தொடர்பான விவாதத்தில் பேசிய அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ``இந்தியாவிடம் அணுஆயுதத் தொழில்நுட்பம் உள்ளது'' என்றார். அதற்குப் பதிலளித்த வாஜ்பாய், ``துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவன், தன்னைப் புலி தாக்க வரும்போது, அந்த உரிமத்தைக் காட்டியதும், மற்றவர்களை விட்டுவிட்டு, அந்தப் புலி முதலில் அவனைக் கடித்துக் குதறியது போன்றதுதான்'' என்றதும் இந்திரா காந்தி உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர்.

பி.ஜே.பி-யில் உள்ள தலைவர்கள் மட்டுமல்லாது, மற்றக் கட்சிகளின் தலைவர்களும், எதிர்க்கட்சியினரும்கூட வாஜ்பாயின் சிறப்பான செயல்பாடுகளைப் பாராட்டுவது உண்டு. அந்தளவுக்குக் கூட்டணியில் உள்ள கட்சியினர் மட்டுமல்லாது, எல்லாக் கட்சியினரையும் தன்வசம் ஈர்த்தவர் வாஜ்பாய். அதேபோல் கருணாநிதியும் எதிர்க்கட்சியினரை மிகவும் மதித்து நடக்கக்கூடியவர். கம்யூனிஸ்ட் தலைவர்களிடம்தாம் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொள்வார். கோரிக்கைகள் எதுவானாலும் எடுத்த எடுப்பிலேயே முடியாது, இயலாது என்று தெரிவிக்காமல், ``முடிந்தவரை நிறைவேற்றுவோம்'' என்று கூறும் குணம் படைத்தவர் கருணாநிதி. 

எத்தனையோ ஒற்றுமைகளைக் கொண்டிருந்த கருணாநிதியும், வாஜ்பாயும் உடல்நலக் குறைவால் அரசியலைவிட்டு ஒதுங்கி ஓய்வில் இருந்ததிலும் ஒற்றுமை காட்டினர். வாஜ்பாயைப் பொறுத்தவரை, 2005-ம் ஆண்டிலேயே தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்டபோதிலும், 2010-ம் ஆண்டிலேயே சர்க்கரை நோய், முழங்கால் மூட்டுவலி, சிறுநீரகப் பாதிப்பு போன்ற பல்வேறு உபாதைகளினால் வீட்டில் முடங்கிவிட்டார். ஆனால், கருணாநிதியோ வயோதிகம் காரணமாக 2016-ம் ஆண்டு இறுதியில்தான் வீட்டில் ஓய்வில் இருக்கத் தொடங்கினார். கடந்த இரு ஆண்டுகளாக அரசியல் மேடைகளிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாத கருணாநிதி, கடந்த 7-ம் தேதி இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவரின் நண்பராகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்து பிரதமராகவும் இருந்து 5 ஆண்டுகள் பதவி வகித்த வாஜ்பாய் ஆகஸ்ட் 16-ம் தேதி மரணமடைந்தார்

கருணாநிதியின் உடல் சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வாஜ்பாயின் உடல் டெல்லி யமுனை நதிக்கரையில் எரியூட்டப்பட்டது. இரு தலைவர்களும் மறைந்தாலும் அவர்கள், இந்த நாட்டுக்கு ஆற்றிய சேவைகள் ஒருபோதும் மறைந்துவிடாது.

அடுத்த கட்டுரைக்கு