Published:Updated:

`திருப்பரங்குன்றத்திலும் மூன்றாவது இடம்தான்!' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive

`திருப்பரங்குன்றத்திலும் மூன்றாவது இடம்தான்!' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive
`திருப்பரங்குன்றத்திலும் மூன்றாவது இடம்தான்!' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive

மு.க.ஸ்டாலின் சொல்லப்போகும் பதிலைப் பொறுத்தே, அடுத்த ஆறு மாதங்களுக்குத் தமிழக அரசியலை முன்னெடுக்க இருக்கிறது பா.ஜ.க தலைமை.

தி.மு.க-வைக் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக அனைத்து வழிகளையும் கையாளத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க தலைமை. `திருப்பரங்குன்றத்திலும் நிலைமை சரியில்லை. கூட்டணிக்கு நீங்கள் சம்மதித்தால் இடைத்தேர்தலை நடத்த வேண்டாம்' என ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார் தமிழிசை. 

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின். அதேநேரம், மு.க.அழகிரியின் போர்க்கொடி, குடும்ப உறுப்பினர்களின் நிர்பந்தம் போன்றவற்றுக்கு எந்தப் பதிலையும் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார் ஸ்டாலின்.  `அவர் எதையாவது பேச மாட்டாரா' எனக் குடும்ப உறுப்பினர்கள் காத்து நிற்கின்றனர்.  கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய நிகழ்வுகளில் மட்டுமே தொடர்ந்து பங்கேற்றுப் பேசி வருகிறார். இந்நிலையில், தி.மு.க-வைக் கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து நிதின் கட்கரி, தமிழிசை உள்ளிட்டோர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க-வின் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பேச்சாளருமான முக்கிய பிரமுகர் ஒருவரும் இந்தப் பணியில் ஆர்வம் காட்டி வருகிறார். ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள், அரசியல் விமர்சகர்கள், தொழிலதிபர்கள் எனப் பலமுனைகளில் கூட்டணிக்குத் தூது அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமைந்தால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்களைப் பற்றியும் அவர்கள் விவரித்துள்ளனர். 

பா.ஜ.க தரப்பிலிருந்து தி.மு.க-வின் முக்கியத் தலைமையிடம் பேசிய தூதுவர் ஒருவர், 'எடப்பாடி பழனிசாமியும் தினகரனும், ஜானகி - ஜெயலலிதா மாதிரி. இவர்கள் இருவரும் முதல்முறையாகத் தேர்தலை சந்தித்தபோது, 'நாங்கள்தான் செல்வாக்கானவர்கள்' எனப் பேசி வந்தனர். ஜெயலலிதாவை தன்னுடைய அரசியல் எதிரியாகத்தான் பார்த்தார் ஜானகி. அதேபோல்தான், தினகரனை தன்னுடைய அரசியல் எதிரியாகப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் ஓ.பன்னீர்செல்வத்தைச் சேர்த்துக்கொண்டவர், தினகரனை உள்ளே விடவில்லை. வரக்கூடிய தேர்தல்களில் தனித்து நிற்க வேண்டிய சூழல் தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது. அவருக்கு இருக்கும் பணபலத்தையும் சாதிபலத்தையும் பயன்படுத்தி குறிப்பிட்ட சதவிகித வாக்குகளைப் பெறுவார். அவர் பக்கம் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் செல்லும்.

அ.தி.மு.க-வோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்படும். இது நடந்தால் அரசியல் களத்தில் மும்முனைப் போட்டி நடக்கும். இந்தப் போட்டியில் 30 சீட்டுகளுக்கு மேல் நமது கூட்டணி ஜெயிக்க முடியும். 1999-ம் ஆண்டு தேர்தலில் 27 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வென்றது. இப்போது 30 இடங்களில் நமக்கான வெற்றி வாய்ப்பு காத்திருக்கிறது. உங்களுக்குத் தேவையானதை நாங்கள் செய்து தருகிறோம்' என ஆஃபர் மேல் ஆஃபராக அள்ளி வீசியிருக்கிறார்கள். இதற்கு ஸ்டாலின் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை. இதையடுத்து கனிமொழி தரப்பை அவர்கள் அணுகியுள்ளனர். அவரோ, 'ஸ்டாலின் என்ன முடிவெடுத்தாலும் அதற்குக் கட்டுப்படுவேன். எனக்கென்று தனியாக எந்த முடிவும் கிடையாது' எனக் கூறிவிட்டார். 

இதையடுத்து, தமிழிசை தரப்பிலும் ஸ்டாலினிடம் நேரடியாகப் பேசி வருகின்றனர். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை மனதில் வைத்துப் பேசிய தமிழிசை, ஆர்.கே.நகர் தேர்தலின்போதே, `அண்ணே... நீங்கள் மூன்றாவது இடத்துக்குப் போயிருவீங்கண்ணே... கூட்டணிக்குச் சம்மதம் சொன்னால் தேர்தலை நிறுத்திவிடலாம் எனச் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. பா.ஜ.க-வுக்கு 15 சீட்டுகளைக் கேட்டேன். இப்போது 10 சீட்டுகளைக் கொடுத்தால் போதும். இப்போதும், திருப்பரங்குன்றத்தில் உங்களுக்குச் சாதகமான நிலை இல்லை. திருவாரூர் மட்டுமே தி.மு.க-வுக்குச் சாதகமாக இருக்கிறது. இந்த இரண்டு தொகுதிக்கும் நீங்கள் விரும்பினால், இடைத்தேர்தலை நடத்தலாம். இல்லாவிட்டால் நிறுத்திவிடலாம். திருப்பரங்குன்றத்திலும் நீங்கள் மூன்றாவது இடத்துக்குப் போய்விடக் கூடாது' எனப் பேசியிருக்கிறார். இதற்கும் ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. 

`அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதை அறிந்து கூட்டணிக்கு முயற்சி செய்து வருகிறோம். மு.க.ஸ்டாலின் சொல்லப் போகும் பதிலைப் பொறுத்தே, அடுத்த ஆறு மாதங்களுக்குத் தமிழக அரசியலை முன்னெடுக்க இருக்கிறது பா.ஜ.க தலைமை. அது எந்த மாதிரியான நடவடிக்கை என்பதை அமித் ஷா மட்டுமே அறிவார்' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். 

அடுத்த கட்டுரைக்கு