Published:Updated:

`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்? பின்னணி!

இந்தியாவில் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டம் என்பதே 2005-ல்தான் கொண்டுவரப்பட்டது. இப்படிச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கே நாம் கொடுத்த விலை சுனாமி.

`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்? பின்னணி!
`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்? பின்னணி!

`கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்' என்கிற குரல்கள் மக்களிடையே எழுந்து வருகின்றன. `தேசியப் பேரிடர்' என்பதை மத்திய அரசு, எந்த அடிப்படையில் தீர்மானிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனத் தோன்றியது. சென்னையில் கடந்த 2015-ல் ஏற்பட்ட பெருமழை, வெள்ளத்தின்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, சென்னை மாநகரை விரைந்து இயல்புநிலைக்குக் கொண்டுவரப் பாடுபட்ட அதிகாரிகளில் ஒருவரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்திடம் பேசினேன்.

``இந்தியாவில் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டம் என்பது, கடந்த 2005-ம் ஆண்டில்தான் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கே நாம் சுனாமி ஆழிப் பேரலைகள் எடுத்து கொண்ட உயிர்களை விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது. சுனாமிக்குப் பின்னர்தான், அதற்குரிய விழிப்புஉணர்வு ஏற்பட்டு, அந்தச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. அந்தச் சட்டத்தின்படி, சொல்ல வேண்டுமானால், குறிப்பிட்ட ஓர் இயற்கைப் பேரழிவை, தேசியப் பேரிடர் என்று தீர்மானம் செய்வதற்குக் குறிப்பிட்ட வரையறைகள் என ஏதுமில்லை. ஆனால், அதை அரசே முடிவு செய்யலாம். தேசியப் பேரிடராக அறிவிக்கிறார்களா, இல்லையா என்பதைவிடவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரியதைச் செய்கிறார்களா என்பதை நாம் கவனிக்க வேண்டும். `ஒகி' புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பலநூறு பேர் நடுக்கடலில் தத்தளித்தார்கள். `நம்மைக் காப்பாற்ற ஏதேனும் ஒரு ஹெலிகாப்டராவது வருமா?' என்று வானத்தைப் பார்த்து ஏமாந்து போன எத்தனையோ பேர், எந்த உதவியும் கிடைக்காமல் இறந்தேபோனார்கள். அந்த வகையில், தற்போது கேரள மக்களின் நிலைமை `ஓரளவு' பரவாயில்லை என்றே சொல்லுவேன். 

கேரள மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை `தேசியப் பேரிடராக அறிவிப்பார்கள்' எனில், அம்மாநில மக்கள் அதிலிருந்து மீண்டெழுவதற்குப் போதுமான நிதி ஆதாரங்கள் கிடைக்கும். தேசியப் பேரிடர் குழுவிலிருந்து ராணுவ வீரர்கள் வந்து மக்களைக் காப்பாற்றுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அவர்களால் அது மட்டும்தான் செய்ய முடியும். ஆனால், கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் அழிந்துபோய் உள்ளன. இருக்க இடமின்றி, இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மின்சாரக் கம்பங்கள் சாய்ந்து பல கிராமங்கள் மின்சார இணைப்பின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் பிளவுபட்டுக்கிடக்கின்றன, மக்களுக்குச் சுகாதாரமான குடிநீர் இல்லை. போதிய துணிமணிகள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் எதுவுமே இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். 

வீடுகளை, உறவுகளை, உடைமைகளை மக்கள் இழந்து இருக்கிறார்கள். அந்தப் பாதிப்பிலிருந்து குடிமக்களும் மீள வேண்டும். அரசாங்கமும் மீள வேண்டும். கேரளாவின் உள்கட்டமைப்பு வசதியை முற்றிலுமாகப் புனரமைப்பு செய்ய வேண்டும்போல் தெரிகிறது. கேரள அரசு 20,000 கோடி ரூபாய் நிதியைக் கேட்டிருக்கிறார்கள். மத்திய அரசு முதல்கட்டமாக 500 கோடி ரூபாய் மட்டும் கொடுத்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஐந்தாயிரம் கோடியாவது கொடுத்தால்தான், கேரளாவை ஓரளவாவது மீட்டெடுக்க முடியும்" என்றார்.

இந்தியாவின் இயற்கை எழில் ததும்பும் மாநிலங்களில் கேரளா மிக முக்கியமானது. இன்று அந்த இயற்கையே கேரளாவை அழித்துள்ளது. இது வேறு எந்த நாட்டு மக்களுக்கோ நடந்துவிட்ட சோகம் என்பதுபோல நாம் நீண்டகாலம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இயற்கை என்பது எவ்வளவு கருணையுடதோ, அதே அளவு கருணையற்றதும்கூட என்பதை உணர்ந்துள்ளோம். அந்த இயற்கையானது, யாரை எப்போது புரட்டிப்போடும் என்பது, நாம் யோசிக்க முடியாத சுவாரஸ்யம். தமிழக மக்கள் இக்கட்டான சூழலில் இருந்தபோதெல்லாம், நமக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல் கேரள முதல்வர் பினராய் விஜயனுடையதாகத்தான் இருந்தது. `எங்கள் மாநிலத்துக்கு உதவ முன்வாருங்கள்' என இன்று அதே பினராய் விஜயன், இரு கரம் விரித்துக்கேட்கிறார். அவர் எதிர்பார்ப்பது அவருடைய தார்மிக உரிமை. இத்தகைய சூழலில் நாம் செய்யும் உதவிகள், பெருந்தன்மையின் அடிப்படையில் அல்லாமல், மனிதாபிமானத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். 

உறவினர்களையும், உடைமைகளையும் இழந்து தவித்துக்கொண்டிருக்கும் நம் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசாங்கம் நிதியுதவி கொடுக்கும்வரை, நாம் காத்திருக்க வேண்டுமா என்ன. வெள்ள நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு, மத்திய அரசு ஓர் ஆய்வுக் குழுவை அனுப்புவார்கள். அந்தக் குழு ஒரு தொகையைப் பரிந்துரை செய்யும். அதன் பிறகு, மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அந்தத் தொகை கேரள அரசுக்குப் போய்ச் சேரும். தமிழக மக்களாகிய நாமும் அவ்வளவு காலம்வரை காத்துக்கொண்டிருக்க வேண்டுமா. அங்கே, வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருப்பது நம்முடைய சகோதர, சகோதரிகள் அல்லவா...!