Published:Updated:

அழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்!

அழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்!
அழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேட்டி குறித்த கட்டுரை...

``நீங்கள், உங்கள் எதிரியுடன் அமைதியை ஏற்படுத்த விரும்பினால், அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். பிறகு, அவர் உங்கள் பங்குதாரர் ஆகிவிடுவார்'' என்பார், தென்னாப்பிரிக்க நாட்டின் மறைந்த ஜனாதிபதி நெல்சன் மண்டேலா. ஆம், அரசியலைப் பொறுத்தவரை எதிரியையும் அரவணைத்துச் சென்றால்தான் ஜெயிக்க முடியும். இதை தி.மு.க. தலைவர் மறைந்த மு.கருணாநிதி, தன்னுடைய அரசியல் களத்தில் திறமையாகக் கையாண்டார் என்றே கூறலாம். கருணாநிதி உயிரோடு இருந்தவரை அவர் தலைவராக இருந்த தி.மு.க-வைத் திறம்பட வழிநடத்தினார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அண்மையில் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, அண்ணா வளர்த்த, கருணாநிதி கட்டிக்காத்த தி.மு.க., அவருடைய புதல்வர்களான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியாலும், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினாலும் பிளவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள், அரசியல் ஆர்வலர்கள்.

அதற்குக் காரணம், கருணாநிதி சமாதியில் சில தினங்களுக்கு முன் மு.க.அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்த கருத்துகள்தாம். சென்னை மெரினாவில் அஞ்சலி செலுத்திய பின்னர் பேட்டியளித்த மு.க.அழகிரி, ``கருணாநிதியின் உண்மை விசுவாசிகள் என் பின்னால் இருக்கிறார்கள். என் ஆதங்கத்தைத் தலைவர் கருணாநிதியிடம் தெரிவிக்க வந்தேன்'' என்றார். ``அது என்ன ஆதங்கம், குடும்பம் தொடர்பானதா அல்லது கட்சி குறித்த?" எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, ``கட்சி தொடர்பானதுதான், விரைவில் அதைச் செய்தியாளர்களிடம் தெரிவிப்பேன்" என்று தெரிவித்து அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பினார்.

அழகிரியின் இந்தப் பேட்டி, தி.மு.க-வில் மட்டுமல்ல, தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க மற்றும் இதர எதிர்க்கட்சிகள் மத்தியிலும் மிகப்பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அழகிரியின் இந்தப் பேட்டி மட்டுமல்லாமல், நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ``தி.மு.க. நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது" என்று தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளை வைத்து, தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள சகோதரச் சண்டை குறித்து விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். 

தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன், ``தி.மு.க-வில் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. வானிலையில் மட்டுமன்றி, தி.மு.க-விலும் அத்தகைய மண்டலம் உருவாகியுள்ளது. தி.மு.க-வில் உருவாகியுள்ள இந்தப் புயலுக்கு `அழகிரி' என்று பெயர் வைக்கலாம்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், ``கருணாநிதி மறைவுக்குப் பிறகு தி.மு.க-வில் சகோதர யுத்தம் தொடங்கியுள்ளது. இந்த யுத்தம் தி.மு.க-வில் நிச்சயம் பிளவை ஏற்படுத்தும். மு.க.அழகிரியின் அரசியல் பணி குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். அழகிரியின் திறமை, ஆற்றல், தேர்தலில் அவர் பணியாற்றும் வியூகம் ஆகியவற்றை மதுரையில் இருந்து நான் பார்த்திருக்கிறேன். எனவே, தி.மு.க-வில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்'' என்று பாராட்டும் தொனியில் விமர்சனம் செய்திருந்தார். `சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி' என்ற பழமொழிக்கேற்ப, ஏற்கெனவே அழகிரி - மு.க.ஸ்டாலின் இடையே சச்சரவு ஏற்பட்டுள்ள நிலையில், `தெர்மாகோல்' புகழ் அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்தக் கருத்து, தி.மு.க-வில் மட்டுமல்லாது, அரசியல் அரங்கிலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அழகிரி பேட்டி, அதைத் தொடர்ந்து அமைச்சர் உள்ளிட்டோரின் விமர்சனங்கள் போன்றவை குறித்து தி.மு.க-வின் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``தமிழகத்தின் மிகப்பெரும் கட்சியாகத் திகழும் தி.மு.க.-வில், கருணாநிதி இருந்தபோதே சகோதரர்களுக்கு இடையேயான சண்டை தொடங்கிவிட்டது என்றாலும், தந்தைக்குக் கட்டுப்பட்டு அழகிரி எப்போதும் அடக்கியே வாசித்தார். அதன்காரணமாகவே, அவர் உடல் நலமில்லாமல் ஓய்வில் இருந்த காலத்தில், எந்தப் பிரச்னையையும் கிளப்பாமல் மௌனம் காத்துவந்தார். கட்சி பிளவுபட்டு விடக் கூடாது என்பதுதான் எங்கள் அனைவரின் விருப்பம். ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள சிறு பிரச்னையைப் பெரிதாக ஊதி தி.மு.க-வை உடைக்கச் சிலர் முயற்சி செய்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை வாயைத் திறந்து பேசாதவர்கள்தாம், தற்போது அதிகாரமும், ஆட்சியும் தங்கள் கையில் இருப்பதைக் கருத்தில்கொண்டு வெளிப்படையாக ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த அடிப்படையிலேயே செல்லூர் ராஜூவின் கருத்தை நாங்கள் பார்க்கிறோம். இதுபோன்றவர்கள் எல்லாம் நாளைக்கே ஆட்சி இல்லாமல் போனால், காணாமல் போய்விடுவார்கள். அந்தக் காலம் வெகுவிரைவில் வரும். ஆகையால், அதுபோன்றவர்களின் உளறல்களை எல்லாம் நாங்கள் ஒருபோதும் பொருட்படுத்துவது கிடையாது. அதே நேரத்தில், தி.மு.க-வை உடைக்க வேண்டும் என்று செயல்படுவோரின் எண்ணம் ஈடேறாது. அதற்கு, கட்சியில் உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரை யாரும் துணைபோக மாட்டார்கள். தி.மு.க-வுக்குத் தலைமையேற்று, கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதில் தளபதி ஸ்டாலின் முழுத் தகுதி பெற்றவர். தலைவர் இருந்தபோதே, தன் அரசியல் வாரிசு ஸ்டாலின்தான் என்று சொல்லப்பட்டவர். எனவே, அ.தி.மு.க உள்ளிட்ட இதரக் கட்சியினர் நினைப்பது போன்று, தி.மு.க-வை யாராலும் எளிதில் உடைத்துவிட முடியாது. கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்கில் தெரிவிக்கப்படும் எந்தக் கருத்தானாலும், சதியானாலும் ஸ்டாலின் முறியடிப்பார்'' என்கின்றனர் அவர்கள். 

தி.மு.க.-வைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம். ``அமைச்சர் செல்லூர் ராஜூ போன்றோருக்கு எல்லாம் கருத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மதுரையைப் பொறுத்தவரை அழகிரியின் தயவு, அமைச்சருக்கு வேண்டுமானால் தேவைப்படலாம். அப்படிப்பட்ட செல்வாக்குமிக்கதாகச் சொல்லும் அழகிரியை, செல்லூர் ராஜூ வேண்டுமானால், அவர் சார்ந்துள்ள அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொள்ளட்டும். அதுகூட அவரால் முடியுமா என்று தெரியவில்லை'' என்றார்.

`ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்பது போல்தான் உள்ளது, தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள தற்போதைய பூசல்களும், அரசியல் கட்சியினரின் விமர்சனங்களும். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?

அடுத்த கட்டுரைக்கு