Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.

 மதுரையில் பிறந்த நிர்மலா சீதாராமன், ராணுவ அமைச்சராக ஆகியிருக்கிறார். இந்திரா காந்திக்குப் பிறகு ராணுவ அமைச்சர் ஆன பெண் இவர்தான். இதற்காகவே பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டாமா?

மோடி எடுத்தது உண்மையில் துணிச்சலான முடிவுதான். பெண் என்றாலே சமூக நலத்துறை, மகளிர் மேம்பாடு ஆகிய துறைகளுக்கான அமைச்சராகத்தான் நியமிப்பார்கள். அதை மீறி தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமனை நியமித்தார் மோடி. இப்போது ராணுவ அமைச்சராகவும் ஆக்கியுள்ளார். முப்படை தளபதிகளின் மரியாதையை ஏற்கும் பதவி இது. பொதுவாகவே, ராணுவத்தில் ஆணாதிக்க மனோபாவம் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் ஒரு பெண்ணை நியமித்திருப்பதன் மூலமாக பெண் இனம் கம்பீரமாக முதுகைத் தட்டிக் கொள்ளலாம். மோடிக்கும் கைதட்டலாம்.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்பத்குமாரி, பொன்மலை.

கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தது பற்றி நிருபர்கள் கேட்டபோது, ‘அவரிடம் அரசியல் பாடம் படித்தேன்’ என்கிறாரே கமல்?


அரசியல் பாடத்தைப் படிப்பதை விட எளிமையின் பாடத்தை முதலில் அவரிடமிருந்து படிக்கலாம். அதற்குள் கமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப் போகிறார் என்று கதை கட்டிவிட்டார்கள்.

க.சுல்தான் ஸலாஹீத்தீன் மழாஹிரி, காயல்பட்டினம்.

மத்திய அரசை எதிர்த்துச் செயல்படும் அளவுக்கு டி.டி.வி. தினகரனுக்குத் தைரியம் வந்தது எப்படி?


மத்திய அரசை எதிர்த்து தினகரன் செயல்படுவது மாதிரித் தெரியவில்லை. மத்திய அரசாங்கத்தையும் மோடி, அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்து எழுதிய ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜை நீக்கியதன் மூலமாக, மத்திய அரசு மீது தினகரன் பயத்தில் இருப்பதையே உணர முடிகிறது. தினகரனின் தளபதிகளில் ஒருவரான நாஞ்சில் சம்பத், பி.ஜே.பி-யைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழிசை குறித்து அவர் விமர்சித்ததற்காகப் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் சம்பத் மீது பாய்ந்துள்ளன. இதனைக் கண்டித்துக்கூட தினகரன் அறிக்கைவிட்டதாகத் தெரியவில்லையே.

கழுகார் பதில்கள்!

அ.குணசேகரன், புவனகிரி.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அதிர்ஷ்டசாலிகள்தானே?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மட்டுமல்ல, இந்த ஆட்சியில் எம்.எல்.ஏ-க்கள் அனைவருமே அதிர்ஷ்டசாலிகள்தான் என்கிறார்கள் உள் விவரம் தெரிந்தவர்கள்.

கா.இரா.குணசேகரன், காடையாம்பட்டி.

ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்தால் என்ன நினைப்பார்?


அவர் என்ன நினைப்பாரோ தெரியாது.ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., டி.டி.வி போன்றவர்கள் இன்று என்ன நினைப்பில் இருக்கிறார்களோ, அப்படி இருக்க மாட்டார்கள். இருக்குமிடம் தெரியாமல் இருந்திருப்பார்கள்.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

சிலர், ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று வணங்குவது பாவமன்னிப்பு கேட்பது போலல்லவா இருக்கிறது?


 ஓஹோ! அவ்வளவு பாவம் செய்துள்ளார்களா? அனைவரின் பாவங்களையும் மன்னிக்கும் சக்தி ஜெயலலிதாவுக்கு இருக்கிறதா?

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

‘கருணாநிதியுடன் 27 ஆண்டுகள் நிழலாக இருந்தேன். அவர் என் கனவில் அடிக்கடி வருகிறார்’ என்று கருணாநிதியுடனான சந்திப்புக்குப் பிறகு வைகோ நெகிழ்ச்சியுடன் சொல்லியிருக்கிறாரே?

கனவில் வந்து கருணாநிதி என்ன சொன்னார் என்பதையும் சொல்லியிருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும்

கழுகார் பதில்கள்!

உமரி பொ.கணேசன், மும்பை-37.

தமிழகத்தைப் புதிய முதலீட்டாளர்கள் நாடாதது ஏன்?


 பழைய முதலீட்டாளர்களான ‘அமைச்சர்களைப்’ பார்த்து பயம் தான்.

கே.வேலுச்சாமி, தாராபுரம்.

தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் பக்கம் தலைகாட்டும் கார்த்திக் எங்கே?


 தலைமறைவாக இருப்பார். தேர்தல் வரப்போகிறது அல்லவா? வெளியில் வருவார்.

அரிமா பூவேந்தரசு, சின்னதாராபுரம்.

திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் தி.க., தி.மு.க., அ.தி.மு.க ஆகிய கட்சிகளிடையே என்ன வித்தியாசம் காண்பீர்கள்?


திராவிடர் கழகத்தினருக்கு பெரியார், பாடம். தி.மு.க-வினருக்கு அவர் வெறும் படம். அ.தி.மு.க-வுக்கு அதுகூட இல்லை.

கி.தா.துரைசாமி, மேட்டுப்பாளையம்.

நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?


உள்ளாட்சித் தேர்தலை எந்தளவுக்குத் தள்ளிப்போட முடியுமோ அந்தளவுக்குத் தள்ளிப் போடுவார்கள். அநேகமாக நாம் பார்க்கும் தேர்தல், நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் சேர்ந்து நடக்கப்போகும் தேர்தலாகத்தான் இருக்கும்.

வி.ஐ.பி கேள்வி

கழுகார் பதில்கள்!

பெ.மணியரசன்
தலைவர்,
தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி


ந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் நடிகர்கள், அரசியலில் தலைமை தாங்கும் சூழல் தொடர்கிறது. புதிதாக தலைமை தாங்கப் பல நடிகர்கள் தயாராக இருக்கிறார்கள். அரசியலில் திரைக் கவர்ச்சிப் பாணியை உருவாக்கிய தி.மு.கதான் இதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாமா? அல்லது வேறு காரணம் எதுவும் இருக்கிறதா?

தமிழகத்தை விட திரைப்படக் கவர்ச்சி மகாராஷ்ட்ராவிலும் ஆந்திராவிலும் உண்டு. ஆனால், நடிகர்கள் அனைவரையும் அரசியல் தலைவர்களாகப் பார்க்கும் நோய் தமிழ்நாட்டில் மட்டும்தான் உண்டு. இந்த வினையான விதையை முதலில் விதைத்தது தி.மு.க-தான்.

ஆரம்பத்தில் தங்கள் கொள்கையை, பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குத் திரைத்துறையை ஒரு முக்கியமான சாதனமாக தி.மு.க தலைவர்கள் நினைத்தது கூட தவறில்லை. ‘சென்சார் போர்டு இல்லாவிட்டால் நான்கே படங்கள் எடுத்து திராவிட நாடு வாங்கிவிடுவேன்’ என்றும், ‘தம்பி ராமச்சந்திரன் முகம் காட்டினால் போதும் வாக்குகளை அள்ளிவிடுவேன்’ என்றும் சொன்னார் அண்ணா. சினிமா பாணிதான் தமிழகத்தில் வெல்லும் என்று நினைத்து செயல்பட்டார். எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் முக்கியத்துவம் பெற்றது இதனால்தான். இது தவறான பாதை என முதலில் கண்டித்தவர் ஈ.வெ.கி.சம்பத் மட்டும்தான். அண்ணா - சம்பத் பிரிவுக்கே இதுதான் காரணம்.

எம்.ஜி.ஆரின் ஆதரவுடன் கருணாநிதி முதல்வர் ஆனதும், பின்னர் கருணாநிதியைப் புறந்தள்ளி எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதும், எம்.ஜி.ஆருடன் நடித்தவர் என்ற பிரபலத்தால் ஜெயலலிதா முதல்வர் ஆனதும் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் படம்.

இதில் மிக மோசமானது என்னவென்றால், அரசியலுக்குள் சினிமாவைக் கொண்டுவந்தது மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தையே சினிமாக் கவர்ச்சிக்குள் தள்ளியதுதான். அதுதான் ரஜினி,கமல்,விஜய்க்குக் காத்திருக்கும் மனோபாவம். படித்து பல லட்சம் சம்பளம் வாங்குபவர்கள் கூட ஒரு படம் வெளியாகும் நாளை கொண்டாடுவதும், அனிதா மரணத்தால் தமிழகம் போராடிக் கொண்டிருக்கும்போது கேரள ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு இங்கும் பலர் டான்ஸ் ஆடுவதுமான காட்சிகள் திரைக் கவர்ச்சியை சமூகமயமாக்கி விட்டது. மீளுதல் மிகத் தூரமானது என்று மட்டுமே சொல்ல முடியும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism