Published:Updated:

'வீரபாண்டியாரை இருட்டடிப்பு செய்கிறார்கள்!'

'வீரபாண்டியாரை இருட்டடிப்பு செய்கிறார்கள்!'
'வீரபாண்டியாரை இருட்டடிப்பு செய்கிறார்கள்!'

சேலம்: வீரபாண்டியார் பெயரையும் படத்தையும் இருட்டடிப்பு செய்வதாக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆவேசமாய் பேசிய தி.மு.க. நகரச் செயலாளர் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

வீபாண்டியார் இருந்தவரை அவரைச் சுற்றித்தான் சேலம் தி.மு.க. சுழன்றது. சில விஷயங்களில் ஸ்டாலினோடு வீரபாண்டியார் முரண்பட்டதால் அவருக்கு எதிராக பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்டவர்களை தலைமைக் கழகமே கொம்பு சீவிவிட்டது. இந்த நிலையில் வீரபாண்டியார் மறைவை அடுத்து, அவரது பெயரை மழுங்கடிக்கும் வேலைகளும் நடப்பதாக ஆங்காங்கே புகார் வெடித்திருக்கிறது.

மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றதற்கு நன்றி தெரிவிக்கவும், இலங்கை பிரச்னையில் தி.மு.க.வின் நிலைப்பாட்டை தெருமுனை கூட்டம் போட்டு பிரசாரம் செய்வது குறித்து விவாதிக்கவும், மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகியதற்காக‌ கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கவும் சேலம் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று கூடியது.

'வீரபாண்டியாரை இருட்டடிப்பு செய்கிறார்கள்!'

மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி நகரச் செயலாளர் ஜெயபூபதி, ''சேலத்து சிங்கம் அண்ணன் வீரபாண்டியாரின் பெயரை இருட்டடிப்பு செய்வதற்கு சதி நடக்கிறது. அவரது பெயரையும் படத்தையும் கட்சி போஸ்டர்களில் போட மறுக்கிறார்கள். மாவட்ட நிர்வாகத்திலிருந்து சொல்லி இப்படி நடந்து கொள்கிறார்களா அல்லது தலைமைக் கழகத்திலிருந்து சொல்லி இப்படி நடக்கிறார்களானு தெரியல" என்று ஆவேச‌ப்பட்டுப் பேசினார்.

'வீரபாண்டியாரை இருட்டடிப்பு செய்கிறார்கள்!'

இப்படிப் ஆத்திரத்துடன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஜெயபூபதி திடீரென மயங்கி கீழே சாய்ந்ததால் கூட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மயங்கி விழுந்த ஜெயபூபதி உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வீபாண்டியாருக்காக குரல் கொடுத்த நகரச் செயலாளர் மயங்கி விழுந்த விவகாரம் சேலம் தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

-வீ.கே.ரமேஷ்

படங்கள்: விஜயகுமார்