Published:Updated:

'பொதுக்குழுவில் மூன்றே பதவிகள்தான்!' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர் 

'பொதுக்குழுவில் மூன்றே பதவிகள்தான்!' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர் 
'பொதுக்குழுவில் மூன்றே பதவிகள்தான்!' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர் 

தற்போது பொருளாளர் பதவியில் இருக்கும் ஸ்டாலின், அந்தப் பதவியை துரைமுருகனுக்குக் கொடுக்க இருக்கிறார். துரைமுருகன் வசம் இருக்கும் முதன்மை நிலையச் செயலாளர் பதவி, டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

' தி.மு.க-வின் அதிகாரபூர்வ தலைவராக வரும் 1-ம் தேதி பொறுப்பேற்க இருக்கிறார் மு.க.ஸ்டாலின்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 'தலைவர், பொருளாளர், முதன்மை நிலையச் செயலாளர் ஆகிய மூன்று பதவிகள் நிரப்பப்பட இருக்கின்றன. கனிமொழிக்குப் பதவி கிடைக்கும் எனவும் சிலர் எதிர்பார்த்துள்ளனர்' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 
    
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, கடந்த 14-ம் தேதி தி.மு.கவின் செயற்குழு நடந்தது. இதில், கருணாநிதியின் மறைவுக்குப் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், அழகிரியின் எதிர்வினை குறித்துக் கழக நிர்வாகிகள் எதுவும் பேசவில்லை. அழகிரியின் மோதல்போக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, `வீட்டில் இருப்பவர்களைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டும். விருந்து உண்ண வந்தவர்களைப் பற்றிப் பேச வேண்டியதில்லை' எனக் கூற, இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார் அழகிரியின் மகன் துரை.தயாநிதி. அதேநேரம், தி.மு.கவுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வேலைகள் நடப்பதை அறிந்த ஸ்டாலின், தொண்டர்களுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், 'தலைவரை இழந்த கழகத்தில் என்ன நடக்கிறது என்பதில் நம்மைவிட ‘அக்கறை’ காட்டுகிறார்கள் அரசியல் எதிரிகள். ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கலாமா என நப்பாசை கொண்டிருக்கிறார்கள். நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன். சலசலப்புகளுக்கு அஞ்சமாட்டேன். கழகத்துக்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்றுகாட்டுவேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், கருணாநிதி இறந்து முப்பதாவது நாள் நிகழ்வில் மெரினா கடற்கரையை நோக்கி அமைதிப் பேரணி நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் அழகிரி. இந்தப் பேரணியில் 25 ஆயிரம் பேரைக் கொண்டு வருவதற்கான வேலைகளை அவர் செய்து வருகிறார். 

``அழகிரியின் இந்தச் செயல்களை செயல் தலைவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. வரும் 1-ம் தேதி தி.மு.க பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன" என விவரித்த தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், ``தலைவர் இறந்த பிறகு நடக்கும் பொதுக்குழு என்பதால், யாருக்கெல்லாம் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் இருக்கிறது. உயர் பதவிகளைக் கைப்பற்ற சீனியர்கள் பலரும் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளனர். தற்போது பொருளாளர் பதவியில் இருக்கும் ஸ்டாலின், அந்தப் பதவியை துரைமுருகனுக்குக் கொடுக்க இருக்கிறார். துரைமுருகன் வசம் இருக்கும் முதன்மை நிலையச் செயலாளர் பதவி, டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதேநேரம், கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருக்கும் கனிமொழி, அடுத்தகட்டமாக உயர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். துணைப் பொதுச் செயலாளராக இருந்த சற்குணபாண்டியன் மறைவுக்குப் பிறகு, 'அந்தப் பதவி கனிமொழிக்குச் சென்று சேரும்' எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், 'இப்போதுள்ள பதவியே அவருக்குப் போதும்' என கனிமொழிக்கு எதிராக குடும்ப உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த கனிமொழி, தற்போதைய சூழலில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். தவிர, ஸ்டாலினின் குட்புக்கிலும் அவர் இருக்கிறார். 'அண்ணன் எடுக்கப் போகும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவேன்' எனப் பேசி வருகிறார். எனவே, அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்" என்றார் விரிவாக. 

``தலைவர், பொருளாளர், முதன்மை நிலையச் செயலாளர் ஆகிய மூன்று முக்கியப் பதவிகளுக்கு மட்டுமே பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கப்படலாம். புதிய பதவிகள் நிரப்பப்படுவது குறித்து எந்தத் தகவலும் இல்லை. தற்போது மூன்று பேர் துணைப் பொதுச் செயலாளர்களாக இருக்கிறார்கள். இதில், கனிமொழியும் இடம் பெறுவாரா என்பதை செயல் தலைவர் மட்டுமே அறிவார். அழகிரியின் ஆட்டம் குறித்து அவர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து எங்களிடம் பேசும்போது, `தலைவர் மறைவுக்குப் பிறகு ஏராளமான சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறோம். மற்ற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், எதிரிகள் வலுப்பெற்றுவிடுவார்கள். எனவே, பொதுக்குழு முடியும் வரையில் யாரும் எதுவும் பேச வேண்டாம்' என உறுதியான குரலில் கூறிவிட்டார் ஸ்டாலின்" என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

அடுத்த கட்டுரைக்கு