Published:Updated:

“அம்மா ஸ்வீட் கொடுத்தாங்க...” - “கொலை பண்ணிட்டாங்க...”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“அம்மா ஸ்வீட் கொடுத்தாங்க...” - “கொலை பண்ணிட்டாங்க...”
“அம்மா ஸ்வீட் கொடுத்தாங்க...” - “கொலை பண்ணிட்டாங்க...”

திண்டுக்கல் சீனிவாசனின் உளறல்கள்!

பிரீமியம் ஸ்டோரி

‘கேப்பையில நெய் வடியுதுன்னு சொன்னா... கேக்குறவனுக்கு எங்க போச்சு அறிவு?’ - வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தன் மேடைப் பேச்சுகளில் அடிக்கடி உதிர்க்கும் பழமொழி. முன்னுக்குப்பின் முரணான பேச்சால், இந்தப் பழமொழி திண்டுக்கல் சீனிவாசனுக்கு இப்போது அப்படியே பொருந்துகிறது.

தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு மோதலை ஆரம்பித்த நேரத்தில், ‘தினகரனுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ எனச் சொன்னார் அமைச்சர் ஜெயகுமார். அப்போது, ‘‘தினகரன் கட்சியில் இருக்கிறார். தனது பணியை அவர் தொடர்ந்து செய்வார்’’ என தினகரனுக்கு ஆதரவாக முதன்முதலில் பேட்டி கொடுத்தவர் சீனிவாசன்.

“அம்மா ஸ்வீட் கொடுத்தாங்க...” - “கொலை பண்ணிட்டாங்க...”

அதே சீனிவாசன் தற்போது, ‘‘ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலா குடும்பம்தான் காரணம்’’ எனப் பேசி பரபரப்பைப் பற்றவைத்துள்ளார். ஜெயலலிதா இறந்த பிறகு, பன்னீர்செல்வம் தனியாகப் பிரிந்து தர்மயுத்தம்(!) தொடங்கியபோது, ‘‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை’’ என ஊர் ஊராக மேடை போட்டுப் பேசினார்கள் அமைச்சர்கள். அப்போது சீனிவாசன், ‘‘என் பிள்ளைகள் மீது சத்தியமாக அம்மா மரணத்தில் மர்மம் இல்லை. நான் நேரில் சென்று பார்த்தேன். என்னிடம் அம்மா பேசினார்கள்” என்றெல்லாம் பேசினார். அதே வாய்தான் இப்போது, ‘‘ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை’’ என்கிறது.

2017 மார்ச் 11-ம் தேதி, பேரையூர் கூட்டத்தில் சீனிவாசன் என்ன பேசினார் தெரியுமா? “ஆஸ்பத்திரியில அம்மா இருந்தப்ப, நாங்கள்லாம் நேர்ல போய்ப் பார்த்தோம். ஆக்ஸிஜன் இறங்கிட்டு இருந்துச்சு. இடையில, அவங்க உடல்நிலை நல்லா இருந்தப்ப, இடைத்தேர்தல் வந்துச்சு. எங்களை எல்லாம் கூப்பிட்டுப் பேசுன அம்மா, ‘வேட்பாளர்களுக்குச் சின்னம் ஒதுக்குற படிவத்துல என்னால கையெழுத்துப் போட முடியல. அதுனால கைநாட்டு வெச்சு டாக்டர்கள்கிட்ட கொடுத்திருக்கேன். நீங்கள்லாம் ஒத்துமையா இருந்து வெற்றி பெறணும்’னு சொன்னாங்க. ‘உங்க ஆசீர்வாதம் இருக்கும்போது நிச்சயம் ஜெயிச்சிடுவோம் அம்மா’னு சொல்லிட்டு வந்தோம். அதே போல, மூன்று தொகுதியிலயும் வெற்றி பெற்ற நம்ம எம்.எல்.ஏ-க்களைக் அம்மாகிட்ட கூட்டிட்டுப் போனோம். அவங்களை அம்மா ஆசீர்வாதம் பண்ணுனாங்க. ‘நான் ஒரு அறிக்கைதான் கொடுத்தேன். மக்கள், நம் மீது நம்பிக்கை வெச்சு வெற்றிபெற வெச்சிருக்காங்க. சிறப்பாப் பணியாற்றுங்கள், வாழ்த்துகள்’னு சொல்லி மூன்று வகையான ஸ்வீட்டுகளை எல்லாருக்கும் கொடுக்கச் சொன்னாங்க. ‘அவங்களைக் கொலை பண்ணிட்டாங்க’னு சொல்லி ஒரு தப்பான பிரசாரத்தை தி.மு.க செஞ்சிருக்கு. எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, அம்மாவுக்கு யாருமே இல்லை. ஆனா, அவங்களுக்குத் தோழியாக, தங்கையாக சின்னாம்மானு அழைக்கப்படுகிற சசிகலா அம்மாதான் இருந்தாங்க. 35 வருஷமா அவங்க கூடவே இருக்காங்க. அவங்கதான் எல்லாத்தையும் பார்த்துகிட்டாங்க. அப்படியிருக்கும்போது, கொலை செய்ய வேண்டிய அவசியமில்லை. இதை தி.மு.க-காரங்க சொன்னா பிரச்னையில்லை. ஆனா, சாதாரணமான நிலைமையில இருந்து, கட்சியில வந்து இங்க உப்பைத் தின்னு வளர்ந்து, பல கோடிகளுக்கு அதிபதியான ஒரு ஆளு, அம்மாவின் ரத்தத்தை உறிஞ்சி வளர்ந்த பன்னீர்செல்வம் என்ற துரோகி, இன்னிக்கு அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்குன்னு சொல்றதைக் கேட்டா, ‘கேப்பையில நெய் வடியுதுன்னு சொன்னா... கேக்குறவனுக்கு எங்கடா போச்சு அறிவு?’னு கிராமத்துல ஒரு பழமொழி சொல்ற மாதிரி இருக்கு.

அம்மா மரணத்துல மர்மம் இல்லைன்னு அப்போலா ஆஸ்பத்திரியின் அத்தனை டாக்டர்களும் சொல்லிட்டாங்க. டெல்லியில இருந்து பிரதமர் மோடியோட டாக்டர்(!)... எய்ம்ஸ் டாக்டர்கள் எல்லாம் அறிக்கை கொடுத்துட்டாங்க. ஐ.நா சபையில இருந்து இங்கிலாந்து டாக்டர்(!) வந்து அறிக்கை கொடுத்துட்டாரு. அப்ப, ஆஸ்பத்திரியில நாங்கள்லாம் போய் பார்த்தோம். ‘அம்மா... நீங்க நலமா இருக்குறதை ஒரு படத்தை  பேப்பர்ல போட்டுடலாம்மா?’னு கேட்டேன். ‘என்னை எப்படிப் பார்த்திருக்கீங்க சீனிவாசன்; இப்ப உடல்நிலை சரியில்லாம எப்படி இருக்கேன்னு பார்க்குறீங்கள்ல; இன்னும் நாலு நாள்ல வீட்டுக்கு வந்துடுவேன்; அதுக்குப் பிறகு, குளிச்சு முழுகி நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு மக்கள்கிட்ட பேசுறேன்; அதுவரைக்கும் அமைச்சர்கள் அவங்க வேலையைப் பாருங்க’ன்னு சொன்னாங்க. அப்ப அமைச்சர்கள்லாம் இருந்தோம். இதை நான் சொன்னா, நாங்க யாருமே பார்க்கலைனு சொல்றாங்க. போய் பார்த்தவங்க சொல்றதை நம்பலைன்னா என்ன பண்ண முடியும்?

“அம்மா ஸ்வீட் கொடுத்தாங்க...” - “கொலை பண்ணிட்டாங்க...”

யார் யார் அம்மாவுக்குப் பிடிக்குமோ, அவங்களையெல்லாம் கூப்பிட்டுப் பேசுனாங்க. ராஜன் செல்லப்பா வந்தாரு. தம்பி உதயகுமார் வந்தாரு. செல்லூர் ராஜு வந்தாரு. ஆக, எல்லாருமே பார்த்தோம். ஆக, அவங்க இறப்பில் மர்மம் இல்லை. அவங்க கொலை செய்யப்படவில்லைனு என் பிள்ளைங்க மீது சத்தியம் பண்ணி நான் சொல்லியிருக்கேன். ஆனா, அவரு பொய் சொல்றாருன்னு சொல்றாங்க. என் பிள்ளைங்க மீது சத்தியம் பண்ணி சொல்றது உண்மை. அம்மா மரணத்துல மர்மம் இல்லை. அம்மா மரணத்துக்கு சசிகலாம்மா காரணமில்லை. மருத்துவம்தான் காரணம்னு எல்லா இடத்துலயும் சொல்லியிருக்கேன். அம்மாவோட ஆசீர்வாதம் இன்னிக்கு சின்னம்மாவுக்கும், மாண்புமிகு டி.டி.வி.தினகரன் மூலமா கட்சிக்கும் கிடைச்சிருக்கு...’’ என்று பேசினார் அமைச்சர் சீனிவாசன்.

இந்த சீனிவாசன்தான் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி, திண்டுக்கலில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில் மாற்றிப் பேசினார். ‘‘ஆஸ்பத்திரியில அம்மா இருந்தப்போ, பி.ஜே.பி தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி வந்தாங்க. அவங்களையும் பார்க்கவிடலை. ராகுல் காந்தியாலும் பார்க்க முடியலை. இப்ப இருக்கிற கவர்னர் வந்தாரு. அவரையும் பார்க்கவிடலை. கேட்டா, ‘தொற்று நோய் பாதிக்கும்’னு கதை சொல்லிட்டிருந்தாங்க. ஆனா, 75 நாளா... டாக்டர், நர்ஸ், வார்டு பாய் எல்லோரும் பாக்குறாங்க. அவங்க (சசிகலா) குடும்பத்துல எல்லோரும் பார்த்தாங்க. அவங்களுக்கு மட்டும் ஏன் தொற்றுநோய் ஏற்படலை? உண்மை என்னன்னா, யாராவது அம்மாவைப் போய் பார்த்தா, அம்மா உண்மையைச் சொல்லிவிடுவார். அதனாலேயே யாரையும் பார்க்கவிடாமல், அம்மாவைக் கொலை செய்துவிட்டார்கள். இதுதான் உண்மை. அம்மாவின் நோய்க்கான மருந்தை, உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் கொண்டு வந்திருக்க முடியும். அதைச் செய்யாமல், நோய் முற்றட்டும்... இயற்கையாகவே அவர் சாகட்டும்... என இருந்துவிட்டார்கள்’’ என்றார்.

“அம்மா ஸ்வீட் கொடுத்தாங்க...” - “கொலை பண்ணிட்டாங்க...”

அப்போது, சசிகலாவுக்கு ஆதரவாக தன் பிள்ளைகள் மீது சத்தியம் செய்த அமைச்சர் சீனிவாசன், இப்போதோ, ‘சசிகலா குடும்பம்தான் அம்மாவைக் கொலை செய்தது’ என்று பேசிவருகிறார். அவர் அப்போது சொன்னது உண்மையா? இப்போது சொல்வது உண்மையா? இந்தக் கேள்வியை, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையே தொடர்புகொண்டு கேட்டோம். ‘‘இதையெல்லாம் போன்ல பேச முடியாது’’ என்றபடி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

இது குறித்து தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-வான வெற்றிவேலிடம் கேட்டோம். “மருத்துவமனையில் அம்மா இருந்தபோதும், திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சராகத்தான் இருந்தார். அவர்கள்தான், மருத்துவமனையில் மேலும் கீழும் சென்றுவந்து, ‘அம்மா நலமுடன் இருக்கிறார்கள்’ என்று சொன்னார்கள். ‘மூன்று தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், அம்மாவை நேரடியாகவே சந்தித்துச் சான்றிதழைப் பெற்றோம்’ என்றெல்லாம் சொன்னார்கள். இப்போது, ‘அம்மாவைக் கொன்று விட்டார்கள்’ என்று சொன்னால், விசாரணை கமிஷன் வைக்கும்போது, இவரையும் குற்றவாளியாகத்தான் சேர்க்க வேண்டும். குற்றம் நடைபெற்று இத்தனை மாதங்கள் கழித்து, அதைச் சொல்வதே சட்டப்படி தவறு. அம்மாவைக் கொன்றுவிட்டார்கள் என்று இனி எந்த அமைச்சர் சொன்னாலும், அனைவருமே குற்றவாளிகள்தான். இந்த அமைச்சர்கள் எல்லாமே, ‘அம்மா நலமுடன் இருக்கிறார்கள்’ என்று சாட்சி சொன்னவர்கள்” என்று காட்டமாகப் பேசினார் வெற்றிவேல்.

‘கேப்பையில நெய் வடியுதுன்னு சொன்னா... கேக்குறவனுக்கு எங்க போச்சு அறிவு?’

- ஆர்.குமரேசன், அ.சையது அபுதாஹிர்
படம்: வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு