Published:Updated:

“பி.ஜே.பி-யின் வளர்ச்சி அ.தி.மு.க-வுக்கு தெரிந்திருக்கிறது!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“பி.ஜே.பி-யின் வளர்ச்சி அ.தி.மு.க-வுக்கு தெரிந்திருக்கிறது!”
“பி.ஜே.பி-யின் வளர்ச்சி அ.தி.மு.க-வுக்கு தெரிந்திருக்கிறது!”

வானதி சீனிவாசனின் வாய்ஸ்

பிரீமியம் ஸ்டோரி

மிழக பி.ஜே.பி நிர்வாகிகளில் வானதி சீனிவாசன் தனி ரகம். எந்தக் கேள்விக்கும் தயக்கமின்றி பதில் சொல்வார். பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, ஹெச்.ராஜா போன்றவர்களெல்லாம் அ.தி.மு.க-வின் கொள்கைபரப்புச் செயலாளர்கள் போல பேசியபோது, வானதி மட்டும் அ.தி.மு.க-வை வெளுத்து வாங்கினார்.

“பி.ஜே.பி-யின் வளர்ச்சி அ.தி.மு.க-வுக்கு தெரிந்திருக்கிறது!”

மதுரையில் நடந்த நீட் தேர்வு ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த வானதி சீனிவாசன், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும், தமிழகத்தை ஆளுகிற அ.தி.மு.க-வையும் போட்டுத் தாக்கினார். ‘‘நீட் தேர்வைக் கொண்டுவந்தது மத்திய காங்கிரஸ் அரசு. அந்தத் தேர்வை, மாணவர்கள் யாரும் பாதிக்கப்படாத வகையில் பி.ஜே.பி அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. நீட் தேர்வு கடந்த ஆண்டே வந்துவிட்டது. அப்படியிருக்கும்போது, மாற்று ஏற்பாடு எதையும் செய்யாத தமிழக அரசு, இந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து விலக்குக் கேட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, தமிழக அரசு வக்கீல்கள் ஆஜராகவில்லை. மாணவர்களின் நலனைக் கண்டுகொள்ளாமல் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க-வினர், தங்கள் பதவிகளுக்காக ‘தர்மயுத்தம்’ நடத்திக்கொண்டிருந்தனர். காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தபோது தி.மு.க-வும் வாய்திறக்கவில்லை. இப்போது மக்களிடம் தவறான தகவலைப் பரப்பி, மாணவி அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் நடத்துகின்றனர். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு நன்மையே கிடைத்துள்ளது. இந்த உண்மையை மறைத்துவிட்டு, போராட்டம் நடத்துகிறார்கள். இந்தி திணிக்கப்பட்டால் என் கட்சியினர் உயிரைக் கொடுத்துத் தடுப்பார்கள் என்று ஸ்டாலின் சொல்கிறார். அப்போதுகூட தன் உயிரைக் கொடுப்பேன் என்று சொல்லவில்லை. அவருடைய மகள் நடத்தும் பள்ளியில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு நியாயம், மக்களுக்கு  ஒரு நியாயமா?’’ என்று சூடாகப் பேசினர். நன்றியுரை ஆற்றுவதற்கு முன்பாக மைக் பிடித்த ஒருவர், “ஆயிரம் பேர் வந்திருப்பீங்க. ஆனா, இங்கே நூறு பேர்தான் நிக்கிறீங்க. டீக்கடை, பெட்டிக்கடை ஓரமாக நிக்கிற நம்ம கட்சிக்காரங்க எல்லாரும்  ஒண்ணா வந்து நில்லுங்க. கூட்டத்தை போட்டோ எடுத்து தலைமைக்கு அனுப்பணும்” என்று அறிவித்தார். ‘திருச்சியில் காலி நாற்காலி’ சர்ச்சையின் எஃபெக்ட் போல.

ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு, வானதி சீனிவாசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிற எதிர்க் கட்சிகளுக்கு, அ.தி.மு.க-வால் பதிலடி கொடுக்க முடியாததால்தான், பி.ஜே.பி மூலம் போராட்டம் நடத்துவதாகச் சொல்லப்படுகிறதே?’’

‘‘அ.தி.மு.க-வுக்குப் பதிலாக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அ.தி.மு.க அரசுக்கு எதிராகவும் பல போராட்டங்களை நடத்திவருகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க-வையும்தான் விமர்சித்துப் பேசியிருக்கிறேன். கோவை மாவட்டத்தில், மதுக்கடை எதிர்ப்பு போராட்டத்தை இந்த அரசுக்கு எதிராகத் தீவிரமாக நடத்தினேன். கோவை ஸ்மார்ட் சிட்டியின் சி.இ.ஓ-வாக அ.தி.மு.க பிரமுகரின் உறவினரை நியமித்தார்கள். அவ்வளவு முக்கியமான திட்டத்துக்குத் தகுதியில்லாத ஒருவரை நியமிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, அவரை ராஜினாமா செய்ய வைத்தது நான்தான். அப்படியிருக்கும்போது நாங்கள் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துகிறோம் என்று சொல்வது தவறு.’’

‘‘அ.தி.மு.க ஆட்சி கவிழாமல் இருப்பதற்கு மத்திய பி.ஜே.பி அரசு உதவி வருவதாக பரவலாகப் பேசப்படுகிறதே?’’

‘‘இந்த ஆட்சியைக் கவிழ்க்க தினகரன் அணியே விரும்பவில்லை. அவர்கள் கவர்னரிடம், ‘முதல்வரை மாற்றுங்கள்’ என்றுதான் சொல்கிறார்களே தவிர, ஆட்சியைக் கலைக்கச் சொல்லவில்லை. மிகவும் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறார்கள். இதில் பி.ஜே.பி-க்கு எந்தப் பங்கும் இல்லை.”

“பி.ஜே.பி-யின் வளர்ச்சி அ.தி.மு.க-வுக்கு தெரிந்திருக்கிறது!”

‘‘உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவோம் என அ.தி.மு.க-வினர் சொல்லி வருகிறார்களே?’’

‘‘பி.ஜே.பி-யின் வளர்ச்சி இப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் சொல்கிறார்கள். அதே நேரத்தில், அ.தி.மு.க அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் இருக்க மாட்டோம்.’’

‘‘பி.ஜே.பி-யில் மற்ற தலைவர்கள், அ.தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசுவதில்லையே?’’

‘‘நான் அ.தி.மு.க அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பேசிவருகிறேன்.’’

‘‘உங்களைப் பற்றி ஊழல் குற்றச்சாட்டு சொன்னவர்கள் மீது வழக்குப் போட்டீர்களே... அது இப்போது எந்த நிலையில் உள்ளது?’’

‘‘அவர்கள் எங்கள் கட்சியினர்தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கட்சித் தலைமையிடம் புகார் கொடுத்துள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள்’’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

- செ.சல்மான்
படங்கள்: வி.சதீஷ்குமார், தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு