பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

உண்மையான எம்.ஜி.ஆர் ரசிகர், இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க-வின் எந்த அணியில் இருக்க வேண்டும்?


எந்த அணியிலும் இருக்க முடியாது. இவர்களுக்கு எம்.ஜி.ஆரைப் பற்றி எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லையே.

‘ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர். அதனால், புதிதாக அந்தப் பதவிக்கு வேறு யாரையும் நியமிக்க மாட்டோம்’ என்று தீர்மானம் போட்ட புண்ணியவான்கள், அதே பொதுச்செயலாளர் பதவியில்தான் எம்.ஜி.ஆரும் இருந்தார்; புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் இருந்த பொதுச்செயலாளர் பதவி, இனி வேறு யாருக்கும் கிடையாது’ என்று தீர்மானம் போட்டிருக்கலாமே?

கழுகார் பதில்கள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

‘நீங்கள் சரியாகப் பணியாற்றாததால் உங்களைப் பிரதமர் மோடி கண்டித்தாராமே. அதனால்தான் உங்களது துறை மாற்றப்பட்டதா?’ என்று அமைச்சர் உமாபாரதியிடம் கேட்கப்பட்டபோது, ‘நான் என் உடல் எடையை ஏன் குறைக்கவில்லை என்றுதான் பிரதமர் கண்டித்தார்’ என்று கூறியிருக்கிறாரே. இது எப்படி இருக்கிறது?


அமைச்சர்களின் துறை மீது மட்டுமல்ல, அவர்களின் உடல்நலனிலும் பிரதமர் எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார் என்பது இதன்மூலம் தெரிகிறது.

கழுகார் பதில்கள்!

ச.புகழேந்தி, மதுரை - 14.

‘கமல்ஹாசன் மனக்கோட்டை கட்டுகிறார்’ என்கிறாரே தமிழிசை?


அவரவர் மனக்கோட்டையை அவரவர் தானே கட்ட முடியும்!

போஸ்டல் ராஜ், புதுச்சேரி.

அறப்போராட்டத்தில் ஈடுபடும் அப்பாவிகளை எல்லாம் போலீஸார் மிருகத்தனமாகத் தாக்குகிறார்களே. அவர்களுக்கு அந்த அதிகாரம் தந்தது யார்? ஆட்சியாளர்கள் அவர்களைத் தட்டிக் கேட்பதில்லையா?


தாக்குதலைத் தொடுக்கச் சொல்லி போலீஸுக்கு அதிகாரத்தைக் கொடுப்பவர்களே... எப்படி தட்டிக் கேட்பார்கள்? அந்த தைரியத்தில்தான் போலீஸார் இப்படித் தாக்குதலை நடத்துகிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்கதையே. என்ன, இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தால் பத்திரிகைச் செய்திகளைப் பார்த்து குறைந்தபட்சம் காவல்துறையினரிடம் அவர்கள் அறிக்கை கேட்பார்கள். தாக்குதலை நியாயப்படுத்தும் காரணங்களைச் சொல்லவேண்டிய கடமை, போலீஸ் உயரதிகாரிகளுக்கும் இருந்தது. இன்று அப்படி கேட்பதற்கும் ஆளில்லை... சொல்வதற்கும் யாரும் இல்லை.

சேலம் வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை நியாயப்படுத்தி, சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைதுசெய்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து விடுதலை செய்தது. முதலமைச்சரால் என்ன பதில் சொல்ல முடியும்? போலீஸ்காரர்கள் மக்களிடம் ஓட்டுக் கேட்டு வரப்போகிறவர்கள் அல்ல. ஆனால், எடப்பாடி?

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

அரசியலில் ஈடுபட்டு அதில் பல சங்கடங்களைத் தாங்கிச் சமாளிக்கும் பெண்களைப் பற்றி?


பொதுவாழ்க்கைக்கு வந்தால் விமர்சனங்களை அவமானங்களைத் தாங்கித்தான் ஆகவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், பெண்கள் மீதான விமர்சனங்கள் தனி மனிதத் தாக்குதலாகவும், அவர்களின் உடல் சார்ந்ததாகவும், கொச்சைப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன. இதைத் தாங்கிக்கொண்டு அரசியலில் இருக்க வேண்டுமா என்ற எண்ணத்தைப் பெண்களுக்கு ஏற்படுத்துகின்றன. பெண் அரசியல்வாதிகளை விரட்டுவதுதான் ஆணாதிக்க அரசியல்வாதிகளின் எண்ணம். இதில் எந்தக் கட்சிக்குள்ளும் மாறுபாடு இல்லை என்பதை பெண் அரசியல்வாதிகளின் மனசாட்சியைக் கேட்டால் கதறித்தீர்க்கும்

கழுகார் பதில்கள்!

அரிமா பூவேந்தரசு, சின்னதாராபுரம்.

இப்போதைய ஆட்சி கவிழ்ந்தால் திரும்ப எழுவது சிரமம் என்பதை தினகரன், திவாகரன் போன்றோர் உணர்ந்துதானே உள்ளனர்?


உண்மைதான். அதனால்தான் ஆட்சியைக் கவிழ்ப்பேன்... கவிழ்ப்பேன் என்று சொல்லி மிரட்டிக்கொண்டே ஆட்சி தொடரட்டும் என்று சசிகலா குடும்பத்தினர் நினைக்கிறார்கள். சசிகலா குடும்பத்தினர் பங்குதாரர்களாக உள்ள  மிடாஸ் மதுபான தொழிற்சாலையிலிருந்து, அரசின் டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு கொள்முதல் செய்வது தடைபடாதவரை, இவர்களுக்கு கவலையில்லைதானே!

எஸ்.ராமதாஸ், சேலம் - 30.

அரசியல் விளையாட்டு விளையாடும் தமிழக அரசியல்வாதிகளை, ‘ப்ளூவேல்’ விளையாட்டு விளையாடச் சொன்னால் விளைவு என்னவாக இருக்கும்?


மொட்டை மாடிக்குச் செல்லவும்... கண்களை மூடிக்கொண்டு குதிக்கவும் என்று சொன்னால் நாட்டுக்கு நல்லதுதானே? ப்ளூவேல் விளையாட்டை ஆதரிக்கலாமே!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்கிறாரே தினகரன்?


பூமி ஆள்வாரா எனத் தெரியாது. தினகரன் அ.தி.மு.க-வை ஆள்வார். ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்டு, பத்து ஆண்டுகளாக தினகரன் பொறுத்திருந்தார் என்பதும் உண்மைதான். அவரது பொறுமைதான் அவரை தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அரசியல் பிரமுகராக மாற்றியது. ஜெயலலிதாவால் வளர்ப்பு மகன் என்று தத்தெடுக்கப்பட்ட சுதாகரன், ஐந்து ஆண்டுகாலம் என்னென்னவோ செய்து பார்த்தார். அவரால் அரசியலில் எழ முடியவில்லை. அவருடன் ஒப்பிடும்போது தினகரனின் வளர்ச்சிக்கு அவரது பொறுமைதான் காரணம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

படங்கள்: வீ.நாகமணி, சொ.பாலசுப்ரமணியம்

வி.ஐ.பி கேள்வி!

கழுகார் பதில்கள்!

செ.கு.தமிழரசன்
தலைவர், இந்தியக் குடியரசுக் கட்சி.


புத்தர், வள்ளுவர் தொடங்கி ‘நீட்’ வரையில் ‘சாதி ஒழிப்பு’ பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். சாதியை ஒழிக்க முடியாமைக்கு யார் காரணம்? எது தடை? எப்போது விடியல்?

புத்தர், வள்ளுவர் தொடங்கி பேசிக் கொண்டிருக்கிறோம், செயல்படவில்லை. அதுதான் சிக்கலுக்குக் காரணம். தனக்கு மேல், உயர்ந்த சாதி எதுவும் இருக்கக் கூடாது என்று நினைக்கும் மனது, தனக்குக் கீழ் தாழ்ந்த சாதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. இந்த மனம்தான் சாதியைக் காப்பாற்றுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் சாதி உயர்ந்ததாக, தாங்கள் உயர்ந்த சாதியில் பிறந்ததாக நம்புகிறார்கள். அவர்களே சாதியைக் காப்பாற்றுகிறார்கள். அதனால்தான் பெரியார், ‘சாதியை ஒழித்துவிடலாம். சாதிப் பெருமையை ஒழிக்க முடியாது’ என்றார்.

‘சாதிக்கு மதம்தான் ஒரு புனிதத்தைக் கொடுக்கிறது. நான் தாழ்ந்த சாதியில் பிறந்தது என் தலையெழுத்து என்றும் வேறொருவர் உயர் சாதியில் பிறந்தது அவரது தலையெழுத்து என்றும் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கைதான் சாதியைக் காப்பாற்றுகிறது’ என்றார் டாக்டர் அம்பேத்கர்.

சாதியின் மீது புனிதம் பூசப்படுவதும், அது பற்றிய போலிப் பெருமைகளும்தான் சாதியைக் காப்பாற்றுகின்றன. இதைப் பிரசாரத்தின் மூலமாக, மனமாற்றத்தின் மூலமாகத்தான் மாற்ற முடியும்.

தீண்டாமையைப் பாவச்செயல் என்று சொல்லும் சட்டம், சாதியைப் பாவச்செயல் என்று சொல்லவில்லையே!

 கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு