Published:Updated:

குற்ற வழக்குகளில் 75 எம்.எல்.ஏ-க்கள்?! - கொலை முயற்சி.. கொள்ளை... ஆள்கடத்தல்!

குற்ற வழக்குகளில் 75 எம்.எல்.ஏ-க்கள்?! - கொலை முயற்சி..  கொள்ளை...  ஆள்கடத்தல்!
பிரீமியம் ஸ்டோரி
News
குற்ற வழக்குகளில் 75 எம்.எல்.ஏ-க்கள்?! - கொலை முயற்சி.. கொள்ளை... ஆள்கடத்தல்!

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி - ஓவியம்: ஹாசிப்கான்

``எல்லாவற்றுக்குமே தகுதித்தேர்வுகள் முக்கியம். ஆனால், அரசியலுக்கு மட்டும் எந்தத் தகுதியும் தேவையில்லையா?’’ என்ற கேள்வி எல்லாப் பக்கங்களில் இருந்தும் கேட்கிறது.  ஆனால், பதில் சொல்ல வேண்டிய ஆட்சியாளர்களோ கிரிமினல் வழக்குகள் அதிகம் உள்ள வேட்பாளர்களைத்தான் பெரிதும் நம்புகிறார்கள். இந்தியாவில் கிரிமினல் வழக்குப் பின்னணிகொண்டவர்களே எம்.எல்.ஏ-க்களாகவும், எம்.பி-க்களாகவும் இருப்பதுதான் புள்ளி விவரங்கள் சொல்லும் உண்மை.

இ.பி.கோ-வின் அத்தனை செக்‌ஷன்களையும் தாங்கி நிற்கிறார்கள் மாண்புமிகுக்கள். குற்றப் பின்னணிகொண்ட மக்கள் பிரதிநிதிகள்தான்   தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு பற்றிக் குடிமக்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற மக்களவையின் 542 ‘மக்கள் பிரநிதி’களில் 185 எம்.பி-க்கள்மீது  ‘கிரிமினல் கறை’ படிந்திருக்கின்றது. அதாவது மொத்த எம்.பி-க்களில் 34 சதவிகிதம் பேர் கிரிமினல் பின்னணியினர்.  ஆளும் பி.ஜே.பி-யில்தான் அதிகபட்சமாக 98 எம்.பி-க்கள்மீது வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் எம்.பி-க்கள் 8 பேர்மீது வழக்கு உள்ளது. அ.தி.மு.க-வில் 6 பேர்மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

கொலை, கொலை முயற்சி, கொள்ளை, ஆள் கடத்தல், ஈவ் டீசிங் என மிகக் கடுமையான வழக்குகளில் மட்டும் 112 எம்.பி-க்களுக்குத் தொடர்பு இருக்கிறது. கொலைவழக்கில் தொடர்புடைய 10 மக்களவை எம்.பி-க்களில் நான்கு பேர் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள்.  கொலைமுயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்ட 17 எம்.பி-க்களிலும் பி.ஜே.பி-தான் முன்னணி. 10 பி.ஜே.பி-யினர்மீது கொலைமுயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. வகுப்புவாத விரோதம் தொடர்பான வழக்குகளில் 16 எம்.பி-க்களுக்குத் தொடர்பு உண்டு. இதில் 12 பேர் பி.ஜே.பி-யினர். வழிப்பறி, கொள்ளை வழக்குகளில் பங்குபெற்ற 10 எம்.பி-க்களில் பி.ஜே.பி-யினர் ஏழு பேர்.

குற்ற வழக்குகளில் 75 எம்.எல்.ஏ-க்கள்?! - கொலை முயற்சி..  கொள்ளை...  ஆள்கடத்தல்!

நாடாளுமன்றத்தின் கணக்கை நெருங்குகிறது சட்டமன்றங்கள். இந்தியாவின் மொத்த எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 4,120. இதில் 1,353 பேர்மீது (33 சதவிகிதம்) கிரிமினல் வழக்குகள் பின்தொடர்கின்றன. தமிழகத்தின் ‘மக்கள் பிரதிநிதி’கள் பலரும் யோக்கிய சிகாமணிகள் கிடையாது. 2006 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 77 எம்.எல்.ஏ-க்கள்மீது குற்ற வழக்குகள் இருந்தன. 2011 சட்டமன்றத் தேர்தலில் வென்ற எம்.எல்.ஏ-க்களில் 70 பேர் குற்றப் பின்னணியினர்.  இப்போதிருக்கும் சட்டசபையில் 75 எம்.எல்.ஏ-க்கள் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். இந்த 75 பேரில் 42 பேர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என சீரியஸ் வழக்குகள் இருக்கின்றன. இந்த குற்ற வழக்குப் பின்னணி எம்.எல்.ஏ-க்கள் 75 பேரில் 28 பேர் அ.தி.மு.க-வினர். 42 பேர் தி.மு.க-வினர்.

33 அமைச்சர்கள் கொண்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்ச ரவையில் எட்டு அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ஐந்து வழக்குகளோடு லீடிங்கில் இருப்பவர் கமல்ஹாசனின் எல்லாக் கேள்விகளுக்கும் முதல் ஆளாய் வந்து பதிலளிக்கும் சி.வி.சண்முகம். இவர் மீது ஐந்து  வழக்குகள் உள்ளன. மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் எனப் பல துறைகளுக்கு அமைச்சராக இருக்கும் சி.வி.சண்முகம் மீது சீட்டிங், தகராறு, போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டாக்டர் எம்.மணிகண்டன்தான் தமிழகத்தின்  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர். இவர் மீது மூன்று குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த வர்களைக் காலி செய்யவைப்பதற்காக, ரியல் எஸ்டேட் அதிபர் குமார், அமைச்சர் காமராஜுக்கு 30 லட்சம் ரூபாய் கொடுத்தார். பணத்தைத் திருப்பித் தராமல் கொலை செய்துவிடுவதாகக் காமராஜ் மிரட்டிய புகாரை போலீஸ் பதிவு செய்யாததால், சுப்ரீம் கோர்ட் சென்றார் குமார். காமராஜ்மீது எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்ய, காவல் துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது.

குற்ற வழக்குகளில் 75 எம்.எல்.ஏ-க்கள்?! - கொலை முயற்சி..  கொள்ளை...  ஆள்கடத்தல்!


நீட் தேர்வை மூன்று முறை எழுதலாம் என்று அனிதா மரணத்தின்போது சொன்ன சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்மீது லஞ்சப் புகார்கள் ஏராளம். தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் டைரி ஒன்று பறிமுதல் செய்யப் பட்டது. அந்த டைரியில் யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான விவரம் இருந்தது. அந்த டைரியில், முதல் இடத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இருந்தது. மொத்தம் 40 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போதைய தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன ராவுக்கு 11-8-2016-ல் கடிதம் எழுதினர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தவிர ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர் களுக்கு பணப்பட்டுவாடா செய்த வழக்கிலும் விஜயபாஸ்கர் பெயர் இருக்கிறது. அதோடு  விஜயபாஸ்கரின் வீடு மற்றும் குவாரிகளில் நடந்த சோதனையின் அடிப்படையில் 285 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் இருக்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் இருக்கிறது. கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து தப்பிவந்த சரவணன் அளித்த புகாரின் பேரின் எடப்பாடி பழனிசாமி மீது புகார் வாசிக்கப்படுகிறது.

 கிரிமினல்களை தேர்தலில் போட்டியாளர்களாக அறிவிக்கும் போக்குதான் உயர்ந்துகொண்டே போகிறது. 2004 எம்.பி. தேர்தலில் 462 வேட்பாளர்கள்மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. இது 2009 தேர்தலில் 1,158 ஆக உயர்ந்தது. 2014 தேர்தலிலோ 1,404 வேட்பாளர்களாக அதிகரித்தது. 2014 எம்.பி. தேர்தலில் பி.ஜே.பி. நிறுத்திய 426 வேட்பாளர்களில் 140 பேர் குற்றப் பின்னணியினர்.  இதில் பி.ஜே.பி. மட்டுமல்ல; எந்தக் கட்சிகளும் சளைத்ததில்லை.

‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கிரிமினல் பின்னணி கொண்ட எம்.பி-க்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம். அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்தே விரட்டியடித்து அரசியலைத் தூய்மையாக்குவோம். 2014 மே 16-க்கு பிறகு அதுதான் எனது வேலையாக இருக்கும்” என குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் முழங்கினார் நரேந்திர மோடி. ‘‘அரசியலில் கிரிமினல்கள் நுழைவதை என்னால் தடுக்க முடியும். இந்திய அரசியலைச் சுத்தப்படுத்துவேன் என நான் உறுதி அளிக்கிறேன். பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் குற்றப் பின்னணி எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் சிறையில் தள்ளப்படுவார்கள். நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங் களை அமைத்துக் குற்றப்பின்னணி நபர்கள் ஓராண்டுக்குள் சிறையில் அடைக்கப்படுவார்கள். ஐந்து ஆண்டுகளுக்குள், கிரிமினல் களிடம் இருந்து நாடு மீட்கப்படும். பஞ்சாயத்துகள் வரையிலான அனைத்து அதிகார மட்டங்களிலும் குற்றப்பின்னணி உடையவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் விரிவாகவே பேசினார் மோடி. ஆனால், ஆட்சியில் அமர்ந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையிலும் மோடி அதைச் செய்து காட்டவே இல்லை.

மோடி அரசை எல்லா நேரமும் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளும் கிரிமினல் அரசியல்வாதிகளை வளர்க்கிறதே தவிர, அவர்களை அழிக்கவில்லை.  கிரிமினல்களைக் களையும் பொறுப்பு மக்களிடமே இருக்கிறது. அடுத்த தேர்தலில் கிரிமினல் வழக்குள்ள வேட்பாளர்களைத் துரத்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது!