Published:Updated:

“நாங்கள் எப்போ பிரிஞ்சோம்... தனித்தனியாகத்தானே செயல்பட்டோம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“நாங்கள் எப்போ பிரிஞ்சோம்... தனித்தனியாகத்தானே செயல்பட்டோம்!”
“நாங்கள் எப்போ பிரிஞ்சோம்... தனித்தனியாகத்தானே செயல்பட்டோம்!”

லட்சியத் தம்பதிகள் சொல்கிறார்கள்

பிரீமியம் ஸ்டோரி

‘அரசியல் கருத்துவேறுபாடு’களால் பிரிந்திருந்த ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’யின் பொதுச்செயலாளர் தீபாவும், ‘எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழக’த்தின் பொதுச்செயலாளர் மாதவனும் இணைந்துவிட்டார்கள் என்பதுதான் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கான செய்தி.

ஜெயலலிதா சமாதிக்கு செப்டம்பர் 15-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வந்த தீபாவும் மாதவனும் மீண்டும் ஒன்றிணைவது என முடிவெடுத்து, தங்கள் தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இணைப்புக்குப் பிறகு தீபாவையும் மாதவனையும் சந்தித்தோம்.

“நாங்கள் எப்போ பிரிஞ்சோம்... தனித்தனியாகத்தானே செயல்பட்டோம்!”

“திடீர் பிரிவு... திடீர் கட்சி... திடீர் இணைப்பு எனத் தமிழக மக்களுக்குத் தொடர்ந்து ஷாக் கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்களே?”

“நாங்கள் எப்போ பிரிஞ்சோம்? ஒன்றாக இணைந்து செயல்படுவதால், எங்கள் இருவருக்குமே பயங்கர ஆபத்துகள் இருந்தன. வேறு சில சக்திகளும் எங்களைப் பிரித்துவைக்க ஆசைப்பட்டன. எவ்வளவு பெரிய சதியையும் அவர்கள் செய்யத் துணிவார்கள் என்பது தெரியும். அதனால், எங்களுக்குள் எந்த கருத்துவேறுபாடுகளும் வந்துவிடக்கூடாது என்று சிறிதுகாலம் தனித்தனியாகச் செயலாற்ற நினைத்தோம்.”

“உங்களுக்கு அழுத்தம் கொடுத்தது யார்? உங்களுக்கு எதிராக அப்படி என்ன சதி செய்தார்கள்?”

“வேறு யார் எங்களுக்குப் பிரச்னை கொடுப்பார்கள்? எல்லாம்... சசிகலாதான். எங்கே எங்களுக்கு அனைத்து உரிமைகளும் வந்துவிடுமோ என்ற பயத்தில் எங்களை நிம்மதியாக இருக்கவிடாமல் பல சதி வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள். அந்தச் சதி வேலைகளில், எங்களைச் சுற்றியே நல்லவர்களாக நடித்த சிலர் எங்களைப் பழிவாங்கத் துடித்தனர். அந்த நபர்களை அடையாளம் கண்டுவிட்டோம். அந்தச் சதிகாரர்களை விரட்டுவதற்கு நாங்கள் இணைந்துவிட்டோம்.”

“எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இரண்டு கட்சிகள் உள்ளன. இவற்றில் எந்தக் கட்சியிலிருந்து செயல்படப் போகிறீர்கள்?”

“இப்போதுதான் இணைந்துள்ளோம். எந்தக் கட்சியில் இணைந்து செயலாற்றப் போகிறோம் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. இரு கட்சிகளின் தொண்டர்கள் அனைவரையும் வரச்சொல்லி, கலந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுப்போம்.”

“நாங்கள் எப்போ பிரிஞ்சோம்... தனித்தனியாகத்தானே செயல்பட்டோம்!”

“ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் கூட்டணி அரசியல் எப்படி இருக்கிறது?”

“ஓ.பி.எஸ் பற்றிப் பேசாதீங்க. ‘எடப்பாடி ஆட்சியை ஊழல் ஆட்சி’ன்னு சொல்வாராம். துணை முதல்வர் பதவி கொடுத்தா, அவங்களோட சேர்ந்துப்பாராம். ‘பத்து சதவிகித உண்மையைத்தான் சொல்லிருக்கேன். இன்னும் 90 சதவிகித உண்மையைச் சொன்னா அரசியலே தலைகீழா மாறிடும்’னு சொன்னார். கடைசிவரை அந்த 90 சதவிகித உண்மையை அவர் சொல்லவேயில்லை. ‘அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கு. சி.பி.ஐ விசாரணை மூலம் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்’ என்று சொன்னார். இப்போது சி.பி.ஐ விசாரணை பற்றிய பேச்சே வரவில்லை. பதவிக்காக ஓ.பி.எஸ் என்ன வேணாலும் செய்வார் என்பதை அவரே மக்களுக்குப் புரியவைத்துவிட்டார். ஜெயலலிதா அம்மாவுக்கு முதல் துரோகியே ஓ.பி.எஸ்-தான். முடிந்த அளவுக்குக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான், ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் கூட்டணியின் நோக்கம்.”

“நீட் உள்பட எந்தப் பிரச்னைக்கும் நீங்கள் இருவரும் ஏன் குரல் கொடுக்கவில்லை?”

“நாங்கள் குரல்கொடுத்துதான் வருகிறோம். அது வெளியில் தெரிவதில்லை. உண்மையில் குரல்கொடுக்க வேண்டிய ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் எல்லாம் பதவிகளை இறுகப் பிடிப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். மக்களுக்கு எதிரான மீத்தேன் திட்டம், நீட் தேர்வு ஆகியவற்றையெல்லாம் எதிர்த்து அவர்கள் எங்கே குரல் கொடுக்கிறார்கள்? நீட் தேர்வைக் கொண்டுவந்ததற்கும், மீத்தேன் திட்டம் வந்ததற்கும் தி.மு.க ஆட்சிதான் முக்கியக் காரணம். ஜெயலலிதா எதிர்த்த இந்தத் திட்டங்களை எல்லாம், ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகிய இருவரும் ஆதரிக்கிறார்கள். ஜெயலலிதா பாதுகாத்துவந்த அ.தி.மு.க-வை அழிக்க வந்தவர்கள்தான் இவர்கள் இருவரும்.”

“உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தை எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்?”

“தேர்தல் பிரசாரம் பற்றி இப்போதைக்கு எந்த முடிவையும் எடுக்கவில்லை. கண்டிப்பாக, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம்.”

“நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு என்ன செய்வீர்கள்?”

“நிச்சயமாக, தமிழ்நாட்டு வளர்ச்சிக்காகப் பாடுபடுவோம். தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கு நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறோம்.”

- ஜெ.அன்பரசன்
படங்கள்: தே.அசோக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு