Published:Updated:

அன்வர்ராஜா பேச்சு... மின்சாரத்தை நிறுத்திய ஆளும்கட்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அன்வர்ராஜா பேச்சு... மின்சாரத்தை நிறுத்திய ஆளும்கட்சி!
அன்வர்ராஜா பேச்சு... மின்சாரத்தை நிறுத்திய ஆளும்கட்சி!

அன்வர்ராஜா பேச்சு... மின்சாரத்தை நிறுத்திய ஆளும்கட்சி!

பிரீமியம் ஸ்டோரி

.தி.மு.க அமைச்சர்களும் நிர்வாகிகளும் ஆளாளுக்கு தினகரனையும் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும் வறுத்தெடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் ராமநாதபுரத்திலோ, ஆளும்கட்சிக்குள்ளே குத்து வெட்டு நடந்து கொண்டிருக்கிறது. ஒரே அணியில் இருக்கும் அமைச்சர் மணிகண்டனும், அன்வர்ராஜா எம்.பி-யும் வெளிப்படையாக மோதிக்கொண்டிருக்கிறார்கள்.

அன்வர்ராஜா பேச்சு... மின்சாரத்தை நிறுத்திய ஆளும்கட்சி!

அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்தது. இந்தக் கூட்டத்தில், தங்கள் பலத்தைக் காட்டுவதற்காக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பணம் கொடுத்து  கூட்டத்தைத் திரட்டிவந்தனர். ஆடல் பாடல் எல்லாம் முடிந்து, நிர்வாகிகள் பேசத் தொடங்கினர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வந்த அமைச்சர் மணிகண்டன், ஒன்பது மணிக்குப் பேசத் தொடங்கினார். அண்ணாவைப் பற்றி சில வார்த்தைகள் பேசிவிட்டு, ‘‘நான்கு கிராம் தங்கத்தை எட்டு கிராமாக உயர்த்தித் தந்தோமே...அம்மா உணவகம் அமைத்தோமே... மாணவர்களின் இதயம் எல்லாம் லப் டப் என அடிப்பதற்குப் பதிலாக லேப் டாப் என அடித்துக் கொண்டிருக்கும் வகையில், லேப் டாப்களை வழங்கி இருக்கிறோமே... இப்படித் திட்டங்களை வழங்கிய ஆட்சியை எதற்காகக் கலைக்க வேண்டும்?’’ என, ‘என் கட்சிக்காரன் என்ன தப்பு செஞ்சான்’ என்று நடிகர் வடிவேலு கேட்பது போன்ற பாணியில், அமைச்சர் மணிகண்டன் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தபோது,  மேடைக்கு வந்தார் எம்.பி அன்வர்ராஜா.

அன்வர்ராஜா வந்தவுடன் டிராக் மாற்றிப் பேச ஆரம்பித்தார், மணிகண்டன். ‘‘நான் முதல்வரிடம் வைத்த கோரிக்கையால்தான் சட்டக் கல்லூரி,  விவசாயக் கல்லூரி எல்லாம் வந்தன. மருத்துவக் கல்லூரி வரவிருக்கிறது. என் முயற்சியால்தான் சென்னை-ராமேஸ்வரம் இடையிலான ரயில் நேரத்தை மாற்றியுள்ளனர்’’ எனத் தன்னுடைய பழைய பல்லவியையே திரும்பச் சொல்லி நேரத்தை இழுத்துக் கொண்டிருந்தார் மணிகண்டன். கடைசிவரை தினகரனைப் பற்றியோ, அவருக்கு எதிராகவோ பேசாமல் தன் பேச்சை மணிகண்டன் முடித்தார்.

அன்வர்ராஜா பேச்சு... மின்சாரத்தை நிறுத்திய ஆளும்கட்சி!

கூட்டம் முடியும் தருவாயில் மைக் பிடித்த அன்வர்ராஜா, ‘‘அவர்களே... இவர்களே...” என்று  அழைப்பதற்கே நீண்ட நேரத்தை எடுத்துக் கொண்டார்.  கட்சியின் நிலை மற்றும் தினகரன் விவகாரம் எனப் பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சரின் ஆதரவாளர் ஒருவர், நேரத்தை சுட்டிக்காட்ட, ‘‘சீக்கிரம் முடிச்சிடுறேன்’’ எனத் தொடர்ந்தார் அன்வர்ராஜா. அதைத் தொடர்ந்து மணிகண்டன் காரில் ஏறிச் சென்றார். தொடர்ந்து பேசிய அன்வர்ராஜா, ‘‘ரயில்வேக்குக் கடிதம் எழுதியதாகவும் அதற்குப் பதில் வந்ததாகவும் அமைச்சர் பேசினார். அதற்குப் பதில் சொல்லவில்லையென்றால், நான் பேசாமல் இருக்கிறேன் என அர்த்தமாகிவிடும். ரயில்வே பொதுமேலாளாரைச் செருப்பால் அடிக்காத குறையாகக் கேள்வி கேட்டிருக்கிறேன். எம்.பி-யாக நான் எடுத்த முயற்சிகள் எல்லோருக்கும் தெரியும். மத்திய அமைச்சருக்கு யார் கடிதம் எழுதினாலும் பதில் வரும். அது மாநில அமைச்சராக இருப்பதால் உடனே பதில் அளித்திருப்பார்கள். ரயில் நேரத்தை மாற்றுவது குறித்து நானும் ஆலோசனை சொல்லியிருக்கிறேன். அதனை நிறைவேற்ற பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. உச்சிப்புளியில் ரயில் நின்று செல்ல வேண்டும் எனப் பரிந்துரை செய்திருக்கிறேன். எம்.பி என்ற முறையில் எல்லா முயற்சியையும் எடுத்து வருகிறேன். நீங்கள் ஒரு கடிதம் கொடுத்தாலும் உடனே அதற்குப் பதில் கொடுத்துவிடுவார்கள். டெல்லியில் இருப்பவர்களின் பண்பாடு அது. அங்கு எதிர்க் கட்சி, ஆளும் கட்சி என்று பார்ப்பதில்லை. அந்த முறையில் அமைச்சருக்குப் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதனை இப்படி பொது இடத்தில் வைத்துச் சொல்வது அமைச்சரின் அனுபவமின்மையையே காட்டுகிறது. ஏனெனில் மாநில அமைச்சர் ஒருவர், மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதும்போது, முதல்வர் வழியாகத்தான் அனுப்ப வேண்டும். அமைச்சர் நேரடியாக கடிதம் எழுதுவது தவறு. நாடாளுமன்ற உறுப்பினரான நான், ரயில்வே தொடர்பாக ஏதும் செய்யவில்லை, எல்லாவற்றையும் அமைச்சர்தான் செய்கிறார் என்ற தோற்றத்தை  என்னை வைத்துக்கொண்டே ஏற்படுத்த முயற்சி செய்வது நாகரிகமான செயல் இல்லை’’ எனத் தொடர்ந்து அன்வர்ராஜா பேசிக் கொண்டிருக்கும் போதே, மேடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் அன்வர்ராஜா தனது பேச்சை நிறுத்தினார். கூட்டமும் முடிந்தது.

தினகரனை எதிர்க்க வேண்டிய அமைச்சர் மணிகண்டன், அன்வர்ராஜாவைச் சீண்டுவதும், அதற்கு அன்வர்ராஜா பதிலளிப்பதும் எடப்பாடி கட்சியின் ஓட்டையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு