Published:Updated:

கிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு?
கிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு?

இன்னும் சில நாள்களுக்கு ரெய்டு நீடிக்கவே வாய்ப்பு அதிகம். 'இன்னும் 50 வருமான வரித்துறை ஆய்வாளர்கள் தேவைப்படுகிறார்கள்' என ரெய்டுக்குச் சென்றுள்ள உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ளும்கட்சி நிர்வாகிகளை மீண்டும் குறிவைத்திருக்கிறது வருமான வரித்துறை அலுவலகம். ' கிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் கட்டுமான நிறுவனம் குறிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

நாமக்கல் மாவட்டம், ஆண்டிபாளையத்தில் இயங்கிவந்த கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தில், சமீபத்தில் ஐ.டி ரெய்டு நடந்தது. 'தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் ஊழல் நடக்கிறது' என்பதை வெளிக்காட்டும் விதமாக இந்த ரெய்டு நடந்தது. இதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி கையில் வைத்திருக்கும் நெடுஞ்சாலைத்துறைக்குள் நுழைந்தது ஐ.டி. இந்தச் சோதனையில் அரசு ஒப்பந்ததாரர் செய்யாத்துரையும் அவரது மகன்களும் வளைக்கப்பட்டனர். அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் கைப்பற்றப்பட்ட பணம், பொதுமக்களிடையே மலைப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு காஸா கிராண்ட் என்ற கட்டுமான நிறுவனத்தைக் குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. இந்நிறுவனத்துக்குச் சொந்தமான சென்னை, பெங்களூரு அலுவலகங்களில் இன்று சோதனை நடந்து கொண்டிருக்கிறது.

"இந்தச் சோதனை இன்னும் ஓரிரு நாள்களுக்கு நீட்டிக்கப்படலாம்" என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில். இதுகுறித்து நம்மிடம் பேசிய வருமான வரித்துறை அலுவலர் ஒருவர், "மூன்று நாள்களுக்கு முன்னரே காஸா கிராண்ட்டில் ரெய்டு நடத்துவது தொடர்பாக விவாதம் நடந்தது. இதற்கான செலவுகளைக் கணக்கிட்டால், இன்னும் சில நாள்களுக்கு ரெய்டு நீடிக்கவே வாய்ப்பு அதிகம். மேலும், 'இன்னும் 50 வருமான வரித்துறை ஆய்வாளர்கள் தேவைப்படுகிறார்கள்' என ரெய்டுக்குச் சென்றுள்ள உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரெய்டை நடத்துவது தொடர்பாக, நிதித்துறை அலுவலகத்தில் உள்ள நேரடி வரிகள் வாரியத் தலைவர்தான் (சி.பி.டி.டி) முடிவெடுக்கிறார். எல்லாம் டெல்லியின் முடிவுகள்தான். அரசியல்ரீதியாக சில ரெய்டுகளும் வழக்கமாக நடக்கும் ரெய்டுகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன" என்றார். 

காஸா கிராண்ட்டில் நடக்கும் சோதனை குறித்து நம்மிடம் பேசிய கோட்டை வட்டார பிரமுகர் ஒருவர், "2016 சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் கார்டனுக்குள் சில வேலைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஐவர் அணியை குறிவைத்து சோதனைகள் நடந்தன. முழுக்க கார்டன் வட்டாரத்தைச் சேர்ந்த அதிகாரிகளே சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி, 'மன்னார்குடி அமைச்சர் ஒருவர் ஆம்னி பேருந்தில் மூட்டை மூட்டையாகப் பணத்தையும் நகையையும் ஏற்றிக்கொண்டு வந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமரேந்திரா எனும் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டிவரும் ‘காஸா கிராண்ட்’ நிறுவனம், நியூயார்க் நகரில் உள்ள விலை உயர்ந்த ஓட்டல், லண்டனைச் சேர்ந்த ‘ஓக்லி பிராப்பர்ட்டி சர்வீஸ்’ ஆகியவற்றில் அமைச்சர் ஒருவர் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். தற்போது மூத்த அமைச்சர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம் 30 ஆயிரம் கோடி என்றும் அப்பணம் மேலிடத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன' என்று குறிப்பிட்டிருந்தார். 

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், 'அ.தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள் சிலர் ஊழல் மூலம் குவித்த பணத்தில் ஒரு பகுதியை தலைமையிடம் கணக்குக் காட்டாமல் தாங்களே பதுக்கிக்கொண்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அ.தி.மு.க-வில் ஐவர் அணி என்றழைக்கப்படும் 5 அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் பல ஆயிரம் கோடி பணமும் சொத்துக்களும் மேலிடத்தால் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சேர்த்த சொத்துகள் பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது மட்டுமன்றி, அவர் மகனும் சட்டவிரோத காவலில் வைத்து 3 நாட்கள் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார். 

கார்டனுக்குள் என்ன நடக்கிறது என்பதை இந்த இரண்டு அறிக்கைகளும் சுட்டிக் காட்டின. இதன்பிறகு, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மகன் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே இதெல்லாம் நடந்தது. இந்தச் சோதனையில் நத்தம் விஸ்வநாதனுக்குச் சொந்தமான வேம்பார்பட்டியில் உள்ள வீடு, மதுரையில் உள்ள வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடந்தது. இந்த ரெய்டுகள் எல்லாம் கார்டன் சொல்லித்தான் நடப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், உண்மை அதுவல்ல. ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அ.தி.மு.கவின் முக்கியப் புள்ளிகள் மீது ரெய்டு நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார் பிரதமர் மோடி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்குச் சொந்தமான 140 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதன் பிறகு சில காலம் அமைதியாக இருந்த மத்திய அரசு, கடந்த சில வாரங்களாக எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டியவர்களைக் குறிவைத்தது. தற்போது பன்னீர்செல்வத்துக்கு வேண்டியவர்களை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். ' இது ஓர் ஊழல் மிகுந்த அரசாங்கம்' என்பதைச் சுட்டிக் காட்டும் வகையிலேயே ரெய்டு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன" என்றார் விரிவாக. 

ஆனால், இதுகுறித்துப் பேசும் அ.தி.மு.க நிர்வாகிகளோ, "காஸா கிராண்ட் நிறுவனத்தில் ரெய்டு நடப்பதாகச் சொல்கின்றனர். உண்மையில், சில ஆவணங்களைச் சரிபார்க்கும் வேலைகள்தான் அங்கு நடந்து வருகின்றன. முன்னாள் அமைச்சருடன் இந்தக் கட்டுமான நிறுவனத்துக்குத் தொடர்பு என்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அந்த அமைச்சரின் பணம் இங்கு முதலீடு செய்யப்பட்டிருப்பதற்கு எந்த ஆவணங்களும் இல்லை" என்கின்றனர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு