Published:Updated:

''புகாரை விசாரிக்கட்டும்... கமிட்டியில்தான் பேச முடியும்!'' வாய் திறக்கும் ஐ.ஜி-யும்... பெண் எஸ்.பி-யும்!

''புகாரை விசாரிக்கட்டும்... கமிட்டியில்தான் பேச முடியும்!'' வாய் திறக்கும் ஐ.ஜி-யும்... பெண் எஸ்.பி-யும்!
''புகாரை விசாரிக்கட்டும்... கமிட்டியில்தான் பேச முடியும்!'' வாய் திறக்கும் ஐ.ஜி-யும்... பெண் எஸ்.பி-யும்!

ஞ்ச ஒழிப்புத் துறையில் பணிபுரியும் கடவுள் பெயரைக் கொண்ட ஐ.ஜி. மீது  பெண் எஸ்.பி. ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருப்பது தமிழக காவல் துறையை அதிரச் செய்துள்ளது. பெண் எஸ்.பி அளித்த அந்தப் புகார் கடிதம், அரசுத் துறையில் பணியாற்றும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாகா கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

அந்தப் புகார் மனுவில், ``கடந்த ஏழு மாதங்களாகப் போலீஸ் உயர் அதிகாரி தொடர்ந்து பாலியல் தொந்தரவுகள் கொடுத்து வந்ததாகவும், அவ்வப்போது ஆபாசப் படங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் அந்தப் பெண் எஸ்.பி கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அந்தப் பெண் எஸ்.பி-க்குக் கொடுக்கப்பட்ட பாலியல் புகாரின் எதிரொலியாக அதைச் சுற்றி சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, இந்தப் புகார் கடிதம் கொடுக்கப்பட்டு 20 நாட்கள் ஆகியும், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணமாக, தமிழக டி.ஜி.பி-யாக உள்ள டி.கே.ராஜேந்திரன் மீது, `குட்கா வழக்கு விசாரணை'  உள்ளது. அந்த வழக்கில் டி.கே.ராஜேந்திரனுக்கு ஆதரவாக ஐ.ஜி. செயல்பட்டார் என்ற காரணத்தாலேயே இந்தப் புகார் குறித்த விசாரணையை அதிகாரிகள் காலம் தாழ்த்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அரசு அதிகாரிகளுடன் நெருக்கமாக உள்ள ஒருவர் பேசுகையில், ``ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஐ.ஜி. தீவிர விசாரணையில் இறங்கியதே இப்படியான புகார் தற்போது வரக் காரணம். இலைமறை காயாகப் போய்க் கொண்டிருந்த இந்த விவகாரம், தற்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது. அதே நேரத்தில், ஐ.ஜி. மீதான அந்தக் குற்றச்சாட்டைப் பொய் என்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இந்தப் பாலியல் புகாரைச் சுற்றி பலவித அரசியல் காய்நகர்த்தல்கள் உள்ளன. முழுமையான விசாரணைக்குப் பிறகே இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மைகள் தெரியவரும்" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐ.ஜி. மீது புகார் கொடுத்துள்ள அந்தப் பெண் எஸ்.பி-யைச் சந்திக்க அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தோம். அவருடைய வீட்டின் அருகாமையில் நின்றுகொண்டு தொலைபேசியில் தொடர்புகொண்டு, ``உங்களைப் பார்க்க வந்துள்ளோம். உங்களிடம் 10  நிமிடம் பேச வேண்டும்'' என்றோம். அதற்கு அந்தப் பெண் எஸ்.பி. ``மன்னிக்கவும்... எனக்கு உடல்நிலை சரியில்லை. தற்போது வரவேண்டாம்'' என்றார். ஆனால் நாம் அவரை விடாது,  ``10 நிமிட அவகாசம் போதும் மேடம்...'' என்று கேட்டோம். அதற்கு அவர், ``நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். அதே நேரத்தில், உடல்நிலையும் சரியில்லாமல் உள்ளது. அதனால் தற்போது வரவேண்டாம். அந்தக்  கமிட்டிப் புகாரை விசாரிக்கட்டும். அதன் பின்னர் நானே பேசுகிறேன். நன்றி'' என்று சொல்லிவிட்டுப் போனைத் துண்டித்தார்.

 இந்தப் புகாரில் சிக்கியுள்ள கடவுள் பெயரைக் கொண்ட ஐ.ஜி.-யைத் தொடர்புகொண்டு பேசினோம். ``விசாகா கமிட்டிச் சட்டத்தின்படி குற்றஞ்சாட்டப்பட்டவர் மீதோ அல்லது புகார் கொடுத்தவர்களின் விவரமோ வெளியிடப்படக்கூடாது. அப்படி வெளியாகும் விவரங்களை எடுத்து வைத்துள்ளேன். இந்த வழக்கு விசாரணை நடைபெறும்போது அந்த விவரங்களைக் கொடுப்பேன். இதைப்பற்றி இப்போதைக்கு எந்தக் கருத்தும் கூற முடியாது.  அந்தப் புகார் குறித்து நான் பேசினால், அது சட்டத்தை மீறுவதாகும். இதுகுறித்து அந்தக் கமிட்டியில்தான் நான் பேச முடியும்" என்றார், மிகத் தெளிவாக.

இந்த விவகாரம் தமிழக காவல் துறையில் மட்டுமல்ல... பொது மக்களிடையேயும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் எஸ்.பி. கொடுத்துள்ள இந்தப் புகாரை, பெண் காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி விசாரிக்க உள்ளது. புகார் குறித்து அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாகக் கவனித்துவரும் இந்தக் கமிட்டி, விரைவில் அந்தப் பெண் எஸ்.பி-யை விசாரணைக்கு அழைக்கயிருக்கிறது. அப்போது இன்னும் நிறைய தகவல்கள் வெளிவரலாம் என்று சொல்லப்படுகிறது.