Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

எஸ்.கே.வாலி, த.முருங்கப்பட்டி.

ரஜினியின் குழப்பமும் கமலின் குழப்பமும் ஒன்றா?


ஆமாம். அவர் பேசாமல் குழப்புவார். இவர் பேசிக் குழப்புவார்.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

தமிழகத்தில் சில கட்சிகளும் சில அமைப்புகளும் ஏதாவது போராட்டங்கள் நடத்த வாய்ப்புக் கிடைக்குமா என்று எதிர்பார்த்தபடியே இருக்கிறார்களோ?


போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்குக் கட்சிகள், அமைப்புகள் காத்திருக்கும் என்பது உண்மைதான். அப்படிப்பட்ட செயல்பாடுகளால்தான், அவர்கள் தங்களை மக்கள் மத்தியில் தக்க வைத்துக் கொள்ள முடியும். அதேநேரத்தில் நாளுக்குநாள் நாட்டில் பிரச்னைகளும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கின்றன.அதனால் போராட்டங்களும் அதிகமாகிவருகின்றன. இந்தியாவில் நடக்கும் போராட்டங்களில் 25 சதவிகிதம் தமிழ்நாட்டில் நடப்பதாகச் சொல்கிறது மத்திய உள்துறை சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரம்.

போராட்டங்கள் நடக்கும்போது அரசோ, காவல்துறையோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கம். சமீபகாலமாக அப்படிப்பட்ட பேச்சுவார்த்தைகள் இல்லை. அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே போராட்டங்கள் நடத்தவேண்டிய அவசியம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். பல போராட்டங்களைக் காவல்துறையின் செயல்பாடுகள் மேலும் தூண்டி, மோதலாக மாற்றிவிடுகிறது. இத்தகைய மோதல்களும் போராட்டங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திவிடுகின்றன.

 ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

‘நீட் தேர்வுக்கு இணையாகக் கல்வித்திட்டங்கள் வகுக்கப்படும்’ என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சொல்லியிருக்கிறாரே?

சொன்னால் போதுமா... செய்ய வேண்டாமா? பாடத்திட்டத்தை உருவாக்கும் வேலைகளைத் திறமையாகச் செயல்படுத்திவந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயசந்திரனின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், இன்னொருவரைச் செயலாளராக நியமித்துக்கொண்டார் செங்கோட்டையன். பாடத்திட்டம் தயாரிக்கும் குழுவை எந்தத் தொந்தரவும் செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் சொன்னது. உதயசந்திரனுக்கு ஒழுங்கான ஓர் அறைகூட தலைமைச் செயலகத்தில் இல்லை. ஆனால், பணிமாறுதல்கள் மற்றும் பணி நியமனங்கள் அனைத்தும் அவர்கள் விரும்பும் வகையில், விரும்பும் மனிதர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. இந்தக் காரியங்களுக்கும் கல்வித்துறை மேம்பாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முதல்வரைப்போல காவிரியில் மூழ்கி எழுவதன் மூலமாக மட்டுமே கல்வித்துறையை மேம்படுத்திவிட முடியாது.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

 ‘உங்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்ததைப் பார்த்தபோது, உங்களுக்கு என்ன தோன்றியது?

ஆண்டவனைவிட, தான் மேலானவர் என்று நினைத்துக்கொண்டாரா? அல்லது, தன்னை எதிர்ப்பவர்களை ஆண்டவன் காப்பாற்ற மாட்டான் என்கிறாரா?

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

தினகரனிடம் இருக்கும் முகத்தெளிவு, பழனிசாமி மற்றும் பன்னீர் முகங்களில் இல்லையே?


அவர்கள் இருவரும் பதவியில் இருப்பவர்கள். அதை எப்படியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கவலையில் முகம் இறுக்கமாகிவிடும். தினகரனுக்கு அந்தப் பிரச்னை இல்லையே!

‘வெறும் முறத்தை வைத்திருப்பவள் எப்படி வேண்டுமானாலும் வீசி வீசி சண்டை போடலாம். முறத்தில் கடுகு வைத்திருப்பவள் அப்படிச் சண்டை போட முடியாது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்று ஓர் உதாரணம் சொல்லியிருக்கிறார் அண்ணா. அந்த ஜாக்கிரதை உணர்வுதான் இரண்டு ‘ப’க்களுக்கும்.

இ.சிகாமணி, அத்தனூர்.

அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் - இன்றைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஒப்பிடுக?

எப்போதும் செயல்படாத முதல்வர்.

லட்சுமி தாரா, வேலூர்( நாமக்கல்).

கழுகார் பதில்கள்!

தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தால், ஆட்சி கலையும்தானே?

அப்படிச் சொல்ல முடியாது. எல்லா சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் ஆளுநர்தான் எடுக்க வேண்டும். அவர் செயல்படத் தயாராக இல்லாதபோது இவர்களது ராஜினாமாவாலும் பயனிருக்காது. ஒரு நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கும் அவ்வளவுதான். தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் 98 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதி காலியிடம் என அறிவிக்கப்பட்டு எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. இன்னமும் தேர்தல் நடக்கவில்லை. அதேபோல், சூழ்நிலை சரியில்லை என்று சொல்லி, அந்த 98 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தாமல் கிடப்பில் போடவும் வாய்ப்பிருக்கிறதே!

ஜனநாயகம் இல்லாத நாட்டில் நடக்கும் கேலிக்கூத்துக்களைவிட, ஜனநாயக நாட்டில் நடக்கும் கேலிக்கூத்துக்கள்தான் அதிகம்.

பி.ஶ்ரீ.தர்ஷினி, குடந்தை.

 ‘சிலர், தங்கள் தகுதியை மீறி ஆசைப்படுகின்றனர்’ என்கிறாரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி?


அவருக்கென்ன, ஆசைப்பட்டது கிடைத்துவிட்டது. இந்த மாதிரி தத்துவமெல்லாம் பேசலாம்.

ச.புகழேந்தி, மதுரை - 14.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நவம்பர் 17-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?


அநேகமாக நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் வந்துவிடும். அக்டோபர் மாதத்துக்குள் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு இவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி அமைக்கப்படும். சரிபாதியாக இரண்டு கட்சிகளுக்கும் இடங்கள் பிரித்துக்கொள்ளப்படும். அடிமட்டத்தில் பல இடங்களை முதலில் பெறுவதுதான் பி.ஜே.பி-யின் முதல் திட்டம். அதன்பிறகு ஆட்சி கலைக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும். டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் இப்படித்தான் சொல்கின்றன.

படங்கள்: சு.குமரேசன், கே.ஜெரோம்

கழுகார் பதில்கள்!

வி.ஐ.பி கேள்வி

சாத்தை பாக்யராஜ்
மக்கள் தேசம் கட்சி
நிறுவனத் தலைவர்


தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தலித் சமுதாய மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள், பெரும் வாக்கு வங்கியாகவும் இருக்கிறார்கள். ஆனாலும் திராவிடக் கட்சிகளோ, தேசியக் கட்சிகளோ, ‘தலித் ஒருவரைத் தமிழக முதல்வராக்க வேண்டும்’ என்ற முழக்கத்தை எழுப்ப மறுக்கிறார்களே, ஏன்?

தலித்துகளின் வாக்குகளை வாங்கி, தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்றுதான் எல்லா கட்சிகளும் நினைக்கும். அதன் மூலம் தலித்துகள் முக்கியப் பதவிகளை அடையாமலும் பார்த்துக்கொள்ளும். இந்தத் தந்திரம்,அனைத்துக் கட்சிகளாலும் கையாளப்படுவதுதான். இன்று நேற்றல்ல, எல்லாகாலத்திலும் இது தொடர்ச்சியாக நடப்பதுதான். தலித் முதலமைச்சர் என்று டாக்டர் ராமதாஸ் சில காலம் சொல்லிவந்தார். ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலித் ஒருவரை முதலமைச்சராக்குவோம்’ என்று அம்பேத்கர் பிறந்தநாளின்போது மட்டும் ப.சிதம்பரம் பேசுவார்.

தலித் தலைமை என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், முற்போக்கான கொள்கை பேசும் இயக்கங்களில்கூட சாத்தியமில்லாமல் இருக்கிறது. அத்தகைய மனப்போக்கு உருவாகவில்லை. அப்படி ஒரு தலைமை அமைந்தால், அதை மற்ற சமூகத்தினர் ஏற்கமாட்டார்கள் என்றும் நினைக்கிறார்கள். தலித் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால், அவரை மற்ற சமூகம் ஏற்காது என்ற சமாதானமும் சொல்லப்படுகிறது.முதலமைச்சர் வேட்பாளராகக்கூட அறிவிக்க வேண்டாம்... கட்சியின் முக்கியமான பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் தரக்கூட கட்சிகள் தயாராக இல்லை. ஆனால், இவர்கள் அனைவருமே தலித் பாதுகாவலர்கள்தான்.அப்படித்தான் அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!