Published:Updated:

மிடாஸ், ஜாஸ் சினிமாஸில் ரெய்டு; ஜெயா டி.வி-க்கு வாழ்த்து!  - மோடி பாராட்டு உண்டாக்கிய ஆச்சர்யம்

மிடாஸ், ஜாஸ் சினிமாஸில் ரெய்டு; ஜெயா டி.வி-க்கு வாழ்த்து!  - மோடி பாராட்டு உண்டாக்கிய ஆச்சர்யம்
மிடாஸ், ஜாஸ் சினிமாஸில் ரெய்டு; ஜெயா டி.வி-க்கு வாழ்த்து!  - மோடி பாராட்டு உண்டாக்கிய ஆச்சர்யம்

' 24 மணி நேரத்தில் ரெய்டு முடிந்துவிடும்' எனக் கணக்குப் போட்டார் விவேக். ஆனால், ஐந்து நாள்களாக சோதனை நீடித்ததை அவர் எதிர்பார்க்கவில்லை.

ஜெயா டி.வி-யின் 20-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பியதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர் மன்னார்குடி உறவுகள். `ஜெயா டி.வி-யின் முழு அதிகாரமும் விவேக் கையில்தான் இருக்கிறது. வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு பா.ஜ.க-வின் விசுவாசியாகவே இளவரசி குடும்பம் மாறிவிட்டதையே இது காட்டுகிறது" என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள். 

சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம், நேற்றுடன் 19 ஆண்டுகளை நிறைவுசெய்துவிட்டது. 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், `இருபதாவது ஆண்டில் ஜெயா தொலைக்‍காட்சி அடியெடுத்துவைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தருணத்தில் அங்கு பணியாற்றும் அனைவருக்‍கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள முன்னணி தொலைக்‍காட்சிகளில் ஒன்றாகத் திகழும் ஜெயா தொலைக்‍காட்சி, சிறப்பான செய்திச் சேவை, மக்‍கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறது. எத்தனையோ தொலைக்‍காட்சிகள் இருந்தபோதும், மக்‍களை மகிழ்விப்பதிலும் சமூகத்துக்கு வழிகாட்டுவதிலும் தனது பயணத்தை சிறப்பான முறையில் ஜெயா தொலைக்‍காட்சி மேற்கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது' எனக் குறிப்பிட்டிருந்தார். அதேபோல, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். 

மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனைகளால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயா தொலைக்காட்சிக்கு, பிரதமர் வாழ்த்து கூறியுள்ளதை ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர் அதன் ஊழியர்கள். ஆனால், தினகரன் முகாமில் எந்தவித ஆச்சர்யங்களும் தென்படவில்லை. `` இந்தக் கடிதம் ஜெயா டி.வி, சி.இ.ஓ விவேக்கின் ஏற்பாட்டில் வெளிவந்தது என்பதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சசிகலாவுக்கு வேண்டிய உறவினர்களின் வீடு, அலுவலகம் உள்பட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். மன்னார்குடி, சுந்தரக்கோட்டையில் வசிக்கும் திவாகரனின் வீடு, அலுவலகம், இளவரசி குடும்பத்தினர் நிர்வகிக்கும் மிடாஸ் சாராய ஆலை, ஜாஸ் சினிமாஸ், ஜெயா தொலைக்காட்சி என ஒன்றைக்கூட பாக்கிவைக்காமல் அதிகாரிகள் துருவினர்.

இந்தச் சோதனையில் ஆயிரம் அதிகாரிகள் பங்கேற்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த மெகா ஐ.டி ரெய்டு அது. ' 24 மணி நேரத்தில் ரெய்டு முடிந்துவிடும்' என கணக்குப் போட்டார் விவேக். ஆனால், ஐந்து நாள்களாக சோதனை நீடித்ததை அவர் எதிர்பார்க்கவில்லை. வீட்டைவிட்டு அவரால் எங்கும் நகர முடியவில்லை. நள்ளிரவு 1 மணிக்கெல்லாம் எழுப்பி, அவரிடம் சொத்துகள் குறித்த கேள்விகளைக் கேட்டு துளைத்தனர். அவரது வீட்டில் கிடைத்த ஆவணங்களையும் வேறு இடங்களில் இருந்து கிடைத்த ஆவணங்களையும் சரிபார்க்கும் பணிகளும் நடந்தன. சொல்லப் போனால் வருமானத்தையெல்லாம் பணமாக அல்லாமல் ஆவணங்களாக மாற்றி வைத்திருந்தார் விவேக். 

இதனால், வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில், பா.ஜ.கவினரோடு சமரசமாகச் செல்ல வேண்டிய சூழலும் ஏற்பட்டது. குறிப்பாக, மிடாஸ் சாராய ஆலையின் நிர்வாகப்  பொறுப்பில் கிருஷ்ணபிரியாவின் கணவர் கார்த்திகேயன் பெயரளவுக்குத்தான் இருக்கிறார். முழுக் கட்டுப்பாடும் கிருஷ்ணபிரியா கையில்தான் இருக்கிறது. இந்த ஆலையில்தான் ஏராளமான கணக்கு வழக்குகள் பிடிபட்டன. ஜாஸ் சினிமாஸ் தொடர்பான ஆவணங்களில் விவேக்குக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டது. ரெய்டுக்குப் பிறகு 15 நாள்களுக்கு ஒருமுறை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி வந்தனர் விவேக்கும் கிருஷ்ணபிரியாவும். ஒருமுறை விசாரணைக்குப் போகும்போதே அடுத்த சம்மனைக் கையில் கொடுத்துவிடுவார்கள். அந்தளவுக்கு நெருக்கடியை எதிர்கொண்டவர்கள், ஒருகட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். 

இதில், தினகரன் மீது வெளிப்படையான விமர்சனத்தை விவேக் முன்வைத்ததில்லை என்றாலும், தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் அவர் நிச்சயமாக இல்லை. திவாகரன் தனிக்கட்சி தொடங்கியதும் ரெய்டுக்குப் பிறகுதான். ஆர்.கே.நகர் தேர்தலின்போது, ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான விவகாரத்தில்  தினகரனுக்கு எதிராகக் கொந்தளித்தார் கிருஷ்ணபிரியா. இதனால் கோபப்பட்ட சசிகலா, ' இனி வாயே திறக்கக் கூடாது' எனக் கூறிவிட்டார். அதன்பிறகு சில மாதம் அமைதியாக இருந்தவர், ரெய்டுக்குப் பிறகு தினகரனைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டார். சசிகலா பேச்சையும் அவர் கேட்பதில்லை. இதன் பின்னணியில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் தனிக்கதை. தற்போது வரையில் ஜெயா டி.வியின் சி.இ.ஓவாக விவேக் இருக்கிறார். தொலைக்காட்சியின் அதிகாரத்தில் தினகரனும் அனுராதாவும் தலையிடுவதில்லை. பா.ஜ.க கட்டுப்பாட்டில் இருப்பதற்கான வெளிப்படையான ஆதாரம்தான், மோடி அனுப்பிய வாழ்த்து கடிதம்" என்றார் விரிவாக. 

மோடியின் வாழ்த்து கடிதம் குறித்து, தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். `` ஜெயா டி.விக்கு வாழ்த்து கூறியதையும் ரெய்டையும் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. டெல்லியில் கடைப்பிடிக்கக் கூடிய அரசியல் நாகரிகத்தைத்தான் இந்த விஷயத்திலும் கடைப்பிடித்தோம். தொலைக்காட்சிகளுக்கு வாழ்த்துக் கூறுவது இயல்பான ஒன்று. அனைத்துக் கட்சிகளிடம் நல்லுறவைக் கடைப்பிடிக்கவே பா.ஜ.க விரும்புகிறது" என்றார் அமைதியாக.

அடுத்த கட்டுரைக்கு