Published:Updated:

அனிதாவின் சாம்பலிலிருந்து... - அ.முத்துக்கிருஷ்ணன்

அனிதாவின் சாம்பலிலிருந்து... - அ.முத்துக்கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
அனிதாவின் சாம்பலிலிருந்து... - அ.முத்துக்கிருஷ்ணன்

ஓவியம்: வீரவசந்த்

அனிதாவின் சாம்பலிலிருந்து... - அ.முத்துக்கிருஷ்ணன்

ஓவியம்: வீரவசந்த்

Published:Updated:
அனிதாவின் சாம்பலிலிருந்து... - அ.முத்துக்கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
அனிதாவின் சாம்பலிலிருந்து... - அ.முத்துக்கிருஷ்ணன்

னிதாவின் முகத்தைப் பார்த்தபடி இருக்கிறேன். அனிதாவின் கண்கள் இடைவிடாது பல கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை அவள் அம்பலப்படுத்துகிறாள், தன் சக தலைமுறையினருக்காகத் தோண்டப்பட்ட சவக்குழியின் நீள அகலத்தை அவள் அடையாளம் காட்டுகிறாள். அவளைக் கொலைசெய்யப் பயன்படுத்தப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான  கலாசார ஆயுதத்தின் மீது காறி உமிழ்கிறாள். ‘இந்தக் கொலைக்கருவியை வைத்து இன்னும் எத்தனை தலைமுறைக்கு எங்களைக்  கொலை செய்வீர்கள்?’ என்று தன் குரல்வளையின் உச்சத்தில் கர்ஜிக்கிறாள். அனிதாவின் முகத்தை அத்தனை எளிதில் யாராலும் மறக்கவோ கடந்து செல்லவோ முடியாது.   

அனிதாவின் சாம்பலிலிருந்து... - அ.முத்துக்கிருஷ்ணன்

ஆயிரம் கனவுகளுடன்தான் இந்த நிலத்திலிருக்கும் அனைவரும் பள்ளிக்கூடம் நோக்கிச் செல்கிறோம். பள்ளியில் கல்வி பயின்று புதிய மனிதர்களாக ரசவாதம் பெறவே விரும்புகிறோம். புதிய சமூக விழுமியங்களுடனான மனிதர்களாக மாறும் கனவை நமக்குக் கல்விதான் சாத்தியப்படுத்தியது.

இரண்டாயிரம் ஆண்டுகளாக இங்கே கல்வி ஒரு சிலரின் தனிச்சொத்தாகவே இருந்தது.விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிறப்பின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இழிதொழில்களை விதிவசத்தால் இந்தச் சமூகம் செய்து வந்தது. விதியை மாற்ற முயலுபவர்களின் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊற்றிக்கொண்டே அறம் பாடிய சமூகம்தான் இது. ஈயத்தை ஊற்ற உத்தரவிட்டவர்களும், ஈயத்தைக் காய்ச்சிக் கொடுத்தவர்களும் இணைந்து இந்தச் சமூகத்தின் விதிகளைத் தீர்மானித்தார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனிதாவின் சாம்பலிலிருந்து... - அ.முத்துக்கிருஷ்ணன்இந்த நிலத்தின் சமூக வரலாற்றை ஆழமாக அறிந்துகொண்டாலன்றி இங்குள்ள அடித்தட்டு மக்களின் மீது நிகழ்த்தப்படும் மத/சாதிய/அரச பயங்கரவாதங்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. இங்கே எல்லாமே இரண்டு விதமாகப் பிரித்துவைக்கப்பட்டுள்ளது. உயர்வு-தாழ்வு, தூய்மை-தீட்டு என எதை எடுத்தாலும் அது அனைவரின் கைகளுக்கும் எட்டாத வண்ணம் வரலாறு நெடுகிலும் தொடர்பு எல்லைக்கு வெளியேதான் இருந்து வந்துள்ளது.

கல்வி என்ற ஒன்று இங்கே பிரித்தானியக் காலத்தில் தொடங்கப்பட்ட பிறகும்கூட அது அனைவரின் கைகளுக்கும் எட்ட, நெடுங்காலம் போராட வேண்டியிருந்தது. அனைவருக்கும் கல்வியைக் கொடுத்தால் இந்த நிலத்தின் அறம் பிறழ்ந்துவிடும் என்பது ஒரு கோரிக்கையாகவே அவர்களிடம் முன்வைக்கப்பட்டது. அதன் பின்னும்கூட கல்விக்கூடம் நோக்கிச் சென்றவர்கள் அங்கு சந்தித்த நெருக்கடிகள், அவமானங்கள், துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. இன்றளவும்கூட அது தொடர்கிறது என்பதை அரசுப் பள்ளிகளிலிருந்து ஈரச் சீருடைகளுடன் வீட்டுக்குச் செல்லும் மாணவர்கள் முதல்  தம்பி ரோஹித் வெமூலாவின் சடலம் வரை நமக்குப் புகட்டிக்கொண்டேதான் இருக்கிறது.

மதராஸ் மாகாணத்தில் 96 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவம் படிக்க நீங்கள் சமஸ்கிருதம் அறிந்திருப்பது அவசியம். இதுதான் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை இருந்த யதார்த்த நிலை. ஆங்கில வழியில் கற்றுத்தரப்படும் மருத்துவத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு என்று அதை ஒழித்துக்கட்டினார் பனகல் அரசர். பண்டித அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா என நாம் வரலாற்றுக்குள் பயணித்தால், பஞ்சமர் இலவசப் பள்ளிகள் தொடங்கி இந்த நிலத்தில் நிகழ்ந்த நெடிய சமூக மாற்றத்தின் புள்ளிகளைச் சென்றடையலாம்.

ஆல்காட்டின் பஞ்சமர் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், கல்வியில் சிறந்து விளங்கினார்கள் என்பதை ராஜ்சேகர் பாசு எழுதிய ‘நந்தனாரின் குழந்தைகள்’ நூல் விரிவாக நமக்கு விளக்குகிறது. வாய்ப்புக் கிடைத்தால் எவராலும் வெல்ல முடியும் என்பதே உலகின் வரலாறு. ஆனால், எப்படியெல்லாம் வாய்ப்புகளை மறுப்பது என்பதுதான் இந்தியாவின் வரலாறாக இதுவரை இருந்து வந்துள்ளது.

அனைவருக்கும் கல்வி என்பது அரசாங்கக் கட்டமைப்பின் வழியே மக்களுக்குச் சென்றடையும் காலம் நெருங்கும்போதுதான் ராஜாஜி ‘குலக்கல்வி முறை’ என்றார். பெரியார் அதற்கு ஆற்றிய எதிர்வினையை இன்று நவீன கல்வி கற்கும் எல்லா மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்காததே பிந்தைய அரசுகள் செய்த வரலாற்று துரோகம். ஒரு சமூகத்திற்குக் கல்வியைக் கொடுப்பதின் வழியேதான் அவர்கள் அதிகாரம் பெற முடியும். கல்வி கற்றால்தான் சாதியத்தின் இழிவுகளிலிருந்து அவர்கள் வெளியேற முடியும். சாதிய வன்கொடுமை செய்யப்படுகிற நிலத்திலிருந்து ஒரு குடும்பம் இடம் பெயர கல்விதான் கடவுச்சொல்.

அனைவருக்கும் கல்வி என்கிற நடைமுறை வந்த நாள் முதலே அதுவரை கல்வியைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள் கல்வி குறித்த ‘தரமான’ வதந்திகளை உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள். அனைவருக்கும் கல்வி கொடுத்தல் வேதங்களுக்கு எதிரானது. அனைவருக்கும் கல்வி கொடுத்தால் அதன் தரம் குறைந்துவிடும் என்பதாகக் கல்வி குறித்த எல்லா வதந்திகளையும் அவர்கள் தங்கள் மூளைகளிலிருந்து மெள்ள சாதியக் கட்டுமானத்தின் ஒவ்வொரு அடுக்காக மேலிருந்து கீழாகக் கடத்தினார்கள்.  கல்வியை ஜனநாயகப்படுத்துவது அவர்களின் அதிகாரத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். இதற்காகவே பார்ப்பனர்கள் தங்களால் மூளைச் சலவை செய்யப்பட்ட நவ பார்ப்பனர்களை உருவாக்கினார்கள்.

பார்ப்பனர்கள் தங்களின் மனதிலிருக்கும் அச்சத்தை சாதியக் கட்டமைப்பின் பிற அடுக்குகளுக்குள் பரவவிட்டார்கள். அதன்படி நாம் கல்வி கற்கலாம், அதிகாரத்தை அடையலாம். ஆனால், நமக்குக் கீழே இருக்கும் சாதியினர் அதை அடையவிடக் கூடாது. நமக்கும் கீழானவன் நம்முடன் சமதையாக வாழ்வதா என்கிற ஒற்றை வைரஸை அனைவரின் மனதிலும் விதைத்தார்கள். இந்து மதத்தின் சூத்திரமே  தனக்கு மேலானவனிடம் கூழைக்கும்பிடு போடுவதும் தனக்குக் கீழானவனை மிதிப்பதும்தானே.    

அனிதாவின் சாம்பலிலிருந்து... - அ.முத்துக்கிருஷ்ணன்

சுதந்திரம் பெற்ற பிறகு மெள்ள மெள்ள அடித்தட்டுச் சமூகங்கள் கல்விப்புலங்களுள் நுழைந்தார்கள். 1947-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றபோது 12 சதவிகிதமாக இருந்த இந்தியப் படிப்பறிவு 2011-ம் ஆண்டில் 74.04 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. காலம்காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அரசு வேலைகளில் பிரதிநிதித்துவம் அளிக்கும் விதமாக வேலைகளில் முன்னுரிமை வழங்கப்பட்டது. மக்கள்தொகைக்கு ஏற்ப எல்லாத் தளங்களிலும் எல்லாச் சாதியினருக்கும் வேலைவாய்ப்பைப் பிரித்தளிப்பதுதான் ஏற்பாடு. ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்ப இன்றும் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள் இன்னும் அரசின் கட்டுமானத்திற்குள்  நுழைந்தபாடில்லை. உச்ச நீதிமன்றத்தின், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், எத்தனை எத்தனை வகைகளில் இந்த நிலத்தின் மக்கள் வளர்ச்சியிலிருந்து தடுக்கப்பட்டார்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது.

இந்தப் பிரதிநிதித்துவம் என்பதைத்தான் ஏதோ ஒரு சலுகை, இடஒதுக்கீடு என்று பல வகையாகக் கொச்சைப்படுத்தி, அதைப் பெறுவது அவமானம் என்பதைப்போல் சித்திரிக்கிறார்கள். படிக்காமலேயே தங்களின் சாதியை வைத்து இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்விக்கூடங்களுள் நுழைகிறார்கள் என்கிற ஒரு வதந்தியை இன்றுவரை பரப்பி வருகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் 35 மதிப்பெண் வாங்கினால் போதும், ஆனால், நாங்கள் 100 மதிப்பெண் வாங்கினாலும் எங்களுக்குப் படிக்க இடம் கிடைப்பதில்லை என்பதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். இது காலம்காலமாகச் சொல்லப்படுகிற   வடிகட்டிய பொய்.

2016-ம் ஆண்டு மருத்துவக் கல்விக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை ஒரு சுற்றுப் பார்த்தாலே விஷயம் புரியும். தாழ்த்தப்பட்ட வகுப்பு 191.75, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு 196, பிற்படுத்தப்பட்ட வகுப்பு 197.25, இதர வகுப்பினர் 198. 191-க்கும் 198-க்கும் அப்படி என்ன மலைக்கும் மடுவுக்குமான தகுதிக் குறைபாடு வந்துவிடப்போகிறது.

அனிதாவும் மதிப்பெண் வாங்காமல் சலுகை அடிப்படையில் மருத்துவப் படிப்பு இடம் கோரியவள் என்பதாக வாய் கூசாமல் பேசுகிறார்கள். 1200-க்கு 24 மதிப்பெண்கள் மட்டுமே குறைவாகப் பெற்றாள். இரண்டு பாடங்களில் 200-க்கு 200. அவளது கட்-ஆஃப் மதிப்பெண் 196.75. அவளுக்கு நிச்சயம் மருத்துவக் கல்லூரியில் தகுதியின் அடிப்படையில் இடம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தரம் தரம் என நிரந்தரமாகக் கத்துபவர்களின் வடிவமைப்பான ‘நீட்’ எனும் கொடுங்கோலன் அனிதாவின் கனவைக் காவு வாங்கினான். 

அனிதாவின் சாம்பலிலிருந்து... - அ.முத்துக்கிருஷ்ணன்

அனிதாவிற்குத் துளியும் பரிச்சயம் இல்லாத பாடத்திட்டத்திலிருந்து வடிவமைக்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு அவளது உயிரைப் பறித்தார்கள். சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்திலிருந்து கேள்வி கேட்டார்கள். இவர் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர். இந்த இரண்டு பாடப்புத்தகங்களும் வேறு வேறானவை. இதே மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்டிருந்தால், சி.பி.எஸ்.சி. மாணவர்கள் இதே தோல்வியைச் சந்தித்திருப்பார்கள். பலவிதமான பாடத்திட்டங்கள் உள்ள ஒரு சமூகத்தில் எப்படி நுழைவுத்தேர்வு மட்டும் ஒன்றாக இருக்க முடியும்?

அது மட்டுமல்ல; நீட் தேர்வு எழுதிய நாளில் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதைக் கொஞ்சம் பின்னோக்கிச் சென்று பாருங்கள். இந்தப் பரீட்சையை எழுதவந்த மாணவர்கள் எத்தனை விதமான மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.  மாணவ-மாணவிகளின் உடைகள், மூக்குத்தி, கம்மல் தொடங்கி உள்ளாடைகள் வரை கழற்றச் சொன்ன வரலாறு இந்த உலகில் வேறு எந்த நுழைவுத்தேர்விலும் நடைபெற்றிருக்க இயலாது. இத்தனை சித்ரவதைகளைத் தாண்டிதான் அனிதாவும் இந்த நீட் தேர்வை எழுதியிருப்பாள். பொது நுழைவுத்தேர்வு என்கிறபோது குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு ஒரு கேள்வித்தாளிலும் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் வேறு கேள்வித்தாளிலும் தேர்வு நடத்தியது ஏன்? இதுதான் பொதுத்தேர்வா? வடக்கே தேர்வு அறைக்குச் செல்ல இங்குபோல் கட்டுப்பாடுகள் இல்லை என்பதை அன்றே ஊடகங்கள் ஒப்பிட்டு அம்பலப்படுத்தின. நீட் பரீட்சையில் நமது கிராமப்புற மாணவர்கள் பின்தங்கியதற்கு மற்றுமொரு காரணம், negative marks எனும் முறை, இதனால் நீங்கள் விடையைத் தவறாக எழுதினால் உங்கள் மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்கிற இந்த நடைமுறையை கோச்சிங் சென்டர்களுக்குச் செல்லாத கிராமப்புற மாணவர்கள் அறிந்திருக்கக்கூட வாய்ப்பில்லை. இந்தத் தந்திரமான நடைமுறைகள் அம்பலமானபோதும் இதை விசாரிக்க இந்தியாவிலுள்ள எந்த நீதிமன்றமும் முன்வரவில்லை.

1976 நெருக்கடி நிலை காலகட்டத்தில் மாநிலங்களின் பட்டியலில் இருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குக் (concurrent list) கொண்டு சென்று கூட்டாட்சிக்கு எதிரான பெருங்தீங்கைச் செய்தது காங்கிரஸ். அதன் பின்னர் உலகமயம், தாராளமயம் என்று தொடங்கிக் கல்வியில் தனியார்மயம் என்கிற தலைகீழ்த் திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறது தேசம். உலகம் முழுவதும் பள்ளிக்கல்வி என்பது தரமானதாக இலவசமானதாக இருக்க, இத்தனை ஏற்றத்தாழ்வுகள் உள்ள இந்தியாவில் எப்படித் தனியார் கையில் கல்வியை முற்றாகக் கொடுக்க முடியும்?  

இந்த மாற்றங்களின் வழியே மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய அளவில் ஒரே தேர்வு முறை என்கிற உரையாடல்கள் தொடங்கின. 1984-ல் எம்.ஜி.ஆர் நுழைவுத்தேர்வைக் கொண்டு வந்தார். 2005-ல் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அது ரத்து செய்யப்பட்டது. ஆனால், மீண்டும் நீதிமன்றம் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது செல்லாது என்று அறிவித்தது. 2006-ல் கலைஞர் அரசு, முறையாக ஆய்வுசெய்து நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்கான சட்டத்தை இயற்றியது. 2004-2005 ஆண்டுகளில் ஐந்து லட்சம் பேர் 12-ம் வகுப்புத் தேர்வு எழுதினார்கள். அதில் 2,10,000 பேர் கிராமப்புற மாணவர்கள். அவர்களில் 227 பேருக்கு மட்டும்தான் மருத்துவம் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது என்கிற புள்ளி விவரங்களின் அடிப்படையில்தான் இந்த நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

2013-ல் மருத்துவ கவுன்சில் கொண்டுவர முயன்ற, நாடு முழுவதற்குமான ஒற்றைத் தேர்வு முறையை எதிர்த்து 115 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளை ஒருசேர விசாரித்த நீதிபதிகளின் அமர்வு, நுழைவுத்தேர்வு சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்தது. மத்தியில் பா.ஜ.க அரசு பதவியேற்றதும் இந்த வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துச் சென்றது. இந்த வழக்கின் விசாரணையில்கூட பல நீதிமன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் இப்போது வெளியாகியுள்ளன. ஏற்கெனவே  ‘நுழைவுத்தேர்வு வேண்டும்’ என்று மைனாரிட்டி தீர்ப்பு வழங்கிய ஒரு நீதிபதி தலைமையில் மீண்டும் விசாரணை நடைபெற்றது எந்த வகையில் சரியானது என்று சட்ட வல்லுநர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

அனிதாவின் சாம்பலிலிருந்து... - அ.முத்துக்கிருஷ்ணன்ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சமச்சீர் கல்வி முறைக்கு சமாதி கட்ட முயன்றார். ஆனால், உச்ச நீதிமன்றம் தலையிட்டதால், அவரால் தடைசெய்ய இயலவில்லை. இருப்பினும், சமச்சீர் கல்வி முறை தரமற்றது என்கிற ஒரு பிரசாரம் திட்டமிட்டுக் கட்டமைக்கப் பட்டது. ஏற்கெனவே லாபத்தைக் குறிக்கோளாகக்கொண்டு நடத்தப்படும் தனியார் பள்ளிகள், அரசாங்கப் பள்ளிகளில் நடத்தப்படும் சமச்சீர் கல்வியைக் கொண்டு தங்களால் கல்லா கட்ட முடியவில்லை என்பதால், மெள்ள சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி. பாடத்திட்டம் நோக்கி நகரத் தொடங்கின. ஜெயலலிதா இருந்தவரை அவர் தொடர்ந்து நீட்டுக்கு எதிராகப் பேசியும் போராடியும் வந்தார். ஆனால், அவர் இறந்து அவரது இடத்தில்  முதுகெலும்பு இல்லாத அரசு பதவியேற்றதும் புறவாசல் வழியாக நீட்டை உயிர்ப்பிக்கும் வேலைகளில் களம் கண்டது பா.ஜ.க. அரசு. ஜெயலலிதா பின்பற்றிய கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்திற்கு இந்த ஆண்டு விலக்கு அளிக்கப்படும் என்று எடப்பாடி முதல் நிர்மலா சீத்தாராமன் வரை பொய் வாக்குறுதிகள் கொடுத்து மாணவர்களின் எதிர்காலத்துடன் சூதாடினார்கள். அதே வேளையில் இந்த நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்குக் கேட்பது, ஏதோ பெரும் குற்றம்போல் பலர் சித்திரித்து வந்தபோதிலும், இதே நீட்டிலிருந்து ஜிப்மர், ஐம்ஸ் மற்றும் பி.ஜி.ஐ. ஆகிய இந்தியாவின் மருத்துவ உயர்கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்கிற செய்தியையே மறைத்து வந்தார்கள். 

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மட்டும் தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவ இருக்கைகளை 1974-ல் தனிச் சட்டத்தை இயற்றி 371-ம் சட்டத் திருத்தத்தின் வழியே  பாதுகாத்துக்கொண்டார்கள். நாகாலாந்து, காஷ்மீர் எனப் பலரும் தங்களைப் பாதுகாத்துக்கொண்டனர். சத்தீஸ்கர் மாநிலம் தனக்கான தனி நுழைவுத்தேர்வை நடத்தியது. மொத்த இந்தியாவிற்கும் ஒரே தேர்வு என்கிற இவர்களின் கோஷமே பொய்யானது என்பது மெள்ள மெள்ள அம்பலமானது.

ஒரு தேசத்தில் கல்விக்கூடங்கள், பாடத்திட்டங்கள், அடிப்படைக் கட்டமைப்பு, ஆசிரியர்களின் கற்பிக்கும் முறைகள், கருவிகள் என எதுவும் சமமாக இல்லை. ஆனால், நாங்கள் நுழைவுத் தேர்வை மட்டும் ஒன்றுபோல் நடத்துவோம் என்பது பச்சைத் துரோகம் இல்லையா? இன்னும்கூட கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களைக்கூட ஒன்றுபோல் நாம் வடிவமைக்கவில்லை. எதையும் இவர்கள் செய்ய ஏன் முனையவில்லை அல்லது இவற்றைச் சமனற்றதாக வைத்திருப்பதே இவர்களின் தந்திரமா?

இந்திய மருத்துவ கவுன்சில், மருத்துவக் கல்வியில் பாடத்திட்டங்கள் மற்றும் மருத்துவர்களின் தொழில் நடத்தையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் பெற்றது. மாணவர் சேர்க்கை விவகாரத்தில் அவர்கள் தலையிட முடியாது. அதற்குச் சட்டம் இடம் தரவில்லை. இந்தச் சூழலில்தான் சட்டத்திருத்தத்தின் மூலம் பிரிவு சேர்க்கப்பட்டு மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடுகிறது என்கிற நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்களின் வாதத்தை நாம்  கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் என்கிற மத்திய அரசின் நிறுவனமே ஊழல் மலிந்த ஒரு நிறுவனம்தான். அதன் தலைவராக இருந்த கேதன் தேசாய், இந்திய அரசியல்வாதிகளைப்போல் ஆயிரம் கோடிகள் பணத்தோடும் கிலோ கணக்கான தங்க நகைகளோடும் பிடிபட்டச் செய்திகள் உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். இந்த கவுன்சிலின் ஆசீர்வாதத்துடன்தான் இந்திய அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள் பலர் புற்றீசல்போல் மருத்துவக் கல்லூரிகளை நிறுவியிருக்கிறார்கள். இன்று இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பாதி தனியாரின் கைகளில் உள்ளது. இவர்கள் கோடிகளில் ஒரு மருத்துவ இளங்கலை இருக்கையை விற்கிறார்கள் என்றால், முதுகலை இருக்கைகளை எத்தனை கோடிகளுக்கு விற்பார்கள் என்பதை நீங்கள் யூகித்துக்கொள்ளுங்கள்.

மருத்துவப் படிப்பிற்கான இருக்கைகள் ஆன்லைன் ஏலத்திற்கு விடப்படும் காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வுகளை முறைப்படுத்தி இந்தக் கட்டணக் கொள்ளையிலிருந்து மாணவர்களைக் காப்பாற்றவே நீட் என்று மத்திய அரசு ஒரு வாதத்தை முன்வைத்து வருகிறது. CBSEதான் நீட் தேர்வை நடத்துகிறது, மத்திய அரசின் CBSE, அமெரிக்க நிறுவனமான ப்ரோமெட்ரிக் டெஸ்டிங் (Prometric Testing Inc, USA)-உடன் இணைந்து ஏன் இந்தத் தேர்வை நடத்த வேண்டும்? மத்தியத் தேர்வாணையம் என்கிற இந்திய நிறுவனம் இருக்கும்போது ஏன் அமெரிக்காவின் நிறுவனம் ஒன்று இந்தத் தேர்வை நடத்த வேண்டும்?

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களை நிரப்பிய பிறகுதான் அரசு சாரா மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால், அப்படி எந்த முறைப்படுத்துதல்களும் ஏன் முன் வைக்கப்படவில்லை? இனியாவது நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயிக்குமா?  கிராமப்புற, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மொத்த மருத்துவ இடங்களில் 50 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவருமா? நீட் நுழைவுத் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வாகவும் உள்ளது. இந்தக் குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். நீட் ஒரு பொது நுழைவுத் தேர்வாக மட்டும் இருந்தால் போதுமானது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், ராணுவ மருத்துவக் கல்லூரிகள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் என இவையெல்லாம் நீட்டின் கீழ் ஏன் இன்னும் கொண்டுவரப்படவில்லை? இவை ஒருபோதும் நீட்டிற்குள் வராது என்பதுதானே உண்மை.

இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவ  இடங்கள் 52,965. இதில், தென் மாநிலங்களில் (தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி) மட்டும் 24,130 மருத்துவ இடங்கள். அதாவது, இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவ இடங்களில் தென் மாநிலங்களில் (நான்கு மாநிலங்களில்) மட்டும் 46 சதவிகிதம் உள்ளது. 

இவைவற்றை எல்லாம் இணைத்துப் பார்த்தால், தமிழகத்திலுள்ள கிராமப்புற மாணவர்கள் நீட்டின் இந்தக் கொடிய பற்களைக் கடந்து, ஒரு மருத்துவ இருக்கை நோக்கிச் செல்வது கடினமான காரியம். CBSE படித்தால் மட்டும் போதாது; நீங்கள் பெருநகரங்களில் உள்ள நீட் கோச்சிங் சென்டர்களில் பயின்றாலன்றி இந்தத் தேர்வைச் சந்திக்க முடியாது. நீட் கோச்சிங் சென்டர்கள் எனும் புதிய மாஃபியாக்களின் கொள்ளைக் கட்டணம் என்ன என்பதை இணையத்தில் நீங்கள் தேடினால் எளிதில் காணலாம். இந்த மாஃபியாக்களின் கட்டணத்தை யார் நிர்ணயம் செய்வது? இந்தக் கட்டணங்களை ஓர் ஏழை மாணவர் எப்படிக் கட்ட முடியும்? முதலில் ப்ளஸ் ஒன் வகுப்புகளைப் பள்ளிகளில் யாரும் நடத்துவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன,  இன்று மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று விசாரித்தால்,  `இப்போது ப்ளஸ் டூ வகுப்புகளும் நாங்கள் எடுக்கவில்லை. அந்த மதிப்பெண்கள் தேவையும் இல்லை. நாங்கள் முற்றாக மாணவர்களை நீட் தேர்வுக்குத்தான்  தயார் செய்கிறோம்’ என்கிறார்கள். இது முன்னேற்றமா அல்லது கடுமையான பின்னடைவா?

இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவதுதான் இன்று அரசு செய்துவரும் தலையாய வேலை. சுகாதாரத் துறையில் அந்நிய நிதியை அனுமதித்து அந்நியர்களுக்கான மைதானத்தைத் தயார்செய்ய வேண்டும் என்றால், முதல்கட்டமாக  இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அரசு நடத்தும் ஆரம்பச் சுகாதார நிலையங்களை மூட வேண்டும். அரசு நடத்தும் பெரிய பொது மருத்துவமனைகளில் வார்டுகளைத் தனியாருக்குக் கொடுக்க இப்போதே தொடங்கிவிட்டார்கள். இதுதான் தேசம் செல்லும் திசை. இந்தப் பயணத்தின் ஒரு திருப்பம்தான் நீட்.

மெள்ள மெள்ள, புதிய புதிய கொள்கைகளின் வழியே இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதியானவர்களை எல்லாவற்றிலிருந்தும் விலக்கிவைக்கவே ஓர் அரசு முனைகிறது. ஒதுக்கீடுகளுக்கு அப்பாற்பட்டவை என்று இன்றும்கூட இந்தியாவின் ஏராளமான வலிமை மிகுந்த உயர் கல்விக்கூடங்கள், நிறுவனங்கள், அதிகார வர்க்கப் பதவிகள், பாதுகாப்பாக ஒரு சிலரின் தொடர்பு எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை இன்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இது ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் தீண்டாமை இல்லையா?

`சொந்த அறிவு சமஸ்கிருதத்தில்தான் இருக்கிறது; சமஸ்கிருதமும், இந்தியக் கலாசாரமும் பின்னிப் பிணைந்தது. மத்திய அரசுப் பள்ளிகள் சமஸ்கிருத வாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என CBSE பள்ளிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து சுற்றறிக்கையை அனுப்பிவருகிறது. ஆசிரியர் தினத்தை ‘குரு உத்சவ்’ எனப் பெயர் மாற்ற முனைந்துவருகிறது. `சமஸ்கிருதம் இந்த நாட்டின் மொழியாகும்; ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, எல்லாமே சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுவிட்டது’ என்கிறார் அசோக் சிங்கால். இப்படியாக மொழியின் வழியே அடுத்தகட்ட தாக்குதலைத் தொடுக்கத் தயாராகி வருகிறது பா.ஜ.க. அரசு. இந்தப் பட்டியலில் கேந்திரிய வித்யாலயாவை அடுத்து நவோதயா பள்ளிகளையும் மாவட்டம் தோறும் திறக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

‘`அனிதாவால் எப்படி டெல்லிக்குப் போய் வழக்குப் போட முடிந்தது?’’ என்று கேள்வி எழுப்புகிறவர்கள், ‘நீட் வேண்டும்’ என்று அதே நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடிய ‘ஏழைக் குடும்பங்கள்’ எப்படி கோடிக்கணக்கில் கட்டணமாக வாங்கும்  வழக்கறிஞர்களை வாதாட அமர்த்தினார்கள் என்பதைக் கேட்க மறுத்தார்கள். காலம்காலமாக எளியவர்களுக்கு நியாயம் மறுக்கப்பட்டுள்ளது. அவ்வாறுதான், மருத்துவம் அனிதாவின் கைகளுக்கு எட்டாத வண்ணம், நீட் எனும் தீண்டாமைக் கருவியால் பறிக்கப்பட்டது.

``அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூக நீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றை தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய, ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த வளர்ச்சியும் எட்டிப்பார்க்காத வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மாணவன், எல்லா செளகரியங்களையும் பெற்ற டெல்லி, சென்னை, பெங்களூரு மாணவனுடன் எப்படிப் போட்டிபோட இயலும்? இருவரும் ஒரே தேர்வு எழுத வேண்டும் என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா? அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதிலுள்ள ஷரத்துகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள் செய்து வருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு’’ என்கிறார் பேராசிரியர் அனில் சடகோபால்.

பாபாசாகேப் அம்பேத்கரின் ‘Voice of America’ உரைகளில் அவர் இன்னும் துல்லியமாக இந்தச் சமூகத்தில் யாருக்குக் கல்வி அவசியம் என்பதைப் பற்றிப் பேசுகிறார். இந்தச் சமூகத்தின் எந்தப் பகுதி மக்களுக்குக் கல்வி வழங்கினால் அவர்கள் சாதி ஒழிப்பில் ஈடுபடுவார்கள், எந்தப் பகுதி மக்களுக்கு மேலும் மேலும் கல்வியைக் கொடுத்தால் அவர்கள் சாதியை இன்னும் பலமாகக் கட்டமைப்பார்கள் என்பது குறித்து மிக விரிவாக விளக்கியிருக்கிறார். சாதி ஒழியாமல் இந்தச் சமூகத்தில் சமத்துவம் சாத்தியமில்லை என்பதை அம்பேத்கர் பல வழிகளில் சொல்லிவந்தார். நமது இன்றைய தலையாய வேலை, தலித்களுக்கு, பழங்குடிகளுக்கு, பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கல்வியைக் கொண்டு சேர்ப்பதாகவே இருக்க வேண்டும்.

ஓர் அரசு, தன் பொறுப்பை நிறைவேற்றாமல் மக்களுக்கு எதிராகக் தொடுக்கும் பயங்கரவாதத்தின் விளைவால் மற்றுமொரு உயிர் பலியாகியுள்ளது. உலகமயம், தனியார்மயம் என்கிற திசையே எல்லாப் பிரதிநிதித்துவங் களுக்கும் எதிரானதுதான். முற்றாக இந்த நிலத்தில் வாழும் எளியவர்களைப் புறக்கணித்துவிட்டு எதைச் சாதிக்கப்போகிறது இந்தத் தேசம்? 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism