Published:Updated:

1989 முதல் 2018 வரை.. அழகிரியின் அரசியலும், திக்குமுக்காடும் நிலவரமும்!

1989 முதல் 2018 வரை.. அழகிரியின் அரசியலும், திக்குமுக்காடும் நிலவரமும்!
1989 முதல் 2018 வரை.. அழகிரியின் அரசியலும், திக்குமுக்காடும் நிலவரமும்!

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார தென்மாவட்டங்களில் 1994-ம் ஆண்டுக்குப் பிறகு, தி.மு.க-வில் அவர் வைத்ததே சட்டம் என்கிற அளவுக்கு அழகிரியின் அதிகாரம் சென்றது.  அவர் கைகாட்டும் ஆளுக்குத்தான் கட்சிப் பதவி கிடைத்தது; தேர்தலில் நிற்க சீட் கொடுக்கப்பட்டது.

தி.மு.க-வில் முக்கியப் பதவி வகித்து, மத்திய அமைச்சராகவும் இருந்த மு.க.அழகிரியை `அஞ்சா நெஞ்சன்' என்று வாஞ்சையோடு கருணாநிதி அழைத்ததும் உண்டு. முரசொலி பத்திரிகையைக் கவனிப்பதற்காக 1979-ம் ஆண்டு மதுரை மண்ணில் காலடி எடுத்து வைத்தார். ஆனாலும், 1989-ம் ஆண்டிலிருந்துதான் மதுரையில் அவர் கோலோச்ச ஆரம்பித்தார். மனக்கசப்பு ஏற்பட்டு தி.மு.க-வுக்கு எதிராக, வைகோ களம் கண்டபோது, மு.க.அழகிரி மதுரை மண்டலத்தில் கட்சியினரைச் சந்தித்து தொடர்ந்து தி.மு.க-விலேயே தக்கவைக்கும் பணியில் முக்கியப் பங்காற்றினார். இதையடுத்து, கட்சியில் அதிகார மையமாக மெள்ள மெள்ள உருமாறினார். 

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார தென்மாவட்டங்களில் 1994-ம் ஆண்டுக்குப் பிறகு, தி.மு.க-வில் அவர் வைத்ததே சட்டம் என்கிற அளவுக்கு அழகிரியின் அதிகாரம் சென்றது.  அவர் கைகாட்டும் ஆளுக்குத்தான் கட்சிப் பதவி கிடைத்தது; தேர்தலில் நிற்க சீட் கொடுக்கப்பட்டது. அழகிரி ஆதரவாளர்கள் சிலர் அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர். கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமலேயே, தென் மாவட்ட தி.மு.க-வில் அதிகார மையமாகச் செயல்பட்டார். இந்நிலையில்தான், கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில், அதுவரை தமிழகம் கண்டிராத புதிய ஃபார்முலாவை நிறைவேற்றி, தி.மு.க-வுக்கு வெற்றி தேடித்தந்தார். அதன் பிறகு அவர் அதிகார மையத்தின் உச்சத்துக்குச் சென்றார் எனலாம்.  

திருமங்கலம் வெற்றிக்குப் பரிசாக, கட்சியில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அழகிரிக்கு வழங்கப்பட்டது. அதுவரை கட்சித் தொண்டர்களால் மட்டுமே `அஞ்சா நெஞ்சன்' என்று புகழப்பட்ட அழகிரியை, மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவராக இருந்த மறைந்த கருணாநிதியே, `அஞ்சா நெஞ்சன் அழகிரி' என்று புகழ்ந்து பேசினார். தென் மாவட்டங்களில் பெரும்பாலான தி.மு.க. நிர்வாகிகள், அழகிரி பக்கம் இருக்க, ஒருசில நிர்வாகிகள் மட்டுமே ஸ்டாலின் அணியில் இருந்தனர். பின்னர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மதுரை தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் ஆனார். 

இந்த நிலையில் 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்று முதல்வர் ஆனதும், உள்ளூர் அரசியலிலிருந்து படிப்படியாக ஒதுங்கி, மத்திய அமைச்சர் பதவியில் மட்டும் பிஸியாக இருந்தார். இந்த நேரத்தில்தான், மகன் துரை தயாநிதி மீது கிரானைட் முறைகேடு வழக்கு தொடர்ந்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு. இதையடுத்து, அழகிரி ஆதரவாளர்கள் போலீஸ் நடவடிக்கைகளுக்கு பயந்து தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கினர். மதுரையில் தி.மு.க. ஆட்டம்காண ஆரம்பித்தது. 

அதன்பின்னர், 2013-ம் ஆண்டு, மத்திய அமைச்சர் பதவியை மு.க.அழகிரி ராஜினாமா செய்ததும், கட்சிப் பணிகளில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களோடு அழகிரியின் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடைந்தது. மு.க.அழகிரி முற்றிலுமாக தி.மு.க-விலிருந்து ஓரங்கட்டப்பட்டார். மதுரை மாநகர் தி.மு.க கட்சி நிர்வாகம் முற்றிலுமாகக் கலைக்கப்பட்டு, ஸ்டாலின் ஆதரவாளர்கள் பதவிக்குக் கொண்டுவரப்பட்டனர். அழகிரியையும் கருணாநிதி கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். அதன்பின்னர், அழகிரிக்கு இறங்குமுகம்தான். இதனால் மு.க.ஸ்டாலின் கை ஓங்கியது.

இதற்கிடையில் 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், தி.மு.க. 89 இடங்களைப் பிடித்தபோதிலும், ஆட்சியைப் பிடிக்கமுடியவில்லை. இதையடுத்து கருணாநிதி உடல் நலம் குன்றி, கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்தார். தி.மு.க செயல் தலைவரானார் ஸ்டாலின். முழுக்க முழுக்க கட்சி நிர்வாகம் அனைத்தும் ஸ்டாலின் கைக்கு வந்தது. இப்போது, கருணாநிதி மரணத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரி மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பேட்டி அளித்த மு.க.அழகிரி, ``எனது ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்து விட்டேன்'' என்று கூறினார். ரஜினி, பி.ஜே.பி ஆதரவாளர்கள், அழகிரியைப் பின்னாலிருந்து இயக்குகிறார்கள் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இதை அடியோடு மறுத்துள்ளார் அழகிரி. 

இந்நிலையில், ஆகஸ்ட்  28-ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். செப்டம்பர் 5-ம் தேதி, கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதிப் பேரணியை நடத்தப்போவதாக மு.க.அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.அழகிரி அளித்த பேட்டியில், ``சென்னையில் செப்டம்பர் 5-ம் தேதி நடத்தும் அமைதிப் பேரணியில் கட்சித் தொண்டர்கள், யார் பக்கம் உள்ளார்கள் என்பதை நிரூபிப்பேன்'' என்று கூறினார். இப்படி, அழகிரி அரசியல் நகர்வுகளை மேற்கொண்டாலும் கட்சியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து விட்டார். சென்னை அமைதிப் பேரணிக்கு தனது ஆதரவாளர்களைத் திரட்டும் வேலைகளில் அழகிரி இறங்கியுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் ஆட்கள் அதற்கு செக் வைக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள். `நீயா.. நானா..?' என்று அண்ணன் தம்பி இருவரும் களம் இறங்கியிருப்பதை ஆளும் அ.தி.மு.க உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு