Published:Updated:

``நேர்மையா இருக்கிறது அவ்ளோ குத்தமா?!" உதயசந்திரனுக்காக ஆசிரியர்கள் ஆதங்கம்

"உதயசந்திரன் சார் இடமாற்றம் செய்திருக்கிறதுக்குக் காரணத்தை என்னால வெளிப்படையா சொல்ல முடியாது. ஆனால், அவர்மேல பெரிய காழ்ப்பு உணர்ச்சி அதிகார வர்க்கத்துக்கு இருந்தது."

``நேர்மையா இருக்கிறது அவ்ளோ குத்தமா?!"  உதயசந்திரனுக்காக ஆசிரியர்கள் ஆதங்கம்
``நேர்மையா இருக்கிறது அவ்ளோ குத்தமா?!" உதயசந்திரனுக்காக ஆசிரியர்கள் ஆதங்கம்

மிழகத்தில் இருபத்து நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயசந்திரனும் ஒருவர். அவரை மட்டும் அடிக்கோடிடுவதற்குக் காரணம் இருக்கிறது. அவர் அவ்வப்போது இடமாற்றத்துக்கு உள்ளாகி வரும் அதிகாரி என்பது அனைவரும் அறிந்ததே. அது ஒரு புறம் இருக்க, தமிழகக் கல்வித் துறையில் பாடநூல் தயாரிப்புப் பணியின் தலைமை அதிகாரியாக அவர் செயல்பட்டு வந்தார். அந்தப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். பாடத்திட்ட உருவாக்கத்தில் அவருடன் பணிபுரிந்த சக ஆசிரியர்களிடம் இதுகுறித்துப் பேசினேன். அவரின் இடமாற்றம் இந்தச் சூழலில் ஏன் மிகப்பெரிய இழப்பு, பின்னடைவு, அவர் ஏன் இடமாற்றம் செய்யப்பட்டார் என்கிற காரணிகளைப் பற்றிப் பேசினார்கள். தங்களுடைய அடையாளங்கள் தெரிய வேண்டாம் என்கிற கோரிக்கையுடன் அவர்கள் தங்கள் ஆதங்கத்தை முன்வைத்தனர்.

``ஒரு சின்ன கிராமத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆசிரியனான என்னை இனங்கண்டு, தமிழகப் பாடத்திட்ட உருவாக்கப் பணியில் கொண்டுவந்தார் உதயசந்திரன் சார். நாம வேலை பார்க்கிற துறையில் இருக்கும் ஓர் உயர் அதிகாரியை அவ்வளவு சீக்கிரம் நாம பார்த்துப் பேசுற வாய்ப்புக் கிடைக்காது. அதுவும் அரசுத் துறை இயங்குற விதம் எல்லாருக்குமே தெரியும். ஆனா, இடைநிலை ஆசிரியர் முதற்கொண்டு, கடைநிலை ஊழியர் வரை தன்னுடைய கருத்தை எப்போ வேணும்னாலும் சார்கிட்ட வந்து சொல்லலாம். காது கொடுத்துக் கேட்பார். அவருடைய யோசனை எப்பவும் குழந்தைகளைப் பற்றிதான் இருக்கும். குறிப்பாக, தமிழ்வழிக் கல்வி பயிலும் குழந்தைகளின் முன்னேற்றம் சார்ந்துதான் அதிகம் சிந்திப்பார். அவங்களுக்கு ஏதும் புரியாமப் போயிடக் கூடாதுன்னு ரொம்பக் கவனமாப் பாடங்களைத் தயாரிப்பாரு. அதேநேரம் ஆங்கிலக் கல்வி பயில்கிற குழந்தைகளின் அறிவுத் திறனுடன் போட்டி போடுகிற மாதிரிதான் அந்தத் தயாரிப்பு இருக்கும். 1,6,9,11 இந்த வகுப்புகளுக்குத்தான் இப்போவரைக்கும் பாடத்திட்டமே முடிஞ்சு இருக்கு. இன்னும் 10, 12 உட்பட மீதம் இருக்கிற வகுப்புகளுக்குப் பாடங்களை உருவாக்கவே இல்லை. அதுக்குள்ள அவரை இடமாற்றம் செஞ்சுட்டாங்க. என்ன நடக்கப்போகுதுன்னே தெரியல. இனி, இங்க வேலை செய்யவும் பிடிக்கல. அவர் கூப்பிட்டாருன்னுதான் வந்தேன். கிராமத்துக்கே போயிடலாம்னு பார்க்குறேன்" என்றார் ஓர் ஆசிரியர். 

``எங்க சாரை, இப்போ கல்வித் துறையிலிருந்து தொல்லியல் துறைக்கு மாத்தியிருக்காங்க. அழிவின் விளிம்பில் இருக்குற எந்தத் துறைக்கு அவர் போனாலும் அதைச் சிறந்த துறையா மாத்திடுவாரு. அவரைப் புதுசா இடமாற்றம் செய்திருக்கிற தொல்லியல் துறையிலாவது சுதந்திரமாகச் செயல்பட விட்டா நம்முடைய தொன்மங்களை மீட்டெடுப்பார். அதில எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனா, மற்ற துறைகளைவிட கல்வித் துறை எவ்வளவு முக்கியம். அதுல மேலும் பல மாற்றங்களும், சாதனைகளும் செய்ய இருந்த அவரை இப்படிப் பந்தாடுறது எந்த வகையில சார் நியாயம். நேர்மையா இருக்குறது அவ்வளவு பெரிய குத்தமா சார்" என்று அமைதியாக ஆரம்பித்து ஆதங்கத்துடன் முடித்தார் இன்னோர் ஆசிரியர். 

``பாடத்திட்டம் முழுமையாக நிறைவேறாம இருக்குற இந்தச் சூழ்நிலையில சாரை இடமாற்றம் செய்திருக்கிறது மிகப்பெரிய தவறுங்க. இன்னோர் அதிகாரி வந்து இதை ஏற்று நடத்துவார். ஆனால், உதயச்சந்திரன் அவர்களுக்கு இருக்குற அரசியல் தெளிவும், நம் தமிழகக் குடும்பங்களின், குழந்தைகளின் மனநிலையும் புதுசா வரும் அதிகாரிக்குத் தெரியுமா என்பது பெரிய கேள்விக்குறி. ஒன்றாம் வகுப்புல இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை தயாரிச்சுட்டு இருக்கிற பாடங்கள்ல என்ன இருக்குன்னு வரிக்குவரி உதயசந்திரன் சாருக்குத் தெரியும். பாடத்துக்கு நடுவே எங்கெங்கே படங்கள் வருதுன்னு அவருக்குத் தெரியும். அந்தப் படங்கள் தவறான அரசியல் பேசக் கூடாதுன்னு ரொம்பக் கவனமா இருப்பார். சிறு குழந்தைகள் மனசுல ஆண் - பெண் பேதங்களும், சாதி மத பாகுபாடுகளும் இல்லாத மாதிரி பாடங்களுக்கு உகந்த காட்சியமைப்புகள் தேர்வு செய்திருக்காரு. சார் தலைமையில நாங்க உருவாக்கிட்டு இருக்கிற இந்தப் புதிய பாடத்திட்டம் நம்முடைய சமூகத்துல மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும்னு எல்லோருக்கும் நம்பிக்கை இருந்தது. இப்போ அது போயிடுச்சுங்க" என்றார் இன்னோர் ஆசிரியர். 

``உதயசந்திரன் சார் இடமாற்றம் செய்திருக்கிறதுக்குக் காரணத்தை என்னால வெளிப்படையாச் சொல்ல முடியாது. ஆனால், அவர்மேல பெரிய காழ்ப்புஉணர்ச்சி அதிகார வர்க்கத்துக்கு இருந்தது. தன் துறையில நடந்துட்டு இருக்குற மாற்றங்களுக்குக் கிடைக்க வேண்டிய வரவேற்பும், பாராட்டும், கவனமும் இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குக் கிடைக்குதேன்னு அவங்களுக்குக் கவலை, கோபம் இதெல்லாம் எப்போவோ வந்துடுச்சு. அதனால சரியான நேரத்துக்குக் காத்துட்டு இருந்தாங்க. உதயசந்திரன் சார் எல்லாத்துக்கும் தலையாட்டிட்டுப் போறவரு இல்ல. எந்தச் சூழ்நிலையிலும் தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவரு. எப்படிப் பேசுனா, அவரை அனுப்ப முடியும்னு தெரிஞ்சு காய் நகரத்தி இருக்காங்க. வேற என்ன சொல்றதுன்னு தெரியலைங்க" என்கிறார்.

உதயசந்திரனை இடமாற்றம் செய்திருப்பது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கல்வித் துறையின் மீது அக்கறையுள்ள பல ஆசிரியர்களுக்கும் பெரிய இழப்பு. தமிழகத்தில் நல்ல மாற்றம் என்பது மாணவர்களுக்குத் தருகிற தரமான கல்வியில்தான் இருக்கிறது என்பதைத் திடமாக நம்பக்கூடியவர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். நம்பியதோடு மட்டுமன்றி அதைச் செயல்படுத்த எத்தனை தடைகள் வந்தாலும் நிகழ்த்தியும் காட்டியவர். அரசியல்வாதிகளுக்கு எதிராக ஏதேனும் செய்தால் தன் பதவி கேள்விக்குறி ஆக்கப்படுமோ என்று பயப்படுபவர்களுக்கு மத்தியில் துணிச்சல் என்பது வார்த்தை அல்ல செயல் என்று நிரூபித்துக் காட்டியவர். வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பத்தை எந்த அளவுக்குக் கல்வித் துறையுடன் இணைக்க முடியும் என்று சிந்தித்து வெற்றியும் கண்டவர். நேர்மை என்கிற ஒற்றைப் பண்புக்காக ஒரு மனிதன் எவ்வளவு அல்லல்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்காமல் நிலைத்து நிற்கும், நிற்கப்போகும் உதயசந்திரனின் வாழ்க்கைப் பயணமே மாணவர்களுக்கும், நமக்கும் மிகப்பெரிய வரலாற்றுப் பாடம்தான்.