Published:Updated:

இனி என்னவாகும் தமிழ்நாடு?

இனி என்னவாகும் தமிழ்நாடு?
பிரீமியம் ஸ்டோரி
இனி என்னவாகும் தமிழ்நாடு?

ப.திருமாவேலன் - ஓவியம்: ஹாசிப்கான்

இனி என்னவாகும் தமிழ்நாடு?

ப.திருமாவேலன் - ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
இனி என்னவாகும் தமிழ்நாடு?
பிரீமியம் ஸ்டோரி
இனி என்னவாகும் தமிழ்நாடு?

நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி... ஜெயலலிதா இன்னமும் மரணிக்கவில்லை. ஆளாக இருந்து ஆட்டுவித்தவர், இப்போது ஆவியாக இருந்து தூள்கிளப்பி வருகிறார். ஜெயலலிதாவை மேடையில் உட்கார வைத்துக்கொண்டு, ``அம்மா நீங்கள்தான் இந்த நாட்டின் நிரந்தர முதல்வர்’’ என்று பாராட்டிப் போற்றினார்கள். ``அம்மா நீங்கள்தான் இந்தக் கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர்” என்று உச்சிகுளிர வைத்தார்கள். அது வெறும் வாய் வார்த்தை அல்ல. நிரந்தரமாய் ஜெயலலிதா இருப்பது போலத்தான் தெரிகிறது நாட்டில் நடப்பதைப் பார்த்தால். இறந்துவிட்டார் என்று சொல்வதெல்லாம் ஒரு சடங்குதான்!

ஜெயலலிதா இருக்கும்போது சசிகலா குடும்பத்தைப் பந்தாடினார்.  இப்போதும் நின்றாடுவது மாதிரித்தான் தெரிகிறது. ஒருமுறை அல்ல, இரண்டு முறை ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் சசிகலா. இறுதியாக உள்ளே சேர்த்துக்கொண்ட போதுகூட, `எந்தப் பதவியும் கிடையாது. கூட இருக்கலாம். அதுவும் சொந்தங்கள் யாரும் வரக்கூடாது. அவர்களைப் பார்க்கக் கூடாது. பேசக் கூடாது' என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் சசிகலாவையே போயஸ் கார்டனுக்குள்ளே வர அனுமதித்தார் ஜெயலலிதா. வீட்டுச் சிறை வைக்கப்பட்டது மாதிரிதான் அந்தக் காலகட்டம் சசிகலாவுக்கே இருந்தது.உறவினர்கள்1 பார்க்க வர முடியாது. சொந்தக்காரர்களது சுக துக்கங்களில் கலந்துகொள்ள முடியாது. இன்னும் சொன்னால்... கணவர் நடராசன், சகோதரர் திவாகரன் ஆகியோர் ஜெயலலிதாவால் சிறை வைக்கப்பட்டபோதும் போயஸ் கார்டன் வீட்டுக்குள் சசிகலா சமர்த்தாக இருந்தார்.

இனி என்னவாகும் தமிழ்நாடு?

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் நாள்... தமிழ்நாட்டின் மாட்சிமை தாங்கிய முதலமைச்சர் ஜெயலலிதா, யாருக்கும் தெரியாத வகையில் ‘சசிகலா சாம்ராஜ்யம்' மட்டுமே அறிய அப்போலோவில் வைக்கப்பட்டார். அந்த 75 நாள்கள் ஆக்கவும் அழிக்கவும் வல்லமை பெற்றவராக சசிகலா மட்டுமே இருந்தார். முப்படைகளையும் வைத்திருக்கும் பாரதப் பிரதமரே மூன்று முறை பார்க்க வருகிறேன் என்று சொன்ன பிறகும் `வரக் கூடாது, பார்க்க முடியாது' என்று தடுக்கும் வல்லமை சசிகலாவுக்கு இருந்தது. எட்டுக்கோடி மக்களின் பிரதிநிதியான  ஜெயலலிதாவை சசிகலா, நடராசன்,  தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார், அப்போலோ ரெட்டி, அன்றைய பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய எட்டுப்பேரால் மறைக்க முடியுமானால், ஒரு மாநிலம் எப்படி மர்ம தேசமாக மாறிப்போனது பாருங்கள்.

அப்போலோவில் என்ன நடந்திருக்கும், நடந்தது என்ன என்பது நம்மைவிட பிரதமர் நரேந்திரமோடி, மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க-வின் தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிர கவர்னராக இருந்து தமிழ்நாட்டுக்கு அவ்வப்போது வந்து செல்லும் வித்யாசாகர் ராவ் ஆகிய மூவருக்கும் தெரியும். அவர்கள் சசிகலா குடும்பத்தை மிரட்டுவதும், சசிகலா குடும்பம் மிரள்வதும் இதனால்தான்.

பெரியகுளத்தில் தயாரான கத்தி துரோகம் செய்ததால் எடப்பாடியில் தயாரான கத்தியைப் பயன்படுத்த நினைத்தார் சசிகலா. கண்கள் கலங்க... எடப்பாடியின் தோளில் தட்டி...பதவிப்பிரமாணத்துக்குத் தயார் செய்து அனுப்பினார். அந்தக் கத்தியும் துரோகம்தான் செய்தது. ஏனென்றால், இவர்கள் தயாரிக்கும் கத்திகள் அப்படித்தானே இருக்கும்; இருக்க முடியும்?

இனி என்னவாகும் தமிழ்நாடு?


தனியாய் நின்றால் எடப்பாடிப் பஞ்சாயத்து வார்டில் மட்டுமே வெல்லும் வல்லமை பெற்ற பழனிசாமி, இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். ஏதோ தன்னால்தான் 134 தொகுதிகளிலும் இரட்டை இலை வென்றது என்ற தோரணையில் அவர் ஜெயலலிதா உட்கார்ந்த நாற்காலியில் அமர்ந்ததும்... இவருக்கு ஏதோ உலக பயங்கரவாத இயக்கங்களின் அச்சுறுத்தல் இருப்பதுபோல பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பயணம் செய்வதும்... கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வந்து அமர வைப்பதும்... யாரோ எழுதிக்கொடுத்த குட்டிக் கதைகளை அதன் உள்ளர்த்த சுவாரஸ்யங்கள் உணராமல் உணர்ச்சியில்லாமல் வாசிப்பதும் என, சந்திரமுகியாகவே மாறினார்.

மகாமகத்தில் ஜெயலலிதா குளித்தார். அவருக்கு சசிகலா தண்ணீர் வார்த்தார். சசிகலாவுக்கு ஜெயலலிதா தண்ணீர் வார்த்தார். நல்லவேளை காவிரி புஷ்கர விழாவில் அந்தக் காட்சி நடக்கவில்லை. ஒருவேளை நல்ல நட்பு இருந்திருந்தால் இ.பி.எஸ் தலையில் ஓ.பி.எஸ் தண்ணீர் ஊற்றும் காட்சியைப் பார்த்திருப்போம். ஓ.பி.எஸ் தலையில் இ.பி.எஸ் தண்ணீர் ஊற்றும் காட்சியையும் பார்த்திருப்போம். இருவரும் பட்டன் கத்தியை மடக்கி வைத்துக்கொண்டு ஒன்றுசேர்ந்தவர்கள் என்பதால் தண்ணீர் பீய்ச்சி விளையாடவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் பாத்ரூமில் குளிக்கும்போதே பாட்டுப்பாட முடியாதவர்கள் அவர் செத்து ப்போனதால் காவிரியில் கதாகாலட்சேபம் நடத்துகிறார்கள்.

இன்றைய தினத்தில் தமிழ்நாடு அரசுக்கும் சசிகலா குடும்பத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, டாஸ்மாக் கடைகளுக்கு மிடாஸ் சரக்குகளை வாங்குவதைத் தவிர. இன்றைய தினத்தில் அ.தி.மு.க என்ற கட்சிக்கும் சசிகலா குடும்பத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் சசிகலா, தினகரன் பெயர் இடம்பெற்றிருப்பதைத் தவிர. ஜெயலலிதாவின் நட்பை மட்டுமே மூலதனமாக்கி உள்ளே நுழைந்து கட்சியையும் ஆட்சியையும் கபளீகரம் செய்யத் துடித்த ஒரு குடும்பத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டது தமிழ்நாட்டு அரசியலில் நல்லதுதான். ஆனால், இன்றைய பழனிசாமியும் பன்னீரும் சசிகலா குடும்பத்தின் காலில் திரும்பவும் விழ மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இனி என்னவாகும் தமிழ்நாடு?

ஒட்டிக்கிடப்பதும் வெட்டிக்கொள்வதும், அதன் பிறகு ஒட்டிக்கொள்வதும் அ.தி.மு.க. அரசியல் வரலாற்றில் முன்பே நடந்ததுதான். அப்போது அந்தக் கட்சி ஆட்சியில் இல்லை. அதனால் அசிங்கம் அனைத்தும் அந்தக் கட்சிக்குள்ளேயே நடந்து முடிந்துவிட்டது. அது ஆட்சியில் வீசவில்லை. ஆனால், இன்று அந்தக் கட்சியே ஆட்சியில் இருக்கிறது. போயஸ் கார்டனுக்குள்ளும், அவ்வை சண்முகம் சாலைக்குள்ளும் நடந்து முடியவேண்டியவை தமிழ்நாட்டு அரசியல் தலைமைச் செயலகத்துக்குள்ளும், பாரம்பர்யம் கொண்ட சட்டசபைக்குள்ளும் நடக்க ஆரம்பித்திருப்பதுதான் வேதனை.

மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் இதுவரை நடந்த விவாதம் நீதிமன்றத்தில் தொடங்கியிருக்கிறது. மக்கள்தான் பரிதாபமாக முழிக்கிறார்கள். தங்களது வழக்குகளில் வாதங்களை வைப்பதற்கு டெல்லியிலிருந்து வழக்கறிஞர்களை அழைத்து வந்தார்கள் எடப்பாடியும் தனபாலும் ஸ்டாலினும் தினகரனும். இந்தப் பிரச்னையையே டெல்லிக்காரர்களால்தான் முடித்துவைக்க முடியும் என்று நினைத்தார்களா? நினைக்கிறார்களா?

ஆனால் ஒன்று, பிரச்னையே டெல்லிக்காரர்களால் தான் வந்தது.  அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருக்கிறாரா இல்லையா என்பதையே விசாரிக்காமல், ஜெயலலிதாவைப் பார்க்க முடியாது என்று சொன்னபோது ஏன் என்று கேட்காமல், தேர்தல் ஆணையத்தின் ஆவணத்தில் கையெழுத்துப் போடாமல் கைநாட்டு வைத்ததைக் கேள்வி கேட்காமல், 75 நாள்கள் யார் தமிழக அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதையே விசாரணை நடத்தாமல் விட்டவர்கள் யார்?

 எடப்பாடி, பன்னீர் இருவரையும் வாரந்தோறும் டெல்லிக்கு வரவைத்துப் பார்த்ததும், அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்ததும், முதலமைச்சர்மீது நம்பிக்கை இல்லை என்று 21 உறுப்பினர்கள் கடிதம் கொடுத்த பிறகும் அவர்களை அழைத்து விசாரணை நடத்தாமலும், அது அவர்களது சொந்தக் கட்சிப் பிரச்னை என்று தட்டிக் கழித்தும், சென்னைக்கே கவர்னர் வராமலும் தமிழகத்துக்கு நிரந்தர கவர்னர் போடாமலும் டெல்லி பா.ஜ.க தலைமையும் மத்திய ஆட்சியும் செய்துவரும் காரியங்கள்தான் இவ்வளவுக்கும் காரணம்.

எடப்பாடியும் பன்னீரும் தினகரனும் வெறும் அம்புகள்தான். வம்பு டெல்லியில் இருக்கிறது. தமிழ்நாட்டை என்ன செய்ய நினைக்கிறார்களோ?