Published:Updated:

``தமிழ் தேசியமும், சாதி ஒழிப்பும்தான் எங்கள் இலக்கு!’’

``தமிழ் தேசியமும், சாதி ஒழிப்பும்தான் எங்கள் இலக்கு!’’
பிரீமியம் ஸ்டோரி
``தமிழ் தேசியமும், சாதி ஒழிப்பும்தான் எங்கள் இலக்கு!’’

தமிழ்ப்பிரபா, நா.சிபிச்சக்கரவர்த்தி - படங்கள்: க.விக்னேஷ் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

``தமிழ் தேசியமும், சாதி ஒழிப்பும்தான் எங்கள் இலக்கு!’’

தமிழ்ப்பிரபா, நா.சிபிச்சக்கரவர்த்தி - படங்கள்: க.விக்னேஷ் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
``தமிழ் தேசியமும், சாதி ஒழிப்பும்தான் எங்கள் இலக்கு!’’
பிரீமியம் ஸ்டோரி
``தமிழ் தேசியமும், சாதி ஒழிப்பும்தான் எங்கள் இலக்கு!’’

“நான் அஞ்சாம் வகுப்பு படிச்ச சமயம், என் தங்கையும் நானும் யூனிஃபார்ம்ல கறுப்புக் கொடி குத்திட்டு ஸ்கூல் போனப்போ வாசல்ல நிக்கவெச்சு, ‘எதுக்கு ரெண்டு பேரும் கறுப்புக் கொடி குத்திட்டு வந்துருக்கீங்க’னு கேட்டாரு ஸ்கூல் வாத்தியார். `சார், இலங்கைல கலவரம் நடந்து நிறையத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்காங்க. அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதுக்கு எங்க அப்பா அம்மா இதைக் குத்தி விட்டாங்க சார்’னு சொன்னேன். என் தங்கை ‘ஆமா ஆமா’னு தலையாட்டினா.

`இலங்கைல கொன்னா உங்களுக்கு என்ன?’ன்னு கேட்டார் வாத்தியார்.  அதுக்கு  நான்  பதில்  சொல்லுவேன்னு என் தங்கச்சி என்னைப் பாத்தா. எனக்கும் தெரியல. வாத்தியாரோட அதட்டல்ல  நடுங்கிப்போனேன். அந்தக் கேள்வி மனசுக்குள்ளயே இருந்தது. வீட்டுக்குப் போனதும் அப்பாகிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன். ஈழத் தமிழர் மீதான என்னுடைய உணர்வுப்பூர்வமான நெருக்கம் பத்து வயசுல ஆரம்பிச்சுது தோழர்” - தான் ஒரு போராளியாக உருமாறிய கதை சொல்கிறார் திருமுருகன் காந்தி. குண்டர் சட்டத்தில் நான்கு மாதங்கள் சிறைவைக்கப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்திருக்கும் திருமுருகன் காந்தியைச் சந்தித்துப் பேசினோம். 

``தமிழ் தேசியமும், சாதி ஒழிப்பும்தான் எங்கள் இலக்கு!’’

``தொடர்ந்து போராடிட்டே இருக்கீங்க. உங்களோட முதல் போராட்டம் எப்போது ஆரம்பித்தது?’’

``ப்ளஸ்டூ படிக்கும்போதே ஆரம்பிச் சிட்டேன். எங்களோட பாடத் திட்டத்தை மாத்துனதை எதிர்த்துப் பள்ளிச்சீருடையோட ஸ்கூலுக்கு வெளியே நண்பர்களைத் திரட்டிப் போராடினேன். காலேஜ் படிச்சப்போ கூடப்படிச்ச பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டதைக் கல்லூரி நிர்வாகம் மறைக்க முயற்சி செஞ்சப்போ, அதை எதிர்த்துச் சண்டைபோட்டேன். நான் கல்லூரியில் சேர்ந்த சமயம்தான் ராஜீவ்காந்தி கொலைச் சம்பவம் நடந்தது. அப்போ ஈழ அரசியல் குறித்து வெளிப்படையாக விவாதிக்க முடியாத சூழல் இருந்தநேரம்.  நாங்க நண்பர்கள் கவிதைகள்மூலமாக கவியரங்கத்துல பூடகமாகப் பேசக்கூடிய சூழல். வாய்ப்பு கிடைக்கிற சமயங்கள்ல ஊர் ஊராகப் போய்க் கவிதைகள் வாசிப்பேன். அதுக்கு அப்புறம் மதுரைப் பல்கலைக்கழகத்துல நடத்துன ஸ்ட்ரைக் மிகப்பெரிய அனுபவம். அதுல இருந்துதான் ஒரு போராட்டத்தை எப்படி வழிநடத்தணும்னு கத்துக்கிட்டேன். ’’

``இயக்கமாக மாற்ற வேண்டும் என்று எப்போது முடிவெடுத்தீர்கள்?’’

“நான் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். சிறந்த மாணவர் என்று கல்லூரி நிர்வாகத்தின் பாராட்டோடு வெளியே வந்தவன். என்கூட சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் முடிச்ச நண்பர்கள் ஒவ்வொருத்தரா அமெரிக்கா போயிட்டு இருந்தாங்க. ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் வெளிநாட்டுக்குப் போய் வேலை பார்க்கக் கூடாதுன்னு பாஸ்போர்ட் எடுக்காம இருந்தேன். என்ன பண்றதுன்னு தெரியாம கையில் காசும் இல்லாம இப்போ நீங்க என்னைப் பேட்டி எடுக்கிற இந்த நடேசன் பார்க்ல வந்து எத்தனையோ முறை சுருண்டு படுத்திருக்கேன். அப்பா அம்மாகிட்டயும் பேச்சு குறைஞ்சிடுச்சு. அந்தச் சமயம் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்து யாரும் அமெரிக்கா போக முடியாத சூழல். அதை நானும் பயன்படுத்திக்கிட்டேன்.

ஐம்பதாயிரம் ரூபாய்ல சின்ன ஐ.டி கன்சல்ட்டிங் கம்பெனி ஒண்ணு ஆரம்பிச்சு, அதை அப்படியே பெருசாக்கினேன். என்கிட்ட பதினைந்து பேர் வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. எனக்கு மட்டும் அப்போ மாசம் இரண்டு லட்சம் வருமானம் வந்துட்டு இருந்தது. திருமணம் முடிஞ்சது. நிலையான வருமானம். திடீர்னு அம்மா இறந்தாங்க. என் மகள் பிறந்து பதினொரு மாதம்.  ஈழப்படுகொலை உச்சத்துல இருந்த சமயம், வேலையை அப்டியே விட்டுட்டு, கலைஞர் நடத்துன மனிதச் சங்கிலி, திருமா நடத்துன உண்ணாவிரதம், செங்கல்பட்டு மாணவர்கள் போராட்டம்னு கலந்துக்கிட்டே இருந்தேன். ஒருநாள், அலுவலகத்துல வேலைபாத்துட்டு இருக்கும்போது தான் முத்துக்குமார் தீப்பிடிச்சு இறந்த சம்பவம் கேள்விப்பட்டு அங்க போனேன். அப்போ படிக்கக் கிடைச்ச முத்துக்குமாரோட கடிதம் எனக்குள்ள பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுச்சு. அவர் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கலை. அதுல ஓர் அரசியல் வேண்டுகோள் இருந்தது. ஏற்கெனவே எனக்குள்ள இருந்த ஈழத் தமிழர்கள் மீதான உணர்வு அதிகமானது. சரி இதுக்கு அப்புறமும் நாம இப்படியே இருந்தா சரி ஆகாதுன்னு என்னைப்போல உணர்வுள்ள இளைஞர்கள் ஒண்ணு சேர்ந்து இயங்க ஆரம்பிச்சோம். கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்தைத் முன்னெடுத்தோம். மீத்தேன் திட்டப் பாதிப்புகளை அம்பலப்படுத்தினோம். மூவர் தூக்குத் தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து தீவிரமாகப் போராடினோம். முல்லைப் பெரியார் எதிர்ப்பு, சுற்றுப்புறச் சூழல் அக்கறை, தமிழர்கள் உரிமை, தமிழர்கள் பிரச்னையை ஆங்கில ஊடகங்கள் தவறாகச் சித்திரிப்பதுன்னு தொடர்ந்து இயங்க ஆரம்பிச்சு இன்னைக்கு வரைக்கும் நிக்கலை.”

``தமிழ் தேசியமும், சாதி ஒழிப்பும்தான் எங்கள் இலக்கு!’’

``தமிழ்நாட்டில் வாழ்கிற பிற மொழி பேசுபவர்களைத் தமிழ் தேசியம் தனிமைப்படுத்திவிடாதா? எந்த அளவுக்கு அவர்கள் தங்களை இதில் பொருத்திக் கொள்ள முடியும்?’’

``தேசியம் என்பது பாதிக்கப்படுகிற அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியது. இதில் பெரும்பான்மையினராகத் தமிழர்கள் இருப்பதால், அவர்களை முன்னிறுத்துகிறோம். மற்றபடி எல்லோருடைய உரிமைகளுக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம். தமிழ் தேசியத்தின் உள்ளீடு அடித்தட்டு மக்களுக்கான அரசியல் விடுதலை, பண்பாட்டு விடுதலை, பொருளியல் விடுதலை. தமிழ் தேசியம் முன்வைக்கிற விடுதலையை இங்கே இருக்கிற சிறுபான்மை தேசிய இன மக்களும் ஏற்றுக் கொண்டுவருவார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.’’

``தமிழ் தேசியமும், சாதி ஒழிப்பும்தான் எங்கள் இலக்கு!’’


`` `தமிழர்கள்தான் இனி தமிழ்நாட்டை ஆள வேண்டும், அதிகாரம் செய்ய வேண்டும்’ என்கிற தமிழ் தேசியப் பார்வையை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``எங்களுக்கான விடுதலை நோக்கி யார் வழி நடத்துகிறாரோ, அவர் தலைமை வகிக்கட்டும். மொழி எங்களுக்குப் பிரச்னை இல்லை. தலைவர் லெனின், கிர்கிஸ்தான், கசகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா ஆகிய நாட்டு மக்களின் விடுதலைக்குப் போராடியவர்தானே? ஜார்ஜியாவுல இருந்து வந்த ஸ்டாலின், ரஷ்ய மக்களின் விடுதலையை முன்னிறுத்த வில்லையா? அது சாத்திய மானதுதானே!  தேசிய இன விடுதலையை முதன்முதலில் லெனின் கோரினார். ஸ்டாலின் அதை வரையறுத்தார். மொழி என்பதைத் தாண்டி அனைத்து மக்களுக்கான நியாயத்தைப் பேசக்கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

தமிழ் தேசிய விடுதலைக் கருத்தியலுக்குப் போராடக்கூடிய யாராக இருந்தாலும் எங்கள் தோழர்கள்தான். ஈழப்போர் நடந்த சமயத்தில் தீக்குளித்தவர்களில் பிறமொழி பேசக்கூடிய சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் இருக்கத்தானே செய்தார்கள். அவர்களை எது நம்முடன் இணைத்தது? மனிதநேயம் என்கிற ஒரு புள்ளியில்  தானே அவர்கள் ஒன்றிணைந்தார்கள். அதை மறுக்க முடியுமா?  தமிழர்கள்தான் ஆள வேண்டுமென்கிற ஒரு தூய்மைவாதத்தைத் தமிழ் தேசியம் இதுவரைக்கும் வைக்கவில்லை. பெருஞ்சித்திரனாரோ, தமிழரசனோ, புலவர் கலியபெருமாளோ அவர்களுடைய நீட்சியாக வந்த எந்தத் தலைவர்களோ, இப்படிப்பட்ட ஒரு கருத்தியலை முன்வைக்கவில்லை. பிறமொழி பேசுபவர்களை அந்நியப்படுத்துவது, அவர்களுக்கு அதிகாரம் தர மறுப்பது என்றெல்லாம் தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருந்தால், சிங்கள அரசுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும். தமிழ் தேசியம் என்பது மொழிப்பாகுபடற்ற உழைக்கின்ற மக்களை ஒன்றிணைக்கிற ஒரு கருத்தியல்.’’

``மே பதினேழு இயக்கத்தின் முதல் இலக்கு என்ன?’’

``எங்களுக்குப் பிரிக்க முடியாத இரண்டு இலக்குகள் இருக்கின்றன. தமிழ் தேசியமும் சாதி ஒழிப்பும். இவை இரண்டும் இணையும்போதுதான் உண்மையான பலம் வரும். விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவாக ஒன்றிணைவதற்கு முன் சாதியை ஒழித்தார்கள். அதனால்தான் அந்த இயக்கம் கடைசி வரை தன் எதிரியை எதிர்த்து நின்று சண்டை போட்டது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரும் அங்கே தளபதியாக நின்றார். அவருக்குக் கீழே படைவீரனாக இருந்து சண்டை போட்டார்கள். அவர்கள் ஆட்சி செய்த பிரதேசங்களில் சாதிக் கொடுமைகளுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டது. ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். சாதி ஒழிப்பு இல்லாமல் தமிழ் தேசியம் சாத்தியம் இல்லை. சாதிகளை அரவணைத்துப் பேசுகிற தமிழ் தேசிய வரலாறு நம்மிடம் இல்லை. அது சாத்தியமும் இல்லை. தேர்தல் அரசியலுக்காக அதைக் கட்டமைக்க விரும்புகிறார்கள். அவர்களை நான் தமிழ் தேசியவாதியாகப் பார்க்கவில்லை. உண்மையான கருத்தியலைச் சிதைப்பதற்காகப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படும். திசைதிருப்பல் நடக்கும் அதில் ஒன்றுதான் இது.’’

``தமிழ் தேசியமும், சாதி ஒழிப்பும்தான் எங்கள் இலக்கு!’’

``தமிழ் தேசியம் இன்னும் பரவலாகக் கவனம் பெறுவதற்கு அடிப்படை மாற்றமாக எதைச் செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்?’’

``சாதிதான். அதுதான் மக்களைப் பிரித்து வைக்கிறது. ஊரும் சேரியும் சேர்ந்தால்தானே எதிரியை எதிர்த்துச் சண்டைபோட முடியும். அப்படி நாம் சேர்வதை நம் வளங்களைக் கொள்ளையடிக்க வருபவன் விரும்புவதில்லை.வீரமான சாதி எனச் சொல்பவர்கள் தன் கிராமத்தில் கெயில் பைப் வைக்கும்போது சண்டை போட்டிருக்கலாம்தானே? சாதிப் பாகுபாடற்ற தமிழர்களாக ஒன்றிணைந்தால் நம் வாழ்வாதாரங்களை அழிக்கும் நாசகாரத் திட்டங்களை எளிதில் வென்றெடுக்கலாம். ஆனால் சாதிரீதியாக மக்கள் இணைவதை இங்குள்ள அரசியல் தலைவர்களே விரும்ப வில்லை என்பதுதான் உண்மை. தேர்தல் அரசியலால்தான் சாதி வளர்கிறது. தேர்தலுக்கு அப்பாற்பட்டு விடுதலை அரசியலை நோக்கி நீங்கள் நகரும்போதுதான் சாதி ஒழியும். தலித்துகளுக்கு எதிராக நடக்கிற சாதி வன்முறையை ஒழிக்க அவர்கள்மீது வன்கொடுமை செய்பவர்களுடன் உரையாடவே விரும்புகிறோம். தலித்துகள் மட்டுமல்ல பிற சமூகத்தினரும் உழைக்கக்கூடியவர்கள்தான். ஆனால் அவர்களைப் பிரிக்கிற வேலையைச் சாதி பார்க்கிறது. இந்த இருதரப்பினரும் இணைந்தால் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பிரச்னைகள் தீர்ந்து போகும். தலித்துகள் தங்கள் சாதியை அடையாளப்படுத்துவது பெருமிதத்திற்காக அல்ல. உரிமைக்காக, விடுதலைக்காக என்கிற புரிதல் நமக்கு வர வேண்டும்.’’

``உங்கள்மீது பாய்ச்சப்பட்ட குண்டர் சட்டத்தின் பின்னணி என்னவாக இருக்கும்?’’

``பின்னணியெல்லாம் பெருசா ஒண்ணும் இல்ல தோழர். தமிழ்நாட்டு மக்களுக்குப் போராட்ட உணர்வு அதிகமாயிடுச்சு. இப்பிடியெலாம் நடக்கப்போகுதுன்னு மக்கள்கிட்ட முன்னெச்சரிக்கையா சொல்லிட்டு இருப்போம். இப்போ அவங்களே நேரடியாக் பாதிக்கப்பட்டதால் களத்துல இறங்கிட்டாங்க. மேற்கொண்டு அவங்க இதுமாதிரிப் போராடாம இருக்கணும்னா, நாளைக்கு உனக்கும் இந்த நிலைமைதான்னு மக்களைப் பயமுறுத்த எங்களைக் கைது பண்ணாங்க. ஆனா இன்னைக்கு அது ரிவர்ஸ் ஆகிடுச்சு. சனிக்கிழமை நாங்க நடத்துன பொதுக்கூட்டத்துல மூவாயிரம் பேருக்கு மேல குண்டர்சட்டத்துல போகத் தயார்னு கை தூக்கிட்டாங்க. என்ன செய்யப்போது இந்த அரசாங்கம்?’’

 ``நிறையப் போராட்டம், சிறை... இதையெல்லாம் உங்கள் குடும்பம் எப்படிப் பார்க்கிறது?’’

``என் அப்பா ரொம்ப உறுதியா இருப்பார்.  என் மனைவி பயப்படலைன்னாலும்,  என்னைக் குண்டர் சட்டத்துல கைது செய்வாங்கன்னு எதிர்பார்க்கல. ரெண்டு மூணுநாள்ல வீட்டுக்கு வந்துடுவேன்னு நினைச்சாங்க. என் பொண்ணுதான் என்னை ரொம்பநாள் பாக்காம ஏங்கிட்டா... என் பொண்ணுக்கு நான் வெளியூருக்குப் போயிருக்கேன்னுதான் சமாதானப்படுத்தி வெச்சு இருந்தாங்க. அப்புறம் என்னைச் சிறையில வந்து பாத்ததும் அழ ஆரம்பிச்சிட்டா. நானாவது நாலுமாசம், என்னைவிடப் பல வருஷங்கள் சிறைக்குச் சென்ற தலைவர்கள் எல்லாம் இருக்கிறப்போ நான் மேற்கொண்டு ரொமான்டிசைஸ் பண்ண விரும்பலை தோழர்.’’

``உங்களுடைய அடுத்தகட்டப் போராட்டங்கள் என்ன?’’


``எங்களுடைய அடுத்தகட்ட நகர்வுகள், மாவட்டந்தோறும் சென்று இளைஞர்களைச் சந்திச்சு ஒன்றுதிரட்டுவதுதான். தேர்தல் இல்லாத வலிமையான இயக்கம் சார்ந்த அரசியலை உணர்த்தப்போறோம். இதற்கெல்லாம் மக்கள் எங்களுக்கு நிச்சயம் பக்கபலமா இருப்பாங்க’’ நம்பிக்கையோடு புன்னகைக்கிறார் திருமுருகன் காந்தி.