Published:Updated:

``பென்னாகரத்தில் தோற்றீர்களே" - ஜெயலலிதாவையே அதிரவைத்த விஜயகாந்த்! #HBDVijayakanth

``பென்னாகரத்தில் தோற்றீர்களே" - ஜெயலலிதாவையே அதிரவைத்த விஜயகாந்த்! #HBDVijayakanth
``பென்னாகரத்தில் தோற்றீர்களே" - ஜெயலலிதாவையே அதிரவைத்த விஜயகாந்த்! #HBDVijayakanth

காவிரி பிரச்னையைப் பேசிய விஜயகாந்த், ``இவங்களுக்கு பதவிதான் முக்கியம், என்ன துறை வேணும்னு கேட்டு வாங்கிப்பாங்க. ஆனா மக்களுக்கு என்ன வேணுங்கறதைப் பத்தின கவலையோ அக்கறையோ யாருக்கும் இல்லை. அவர்களுக்கு தே.மு.தி.க பாடம் கற்பிக்கும்'' என்று முழங்கினார்.

றைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தன்னை எதிர்த்து நின்று பேசுபவர்களை அறவே பிடிக்காதாம். அதுபோன்ற சூழல் உருவாக அனுமதிக்கவே மாட்டாராம். ஆனால், இந்த விஜயகாந்தெல்லாம் என்ன பேசிவிடப்போகிறார் என்றுதான் இருந்திருப்பார்கள் அ.தி.மு.க-வினர். சற்றும் எதிர்பாராத விதமாக நேரடியாக பென்னாகரம் தேர்தலில் தோற்றீர்களே என்றதும் ஆடிப்போனார் ஜெயலலிதா.

அந்த விஜயகாந்தைத்தான் இன்று இந்தியாவின் டொனால்ட் ட்ரம்ப், ஆன்லைனின் மக்கள் முதல்வர், மீம்ஸ் மேக்கர்களின் குலசாமி, இதையெல்லாம் தாண்டி வெள்ளந்தி மனசுக்கார் எனப் பல பெயர்கள் பெற்று சமூக வலைதளங்களின் முடிசூடா மன்னராக இருக்கிறார்.

இந்தியாவைப் பாகிஸ்தானிடம் இருந்து இவரால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று நினைத்தவர்கள் பல பேர். இவருக்கு கரெண்ட் ஷாக் அடிக்காது. ஐஸ் பாரில் படுக்க வைத்தாலும் குளிராது. இவரால் சுவரில் சுலபமாகக் கால்களை வைத்து நடக்க முடியும் எனும் அளவுக்குத் தமிழ் சினிமாவின் சூப்பர் மேனாக வாழ்ந்தவர். இன்று எல்லாரும் விஜய் சேதுபதியை வயதான தோற்றத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் நடிக்கிறார் என்கிறோம். ஆனால், ஊமை விழிகள், வானத்தைப் போல காலங்களிலேயே அதை அசால்ட்டாக செய்து முடித்தவர்... இப்படித்தான் பலருக்கும் அறிமுகமானார் விஜயகாந்த். 

155 படங்கள் 2 மாநில விருதுகள்.. அது தவிர  ரஜினி, கமல் உச்சத்தில் இருந்த நாள்களில் உச்ச நடிகராக வலம் வந்தவர். இன்னும் சொல்லப்போனால் சில சமயங்களில் ரஜினி, கமல் படங்களே இவர் படங்கள் முன் சற்று அடங்கிப் போன வரலாறும் உண்டு. நடிகர் சங்கம் இன்று பிரச்னையில் உள்ளது. ஆனால், இவர் தலைவராக இருந்த நாள்கள் நடிகர் சங்கத்தின் பொற்காலம் எனலாம். 

2005-ம் ஆண்டில் அரசியலில் அதிரடியான என்ட்ரி... அன்று தோப்பூரில் கட்சியை அறிமுகம் செய்த விஜயகாந்துக்கு லட்சக்கணக்கான கூட்டம் கூடியது. 3 மணிக்கெல்லாம் விழா மேடை நிரம்பிவிட்டது. 4 மணிக்கெல்லாம் விஜயகாந்த் விழா நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டார். மேடையில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை. கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சுந்தர்ராஜன், ராமு வசந்த் ஆகியோர் விஜயகாந்த் அருகில் அமர்ந்திருந்தனர். 5 மணிக்கே கூட்டம் ஆரம்பித்தாலும் இரவு 9:32 மணிக்குத்தான் ராசி பார்த்து கட்சியின் பெயரை அறிவித்தாராம் விஜயகாந்த். காரணம் கூட்டுத்தொகை 5 வர வேண்டும் என்பது ஜோசியர் கணிப்பாம். 

மைக் பிடித்த விஜயகாந்த் பேசியது எல்லாம்தான் அவரை மக்கள் மத்தியில் ஓர் அரசியல்வாதியாக நிலை நிறுத்தியது. ``இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் உயிரினும் மேலான தமிழ் நெஞ்சங்களே'' என்று ஆரம்பித்தார். ``உன் கட்சியோட கொள்கை என்னய்யானு ரொம்ப பேர் கேட்குறாங்க. அதை விலாவாரியா என்னால சொல்ல முடியும். எல்லாரும் வயிறு நிறைய சாப்பிடணும், சொந்த வீட்டுல தூங்கணும், அவங்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்கணும், பணம் காசு மேல எனக்கு எப்பவுமே ஆசை இருந்தது கிடையாது. அதுனாலதான் என் பொறந்த நாளைக்கு தையல் மெஷின், மூணு சக்கர வாகனம்லாம் மக்களுக்கு வாங்கிக் கொடுத்தேன். இதைக் கொடுத்து ஓட்டு கேட்கப்போறேன்னு சொன்னாங்க. அப்படிச் சொன்னவங்க எதுவுமே வாங்கிக் கொடுக்கலையே. நிச்சயமா எனக்குத் தொல்லைகள் இனி அதிகரிக்கும். வருமான வரித்துறை வெச்சு மிரட்டுவாங்க. என்கிட்ட போராட்டக் குணம் அதிகமா இருக்கு. இவங்களுக்காக நான் என்னை மாத்திக்க மாட்டேன்'' என ஆவேசமாகப் பேசினார். 

கட்சியின் பெயரை நீண்ட பேச்சுக்குப் பின் ஒரு பில்டப்போடு கூறினார் விஜயகாந்த். ``தேசிய முற்போக்கு திராவிடர் கழகம். திராவிடப் பாரம்பர்யம் நம் ரத்தத்தில் ஊறியுள்ளது. திராவிட மாநிலங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ்நாடும் சரி இந்தியாவும் சரி இன்னும் முன்னேறவில்லை. முற்போக்கு சிந்தனை வேண்டும். அதனால்தான் கட்சிக்கு இந்தப் பெயர் வைத்துள்ளேன்'' என்று நிறுத்தி நிதானமாகக் கட்சியின் பெயரை அழகாக விளக்கினார் விஜயகாந்த். 

காவிரி பிரச்னையைப் பேசிய விஜயகாந்த், ``இவங்களுக்கு பதவிதான் முக்கியம், என்ன துறை வேணும்னு கேட்டு வாங்கிப்பாங்க. ஆனா மக்களுக்கு என்ன வேணுங்கறதைப் பத்தின கவலையோ அக்கறையோ யாருக்கும் இல்லை. அவர்களுக்கு தே.மு.தி.க பாடம் கற்பிக்கும்'' என்று முழங்கினார். சிவப்பு, கறுப்புக் கொடியில் மஞ்சள் நிற வட்டம்; அதில் ஒரு தீபம் உள்ள கொடியை அறிமுகம் செய்தார். ’உண்மையிலேயே விஜயகாந்த் மக்கள் செல்வாக்கு படைச்சவர்னு நிரூபிச்சுட்டார்’ங்குற விமர்சனத்தைப் பெற்றார்.

234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 1 சீட்டில் வென்றாலும் 'அரசியல்வாதி' என்ற பிம்பத்தை ஆழமாகப் பதியவைத்தவர். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி 41 தொகுதிகளில் 29 தொகுதிகளில் வெற்றி... அ.தி.மு.க-வின் அபார வெற்றியால் தி.மு.க-வின் பாதாள சறுக்கலால் விஜயகாந்துக்கு வீசிய அதிர்ஷ்ட காத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி... ஆதரித்த ஜெயலலிதாவையே எதிர்த்த விஜயகாந்த்... சட்டமன்றத்தில் துணிச்சலாக அமைச்சர்களை எதிர்த்துப் பேசியவர். உடல் நிலை வாட்டியதால் மட்டுமே அதிகாரத்தை இழந்தார். 

``யார்ரா அது... அங்க பொம்பள புள்ளைங்க பக்கம் போய் நிக்கறது... தூக்கி அடிச்சுடுவேன் பாத்துக்க" எனச் பேசிய போதெல்லாம் அவரை மீம்ஸ் டெம்ளேட்டாக பார்த்தனர். 'விஜயகாந்த் வருவார்' என்று 2016-ல் காத்துக்கிடந்த தி.மு.க தலைவர் கருணாநிதியை விடுத்து மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளரானது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அ.தி.மு.க , தி.மு.க-க்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்த தே.மு.தி.க. இன்று விஜயகாந்தைப் போலவே வலுவிழந்து உள்ளது.

கம்பீரமான குரல் இன்று குளறுகிறது... அரசியலை தீர்மானிப்பார் என்றவர் இன்று அரசியல் ஆட்டத்திலேயே இல்லை... கறுப்பு எம்.ஜி.ஆர் என்றனர். இன்று எம்.ஜி.ஆர் கட்சியே ஆடுகிறது இதில் கறுப்பு எம்.ஜி.ஆர் மட்டும் என்ன செய்வார் பாவம்... இவரைக் குடிகாரன் என்கிறார்கள். ஆனால், தற்போது இவர் குடிப்பதே இல்லையாம்! 

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தமிழ்நாடு இன்று தலைமை இல்லாமல் தவிக்கிறது. ``விஜயகாந்த் இந்த வெற்றிடத்துக்குத் தகுதியானவர். ஆனால், அவரது உடல்நிலையும் சரியில்லை. அவர் நல்லா இருந்திருந்தா அவர்தான்ப்பா இன்னிக்கு சி.எம்" என்ற குரல் மக்களின் மத்தியில் இருந்து வரத்தான் செய்கிறது. இவரோடு ட்ரம்ப்பை ஒப்பிட்டதெல்லாம் வேற லெவல் மீம் என்றாலும்... ட்ரம்பின் முழக்கம் விஜயகாந்துக்குப் பொருந்தும்...மேக் அமெரிக்கா க்ரேட் எகெய்ன் என்றார்..இப்போது தே.மு.தி.க-வுக்கு இதே முழக்கம்தான் தேவை...மேக் விஜயகாந்த் க்ரேட் எகெய்ன்... இன்று இவருக்குப் பிறந்தநாள்... புதிதாய் பிறந்து வாருங்கள் விஜயகாந்த்...

அடுத்த கட்டுரைக்கு