Published:Updated:

கைநழுவிய அதிகாரம்... தினகரன் சறுக்கல்கள்... காரணங்கள்!

கைநழுவிய அதிகாரம்... தினகரன் சறுக்கல்கள்... காரணங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கைநழுவிய அதிகாரம்... தினகரன் சறுக்கல்கள்... காரணங்கள்!

கைநழுவிய அதிகாரம்... தினகரன் சறுக்கல்கள்... காரணங்கள்!

கைநழுவிய அதிகாரம்... தினகரன் சறுக்கல்கள்... காரணங்கள்!

கைநழுவிய அதிகாரம்... தினகரன் சறுக்கல்கள்... காரணங்கள்!

Published:Updated:
கைநழுவிய அதிகாரம்... தினகரன் சறுக்கல்கள்... காரணங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கைநழுவிய அதிகாரம்... தினகரன் சறுக்கல்கள்... காரணங்கள்!

“அரசியலில் எந்தப் பிரச்னையையும் சமாளிக்கக்கூடிய திறமை உள்ளவராகத் தினகரன் உள்ளார்” - சசிகலா குடும்பத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய சசிகலா புஷ்பாவே இப்படித் தினகரனைக் குறிப்பிட்டார். ஆனால், திறமையாகக் கட்சியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட தினகரன், இப்போது திணறிவருகிறார். காரணம் என்ன?

ரீஎன்ட்ரியே சிக்கல்!

1998 எம்.பி தேர்தலில் பெரியகுளம் வேட்பாளராகத் தினகரனை ஜெயலலிதா அறிமுகப்படுத்தியதற்குப் பிறகு, அ.தி.மு.க-வின் பொருளாளர் என்கிற அதிகார உச்சத்துக்கே  அவர் சென்றார். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதியுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அவரை ஓரம்கட்டினார்கள். இதனால், போயஸ் கார்டன் பக்கமே அவர் கால்பதிக்க முடியவில்லை. அப்செட் ஆன தினகரன், கட்சியிலிருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டார். புதுச்சேரி எல்லையில் குடியேறியவர்,  கட்டுமானத் தொழிலில் கவனம்செலுத்த ஆரம்பித்தார். ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டபோதுகூட, அப்போலோ பக்கம் அதிகம் தலைகாட்டாமல் இருந்தார். மனைவி அனுராதாவுடன் தினகரன் அப்போலோவுக்கு வந்தபோது, கட்சியினருடன் நெருக்கம் காட்டவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியைக் கட்டுப்படுத்த சசிகலா நினைத்தபோது, அவருக்கு ஆலோசனை வழங்க தினகரன் அழைக்கப்பட்டார். அப்போதுதான், கார்டனுக்குள் மறுபிரவேசம் செய்தார் தினகரன். ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பு, தான் பார்த்த அதே அ.தி.மு.க-வே இப்போதும் இருக்கிறது என்ற எண்ணத்தில் தினகரன் இருந்ததே முதல் தவறு. 2011-ம் ஆண்டு சசிகலா குடும்பத்தை ஜெயலலிதா ஓரம்கட்டியபிறகு, கட்சியின் மூத்த நிர்வாகிகள் அந்தக் குடும்பத்தினருடனான தொடர்பைத் துண்டித்திருந்தார்கள். கட்சியினர் முன்னணியினர் ஜெயலலிதாவிடமே நேரடியாகக் கருத்துகளைத் தெரிவிக்கும் சூழ்நிலை உருவாகியிருந்தது. இதனால், அப்போதிருந்த சசிகலா குடும்பத்தின் செல்வாக்கு கொஞ்சம் மங்க ஆரம்பித்தது. இதைத் தினகரன் கணிக்கத் தவறிவிட்டார்.

கைநழுவிய அதிகாரம்... தினகரன் சறுக்கல்கள்... காரணங்கள்!

ஆரவாரமான ஆரம்பம்!

கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகச் சசிகலாவால் தினகரன் அறிவிக்கப்பட்டதுமே, தினகரன் செய்த முதல் வேலை, தனக்கு ஆலோசகராகத் தளவாய் சுந்தரத்தை நியமித்ததுதான். ஆரம்பத்தில் தினகரனின் திட்டங்கள் எடுபட்டாலும், போகப்போகப் பிசுபிசுத்தது. தளவாய் சுந்தரமே எடப்பாடி அணிக்குத் தாவிவிட்டார். “அவருக்கு நம்பிக்கையாக இருந்தவரையே அவரால் தக்கவைக்க முடியவில்லை’’ என எடப்பாடி அணியினர் கமென்ட் அடித்தனர். தினகரனிடம் தளவாய் சுந்தரம் நெருக்கம்காட்ட முக்கியக் காரணமே, சசிகலாவுக்கு எதிராகத் திரும்பிய நாஞ்சில் சம்பத்தைச் சசிகலா பக்கம் கொண்டுவந்ததுதான். ஆனாலும் அதன்பிறகு, தளவாய் சுந்தரத்தின் காய் நகர்த்தல்கள் பெரிய அளவில் தினகரனுக்குக் கைகொடுக்கவில்லை.

 அவசர கதியில் ஆர்.கே.நகர்!

சசிகலா சிறைக்குப் போகும்முன் முதல்வர் பதவியை யாருக்குத் தருவது என்ற ஆலோசனைக் கூவத்தூரில் நடைபெற்றது. அப்போது, முதலில் செங்கோட்டையன் பெயரைத் தினகரன் சொல்லியிருக்கிறார். தாம் சொல்வதைக் கேட்டுச் செங்கோட்டையன் செயல்படுவார் எனத் தினகரன் தரப்பு நம்பியது. ஆனால், திடீரென எடப்பாடியை முதல்வர் பதவிக்கு முன்மொழிந்தார் சசிகலா. எடப்பாடியும் தினகரனுக்கு விசுவாசமாகத்தான் இருந்தார்.

ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தினகரனை ‘நிற்க வேண்டாம்’ எனக் கட்சியின் சில மூத்த நிர்வாகிகளே வலியுறுத்தினார்கள். அதை உதாசீனப்படுத்திக் களத்தில் இறங்கினார் தினகரன். இதனால், ‘முதல்வர் பதவிக்குத் தினகரன் குறிவைக்கிறார்’ என்ற எண்ணம் அனைவரிடமும் ஏற்பட்டது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. ஆனால், தன் பலத்தை ஆர்.கே.நகரில் காட்ட... தீவிரமாக  இயங்கினார் தினகரன். அவர், கரன்சியை அள்ளிவீசுவதாகச் செய்திகள் வந்தன. ‘‘பி.ஜே.பி-க்கு எதிரான போக்கு வேண்டாம்’’ என அமைச்சர்கள் சிலர், தினகரனிடம் எடுத்துச் சொல்லியும்,  தினகரன் கேட்கவில்லை. அவர் ஜெயிப்பார் என்கிற சூழல் உருவான நிலையில், பணப்பட்டுவாடா புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட பல இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டன.  தேர்தலே ரத்துசெய்யப்பட்டது. பி.ஜே.பி-க்கு எதிரான போக்கினால் இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், திகார் சிறைக்குச் செல்லும் நிலை தினகரனுக்கு ஏற்பட்டது.

சிறைக்குப் பின்!

சிறையிலிருந்து வெளியே வந்த தினகரனுக்குக் கட்சியினரிடம் அனுதாபம் ஏற்பட்டிருந்தது. அதை அறுவடை செய்யத் தினகரன் தவறிவிட்டார். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனைத் தொடர்புகொண்ட தினகரன், “சிறையிலிருந்து வெளியே வந்துள்ளேன். என்னை வந்து பார்க்க மாட்டாரா உங்க முதல்வர்” என்று எகிற, இந்தத் தகவலை அப்படியே எடப்பாடியிடம் தெரிவித்தார் இளங்கோவன். இது எடப்பாடிக்கும் தினகரனுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியது. தினகரன் சிறையிலிருந்த காலகட்டத்தில் எடப்பாடியைத் தங்கள் பக்கம் வளைத்திருந்தது மத்திய அரசு. தன்னைச் சந்தித்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியிடம் தினகரன் கடுமையாகப் பேசியது, கொங்குமண்டல அ.தி.முக-வினரை ஒன்று சேர்க்க வைத்தது. அதே நேரம், தன்னைச் சந்திக்க வந்த சட்டமன்ற உறுப்பினர்களிடம், “உனக்கு அமைச்சர் பதவி உறுதி. வாரியத் தலைவர் பதவி நிச்சயம்’’ என வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார். அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனதும் தினகரன் அணி கலகலக்க ஆரம்பித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைநழுவிய அதிகாரம்... தினகரன் சறுக்கல்கள்... காரணங்கள்!

உள்குத்து பார்த்த உறவுகள்!

கட்சிக்குள் தினகரன் வளர்வதை அவருடைய குடும்ப உறவுகளே ஆரம்பத்தில் விரும்பவில்லை. தினகரன் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் திவாகரன் குறியாக இருந்தார். சிறையிலிருந்து தினகரன் வந்தபோது, அவரைப் பார்ப்பதற்காகக் கட்சியினர் வரிசைக்கட்டி வீ்ட்டுக்குச் சென்றபோது, திவாகரன் தரப்பிலிருந்து அதற்குத் தடை போடப்பட்டது. தினகரன் தரப்பு ஆதரவுக் கூட்டங்களை நடத்தியபோது, மன்னார்குடியில் நடத்தமுடியாத சூழலைத் திவாகரன் ஏற்படுத்தினார். நடராசன் பேச்சுக்கு முன்பு தரப்பட்ட மரியாதை, பிறகு இல்லாமல் போனது. இப்படியான பிரச்னைகளால் தினகரனின் செல்வாக்குச் சரிய ஆரம்பித்தது.

ஆதரவாளர்களைக் கைவிட்டது!

எடப்பாடியுடன் மோதல் ஏற்பட்டதும் தனக்கு வேண்டியவர்களைக் கட்சிப் பொறுப்புக்குக் கொண்டுவருகிறேன் என்று அவசர அவசரமாகப் பொறுப்புகளை அறிவித்தார் தினகரன். இந்த அறிவிப்பினால், தினகரனுக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்களே அவருக்கு எதிராக மாறும் நிலை ஏற்பட்டது. உடுமலை ராதாகிருஷ்ணனின் மாவட்டத்தில், அவருக்கு எதிரியான சிவசாமியைப் பொறுப்பாளராக நியமித்தார்; கடம்பூர் ராஜூவுக்கு எதிராக மாணிக்கத்தை மாவட்டச் செயலாளராக அறிவித்தார்;  ராஜன் செல்லப்பாவுக்கு எதிராக மேலூர் சாமியை வளர்த்தார். இதனால், ஆட்சியில் இவருக்கு ஆதரவாக இருந்தவர்களே, இவருக்கு எதிராக மாறினார்கள். தினகரனால் பதவி பெற்றவர்களே, எடப்பாடி அணிக்குத் தாவினார்கள். இது தினகரனை மேலும் அப்செட் ஆக்கியது.

 சொன்னது ஒன்று, செய்தது ஒன்று!

“அணிகள் இணைவதற்கு அறுபது நாட்கள் கெடு” எனச் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் தினகரன் சொன்னார். இரண்டு அணிகளும் எழுபது நாள்களில் இணைந்துவிட்டார்கள். இரட்டை இலையை மீட்கவும் முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். ஆனால், இந்தச் சூழ்நிலையில் இரட்டை இலையை முடக்கும் வேலையில் தினகரன் தரப்பு இறங்கியது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ‘கட்சி இருந்தால் போதும் ஆட்சியைப் பற்றிக் கவலையில்லை’ என்ற நிலைக்குத் தினகரன் வந்ததும், அவருக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ-க்களையும் அமைச்சர்களையும் யோசிக்க வைத்தது. அதையே எடப்பாடி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, ‘ஆட்சியைக் கலைக்க நினைக்கும் தினகரனை எதற்காக ஆதரிக்கிறீர்கள்?’ எனக் கேட்டு அவர்களைத் தன்வயப்படுத்தினார்.

தி.மு.க ஆதரவு கோஷம்!

அ.தி.மு.க-வின் பால பாடமே தி.மு.க எதிர்ப்பு அரசியல்தான். ஆனால், தினகரனின் சமீபத்திய நடவடிக்கைகள் தி.மு.க-வினருடன் இணக்கமாகிவிட்டாரோ என்ற சந்தேகத்தை அ.தி.மு.க நிர்வாகிகளிடம் ஏற்படுத்தியது. இவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் கவர்னரைச் சந்தித்த பிறகு, சென்னையின் முக்கிய நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த அறையின் மேல்தளத்தில், ஸ்டாலின் மருகன் சபரீசன் தங்கியிருந்தது சந்தேகத்தை அதிகரித்தது. திவாகரனோ தன்பங்குக்கு, ‘‘தேவை ஏற்பட்டால் தி.மு.க மேடையிலும் நாங்கள் ஏறுவோம்’’ என்றார். இதையெல்லாம் அ.தி.மு.க-வின் அடிநாதத்துக்கு உலை வைப்பதாகக் கட்சியினர் பார்த்தனர். எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் விவகாரத்தில் தி.மு.க தொடர்ந்த வழக்கில் தினகரன் தரப்பு இணைந்துகொண்டது. மக்களை வசீகரிக்கக்கூடிய ஆற்றல் தினகரனுக்கு இருந்தாலும் தவறான ஆலோசனை, சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்தது போன்றவை தினகரன் சறுக்கலுக்குக் காரணமாக அமைந்துவிட்டன. இப்போது, திக்குத் தெரியாத காட்டில் பயணிப்பதைப்போலத் திணறுகிறார் தினகரன்.

அரசியலில் நிதானம் அவசியம். அதை அறியாதவரா தினகரன்?

- அ.சையது அபுதாஹிர்
படம்: ஆ.முத்துக்குமார்
ஓவியம்: பிரேம் டாவின்சி