Published:Updated:

“அம்மாவுக்குத் தெரியாமலேயே பிராக்ஸி கவர்மென்ட் நடத்தினார் சசிகலா!”

“அம்மாவுக்குத் தெரியாமலேயே பிராக்ஸி கவர்மென்ட் நடத்தினார் சசிகலா!”
பிரீமியம் ஸ்டோரி
“அம்மாவுக்குத் தெரியாமலேயே பிராக்ஸி கவர்மென்ட் நடத்தினார் சசிகலா!”

பொன்னையன் கிளப்பும் திகில்

“அம்மாவுக்குத் தெரியாமலேயே பிராக்ஸி கவர்மென்ட் நடத்தினார் சசிகலா!”

பொன்னையன் கிளப்பும் திகில்

Published:Updated:
“அம்மாவுக்குத் தெரியாமலேயே பிராக்ஸி கவர்மென்ட் நடத்தினார் சசிகலா!”
பிரீமியம் ஸ்டோரி
“அம்மாவுக்குத் தெரியாமலேயே பிராக்ஸி கவர்மென்ட் நடத்தினார் சசிகலா!”

.தி.மு.க-வின் செய்தித்தொடர்பாளர் பொன்னையன், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அமைச்சரவைகளில் இடம்பெற்றவர். அப்போலோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களில் தினமும் மீடியாக்களிடம், ‘அம்மா இட்லி சாப்பிட்டார்... அம்மா ஆரோக்கியமாக இருக்கிறார்... விரைவில் வீடு திரும்புவார்’ என்றெல்லாம் முழக்கமிட்டவர். ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், பொன்னையனிடம் சில கேள்விகளை வைத்தோம்.

‘‘உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... ஜெயலலிதா உடல்நிலைப்பற்றி நீங்கள் சொன்ன அத்தனையும் பொய்தானே?’’

‘‘அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளர் என்ற முறையில் கட்சியின் சார்பில் சொல்லப்படும் செய்திகளைத்தான் மீடியாக்களிடம் சொன்னேன். ‘அம்மா நன்றாக இருக்கிறார்... காலையில் இட்லி சாப்பிட்டார்’ என அப்போலோ செய்திக்குறிப்பு வெளியிட்டது. அம்மா உடல்நிலை குறித்து அன்றாடம் என்னிடம் சொல்லப்பட்ட தகவலைத்தான் சொன்னேன். அவை, தவறான செய்திகளென்றால் அந்தத் தவறைச் செய்தது யார்? உடல்நலத்துடன் இருந்த அம்மா, திடீரென மருத்துவமனையில் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டார் எனச் செய்தி வந்தபோது அதிர்ச்சியடைந்தோம். உண்மை நிலவரத்தை மீடியாக்களுக்கு எடுத்துச் சொல்ல, பலமுறை அம்மாவை அறையில் போய்ப் பார்க்க முயற்சிகள் செய்தேன். அம்மா அனுமதிக்கப்பட்டிருந்த மாடியின் வராண்டா வரையில்தான் போக முடிந்தது. அம்மாவால் ஒரு காலத்தில் விரட்டப்பட்டவர்கள், ‘நாங்கள்தான் கார்டியன்’ எனச் சொல்லிக்கொண்டு அன்று அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். ‘அம்மாவைப் பார்க்கவேண்டும்’ என அமைச்சர்கள், அன்றைய பொறுப்பு முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் போராடினார்கள். ஆனால், அம்மாவைப் பார்க்கவிடவில்லை.’’

“அம்மாவுக்குத் தெரியாமலேயே பிராக்ஸி கவர்மென்ட் நடத்தினார் சசிகலா!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘உங்களையெல்லாம் யார் தடுத்தது?’’

‘‘அப்போலோ மருத்துவர்களும், சசிகலாவும், அவருடைய குடும்பத்தினரும்தான்’’

‘‘மருத்துவமனைக்கு ஜெயலலிதாவைக் கொண்டுசெல்லும்முன், போயஸ்கார்டனில் என்ன நடந்தது?’’

‘‘வீட்டில் அம்மா எந்த நிலையில் இருந்தார்... வீட்டில் என்ன சிகிச்சை, யாரால் தரப்பட்டது... எதனால் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்? எல்லாமே சசிகலா குடும்பத்தினருக்குத்தான் தெரியும். தொண்டர்களுக்கோ, அமைச்சர்களுக்கோ, நிர்வாகிகளுக்கோ அம்மாவின் உடல்நிலை குறித்து சசிகலா குடும்பத்தினர் எதையும் தெரிவிக்கவில்லை. அந்த மர்மத்தைக் கண்டுபிடிக்கத்தான் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. விசாரணை முடிவில் அனைத்தும் வெளிப்படும். ராகுல் காந்தி, வெங்கய்ய நாயுடு, ஸ்டாலின், தமிழக கவர்னர், பிற மாநிலத் தலைவர்கள் எனப் பலரும் அம்மாவைப் பார்க்க வந்தார்கள். ‘நோய் தொற்று ஏற்படும்’ எனச் சொல்லி அவர்களைச் சந்திக்க விடவில்லை. தொற்றுப் பாதுகாப்பு உடையை அணியச் சொல்லி, இவர்களையெல்லாம் அனுமதித்திருக்கலாமே. டாக்டர்களும் சசிகலா குடும்பத்தினரும் அதே உடையுடன்தானே அம்மாவின் அறைக்குள் போய்வந்தார்கள்? அவர்களால் அம்மாவுக்குப் பாதிப்பில்லையா? வீட்டிலேயே அம்மாவுக்கு ஆபத்து ஏற்பட்டதா? இல்லை, அப்போலோவில் ஏற்பட்டதா? ஆபத்தை ஏற்படுத்திவிட்டு, அதை மூடிமறைப்பதற்காக யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லையா? இப்படி ஏராளமான கேள்விகள் பரவின. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை.’’

‘‘இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை இன்றைக்கு கிளப்புகிறீர்கள்? அதற்கான விடையைத் தேட முயற்சி செய்திருக்கலாமே?’’

‘‘நான் செய்த முயற்சிகளைப் பற்றித்தான் முன்பே சொன்னேனே. எங்களுக்கு அப்போதிருந்த கவலையெல்லாம், அம்மா நலமுடன் திரும்பி வரவேண்டும் என்பதுதான். அதற்காக மற்ற விஷயங்களை மனசங்கடத்துடன் பொறுத்துக்கொண்டோம். மருத்துவனையின் உள்ளே சிகிச்சை என்கிற பெயரில் நல்லது நடக்கிறதா... கெட்டது நடக்கிறதா... சசிகலா குடும்பம் தவறு செய்கிறதா... மருத்துவர் குழு தவறு செய்கிறதா என இந்தக் கோணங்களில் ஆராய்ச்சி செய்கிற மனோநிலையில் அப்போது நாங்கள் இல்லை’’

‘‘டாக்டர்களும் சசிகலாவும் தொடர்ந்து பொய் சொல்லித்தான் வந்தார்களா?’’

‘‘மக்களும் அதைத்தானே நினைக்கிறார்கள். இந்தக் கேள்விக்கான விடையை அப்போலோ மருத்துவமனையிடமும், சசிகலாவிடமும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் தான் கேட்கவேண்டும்’’

‘‘அ.தி.மு.க-வில் சசிகலாதான் எல்லாம் என்கிற நிலை ஏற்பட காரணம் என்ன?’’

‘‘அம்மா, ஐந்து வயது குழந்தை உள்ளம் உடையவர். தனக்கு உதவியாளராக சசிகலாவை வைத்திருந்தார். சசிகலா திறமைசாலி, புத்திசாலி. இதனால் அவரை வீட்டுப் பணிக்காக அம்மா பயன்படுத்தினார். அதைவிட, சசிகலா ஒரு தந்திரசாலியாக இருந்தார். எப்படியோ, அம்மாவை ஏமாற்றினார் என்றுகூட சொல்லலாம். படிப்படியாகக் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி, கட்சியைக் கையிலெடுத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் ‘பிராக்ஸி கவர்மென்ட்’ என்ற முறையில் ஆட்சியை மறைமுகமாக சசிகலா நடத்தினார். யாரை அவர் நினைக்கிறாரோ, அவர்தான் எம்.எல்.ஏ. யாரைக் கைகாட்டுகிறாரோ அவர்கள்தான் அமைச்சர்கள். தந்திரமாக எப்படியோ, பலர் மூலம் அம்மாவிடம் சொல்லவைத்து, தங்களுக்கு வேண்டிய செட்-அப்பை ஆட்சி எந்திரத்திலும் கொண்டுவந்தார் சசிகலா.’’

‘‘சசிகலாவின் நெட்-வொர்க்தான் என்ன?’’

‘‘கட்சி நிர்வாகிகள் தொடங்கி அமைச்சர்கள் தேர்வு வரையில் ஒவ்வொன்றிலும் தனக்கு வேண்டியவர்களை அம்மாவுக்குத் தெரியாமல் கொண்டுவந்தார் சசிகலா. அவரின் நெட்வொர்க்கில் ராவணன், ராமச்சந்திரன், பழனிவேல், கலியபெருமாள் என அவர்களின் உறவுக்காரர்களே இருந்தனர்.  அவர்களைத்தான் தமிழகத்தின் பல பகுதிகளில் நியமித்தார்கள். ‘தவறுகள் எதுவும் நடக்காமல் சூப்பர்வைசிங் செய்துகொள்கிறோம் அக்கா’ என அம்மாவிடம் சொல்லி சசிகலா ஏமாற்றினார். ஆட்சியையும் கட்சியையும் பிடிப்பதற்காகச் சதித்திட்டம் தீட்டப்பட்டதை உளவுத்துறை மூலம் அம்மா அறிந்ததும், சூழ்ச்சி வலையை அறுத்தெறிந்தார்.  சசிகலாவையும் அவருடைய குடும்பத்தையும் வீட்டைவிட்டே விரட்டினார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கினார். அம்மாவுக்கு இளகிய மனசு உண்டு அல்லவா? யார் மன்னிப்பு கேட்டாலும் மன்னிப்பார். அப்படித்தான் சசிகலா, ‘எனக்கு அரசியல் ஆசையெல்லாம் கிடையாது. உங்களுக்கு உறுதுணையாகப் பணி செய்கிற வாய்ப்பை மட்டும் தாருங்கள்’ என மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்தார். அதனால்தான் அவரை அம்மா மன்னித்தார். அதன்பிறகு வீட்டில் உதவியாளராகத்தான் இருந்தார் சசிகலா. தினகரன் உள்ளிட்டவர்களைக் கட்சியின் பக்கமும், கார்டன் பக்கமும் அம்மா அனுமதிக்கவே இல்லை’’

‘‘சூழ்ச்சி வலை அறுந்ததா... இல்லையா?’’

‘‘அம்மாவின் நடவடிக்கைக்குப் பிறகும் சூழ்ச்சி வலை அறுந்துவிடவில்லை. அவர்களின் சூழ்ச்சி அப்போலோவில் அப்பட்டமாக வெளிப்பட்டது. அம்மா எப்போது மறைந்துவிடுவார் என்று காத்திருந்தார்களோ, என்னவோ? ராஜாஜி ஹாலில் அம்மாவின் உடல் வைக்கப்பட்டிருந்த போது, அருகில் முதல்வரையோ, அமைச்சர்களையோ அனுமதிக்கவில்லை. அம்மாவால் நீக்கப்பட்ட, தண்டிக்கப்பட்ட சசிகலா குடும்பம்தான் உடலைச் சுற்றி நின்றுகொண்டிருந்தது. இதனைப் பார்த்து  தொண்டர்கள் கொதித்தார்கள். அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பது வலுவாக அப்போதுதான் தெரிய ஆரம்பித்தது. அப்போதுதான் அம்மா மரணத்தில் உள்ள சந்தேகங்களைத் தெளிவுப்படுத்த விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. எடப்பாடியும் பன்னீர்செல்வமும் கூட்டாக இணைந்து, சசிகலாவின் சூழ்ச்சியைக் கண்டறிய வேண்டும் எனக் களமிறங்கினார்கள். பிளவுப்பட்ட அணிகள் இணைந்தன. குடும்ப அரசியல் அறவே கூடாது எனக் கட்சி செயல்பாடுகள் துவங்கியுள்ளன’’

‘‘ ‘அம்மாவை அப்போலோவில் பார்த்தேன்... பார்க்கவில்லை’’ என அமைச்சர்கள் ஏன் குழப்புகிறார்கள்?’’

‘‘எனக்குத் தெரிந்து யாரையும் பார்க்கவிடவில்லை. அதையும்மீறி அம்மாவைச் சிலர் பார்த்தார்கள் என்றால், சசிகலா குடும்பத்தினரையும்மீறி அம்மாவை ரகசியமாக சென்று பார்த்திருக்க வேண்டும். இது உண்மையா என்பதை அவர்கள்தான் சொல்லவேண்டும். அல்லது, விசாரணை கமிஷன்தான் கண்டுபிடிக்கவேண்டும். அம்மா மறைந்தார் என்ற தகவல் கிடைத்து, முக்கால் மணி நேரம் கழித்து, அம்மாவின் உடலை லிஃப்ட் வழியாக வாகனத்துக்குக் கொண்டுசென்றார்கள். அப்போதுதான் நான், பன்னீர்செல்வம், உள்ளிட்டோர் கண்ணீருடன் பார்த்தோம். அமரர் ஆவதற்கு முன்பு அம்மாவை அப்போலோவில் நாங்கள் பார்க்கவில்லை’’

- ஆர்.பி.
படம்: சு. குமரேசன்