Published:Updated:

“கமல், ரஜினி அரசியலுக்கு வந்தா தாக்குப்பிடிப்பாங்களான்னு தெரியலை!”

“கமல், ரஜினி அரசியலுக்கு வந்தா தாக்குப்பிடிப்பாங்களான்னு தெரியலை!”
பிரீமியம் ஸ்டோரி
“கமல், ரஜினி அரசியலுக்கு வந்தா தாக்குப்பிடிப்பாங்களான்னு தெரியலை!”

நா.சிபிச்சக்கரவர்த்தி - படங்கள்: கே.ராஜசேகரன்

“கமல், ரஜினி அரசியலுக்கு வந்தா தாக்குப்பிடிப்பாங்களான்னு தெரியலை!”

நா.சிபிச்சக்கரவர்த்தி - படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
“கமல், ரஜினி அரசியலுக்கு வந்தா தாக்குப்பிடிப்பாங்களான்னு தெரியலை!”
பிரீமியம் ஸ்டோரி
“கமல், ரஜினி அரசியலுக்கு வந்தா தாக்குப்பிடிப்பாங்களான்னு தெரியலை!”

 “எப்பவுமே வேஷ்டிதான் கட்டுவேன். இப்போ காலில் வேஷ்டி அடிக்கடி தட்டிவிட்டுடுது. அதான் பேன்ட் போட்டுட்டேன். இது நல்லா வசதியா இருக்கு.அப்புறம் என்கிட்ட இந்தந்தக் கேள்விதான் கேட்கணும்னு எதுவுமில்லை. என்ன வேணாலும் கேளுங்க சார். பதில் சொல்ல நான் ரெடி.” விஜயகாந்த்தின் முகத்தில் அவ்வளவு உற்சாகம்!

“கமல், ரஜினி அரசியலுக்கு வந்தா தாக்குப்பிடிப்பாங்களான்னு தெரியலை!”

“நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் நீங்கள். இப்போது திரைத் துறையில் இருந்து கமல் அரசியலுக்கு வரப்போவதாகச் சொல்லியிருக்கிறார். அவர் தமிழக அரசியல் பற்றி பேசுவதையெல்லாம் கவனிக்கிறீங்களா?”

``அரசியல்ல யார் யாருக்கெல்லாம் ஆர்வம் இருக்கோ... எல்லாரும் வரட்டும் சார். ரஜினியும் வரட்டும். யார் வேண்டாம்னு சொன்னது? இன்னமும் நாலு பேரைச் சேர்த்துக்கிட்டு வரட்டும். ஒண்ணா சேர்ந்து கூட்டணிகூட வெக்கட்டும். அவங்க வர்ற வரைக்கும் நல்லா இருக்கும். வந்தபிறகுதான் இருக்கு வேடிக்கை. தனியா ஒரு கட்சி ஆரம்பிச்சு நடத்துறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத்தான் தெரியும். அவங்கெல்லாம் சம்பாதிச்ச பணத்தை செலவு பண்ண விரும்ப மாட்டாங்க சார். வந்த பிறகு இதைப் புரிஞ்சுப்பாங்க. வெளிய இருந்து பார்க்கும்போது ஈஸியா இருக்கும். உள்ள வந்தாதான் தெரியும் நோவு!” 

``இப்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்கினால், மக்கள் செல்வாக்கு பெற்று வெற்றி பெற முடியாதா?”

``அது எனக்குத் தெரியாது சார். நான் ஒரு கட்சி தொடங்கி, முட்டி மோதி முளைப்பேன். எவ்ளோ தடங்கல் வந்தாலும் தாக்குப்பிடிப்பேன்னு நினைச்சுதான் வந்தேன். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிட்டுதான் இதோ இன்னமும் நிக்கிறேன். எவ்வளவோ துரோகங்கள், பிரச்னைகள் பார்த்துட்டேன். அதையெல்லாம் சமாளிச்சுட்டுத்தானிருக்கேன். அந்த சக்தி எனக்கு இருக்கு. ஆனா, அவங்க தாக்குப்பிடிப்பாங்களான்னு எனக்குத் தெரியலை. ரஜினியோ, கமலோ இதுவரைக்கும் என் பிரச்னைகள் எதுலயும் தலையிட்டதில்லை. அதனால அவங்களைப் பத்தி நான் புதுசா சொல்ல ஒண்ணுமில்லை.”

“அரசியலிலிருந்து கருணாநிதி உடல்நிலை காரணமாக விலகி இருக்கிறார். ஜெயலலிதா இறந்துவிட்டார். போட்டிக்கு யாருமில்லாத நிலை என்பதால் அரசியலுக்கு வரலாம் என அவர்கள் நினைக்கிறார்களோ?”

``இங்கே நான் ஸ்டெடியா இருக்கேனே... சரி, கருணாநிதிக்கு உடல்நலம் சரியில்லை. ஜெயலலிதா இப்போ  இல்லை. ஆனா, அவங்க வழி நடத்திய கட்சிகள் இருக்கே சார். அப்புறம் ஏன் அவங்க ரெண்டு பேரை மட்டும் பாக்குறீங்க?  தி.மு.க-வில் அண்ணா இருந்தார். அண்ணா போன பிறகு, கலைஞர் வந்தார். அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர். இருந்தார். அவர் இறந்தபிறகு, ஜெயலலிதா வந்தார்.  அந்த ரெண்டு கட்சிகளும் இன்னமும் இருக்கு. அப்புறம் எப்படி யாருமில்லைனு சொல்ல முடியும். முக்கியமா தே.மு.தி.க இன்னமும் செம ஸ்ட்ராங்கா இருக்கு. இங்கே நான் தெம்பா இருக்கேன். இப்ப தமிழ்நாட்டுல வலுவான கட்சின்னா, அது நம்ம தே.மு.தி.கதான்.”

“தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் பயங்கர பரபரப்பா இருக்கு. தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருக்கிறார். இதையெல்லாம் எப்படிப் பார்க்கிறீங்க?’’

“கமல், ரஜினி அரசியலுக்கு வந்தா தாக்குப்பிடிப்பாங்களான்னு தெரியலை!”


“ எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செஞ்சது தப்புதான். ஏன் தப்புன்னா, அந்த 18 பேரும் வேற கட்சி மாறலையே... ஒருவேளை கட்சி மாறியிருந்தா, தகுதி நீக்கம் பண்ணியிருக்கலாம். முதலமைச்சரைத்தானே மாத்தணும்னு தினகரன் தரப்புல இருந்து சொல்றாங்க. இதுல தப்பு எங்க இருக்கு? எடப்பாடி குரூப் ஆட்சியைத் தக்கவைச்சுக்க என்ன வேணாலும் பண்ணுவாங்க. இப்ப சட்டசபைல வாக்கெடுப்பு நடத்தினா, சுலபமா ஜெயிச்சுடலாம்னு நினைக்கிறாங்க. ஆனா, அது நடக்காது.” 

“தமிழக அரசைப் பின்னால் இருந்து இயக்குவது பா.ஜ.க தான் எனப் பல கட்சிகளும் குற்றம்சாட்டி வருகிறார்களே?”

“எல்லாரும் அப்படித்தான் பேசிக்கிறாங்க. இங்க இருக்கும் முதலமைச்சரும், அமைச்சர்களும் மோடிகிட்டதான் போய் விழறாங்க. அதைத்தான் நாம கண்கூடாப் பார்த்துட்டிருக்கோமே. அது தப்புதான். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ரெண்டு பேருமே ஊழல்வாதிங்க. எடப்பாடிக்குச் சில டிமாண்டு வெச்சுதான் ஓ.பி.எஸ் மீண்டும் அவங்ககூடப் போய்ச் சேர்ந்திருக்கார். சில வாரங்களுக்கு முன்னாடிதான் எடப்பாடி ஊழல் ஆட்சி நடத்துறார், துரோக ஆட்சி செய்றார்னு சொன்னவர், ஒரே நாள்ல அந்தர் பல்டி அடிச்சுட்டார். இப்போ அந்த ஊழல், துரோகம் எல்லாம் சரியாகிடுச்சா? இதெல்லாம் எந்த விதத்துல நியாயம்? மக்கள்தான் இவங்க ஆட்சியைப் பார்த்துட்டு சிரிச்சுட்டிருக்காங்க. மக்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கு.

இப்ப இரட்டை இலையை முடக்கிட்டாங்க. ஜெயலலிதா இருந்த வரைக்கும் அந்தக் கட்சி ஒன் வுமன் ஷோ மாதிரி இருந்துச்சு. இப்ப தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆயிட்டான். ஜெயலலிதா இருந்த வரைக்கும் ஒரு பய வாய் திறக்கலை. ஏன், சசிகலாவே கம்முனு இருக்கிற இடம் தெரியாம இருந்துச்சு. ஓ.பி.எஸ் கையைக் கட்டிக்கிட்டு கப்சிப்புனு இருந்தார். அப்புறம் தர்ம யுத்தம்னு என்னமோ கதைவிட்டார். போதி மரத்துக்குக் கீழ புத்தர் உட்கார்ந்த மாதிரி, ஜெயலலிதா சமாதியில ஓ.பி.எஸ் உட்கார்ந்து தர்மயுத்தம் பண்ணுறாராம்மா... சுத்த வேஸ்ட். காமெடி பீஸ்!”

“கமல், ரஜினி அரசியலுக்கு வந்தா தாக்குப்பிடிப்பாங்களான்னு தெரியலை!”

“இந்த ஆட்சி நீடிக்குமா?”

“நிச்சயமா நீடிக்காது சார். மக்கள் விரும்பாத எந்த ஆட்சியும்  இனி நீடிக்கப்போறது  கிடையாது. என்னைப் பொறுத்தவரை இந்த ஆட்சி இந்த வருஷம் முடியறதுக்குள்ளயே கலைஞ்சிடும்.”

“நீங்க அரசியலுக்கு வந்த நோக்கம் எவ்வளவு தூரம் நிறைவேறியிருக்கு?”

வருத்தமான குரலில் “நான் அரசியலுக்கு வந்த நோக்கம் இன்னும் நிறைவேறவே இல்லை சார். என்னுடைய நோக்கமே மக்களுக்கு நல்லது செய்யணும்கிறதுதான். அதுதான் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இன்னும் செய்ய முடியலையே. என் தனிப்பட்ட முறையில் முடிஞ்ச அளவு அதைச் செஞ்சுட்டு இருக்கேன். ஆட்சிக்கு வந்து நாங்க செய்யணும்னா, மக்கள்தான் அதுக்கு ஓட்டுப்போடணும். மக்கள் எல்லாரும் காசு வாங்கிட்டு தேர்தல் நேரத்துல தவறான முடிவை எடுத்துடுறாங்களே. ஜெயலலிதா எல்லாத் தொகுதிலயும் நாங்க தோற்கணும்னே நினைச்சாங்க. அதுக்காக மக்களுக்குக் காசு கொடுத்துத்தான் ஜெயிச்சாங்க. காசு மட்டும் கொடுக்காம நேர்மையா தேர்தலைச் சந்திச்சிருந்தா, நிச்சயம் ஒரு தொகுதியிலகூட அ.தி.மு.க ஜெயிச்சிருக்க முடியாது.”

“தே.மு.தி.க மீது மக்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருப்பதாக நினைக்கிறீர்களா?”

‘`எங்கள்மீது  மக்களுக்கு நம்பிக்கை இருக்கு சார். உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்போது பாருங்க. உங்களுக்கே தெரியும். இப்ப என்னைப் பார்க்க வந்தவங்க எல்லாம் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிட்டிருக்கிறவங்கதான். அதைப்பத்திதான் பேசவந்தாங்க. எங்கள் வாக்கு சதவிகிதம் வேணும்னா குறைஞ்சிருக்கலாம். மக்கள் எங்கள்மீது வைத்த நம்பிக்கை ஒரு துளிகூடக் குறையலை.”

“மீண்டும் தமிழகத்தில் தேர்தல் வந்தால் தே.மு.தி.க தனியாக அந்தத் தேர்தலைச் சந்திக்கும் அளவுக்கு பலம் இருக்கிறதா? உங்கள் வியூகம் என்ன?” 

“கட்சியோட வியூகத்தை யாருமே வெளியே சொல்ல மாட்டாங்களே. நான் என்ன பண்ணாலும் தி.மு.க காப்பி அடிச்சுடறாங்க சார். நான் மாவட்டரீதியாப் பிரிச்சு நிர்வாகிகளை நியமிச்சேன். உடனே அவங்களும் அப்படிப் பண்றாங்க. இப்படி நான் என்ன பண்ணாலும், என்ன சொன்னாலும் உடனே காப்பி. அதனால வியூகத்தைச் சொல்லாமல் நம்ம பாட்டுக்கு நம்ம வேலையை மட்டும் பார்ப்போமே. தேர்தல் வரும்போது என் வியூகம் என்னன்னு சொல்வேன். தே.மு.தி.க பலமாத்தான் இருக்கு.”

“மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுடன் மீண்டும் இணைந்து தேர்தலைச் சந்திப்பீர்களா?”

“தமிழக மக்களுக்கு யார் நல்லது பண்ணணும்னு நினைக்கிறாங்களோ... அவங்க கூட கூட்டணி வைக்க வேண்டியதுதான். அதில் என்ன தப்பு இருக்கு. ஆனா, ஊழல் கட்சியான தி.மு.க., அ.தி.மு.க கூட இனி எந்தக் காலத்திலும் கூட்டணி வெக்க மாட்டோம்.”

“எதிர்க்கட்சியான தி.மு.க-வின் செயல்பாடு எப்படி இருக்கு?”

“தி.மு.க செயல்பாடு நத்திங் சார். வெறும் குப்பை. வேஸ்ட். இந்த ஆட்சியைக் கவிழ்க்கிறதுலயேதான் குறியா இருக்காங்க. அதைத் தவிர வேற எதையுமே பேச மாட்டேங்கிறாங்க. இந்த ஆட்சி அதுவாவே கவிழத்தான் போகுது. அதுக்குள்ள துடிச்சுட்டிருக்காங்க. எவ்வளவோ மக்கள் பிரச்னைகள் இருக்கு. சும்மா பேருக்கு அந்தப் பிரச்னைகளைப் பத்தி ஏதாவது சொல்லிட்டு, திரும்ப ஆட்சி கவிழ்ப்பிலேயே முழு நேரத்தையும் செலவழிக்க வேண்டியது. எல்லாம் ஹம்பக் சார். நாங்க வெளியே இருந்து ஒவ்வொரு பிரச்னைக்கும் குரல் கொடுத்துட்டிருக்கோம். அதை மக்களும் சைலன்ட்டா கவனிச்சுட்டுதான் இருக்காங்க.”

“நீட் பிரச்னை தொடங்கி பல பிரச்னைகளுக்கும் தி.மு.க பல போராட்டங்கள் நடத்திக்கொண்டுதானே இருக்கு?”

“அதெல்லாம்தான் ஹம்பக்னு சொல்றேனே. நீட் பத்தி நான் ஒண்ணு சொல்லியாகணும். நீட் நம்ம நாட்டுக்குத் தேவை. ஆனா, அனிதா இறந்ததால் எல்லாரும் கோபப்பட்டுட் டிருக்கோம். அந்த அனிதாப் பொண்ணைப் பற்றிப் பேசினாலே அழுகை வருது. (கண் கலங்குகிறது. கர்ச்சீப் எடுத்துத் துடைத்துக் கொள்கிறார்) அந்த 17 வயசு பொண்ணு போட்டோவைத் திரும்பத் திரும்ப டி.வி-ல போட்டுக் காமிக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கலை சார். அப்படிப் போட்டுப் போட்டுக் காட்டியிருக்கக்கூடாது சார்.

ஆனா, நீட் இருக்கிறதால்தான், நேத்து வரைக்கும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து மெடிக்கல் படிச்சவங்க, இன்னைக்கு வெறும் அஞ்சு லட்சத்துல படிக்க முடியுது. அதுனால நாம எல்லாத்தையும் குறை சொல்லக் கூடாது. ஆனா, நாடு முழுக்க ஒரே மாதிரி கல்வியைக் கொண்டுவராம நீட் கொண்டு வந்ததுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணம். எப்போதும் தமிழ்நாட்டுலதான் அதிக மார்க் எடுப்பாங்கன்னு சொல்லுவாங்க. ஆனா, இன்னைக்கு கல்வியில நாம பின்னாடிதான் இருக்கோம். நீட் பிரச்னைக்கு இதுதான் என் கருத்து.”

“கமல், ரஜினி அரசியலுக்கு வந்தா தாக்குப்பிடிப்பாங்களான்னு தெரியலை!”

“கருணாநிதியைப் போய்ப் பார்த்தீர்களா?”

“அவரைப் பார்க்கலை சார். நான் ஏன் போய்ப் பார்க்கலைன்னா... கருணாநிதி நான் கொடுத்த தங்கப் பேனாவை அதே மாதிரி கூட்டத்தைக் கூட்டி திருப்பிக் கொடுக்கிறேன்னு சொன்னார். ஆனா, தரலை. முக்கியமா இப்ப இவரைப் போய்ப் பார்த்து நான் என்ன பண்ணப்போறேன்? ஒண்ணுமே நடக்கப்போறது கிடையாது.”

“மோடி அரசாங்கத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?”

``மோடி அரசாங்கம் நல்லாத்தான் செயல்படுது சார். ஆனா, அவங்க தேர்தலப்போ சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேத்தலையே! நதிகளை இணைக்கப் போறதா சொன்னார். ஆனா, செய்யலை. தமிழ்நாட்டு நதிகளை இணைச்சாலே ஓரளவுக்குப் பிரச்னைகள் எல்லாம் இங்க தீரும்னு நான் நினைக்கிறேன்.”

“டிமானிடைஷேசன் தோல்வி, ஜி.எஸ்.டி வரி விதிப்பு எனத் தொடர்ந்து மக்களைக் கஷ்டப்படுத்தி வருவதாக இந்த அரசாங்கம்மீது குற்றச்சாட்டு இருக்கிறதே?”

“இந்தக் குற்றச்சாட்டு உண்மைன்னா... மக்கள் தங்களுடைய கோபத்தைத் தேர்தலப்ப காட்டிடுவாங்க. ஆனா, தேர்தலுக்கு முன்னாடி இந்தக் கட்சி ஏதாவது நல்லது பண்ணினா, உடனே அதையெல்லாம் மறந்திடுவாங்க. மக்கள் மறதி இயல்புதான். இதெல்லாம் உண்மையாகவே பிரச்னைன்னா மறக்காம தேர்தலின்போது மக்கள் தங்கள் வாக்குகளால் காட்டணும்.”

“நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு  வருடங்களில் வரப்போகிறது. மீண்டும் பா.ஜ.க-வுடன்  கூட்டணி வைப்பீர்களா?”


``நாடாளுமன்றத் தேர்தலும், தமிழகத் தேர்தலும் ஒண்ணா வைச்சா நல்லாருக்கும்னு நான் நினைக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு வருஷம் இருந்தாலும் நாள்கள் கடகடனு வேகமா ஓடிடும். தேர்தல் நெருங்கியதும் யாருடன் கூட்டணினு சொல்றேன் சார்.”

“சண்முக பாண்டியன் கூட ‘மதுரை வீரன்’ படத்துல நடிக்கிறீங்களா?”

``அவன் நடிச்ச முதல் படம் ‘சகாப்தம்’ படத்தில் ‘நான் நடிச்சா நல்லா இருக்கும்’னு சொன்னாங்க. ‘சரி’னு நடிச்சேன். இப்போ மறுபடி ‘மதுரை வீரன்’ படத்துலயும் நடிக்கக் கூப்பிட்டாங்க. ‘நான் நடிக்க மாட்டேன்’னு சொல்லிட்டேன்.  ஒரு படம் அவன் கூட நடிச்சுட்டேன். அது போதும். எனக்கு பதிலா  சமுத்திரகனியை நடிக்கவைக்கிறாங்க. நான் அதிலெல்லாம் தலையிடுறதில்லைங்க. சண்முகபாண்டியனுக்கு நடிகனாகப் பேர் வர வேண்டியது அவன் பொறுப்பு. அவன் முயற்சி பண்ணி வரணும். ஒரு அப்பாவா சப்போர்ட் பண்ண வேண்டியதுதான் என் பொறுப்பு. ”

“நீங்க இப்ப வர்ற படங்கள் எல்லாம் பார்க்கறீங்களா?”


“ஏதாவது இங்கிலீஷ் படத்தைப் பசங்க பார்த்துட்டிருப்பாங்க. நானும் கூட பார்ப்பேன். ‘மம்மி’னு என்னமோ ஒரு படம் பார்த்துட்டிருந்தாங்க. நானும் கொஞ்சம் பார்த்தேன். எனக்குப் பிடிச்சது. ஆனா, என் பசங்களுக்குப் பிடிக்கலை. இன்னொரு படத்துல ஒரு பொண்ணு ஓடிட்டே இருக்கும் சார். அந்தப் படமும் நல்லா இருந்துச்சு. பேரு சரியா நினைவுல இல்லை.”

“உங்க மூத்த பையன் விஜய பிரபாகரனும் பேட்மிட்டன், டாக் ஷோனு பல போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு வருகிறார். உங்களிடம் ஆலோசனை கேட்பாரா?”

உற்சாகமாகிறார். “அவன் பேட்மிட்டன் டீம்லதான் முதன்முதலா பி.வி.சிந்துவை அறிமுகப்படுத்தினான். இப்பகூட அந்தப் பொண்ணு இந்தியாவுக்காக விளையாடி வெள்ளி ஜெயிச்சிருக்கு. முதல்ல என்கிட்டதான் ‘பேட்மிட்டன் டீம் வாங்குறேன்’னு சொன்னான். ‘நீ எது வேணாலும் பண்ணுப்பா. அப்பா சப்போர்ட் பண்ணுறேன்’னு சொன்னேன்.  `கையில காசு இருந்தா தரேன். இல்லைன்னா பேங்க்ல லோன் வாங்கித் தரேன்’னு சொல்லிட்டேன். இப்ப ஸ்னூக்கர்னு ஒரு விளையாட்டுல டீம் ஆரம்பிக்கப் போறான். அதுலயும் நல்லா வருவான். கெட்டிக்காரன்.”

“பசங்களுக்கு எப்போ கல்யாணம்?”

“பொண்ணு பார்த்துட்டே இருக்கோம் சார். நல்ல இடமா அமைஞ்சா கல்யாணம் பண்ணிட வேண்டியதுதான்.”சிரிக்கிறார்.

“சோஷியல் மீடியால உங்களை வெச்சு வர்ற மீம்ஸ் எல்லாம் பார்த்தீங்களா?”


“இல்லை சார். அதெல்லாம் என்னன்னே எனக்குத் தெரியாது. என் பையன்தான் ஒருநாள் ‘டாடி, உங்களை வெச்சு மீம்ஸ் போடுறாங்க. அதைப் பார்த்தாலே எங்களுக்குக் கோபம் வந்திடும்’னு மொபைலைக் காட்டினான். `என்னடா இது பீன்ஸ்’னு வாங்கிப் பார்த்தேன். ஒண்ணும் புரியலை. மொபைலைத் தூக்கிப்போட்டுட்டேன். ‘டாடி, மொபைலைத் தூக்கிப்போடாதீங்க’ன்னு திரும்பவும் வந்து காமிச்சான். லைக், கமென்ட்னு என்னென்னமோ எழுதி இருந்துச்சு. அந்த மீம்ஸ் வார்த்தையே ரொம்ப நாளா பீன்ஸ்னுதான் நான் நினைச்சுட்டிருந்தேன். எனக்கு அதெல்லாம் புரியலை சார்.” 

“உங்களுக்கு உடல்நிலை சரியில்லைனு தொடர்ந்து தகவல் வருதே?

“ஆங்... சார். எனக்கு 60 வயசு. எல்லாருக்கும் வயசானா, நோய்நொடி வரத்தான் செய்யும். அதுக்கு என்ன பண்ண முடியும்? வயசாகிடுச்சுன்னு நான்  கட்சி வேலைங்களைச் செய்யாம இல்லையே... செஞ்சுட்டுத்தான இருக்கேன். இப்பகூடக் கட்சிக்காரங்ககூட பேசிட்டுத்தானிருந்தேன். நீங்களே அதைப் பார்த்தீங்கில்ல... நல்லா ஆரோக்கியமா இருக்கேன். அப்புறம் என்ன?”

“நீங்க சிங்கப்பூர் போய் கிட்னி மாற்றிக்கொண்டு வந்தீங்கனு...”

கோபமாகிறார்... “எப்படி என்னை வீழ்த்தணும்னே எல்லாரும் எலெக்‌ஷன் அப்போ பணம் கொடுத்தாங்களோ... அதே மாதிரி இப்ப  தொடர்ந்து என்னைப் பத்தி வதந்தி பரப்பிட்டிருக்காங்க. கிட்னி ஆபரேஷன் பண்ணா வயித்துலதான சார் ஆப்ரேஷன் பண்ணியிருப்பாங்க. நீங்களே பாருங்க, எங்கயாவது என் வயித்துல கிழிச்சிருக்காங்களானு (சட்டையைத் தூக்கிக் காண்பிக்கிறார்). எல்லாம் என்னைப் பழிவாங்கணும்னு செய்யற சதி. அது ஒரு நாளும் நடக்காது. தே.மு.தி.க காலம் வந்திருச்சு சார்!”