Published:Updated:

“தி.மு.க-வுடன் கசப்பு இல்லை!’’ - ரகசியம் உடைக்கும் வைகோ

“தி.மு.க-வுடன் கசப்பு இல்லை!’’ - ரகசியம் உடைக்கும் வைகோ
பிரீமியம் ஸ்டோரி
“தி.மு.க-வுடன் கசப்பு இல்லை!’’ - ரகசியம் உடைக்கும் வைகோ

இரா.தமிழ்கனல் - படம்: ப.சரவணகுமார்

“தி.மு.க-வுடன் கசப்பு இல்லை!’’ - ரகசியம் உடைக்கும் வைகோ

இரா.தமிழ்கனல் - படம்: ப.சரவணகுமார்

Published:Updated:
“தி.மு.க-வுடன் கசப்பு இல்லை!’’ - ரகசியம் உடைக்கும் வைகோ
பிரீமியம் ஸ்டோரி
“தி.மு.க-வுடன் கசப்பு இல்லை!’’ - ரகசியம் உடைக்கும் வைகோ

செம உற்சாகத்தில் இருக்கிறார் வைகோ. ஐக்கியநாடுகள் அவையின் மனித உரிமைப்  பேரவைக் கூட்டத்தில் தன் முழக்கங்களைத் தொய்வில்லாமல் முடித்துவிட்டு வந்திருக்கும் வைகோவைச் சந்தித்தேன்.

“தி.மு.க-வுடன் கசப்பு இல்லை!’’ - ரகசியம் உடைக்கும் வைகோ

‘`ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போது சிங்கள அதிகாரிகள் உங்களை அடித்துவிட்டார்கள் என்று செய்திகள் பரவியதே?’’

‘`இலங்கையில் சில சிங்கள தொலைக்காட்சிகள் அப்படிச் செய்தி சொன்னதாக நானும் கேள்விப்பட்டேன். அடிப்பது போல வந்தார்கள். இலங்கை அரசாங்கத்தால் ஜெனீவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் அவர்கள். இன அழிப்புச் செய்தவர்களும் அதில் இருந்தார்கள். மாநாடு தொடங்கிய நான்கைந்து நாள்கள் அமைதியாக இருந்தார்கள். ஈழப்பிரச்னையை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பிப்பது தெரிந்ததும் ஆத்திரப்பட்டார்கள். ‘மனித உரிமை ஆணையர் ஈழத்துக்கு வந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும்’ என்று நான் சொன்னதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

நான் பேசி முடித்து வந்ததும் என்னைச் சூழ்ந்து கொண்ட ஓரு சிங்களப் பெண், ‘இலங்கைக்கு வந்து பார்க்கச் சொல்ல நீ யார்?’ என்று கேட்டார். ‘எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு’ என்றேன். ‘எல்.டி.டி.இ அமைப்பும் நீங்களும் கொலைகாரர்கள்’ என்றார். ‘நீங்கள்தான் ரத்தவெறி பிடித்த பிசாசுகள்’ என்றேன். அதற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் வந்துவிட்டார்கள்.

நான் பேசுவதை மட்டும் அந்தச் சிங்களவர்கள் வீடியோ எடுத்தார்கள். அவர்கள் பேசுவதை எடுக்கவில்லை. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் யாரும் விவாதம் செய்யக்கூடாது. நான் விவாதம் செய்து சண்டை போட்டதாகக் காட்ட நினைத்தார்கள். அதன்பிறகு மூன்று நாள்களும் நான் பேசும்போது எனக்கு முன்னால் உள்ள இருக்கையில் அமர்ந்து கிண்டல் செய்வதும், கோபம் ஏற்படுத்துவதுமாக இருந்தார்கள்.’’

‘`இதுபோன்ற மனித உரிமை மாநாடுகள் ஏராளமாக நடந்துவிட்டன. இதனால் ஏதாவது பயன் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?”


‘`உலக சமுதாயத்தின் மனசாட்சியை ஈழத்தமிழர் இன்னலை நோக்கி ஈர்ப்பதற்கு இம்மாநாடு பயன்பட்டது. பத்து முறை நான் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஈழப்பிரச்னை குறித்து நான் பேசினாலும் ஒவ்வொரு உரையிலும் வேறுவேறு தகவல்களைச் சொன்னேன். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை வலியுறுத்தினேன். போர்க்குற்றம் என்று சுருக்கிவிடக்கூடாது என்றேன். இதுபோன்ற மாநாடுகள் மூலமாகத்தான் தீர்வினை எட்ட முடியும்!’’

‘`நவம்பர் 20-ல் மாநில சுயாட்சி மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளது எதற்காக?”


‘`இந்தியாவில் இதுவரை  இல்லாத ஆபத்தான அரசியல் சூழல் காணப்படுகிறது. இந்த நாட்டில் இந்திய தேசிய இனம் என ஒன்று இல்லை; இங்கு தமிழர் தேசிய இனம், மராத்தி தேசிய இனம், வங்காளி தேசிய இனம், குஜராத்தி தேசிய இனம் எனத் தனித்தனியான தேசிய இனங்கள்தாம் நிறைய இருக்கின்றன.

இந்தியன் என்ற தேசிய இனம் இல்லை.   ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனித்தனியான கலாசாரம், அரசியல், பொருளாதார வளர்ச்சி நிலைமை இருக்கிறது. ஆனால், மத்திய பா.ஜ.க அரசோ சம்ஸ்கிருதத்தையும் - இந்தியையும் கட்டாயமாகத் திணித்து, நாட்டின் பன்முகத் தன்மையை காலிசெய்யப் பார்க்கிறது. ஒற்றையாட்சியைக் கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கிறது. இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து இதுதான்.

பா.ஜ.க-வின் இந்த  ஒற்றைத்துவக் கடும்போக்குக்கு எதிராகக் கர்நாடக மாநிலத்தில் கடுமையான போராட்டம் நடத்துகிறார்கள். நமக்கும் அவர்களுக்கும் காவிரிப் பிரச்னை இருக்கலாம். அதற்காக இந்த முழக்கங்களுக்குப் பின்னால் இருக்கும் நியாயத்தை நாம் புறக்கணிக்க முடியாது. வடகிழக்கு மாகாணங்கள் அனைத்தும் இந்த ஒற்றைத்தன்மைக்கு எதிராக இருக்கின்றன. காஷ்மீர், மேற்குவங்கம், கேரளா ஆகியவையும் எதிர்க்கின்றன. தமிழகம் எப்போதும் இந்த ஒற்றைத்தன்மைக்கு எதிரான திராவிட இயக்கத்தின் மண். இந்த நிலையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்தவேண்டியது அவசியம்.

அகில இந்தியச் செல்வாக்கு இல்லாத கட்சிகள் மாநிலங்களை அடிமைகளாக நடத்த முடியாது. அதற்காகத்தான் பல்வேறு மாநிலங்களிலிருந்து செல்வாக்கான தலைவர்களைத் தமிழகம் நோக்கி அழைத்து வந்து மாநில சுயாட்சி மாநாட்டை நடத்தவிருக்கிறோம்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“தி.மு.க-வுடன் கசப்பு இல்லை!’’ - ரகசியம் உடைக்கும் வைகோ

‘`நீங்களே சொன்னீர்கள், ‘சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ எங்கள் கட்சிக்குப் பிரதிநிதி இல்லை’ என்று. அப்படிப்பட்ட நீங்கள் இப்படி ஒரு மாநாட்டை நடத்தினால் விமர்சனம் வராதா?”

‘’மாநில சுயாட்சியைப் பற்றிப் பேசும் தகுதி பெற்ற மாநிலம் தமிழகம்தான். இந்த மாநாட்டை நடத்த எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்றால், 2001-ல் இந்திய நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வந்தவன் நான். இந்த 67 ஆண்டுக்காலத்தில் என்னைத் தவிர யாரும் அதைச் செய்யவில்லை. மத்திய  அரசின் உரிமைப் பட்டியல்,  மாநில அரசின் உரிமைப் பட்டியல், பொதுப்பட்டியல் என்ற மூன்று உண்டு. மத்திய அரசின் உரிமைப்பட்டியல் நீங்கலாக அனைத்தையும் மாநிலங்களுக்குத்தான் தர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வாதிட்டவன் நான். அரசியல்சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் ஆட்சிமொழி ஆக்கவேண்டும்; அதன் முதல் கட்டமாகத் தமிழ் மொழியை ஆட்சிமொழி ஆக்கவேண்டும் என்ற எனது குரலும் நாடாளுமன்றப் பதிவேடுகளில் இருக்கிறது.  இதை வலியுறுத்திதான் இந்த மாநாடு!’’

‘`ஜெயலலலிதா இல்லாத இப்போதைய அதிமுக ஆட்சி எப்படி இருக்கிறது?”

‘’முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா துணிச்சலான பெண்மணி. காவிரிச் சிக்கலில், மீத்தேன் திட்டத்தில் மத்திய அரசைக் கடுமையாக எதிர்த்தவர். அவர் இருக்கும்வரை பா.ஜ.க தமிழகத்தில் வாலாட்டவில்லை. ஆனால், இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் அச்சத்தில் இருப்பதைப்போலத்தான் இருக்கிறது. எதையும் சந்திக்கத் துணிவு இல்லாமல் இருக்கிறார்கள். இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி, தமிழகத்துக்குக் கேடுசெய்யும் திட்டங்களை மத்திய அரசு கொண்டுவரப் பார்க்கிறது.

திராவிடர் இயக்கத்தின் நூற்றாண்டு, கடந்த நவம்பர் 20-ம் தேதி முடிவடைந்தது. அதையொட்டி திராவிடர் இயக்கத்தின் தலைவர் டி.எம்.நாயரின் சிலையை அரசு சார்பில் வைக்கவில்லை. ம.தி.மு.க சார்பில் அவரின் சிலையை வைக்க அனுமதி கேட்டு முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பினோம். இதுவரை பதில்கூடக் கிடைக்கவில்லை. இன்னும் அதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். இன்றைய ஆட்சியாளர்களை ஜெயலலிதாவுடன் ஒப்பிட முடியாது!”

“தி.மு.க-வுடன் கசப்பு இல்லை!’’ - ரகசியம் உடைக்கும் வைகோ

‘`யார் உண்மையான அ.தி.மு.க என்ற மோதல்தான் இங்கு அதிகமாக நடக்கிறதே?”

‘`அ.தி.மு.க. என்ற உட்கட்சிக்குள் நடக்கும் விவகாரங்களில் தலையிட்டுக் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால், மத்தியில் அதிகாரத்தை வைத்துள்ளோம் என்ற மமதையில் அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட்டு ஆதாயம் அடைய நினைக்கும் பா.ஜ.க.வுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். வடகிழக்கிலும் இரண்டு மாகாணத்தில் இப்படித்தான் கொல்லைப்புறமாக வந்து ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. அதேபோன்ற பாணியைத் தமிழகத்தில் கடைப்பிடிக்கப் பார்க்கிறார்கள். கொஞ்சநஞ்சம் இருக்கும் ஓட்டும் பறிபோகப்போவது நிச்சயம்!”

‘`சட்டமன்றத் தேர்தல் சூழல் தொடங்கிவிட்டது; ம.தி.மு.க எந்தக் கூட்டணியில்?”


‘`எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் நன்மை, ஈழத்தமிழர்களின் நலன், தமிழகத்தின் வாழ்வாதாரத்துக்குப் பயன்படக்கூடிய ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் கூட்டணிக் கொள்கை. இதில் மிகவும் கவனமாகவும் கடந்தகால நடப்புகளைக் கருத்தில்கொண்டும் எச்சரிக்கையாக முடிவெடுப்போம்.”

‘`கருணாநிதியைப் போய்ப் பார்த்தீர்கள்... முரசொலி விழாவில் கலந்து கொண்டீர்கள். இதை வைத்துப் பார்க்கும்போது கடந்த காலங்களில் தி.மு.க-வுடன் இருந்த கசப்பு ம.தி.மு.க-வுக்கு மாறியிருக்கிறது என எடுத்துக்கொள்ளலாமா?”

‘`கடந்த காலம் என்றால்... நான் தி.மு.க-வில் இருந்த 29 ஆண்டுக்காலமும் அந்தக் கடந்த காலத்தில் அடக்கம்தானே?! தி.மு.க-வுடன் ம.தி.மு.க முரண்பட்ட காலம் இருந்தது, உண்மைதான். நடந்தது நடந்ததாக இருக்கட்டும்.. நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். அடுத்து என்ன என்பதுதான் இப்போதைக்கு முக்கியமானது. கலைஞரைச் சந்திக்கச் சென்ற அன்று வாசலுக்கு வந்து சகோதரர் ஸ்டாலின் என்னை அழைத்துச் சென்றார். ஐ.நா-வில் சிங்களர்கள் என்னைத் தாக்க முற்பட்ட சேதி அறிந்ததும் முதல் கண்டன அறிக்கை வந்தது செயல்தலைவர்  சகோதரர் மு.க.ஸ்டாலினிடமிருந்துதான். தி.மு.க-வுக்கும் ம.தி.மு.க-வுக்கும் இடையில் இப்போது நெருடல் எதுவும் இல்லை. முந்தைய கசப்பான நிலைமை இன்று இல்லை.”