Published:Updated:

கருணாநிதியின் ஒரு நாள்!

கருணாநிதியின் ஒரு நாள்!

ப.திருமாவேலன்

கருணாநிதியின் ஒரு நாள்!

ப.திருமாவேலன்

Published:Updated:
கருணாநிதியின் ஒரு நாள்!

லைஞர் மு.கருணாநிதிக்கு இப்போது இரண்டு தமிழ்கள் மட்டும்தான் கையிருப்பு.

சங்கத்தமிழ், குறளோவியத்தமிழ், காப்பியத் தமிழ், வீரத்தமிழ், விவேகத்தமிழ், காதல் தமிழ், கற்பனைத்தமிழ், மேடைத்தமிழ், மாநாட்டுத் தமிழ், விவாதத்தமிழ், வாக்குவாதத்தமிழ், சட்டசபைத்தமிழ், எதிர்ப்புத்தமிழ், ஆதரவுத் தமிழ், கவிதைத்தமிழ், நாடகத்தமிழ், சிறுகதைத் தமிழ், நாவல் தமிழ், சரித்திரக்கதைத்தமிழ், பத்திரிகைத்தமிழ், கடிதத்தமிழ், நகைச்சுவைத் தமிழ், ஆதாரத்தமிழ், அலங்காரத்தமிழ், உணர்ச்சித்தமிழ், எழுச்சித்தமிழ்... என எல்லாமும் தவழ்ந்த அவரது நாவில் இப்போது இருப்பது சிரிப்புத்தமிழ்,  அழுகைத் தமிழ் என்ற இரண்டு மட்டும்தான்.

அன்பானவர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். இன்னும் அன்பானவர்களைப் பார்த்தால் அழுகிறார். இந்த இரண்டு மட்டுமே தன்னிடம் எஞ்சி இருக்கின்றன என்பதை அவரே உணரவும் செய்கிறார். அந்த உணர்வுதான் அவரை சோகப்படுத்துகிறது.

எப்போதுமே கூடு தங்காத பறவை, கருணாநிதி. வேலையே இல்லாவிட்டாலும் பறந்துகொண்டே இருப்பது அவரது பழக்கம். சி.ஐ.டி. காலனி வீட்டில் அதிகாலையில் எழும் கருணாநிதி, தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் வந்து நடைப்பயிற்சி செய்துவிட்டு, கோபாலபுரம் வந்து காலை உணவை முடித்துவிட்டு, கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் சென்று உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதித் தந்துவிட்டு, மதிய உணவுக்காக சி.ஐ.டி. காலனி வந்து, சிறிது ஓய்வுக்குப் பிறகு 4 மணிக்கு கோபாலபுரம் வந்து, பார்வையாளர்களைச் சந்தித்துவிட்டு, 6 மணிக்கு மீண்டும் அண்ணா அறிவாலயம் வந்து, 8.30 மணிக்கு சி.ஐ.டி. காலனி வீட்டுக்குச் செல்வது என்ற பயணத்திலேயே இருந்தார். முப்பது ஆண்டுகளாக மு.க-வின் மாறாத ஷெட்யூல் இது.

கருணாநிதியின் ஒரு நாள்!

முதுகுவலி, கால்வலி ஏற்பட்டு இயல்பாய் நடக்கமுடியாத நிலை பத்து ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. உடல் எடையைத் தாங்கும் சக்தி காலுக்கு இல்லாமல்போனது. எனவே இரண்டு பக்கமும் இரண்டு பேர் தாங்க நடந்து சென்றார். அதன் பிறகு கூச்சம் பார்க்காமல், கஷ்டம் பார்த்து சக்கர நாற்காலியில் பயணப்பட்டார். முன்பு சொன்ன பயணத் திட்டத்தில் நடைப்பயிற்சி குறைந்ததே தவிர மற்றவை தொடர்ந்தன.

முதலமைச்சராக இருந்த காலகட்டமாக இருந்தால் தலைமைச் செயலகம், அதிகாரிகள் சந்திப்பு, அரசுத் திட்டத்  தொடக்கம் என்ற பரபரப்பு. தேர்தல் காலமாக இருந்தால் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை, பொதுக் கூட்டங்கள், வெளியூர்ப் பயணங்கள் என்ற சுறுசுறுப்பு. இரண்டும் இல்லாத காலத்திலும் தன்னைத்தானே பதற்றத்தில் வைத்துக்கொள்வார் அவர். ‘பிரச்னை இல்லேன்னாதான் பிரச்னையே’ என்று சொல்லிக்கொள்வார். இப்படிப்பட்ட பிரச்னைப்புயல், ஒரே மையம் கொண்டால் எப்படிப்பட்ட மர்ம மௌனம் சூழுமோ அப்படிப்பட்ட இறுக்கத்தில் இருக்கிறார் கருணாநிதி.

தாயின் வயிற்றில் பத்து மாதம் அமைதியாக இருந்த பிறகு... 95 வயதில் கடந்த பத்து மாதங்களாக ஒரே இடத்தில் இருக்கிறார் கருணாநிதி. நெஞ்சுச்சளி காரணமாக அவருக்கு 2016 செப்டம்பரில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நெஞ்சுச்சளி அகற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ச்சியான சுவாசத்துக்காக ஸ்டெத்ராடமி பொருத்தப்பட்டது. உடல் செய்ய வேண்டிய சுவாசத்தை அந்தக் கருவி செய்யும். பொதுவாக, குறிப்பிட்ட காலம் வரை அதை வைத்திருந்து சுவாசம் சீரானதும் எடுத்துவிடுவார்கள். ஆனால், கருணாநிதியின் வயதைக் கருத்தில் கொண்டு நிரந்தரமாகவே பொருத்திவிட்டார்கள். கழுத்துக்குக் கீழே துளை போடப்பட்டு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால்தான் அவரால் பேசமுடியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கருணாநிதியின் ஒரு நாள்!

லேசாகப் பேச முயன்றால் இருமல் வந்துவிடுகிறது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவி அவர். கருணாநிதியிடம் வாழ்த்து பெற வந்திருந்தார். “இந்தப் பொண்ணுக்கு நீங்கதான் பேர் வெச்சீங்க. இப்ப டாக்டர் படிக்கப் போறா!” என்று சொல்கிறார்கள். இது கருணாநிதிக்கு நன்கு புரிகிறது. ‘வாழ்க... வாழ்க’ என்று சொல்ல வருகிறார்... ‘வாழ்...’ என்றுதான் குரல் வருகிறது. ‘க’ வரவில்லை அதற்கு மேல் முடியவில்லை. தலையைத் தொட்டு வாழ்த்துகிறார். இப்படி அடையாளம் கண்டுகொள்கிறார். இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன் இதுபோன்ற நிலைமை இல்லை. அவரால் உணர முடியாத நிலைமை இருந்தது.

ராகுல் வந்தபோது ராகுலைப் பார்த்தார். அவர் இருக்கும் பக்கம் முகத்தைத் திருப்பினார். ராகுல்தான் கை கொடுத்தார். வைகோ வந்த போது, உணர்வில் கொஞ்சம் தெளிவு இருப்பது தெரிந்தது. வைகோவுக்கு முன்னதாக ம.தி.மு.க அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி வந்தார். அவரைப் பார்த்ததும் கருணாநிதி அடையாளம் கண்டுகொண்டார். துரைசாமி பழைய ஆள். வைகோ வந்ததும் நன்றாகவே தெரிந்தது. கண்ணீர் தாரை தாரையாக வெளியேறியது. ‘முரசொலி விழாவுக்கு வைகோ வர்றாரு’ என்று ஸ்டாலின் சொன்னதும், அதைப் புரிந்து சிரித்தார். முரசொலி பவளவிழா மலரை ஸ்டாலினுடன் முரசொலி ஆசிரியர் குழுவினர் எடுத்துச் சென்று பக்கம் பக்கமாகப் புரட்டிக் காண்பித்தனர். சில புகைப்படங்களின் மேல் அவர் பார்வை குத்தி நின்றது.

கடந்த வாரத்தில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கையையொட்டி ஸ்டாலினுடன் மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் சென்றபோது இன்னும் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டு வருவது தெரிந்தது. ஸ்டாலின் ஏதோ சொல்ல முழுக்கப் புரிந்துகொண்டதுபோல் சிரித்தார். மு.க. தமிழரசு மகன் நடிகர் அருள்நிதி மகனை, செல்வி தூக்கி வந்தார். அந்தப் பையனை அவர் மடியில் வைத்ததும் மகிழ்ச்சி கூடுகிறது. ஏதோ ஒன்றைச் சொல்ல வந்து அவருக்குப் புரியவில்லை என்று இரண்டு மூன்று முறை சொன்னால், கோபமும்படுகிறார். ‘தெரியுது தெரியுது’ என்பது மாதிரி தலையை அசைக்கிறார்.

கருணாநிதியின் ஒரு நாள்!

தன்னைச் சுற்றிலும் ஆட்கள் இருக்கும்போது மகிழ்ச்சியிலும், தனிமையில் வெறுமையிலும் இருக்கிறார் கருணாநிதி. தினமும் காலையில் அறிவாலயம், முரசொலி அலுவலகம் செல்வதற்கு முன் கோபாலபுரம் வந்து கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் செல்கிறார் ஸ்டாலின். அவரோடு துரைமுருகன், பொன்முடி, எ.வா.வேலு, ஆ.ராசா போன்றவர்கள் வருகிறார்கள். மதிய நேரத்தில் ராஜாத்தி அம்மாள் வருகிறார். சென்னையில் இருந்தால் கனிமொழியும் வந்து விடுவார். செல்வி, மு.க.தமிழரசு ஆகியோர் எப்போதும் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர வேறு யாரும் கருணாநிதியைப் பார்க்க அனுமதி இல்லை. ஆட்சிக் காலத்திலும் அரசியல் காலத்திலும் அவரின் செயலாளர்களாக இருந்த ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ், சண்முகநாதன் இருவரும் தினமும் கோபாலபுரம் வந்து விடுகிறார்கள். பாதுகாவலர்கள் பாண்டியன், வினோத், பிள்ளை மூவரும் உடன் இருக்கிறார்கள். உதவியாளர் நித்யா இருக்கிறார். காவேரி மருத்துவமனை, டாக்டர் மோகன் காமேஸ்வரன் மேற்பார்வையில் சிகிச்சை தொடர்கிறது. ரஞ்சித் என்பவர் தலைமையிலான மருத்துவப் பணியாளர்கள் கட்டுப்பாட்டில்தான் கருணாநிதி முழுமையாக இருக்கிறார்.

உணவு முழுக்கவே திரவம்தான்.  கருணாநிதிக்கு எப்போதுமே செரிமானப் பிரச்னை உண்டு. அதனால் திரவ உணவே சரியானது என்று முடிவெடுத்துவிட்டார்கள். காலை 10 மணிக்கும், இரவு 8 மணிக்கும் மஞ்சள் சால்வை போட்டு உட்கார வைக்கப்படுகிறார் கருணாநிதி. மற்ற நேரங்களில் படுக்கையில்தான். சில நேரங்களில் டி.வி. போடப்படுகிறது. அதைக் கவனிக்கிறார். அவராகவே தூங்கிவிடுகிறார். விழிக்கும் நேரம், தூங்கும் நேரம் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

கருணாநிதியின் ஒரு நாள்!

கருணாநிதி தங்க வைக்கப்பட்டிருப்பது கோபாலபுரம் வீட்டின் முதல் மாடியில். வாரத்துக்கு ஒருமுறை தரைத்தளத்துக்கு அவர் அழைத்து வரப்படுகிறார். அங்குதான் தாயாளு அம்மாள் இருக்கிறார். அவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார். சில நிமிடங்கள் இருவரும் பார்த்தபடி இருக்கிறார்கள். மறுபடியும் கருணாநிதி, மேல்மாடிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இதைத் தவிர வெளிக்காற்று என்பதே இல்லை. எப்போதாவது காரில், சென்னையைச் சுற்றிக் காட்டினாலோ,  திடீரென்று ஒரு பெரும் கூட்டத்தை அவருக்குக் கூட்டினாலோ மனதளவில் நல்லது என்றும் சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். ஆனால், மருத்துவர்கள், நோய்த்தொற்று ஏற்படலாம் என்று பயப்படுகிறார்கள். கருணாநிதியைப் பார்த்ததும் ஒரு பெரும் கூட்டம் கைதட்ட அது அவரைப் பழைய கருணாநிதியாக மீட்டெடுக்கும் என்பது தி.மு.க-வினரின் ஆசையாக இருக்கிறது. ‘அன்பார்ந்த’ என்று தொடங்கி... ‘உயிரிலும் மேலான என் அன்பு உடன்பிறப்புகளே’ என்று சொல்லிக் கைதட்டலை அள்ளக் கூடிய சூழ்நிலை இல்லாவிட்டாலும் அவரது இதயத்துக்கு இந்தக் கைதட்டல் இதமாக இருக்கும்.

கருணாநிதிக்குப் பிரச்னையே முதுமைதான். வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. அகில இந்திய அரசியலைத் தீர்மானித்த அடல் பிஹாரி வாஜ்பாய், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி ஆகிய மூன்று தலைவர்களும் இதே நிலைமையில்தான் வீடுகளில் இருக்கிறார்கள். இவர்களுக்கும் கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம் என்றால், அவர்கள் எதுவுமே உணரும் நிலையில் இல்லை. கருணாநிதி உணர்கிறார். அவருக்குப் பல சாதனைகள் உண்டு. அதில் இதுவும் ஒரு சாதனைதான்.

‘மிக நீண்ட தூரம் ஓடியவனால்தான் அதிக உயரம் தாண்ட முடியும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்வது. நீண்ட தூரம் ஓடியதால் அதிக உயரம் தாண்டிக்கொண்டுதானிருக்கிறார், அதை அனுபவிக்க முடியாமல்!