Published:Updated:

மண்டலத் தலைவர்களுக்கு ஆப்பு! கிலியில் மதுரை மாநகராட்சி

மண்டலத் தலைவர்களுக்கு ஆப்பு! கிலியில் மதுரை மாநகராட்சி
மண்டலத் தலைவர்களுக்கு ஆப்பு! கிலியில் மதுரை மாநகராட்சி

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் மீது புகார்கள் குவிந்துவருவதால், அவர்களை ஒட்டுமொத்தமாக மாற்றும் முடிவில் இருக்கிறதாம் கட்சித் தலைமை. அதனால், கிலியில் உறைந்துபோயுள்ளனர் மண்டலத் தலைவர்கள்.
 

மண்டலத் தலைவர்களுக்கு ஆப்பு! கிலியில் மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சி மூன்றாம் மண்டலத் தலைவர் மு.ராஜபாண்டியன், தெப்பக்குளம் பகுதியில் வீடு கட்டிய மருந்துக் கடைகாரர் தங்கராஜ் என்பவர் கமிஷன் தரவில்லை என்பதற்காக, மண்டல அலுவலகத்துக்கு அழைத்துவந்து ஆதரவாளர்களோடு சேர்ந்து தாக்கினார். அவர் மீது வழக்குப் பதிவு செய்துத் தேடிவந்த மதுரை போலீஸார், சென்னையில் பதுங்கியிருந்த அவரை 3ஆம் தேதி இரவு கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.
 
இந்த நடவடிக்கைக்கு முன்பே பகுதிச் செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜபாண்டியன் நீக்கப்பட்டார். இந்த நிலையில் இப்போது அவர் சிறைக்கும் சென்றுவிட்டதால், இனிமேலும் மண்டலத் தலைவர் பதவியில் தொடரவைப்பது கட்சிக்கு அவமானம் என்று நினைத்த அ.தி.மு.க. தலைமை, அவரிடம் இருந்து ராஜினாமா கடிதம் வாங்கும் முயற்சியில் இருக்கிறது.

இதனால் மூன்றாம் மண்டலத்தில் உள்ள அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குஷியாகிவிட்டனர். அடுத்த மண்டலத் தலைவராக வர வேண்டும் என்பதற்காக, சென்னைக்கு வந்து தங்களுக்குத் தெரிந்த அமைச்சர்களிடம் சிபாரிசுக்காக அலைகின்றனர். இதில், மகளிர் அணியைச் சேர்ந்த கவுன்சிலர் அம்சவள்ளி, பகுதிச் செயலாளர்களான ராஜலிங்கம், ஜெயபால் ஆகியோர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
 
இதற்கிடையே, மற்ற மண்டலத் தலைவர்கள் சிலரின் அட்டகாசங்களை ரிப்போர்ட்களாக கட்சித் தலைமையின் கவனத்துக்கு அனுப்பி  வைத்துள்ளனர் கட்சியினர் சிலர். அதனால், மண்டலத் தலைவர்களை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டு, புதியவர்களை நியமிக்கும் ஆலோசனையில் இருக்கிறதாம் தலைமை. அதோடு சில கவுன்சிலர்களின் தி.மு.க. தொடர்புகளும் தலைமைக்குப் புகார்களாக போய் சேர்ந்துள்ளதாம். அவர்களும் விரைவில் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்படலாம் என்கின்றனர்.
 
செ.சல்மான்

படம்:
பா.காளிமுத்து