Published:Updated:

`ஸ்டாலின் முடிவு தற்காலிகம்தான்!' - மேலிடத்தைச் சமாளிக்கும் தமிழிசை

`ஸ்டாலின் முடிவு தற்காலிகம்தான்!' - மேலிடத்தைச் சமாளிக்கும் தமிழிசை
`ஸ்டாலின் முடிவு தற்காலிகம்தான்!' - மேலிடத்தைச் சமாளிக்கும் தமிழிசை

தி.மு.க தரப்பிலிருந்து, சில கோரிக்கைகளை முன்வைத்தால், அந்தக் கோரிக்கைகளை மேலிடத்தில் கூறி, ஒவ்வொன்றாக நிறைவேற்றும் முடிவில் இருக்கிறார் தமிழிசை.

பா.ஜ.கவுக்கு எதிராக ஸ்டாலின் பேசிய வார்த்தைகளால் மிகுந்த கவலையில் இருக்கிறார் தமிழிசை. `ஸ்டாலின் முடிவு தற்காலிகமானதுதான். பா.ஜ.க அணிக்குள் அவர் வருவார் என நம்புகிறேன்' என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார் அவர். 

தி.மு.கவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, உற்சாகத்துடன் வலம் வருகிறார் மு.க.ஸ்டாலின். பொதுக்குழுவில் பா.ஜ.கவுக்கு எதிராக அவர் பேசிய பேச்சு, காங்கிரஸ் வட்டாரத்தின் உற்சாகத்தை அதிகரிக்க வைத்துவிட்டது. அதேநேரம், `தி.மு.கவுடன் பா.ஜ.க கூட்டணி அமைய வேண்டும்' எனப் பாடுபட்டு வந்த தமிழிசைக்கு, ஸ்டாலின் நிலைப்பாடு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுகுறித்து ஆதரவாளர்களிடம் பேசிய தமிழிசை, `இது ஒரு தற்காலிக நிலைப்பாடுதான். ஸ்டாலின் நிச்சயம், நம் பக்கம் வருவார். இன்று மோடியுடன் சந்திரசேகர் ராவ் இல்லையா. நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் இல்லையா. எனவே, ஸ்டாலின் நிலைப்பாடு மாறும் என உறுதியாக நம்புகிறேன்' எனக் கூறியிருக்கிறார். 

``தமிழ்நாட்டில் மோடிக்குக் கூட்டணியே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தமிழிசையின் நோக்கம் நிறைவேறிவிடக் கூடாது எனக் கட்சிக்குள் இருக்கும் அவரது எதிர்ப்பு அணியினர் தெளிவாக உள்ளனர்.  `வலுவான கூட்டணியை உருவாக்குவதன் மூலம் பலம் வாய்ந்தவராக தமிழிசை மாறிவிடக் கூடாது'  என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம். பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியதை, வெண்ணெய் திரண்டு வந்த நேரத்தில் தாழி உடைந்த கதையாகத்தான் அவர் பார்க்கிறார். மீண்டும் தி.மு.க கூட்டணிக்கான முயற்சிகளில் தமிழிசை ஈடுபட்டு வருகிறார். இப்போதும் அவர் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார். தி.மு.க தரப்பிலிருந்து, சில கோரிக்கைகளை முன்வைத்தால், அந்தக் கோரிக்கைகளை மேலிடத்தில் கூறி, ஒவ்வொன்றாக நிறைவேற்றும் முடிவில் இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, கூட்டணிக்குள் தி.மு.க-வைக் கொண்டு வந்துவிட முடியும் எனவும் கணக்கு போடுகிறார்" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர். 

``ஸ்டாலின் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தவே செய்யும். மத்திய அரசின் ஆதரவில்லாமல், இந்த ஆட்சியை ஸ்டாலினால் கவிழ்க்க முடியாது. நேற்று எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், `மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் தலையாட்டுவது கிடையாது; அம்மா பின்தொடர்ந்த வழியிலேயே நாங்கள் செல்கிறோம் எனக் கூறியிருந்தார். மோடி எதிர்ப்பு நிலைப்பாட்டில்தான் எடப்பாடி பழனிசாமியும் உறுதியாக இருக்கிறார். கிறிஸ்டி ரெய்டு, நெடுஞ்சாலைத் துறை ரெய்டு, பன்னீர்செல்வத்தை நிர்மலா சீதாராமன் சந்திக்காதது என பா.ஜ.க-வின் பாராமுகத்தை அ.தி.மு.க-வினரும் உணர்ந்து வைத்துள்ளனர்.

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில், `எம்.எல்.ஏ-க்கள் நீக்கம் செல்லாது' என நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், ஆளுநர் முடிவைப் பொறுத்தே காட்சிகள் மாறும். வித்யாசாகர் ராவ் கூறியதைப் போல, `இது அவர்களின் உள்கட்சி பிரச்னை' என்று சொல்வதற்கும் வாய்ப்பு அதிகம். ஆக, மத்திய அரசு நினைத்தால் மட்டுமே தமிழக அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். தங்களுக்கு லாபமில்லாத விஷயத்தில், பா.ஜ.க மேலிடம் ஆர்வம் செலுத்துவது இல்லை. `இந்த அரசைக் கவிழ்ப்பதில் ஸ்டாலினுக்கு விருப்பமில்லை' என தினகரன் கூறுவதும் தினகரனுக்கு எதிராக தி.மு.க-வினர் பேசுவதும் ஒரு வகையில் சரியானதுதான். அரசியலுக்காக இவர்கள் இவ்வாறு பேசினாலும், மொத்த லகானும் மோடியின் கைகளில்தான் இருக்கிறது" என்றார் விரிவாக. 

`பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாடு' குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க முக்கிய நிர்வாகி ஒருவர், ``ஆட்சியைவிடவும் கட்சியை வலுப்படுத்துவதில்தான் அதிக ஆர்வத்தைக் காட்டுகிறார் ஸ்டாலின். கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளைப் பகைத்துக் கொண்டால், அரசியலில் அனைத்துமே கேள்விக்குறியாகிவிடும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். எனவேதான், மோடி எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் தன்னை வலுவாக முன்னிறுத்திக் கொள்கிறார் ஸ்டாலின். இந்தப் புள்ளியைவிட்டு அவர் விலகிவிட்டால், அவரது அரசியல் எதிரிகளுக்கு வாய்ப்பு கிடைத்ததுபோல் ஆகிவிடும்.

தினகரனையும் அவர் போட்டியாகத்தான் கருதுகிறார். `இந்த அணியைப் பிரிக்க முடியாது' என அவர் கூறுவதும் தினகரனை நோக்கித்தான். ஆனால், ஸ்டாலினுடன் இருக்கும் சீனியர்கள் சிலர், `இப்போதே வயதாகிவிட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு கொடுக்குமா என்றுகூடத் தெரியாது. எனவே, எடப்பாடி அரசை இப்போதே வீழ்த்த வேண்டும்' எனப் பேசி வருகின்றனர். ஸ்டாலினோ, `கட்சியை இன்னும் வலுப்படுத்திவிட்டு, 3 வருடம் கழித்து தேர்தலை எதிர்கொள்ளலாம்' என்ற மனநிலையில் இருக்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் பறிபோனதால், அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதுதான் ஸ்டாலின் முன்னிருக்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது" என்றார் விரிவாக.
 

அடுத்த கட்டுரைக்கு