Published:Updated:

மிஸ்டர் கழுகு: பூகம்பத்துக்குப் பின் அமைதி!

மிஸ்டர் கழுகு: பூகம்பத்துக்குப் பின் அமைதி!

பிரீமியம் ஸ்டோரி
##~##

''இந்த சென்னை மாநகர் கட் அவுட்களால் திமிலோகப்பட்டு வெகு காலம் ஆகிவிட்டது. கனிமொழிக்காக இத்தனை ஸ்டில்களை எப்படித்தான் சேகரித்தார்களோ தி.மு.க.வினர்'' - புன்னகையுடன் நம் முன் ஆஜரானார் கழுகார்! 

''நீர்தான் சென்னை விமான நிலையத்தில் என்னென்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே சொல்லி இருந்தீரே?'' என்று ஞாபகப்படுத்தினோம்.

''ம்... சனிக்கிழமை அன்று மதியம் சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கும் கனிமொழியை வரவேற்க கருணாநிதி போவாரா இல்லையா என்று கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி வீடுகளுக்கு மத்தியில் நடக்க ஆரம்பித்த யுத்தத்தைத்தான் நான் சொன்னேன். நீர் அதற்கு 'ஏர்போர்ட் பூகம்பம்’ என்று தலைப்புக் கொடுத்தீர். உண்மையில் அன்றைய விமான நிலையம் பூகம்பம் வந்து அடங்கிய அமைதியில்தான் இருந்தது. 'தலைவரையே போக வேண்டாம் என்று தடுத்தார்கள். ஆனால், மொத்த தி.மு.க.வும் வந்துவிட்டது பார்த்தீரா?’ என்று என்னைப் பார்த்தே முன்னாள் அமைச்சர் ஒருவர் கண்ணடித்தார்!''

மிஸ்டர் கழுகு: பூகம்பத்துக்குப் பின் அமைதி!

''தலைகளை ஒவ்வொருவராகப் பார்த்​தேன். என் நினைவாற்றலுக்கு உட்பட்டு வீரபாண்டி ஆறுமுகத்தை மட்டும்தான் காணவில்லை. பேராசிரியர் அன்பழகனும் ஆற்காடு வீராசாமியும் வீட்டில் காத்திருந்​தார்கள். மற்றபடி மாஜி மந்திரிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆஜர்.''

''அழகிரியும் தயாநிதியும் இல்லையே?''

''அவர்கள்தான் டெல்லியில் சிறப்பான வரவேற்புக் கொடுத்தவர்கள் ஆச்சே! கனிமொழி வந்து இறங்கியதும் ஸ்டாலின் தனது கையில் இருந்த சால்வையைக் கொடுத்துவிட்டு... யாரையும்

மிஸ்டர் கழுகு: பூகம்பத்துக்குப் பின் அமைதி!

கவனிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார். வயதான நிலையில் தயாளு அம்மாள் வந்ததுதான் பலரது புருவங்களை உயரவைத்தது. எப்போதும் சிரித்த முகத்தோடு வரும் செல்வி, இறுக்கமாக இருந்தார். தமிழரசு எப்போதும் போல இயல்பாக இருந்தார். விமான நிலையத்தில்  இருந்து கனிமொழி நேராக அறிவாலயம் சென்று கட்சி முக்கியஸ்தர்களின் வரவேற்பைப் பெற்றுக்கொள்வதுதான் முந்தைய தினம் வரையில் திட்டமாக இருந்தது. ஆனால் அவரை வரவேற்க, கருணாநிதியே விமான நிலையம்  செல்வார் என்று தகவல் வர... நிலைமையே மாறிப்போனது. அதனால்,  நேரம் ஆக ஆக அதிகமாகிக்கொண்டே இருந்தது கூட்டம். இந்த வரவேற்பு வைபோகங்கள் நடந்துகொண்டு இருக்கும்போதே ஸ்டாலின், தயாளு, செல்வி குழுவினர் வெளியே வந்துவிட்டார்கள்.''

''அறிவாலயத்தில் தொண்டர் சந்திப்பு நடந்திருந்​தால், விமான நிலைய நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாமே?''

''அப்படி எதுவும் தேவை இல்லை என்று சிலர் தடை போட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். அதையும் மீறி இவ்வளவு கூட்டம் வந்தது கனிமொழி ஆதரவாளர்கள் மனதில் மகிழ்ச்சியைக் கூட்டி இருக்கிறது. 'நாங்க எதுவுமே ஆர்கனைஸ் பண்ணாமலேயே இந்தக் கூட்டம் வந்துள்ளது. உண்மையில் அனைத்து ஊர்களில் இருந்தும் திரட்டி இருந்தால் கூட்டம் எகிறி இருக்கும்’ என்று சொல்லிக்கொண்டார் ஒருவர். 'ஜனவரி மாதத்துக்குப் பிறகு கனிமொழியை வைத்து அனைத்து ஊர்களிலும் கூட்டங்கள் ஏற்பாடு செய்ய இருக்கிறோம். அப்போது பாருங்கள் அவருக்கான ஆதரவை’ என்றும் சொல்​கிறார்கள்.''

''ஜனவரி என்றதும் சங்கமம் ஞாபகம் வருகிறதே?''

''சென்னை சங்கமம் குழுவினர் பறையடித்து, செண்டை மேளம் முழங்கி உற்சாக வரவேற்பு கொடுத்​தார்கள். சி.ஐ.டி. காலனியில் கனிமொழியைச் சந்தித்த அவர்கள், 'இந்த வருடம் சென்னை சங்கமம் நடக்குமா?’ என்று ஏக்கத்துடன் கேள்வி எழுப்ப... 'நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு மாத காலம்தான் இருக்கிறது. நான் தனிப்பட்ட முறையிலாவது அந்த நிகழ்ச்சியை நடத்துவேன். கவலைப்பட வேண்டாம்’ என்று ஆறுதல் சொல்லி அனுப்பினாராம்'' என்ற கழுகார், அடுத்த சப்ஜெக்ட் மாறினார்!

மிஸ்டர் கழுகு: பூகம்பத்துக்குப் பின் அமைதி!

''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு நாடகம் நடத்துவதாக முதல்வர் ஜெயலலிதா தீராத கோபத்தில் இருக்கிறார். 'என் மீதுள்ள கோபத்தில்தான் காங்கிரஸ் அரசு இப்படி நடந்துகொள்கிறது’ என்கிறாராம்!''

மிஸ்டர் கழுகு: பூகம்பத்துக்குப் பின் அமைதி!

'' முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு இல்லை என கேரள அரசியல் கட்சியினர் அணைக்குள் நுழைந்து அட்டூழியம் செய்தது முதல்வரை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது. கடந்த 3-ம் தேதி  தமிழகத்திற்கு கேரளா, இறுதி எச்சரிக்கை செய்தது என்பதைவிட... இறுதி யுத்தத்தைத் தொடங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும். 'புதிய அணை கட்ட வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் போன கேரள இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்... தேக்கடி புலிகள் வாகன சோதனைச் சாவடி கேட்டை உடைத்து, தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்படும் மதகுப் பகுதிக்குள் நுழைந்து, கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து நொறுக்கினர். இன்னொரு குரூப் மதகினை ஏற்றி இறக்கும் கியர் பாக்ஸ் டவர் மீது ஏறி, அங்கிருந்த ரோப்பில் தொங்கினார்கள். பல மணி நேரம் நடந்த இந்தக் கூத்துகளை, பாதுகாப்பு பணியில் இருந்த கேரள போலீஸார் வேடிக்கை பார்த்ததால், அச்சமடைந்த தமிழகப் பொதுப் பணி மற்றும் மின் வாரிய அலுவலர்கள், வீடுகளைப் பூட்டிப் பதுங்கிக்கொண்டனர். மதியம் 12.30 மணிக்குத் துவங்கிய இந்தக் கூத்தினை கேரளத் தொலைக்காட்சிகள் நேரடியாக  ஒளிபரப்பு செய்ததுதான் எரிச்சலான காரியம். இவர்கள் முடிந்ததும் கேரள பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள் கடப்பாறை, மண்வெட்டியுடன் வந்து பேபி அணையையே தாக்க ஆரம்பித்தார்கள். அவர்களை போலீஸார் பிடித்து, பத்திரமாக அனுப்பிவைத்தனர். இவ்வளவு நடந்தும், கேரள அரசு பெயரளவுக்குக்கூட வழக்கு எதுவும் பதியவில்லை. உடனடியாக இந்தத் தகவல் நம்முடைய முதல்வருக்குத் தெரிவிக்கப்​பட்டது.''

''என்ன சொன்னாராம்?''

''மாற்று யோசனையே செய்யாமல், 'நாம் புகார் கொடுப்போம்’ என்றாராம் முதல்வர். அன்று மாலை குமுளி போலீஸ் ஸ்டேஷனில் நம்முடையை பொதுப் பணித் துறை அதிகாரிகள் புகார் கொடுத்தனர். ஆனால், அந்தப் புகார் குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.''

''ஓஹோ!''

''புகார் கொடுத்தால் மட்டும் போதுமா? நம்முடைய அதிகாரிகள் அங்கு வந்திருக்க வேண்டாமா என்று அந்தப் பகுதியில் இருப்பவர்கள் கவலையுடன் சொன்னார்களாம். 'இவ்வளவு பரபரப்பு நடந்தும், தேனி மாவட்ட அதிகாரிகளோ... தமிழக அமைச்சர்களோ பெரியாறு அணை பக்கம் தலைகாட்டவில்லை.’ என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள். கேரளத்தில் வாழும் தமிழர்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. 'மத்திய நீர்ப் பாசன அமைச்சகம் ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையை தமிழக அரசு நிராகரிக்கும்’ என்று சொன்னதால், ஜெயலலிதாவின் உருவப் படங்கள் பல இடங்களில் எரிக்கப்படுகின்றன. தொடுபுழா நீதிமன்றம் முன்பு காங்கிரஸ்காரர்களே ஜெ. கொடும்பாவியை எரித்தனர். அந்த வழியாக வந்த இடுக்கி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சூட்டுசாமி என்பவரின் காரை மறித்துத் தாக்கி இருக்கிறார்கள். அந்தக் காரில் ஜெயலலிதா படம் இருந்தததாம். அதைப் பார்த்ததும் ஆவேசமாகி  பெட்ரோல் ஊற்றித் தீ வைக்க முயன்றார்களாம். நீதிமன்றப் பாதுகாப்பில் இருந்த போலீஸார் தடுத்ததால்  அசம்பாவிதம் நடக்கவில்லை. இது குறித்து தொடுபுழா போலீஸில் இவர் கொடுத்த புகாரை வாங்க மறுத்தார்கள். அதனால், நீதிமன்றப் பதிவாளரிடம் புகார் செய்துள்ளாராம். தகவல்கள் ஜெயலலிதாவை அதிகக் கோபத்துக்கு உள்ளாக்கின. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைக்காக உண்ணாவிரதம் உட்காரவும் ஜெயலலிதா முடிவெடுக்​கலாம் என்கிறார்கள். 'அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து, பிரதமரைச் சந்திக்கலாம்’ என்ற யோசனையை முதல்வர் நிராகரித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்'' என்ற கழுகார், ''எந்தத் துறை... அதிகாரியின் பெயர் என்ன என்று கேட்காதீர். விஷயத்தை மட்டும் உள்வாங்கிக்கொள்ளும்!'' என்ற பீடிகையோடு அடுத்த செய்தியைச் சொன்னார்!

''அதிகாரிகளுக்கு இருக்கிற துணிச்சல் அலாதி​யானதுதான்... என்று இந்த நியூஸை அறிந்தபோது எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். கருணாநிதியால் கொண்டுவரப்பட்டு ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் ஒன்று இலவச கலர் டி.வி.. ஏற்கெனவே கொடுத்த ஒப்பந்தப்படி 1.70 லட்சம் டி.வி.க்களை மட்டும் கடைசியாக வாங்கிக் கணக்கை முடிக்கலாம் என்று முதல்வர் உத்தரவிட்டார். அவர்களும் கப்பலில் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். அவர்களிடம் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் நான்கைந்து அதிகாரிகள் டீம் போட்டு டீலிங் பேசி இருக்கிறார்கள். 'சொன்னதைவிட 1,000 ரூபாய் கம்மியாகத்தான் தர முடியும், சம்மதம்னா கொடுங்க... இல்லைன்னா உங்க நாட்டுக்கே கொண்டுபோயிடுங்க’ என்று சொன்னதாகவும், 'இங்க இருந்து திருப்பிக் கொண்டுபோறதைவிட கிடைச்சதை வாங்கிக்கொள்வோம்’ என்று அவர்கள் சம்மதித்ததாகவும் இதனால் எவ்வளவோ கைமாறியதாகவும் முதல்வர் காதில் ஒரு தகவல் சொல்லப்பட்டதாம். 'ஏற்கெனவே லேப்டாப் விஷயத்தில் நான் கறாராக நடக்க உத்தரவிட்டேன். இப்ப இதில் பண்றாங்களா?’ என்று கொந்தளித்தவர், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது விசாரணை வளையத்தை முடுக்கி உள்ளதாகச் சொல்கிறார்கள் கோட்டையில்'' என்றபடி கழுகார் விட்டார் ஜூட்!

படங்கள்: சு.குமரேசன், கே.கார்த்திகேயன்

மத்தியப் பாதுகாப்பு.. யோசிக்கும் பிரதமர்!

மிஸ்டர் கழுகு: பூகம்பத்துக்குப் பின் அமைதி!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக திங்கள் கிழமை காலையில் பிரதமர் மன்மோகன்​சிங்கை வைகோ சந்தித்தார். அவருடன் அவரது கட்சி எம்.பி.கணேசமூர்த்தியும் உடன் இருந்துள்ளார். இந்த அணை எவ்வளவு உறுதியானது என்பதை ஆதாரங் களுடன்சொன்ன வைகோ, '' அணையை உடைப்போம் என்று கேரள அரசாங்கம் சொல்​கிறது. அப்படிப்பட்ட மாநிலத்தின் போலீஸார் எப்படி அந்த அணையை உண்மையாக பாதுகாப்பார்கள். இந்த அணையை அவர்கள் ஒருவேளை உடைத்தால் அன்றுதான் இந்திய ஒருமைப்பாடு உடையத் தொடங்கும்’ என்று வைகோ சொல்ல... 'அதை நினைத்துத்தான் நான் கவலையோடு இருக்கிறேன்’ என்றாராம் பிரதமர்.

'நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சோவியத்தைப் போல இந்தியா சிதறுண்டு போகும். எனவே மத்திய பாதுகாப்பை போட வேண்டும்’ என்று வைகோ சொல்ல... 'அது பற்றி ஆலோசிக்கிறேன்’ என்றாராம் பிரதமர்.

 சான்விட்ச் கொடுத்த கவர்னர்

மிஸ்டர் கழுகு: பூகம்பத்துக்குப் பின் அமைதி!

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக கவர்னரைச் சந்தித்தார் விஜயகாந்த். அவருடன் அவரது கட்சி எம்.எல்.ஏ-க்களும் ஆளுநர் மாளிகையில் அணிவகுத்​தார்கள். முல்லைப் பெரியாறு, இந்தியக் கடல் எல்லையில் மீனவர்கள் அடையும் பாதிப்பு குறித்த இரண்டு மனுக்களை கவர்னரிடம் கொடுத்​தார் விஜயகாந்த். ''இவை இரண்டையும் மத்திய அரசுக்கு அனுப்புகிறேன்'' என்று மையமாகச் சொன்னாராம் ரோசய்யா.

சான்விட்ச், வடை, காபி எனக் கொடுத்து ராஜ உபசாரம் செய்தாராம். 'நெட் ரிசல்ட் இதுதான்!’ என்று கிண்டலடித்தாராம் ஒரு எம்.எல்.ஏ.!

 மாற்றம் ஏன்?

மிஸ்டர் கழுகு: பூகம்பத்துக்குப் பின் அமைதி!

உளவுத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த பொன்.மாணிக்கவேல் திடீரென விழுப்புரத்துக்கு தூக்கி அடிக்கப்பட்டு இருக்கிறார். பதவி ஏற்ற மூன்று மாதங்களுக்குள் என்ன நடந்ததாம்?

முல்லைப் பெரியாறை மையப்​படுத்தி தயாரிக்கப்பட்ட டேம் 999 படம் குறித்து, முன்கூட்​டியே தகவல் சொல்லி எச்சரிக்கை செய்யவில்லை என்று அரசுக்குக் கோபமாம். இதோடு ஸ்டாலின் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வர இருந்த தகவலும் முறைப்படி போய்ச் சேரவில்லையாம். இதற்​காக சமீபத்தில் உள்துறைச் செயலாளர் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து விவரம் கேட்டிருக்கிறார். பதில் திருப்தி அளிக்கவில்லை என்றதால் டிரான்ஸ்பர் என்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: பூகம்பத்துக்குப் பின் அமைதி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு