Published:Updated:

'அவரை இயக்கவில்லை; இணைந்தால் வரவேற்போம்!'  - அழகிரி வியூகத்துக்கு பா.ஜ.க பதில்

தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில் தி.மு.கவை வீழ்த்தும் வேலையை அழகிரியே பார்த்துக்கொள்வார் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

'அவரை இயக்கவில்லை; இணைந்தால் வரவேற்போம்!'  - அழகிரி வியூகத்துக்கு பா.ஜ.க பதில்
'அவரை இயக்கவில்லை; இணைந்தால் வரவேற்போம்!'  - அழகிரி வியூகத்துக்கு பா.ஜ.க பதில்

'அமைதிப் பேரணிக்கு முன்னதாக தி.மு.கவில் இருந்து அழைப்பு வருமா?' என ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள். 'நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வேலைகளில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக அழகிரி பயன்படுத்தப்படலாம்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

சென்னை, அண்ணா சிலையில் இருந்து கருணாநிதி சமாதி வரையில் அமைதிப் பேரணியை நடத்த இருக்கிறார் அழகிரி. கருணாநிதி மறைந்த 30-வது நாளான வரும் 5-ம் தேதி இந்தப் பேரணி நடக்க இருக்கிறது. இதற்காக, மாநிலம் முழுவதும் இருந்து ஆள்களைத் திரட்டி வரும் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறார் அழகிரி. அதற்கு முன்னதாக, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மனதைக் கரைக்கும் வேலைகளையும் அவர் செய்து வருகிறார். இத்தனை நாள் வரையில் கோபத்துடன் பேசி வந்த அழகிரி, நேற்று பேசிய வார்த்தைகள் அனைவரது கவனத்தையும் திசை திருப்பியது. செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "தி.மு.க.வுடன் இணைந்து செயல்படுவதற்காகவே நாங்கள் போராடுகிறோம். இதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. தி.மு.க.வில் எங்களை இணைக்கத் தயார் என்றால், மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளவும் நாங்களும் தயார். எனக்கும் என் மகனுக்கும் பதவியின் மீது ஆசை இல்லை. தி.மு.க.வுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகவும் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சேர நினைக்கிறோம்" என்றார். அவரது இந்தப் பேட்டியை ஸ்டாலின் தரப்பில் உள்ளவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

``தி.மு.கவுக்குள் மீண்டும் அழகிரியால் கால் பதிக்க முடியாது. 'நம்மை ஸ்டாலின் சேர்த்துக்கொள்ள மாட்டார்' என்பது அழகிரிக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் தொடர்ந்து போராடுவதன் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், பா.ஜ.கவின் வியூகத்துக்கு வடிவம் சேர்க்கக்கூடிய பணிகளுக்கு அழகிரி பயன்படுவார். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன" என விவரித்த தி.மு.கவின் மூத்த நிர்வாகி ஒருவர், தொடர்ந்து சில விஷயங்களைப் பட்டியலிட்டார். "அமைதிப் பேரணியைப் பற்றி அதிரடியாகப் பேசி வந்த அழகிரி, கடந்த சில நாள்களாக தி.மு.க தொண்டர்களிடையே பரிதாபத்தைச் சம்பாதிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆதரவாளர்கள் கூட்டத்தில் தனியாக இருக்கும் படத்தை வெளியிட்டது; ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளத் தயார் எனப் பேசுவது எல்லாம் இந்த அடிப்படையில்தான்.

மத்தியில் ஆளும் பா.ஜ.கவைப் பொறுத்தவரையில், வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில், 'மீண்டும் மோடியே பிரதமராக வர வேண்டும்' என்பதில் தெளிவாக உள்ளனர். இதற்காக தி.மு.க கூட்டணிக்குப் பல வகையிலும் அவர்கள் முயற்சி செய்தனர். நிதின் கட்கரி, தமிழிசை எனப் பலரும் ஸ்டாலினுடன் நேரடியாகப் பேசி வந்தனர். ஆனால், பொதுக்குழுவில் பா.ஜ.கவை எதிர்த்துக் கடுமையாகப் பேசிவிட்டார் ஸ்டாலின். இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் அணியை வீழ்த்தக் கூடிய வேலைகளை அவர்கள் தொடங்கிவிட்டனர்" என விவரித்தவர், 

"தமிழகத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு முக்கிய நபரை பா.ஜ.க நியமிக்க உள்ளது. தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில், தி.மு.கவை வீழ்த்தும் வேலையை அழகிரியே பார்த்துக்கொள்வார் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். கருணாநிதி இறப்பை அடுத்து தி.மு.க அடிமட்டத் தொண்டர்களின் வாக்குகளில் அழகிரி கையை வைத்தால் மட்டுமே, அது ஸ்டாலினுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு எம்.பி தொகுதிக்குட்பட்டு ஆறு எம்.எல்.ஏ தொகுதிகள் வருகின்றன. ஒவ்வொரு எம்.எல்.ஏ தொகுதியிலும் பத்தாயிரம் வாக்குகளை அழகிரி பிரித்துவிட்டால், தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். எனவே, தென்மண்டலத்தில் வரக் கூடிய 10 தொகுதிகளை அழகிரியின் கட்டுப்பாட்டில் விட்டுவிடும் வேலைகளும் நடந்து வருகின்றன.

கோபாலபுரத்துக்கு மோடி வந்தபோது, அதை வரவேற்று அழகிரி அறிக்கை வெளியிட்டதும், பா.ஜ.க பாசத்தின் அடிப்படையில்தான். தேர்தலில் தி.மு.க தோற்றுவிட்டால், அது அழகிரிக்கு இன்னும் கூடுதல் வலிமையைக் கொடுத்துவிடும். பா.ஜ.க மேலிடத்தின் பிரதான நோக்கம், நாடாளுமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான இடங்களை தி.மு.க கூட்டணி பிடித்துவிடக் கூடாது என்பதுதான். அப்படி ஒருவேளை தி.மு.கவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டால், அதை வைத்தே மற்ற மாநிலக் கட்சிகளை மிரட்டவும் இந்த வியூகம் பயன்படும் எனவும் நினைக்கின்றனர். தென் மண்டலத்தைப் போல, வடக்கு, மேற்கு ஆகிய மண்டலங்களிலும் முக்கிய நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பா.ஜ.கவுக்கு இடமே கிடைக்காவிட்டாலும்கூட, தி.மு.கவின் தோல்வியை மிக முக்கியமானதாகப் பார்க்கின்றனர். தேர்தல் நெருக்கத்தில் இந்த வியூகங்கள் எல்லாம் முழுமையான வடிவத்துக்கு வந்துவிடும்" என்றார் விரிவாக. 

`பா.ஜ.கவில் இருந்து அழைப்பு வருகிறதா?' என்ற கேள்வியை அழகிரியின் பிரதான ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டோம். ``அப்படி எந்த அழைப்புகளும் இதுவரையில் இல்லை. அமைதிப் பேரணிக்கான பணிகளில் அண்ணன் தீவிரமாக இருக்கிறார்" என்றார். 

இதுதொடர்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் பேசினோம். ``அரசியல் பின்புலம் கொண்டவர்கள் யார் வந்தாலும் அவர்களை பா.ஜ.க வரவேற்கும். பா.ம.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேர் எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர். முன்னாள் எம்.பி.ராமதாஸ், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், ஆற்காடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சீனிவாசன், வேலூர் முன்னாள் மேயர் கார்த்திகாயனி ஆகியோர் இணைந்தனர். எங்களைத் தேடி வந்தவர்களுக்கு அடையாளம் கொடுத்திருக்கிறோம். இவர்கள் அனைவரும் நாடாளுமன்றப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு கட்சிக்குள் சென்று அதை உடைத்து, அதன்மூலம் ஆள்களைக் கொண்டு வரும் பழக்கம் எங்களுக்கு இல்லை. குறிப்பாக, அரசியல் அனுபவமும் பின்புலமும் இருந்தால் கூடுதல் வரவேற்பு கொடுப்போம். அது அழகிரிக்கு மட்டும் அல்ல. 

தவிர, தனிநபரை முன்னிறுத்தி, 10 தொகுதி, 15 தொகுதி எனப் பிரிக்கும் வழக்கம் எங்கள் கட்சியில் இல்லை. கட்சியில் அவர்களை முன்னிறுத்தி வேண்டுமானால் தேர்தல் வேலை பார்ப்போம். எங்களுடைய கடுமையான வேலையின் வெளிப்பாடுதான் 16,000 தேர்தல் பொறுப்பாளர்களை அமித் ஷா முன்னால் நிறுத்தியது. இப்படித் தொடர்ந்து எங்களைப் பலப்படுத்திக் கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் தி.மு.க, காங்கிரஸை கூட்டணியைத் தோற்கடிக்க நேர்மறைவாகவே போராடுவோம். அதற்காக எங்களுக்கு யார் துணையாக வந்தாலும் வரவேற்போம். அழகிரியை இயக்குகிறோம் என்பது தவறான தகவல். அவர் எங்களுடன் இணைந்தால் மறுப்பு தெரிவிக்க மாட்டோம்" என்றார் நிதானமாக.