Published:Updated:

ஆட்டம் காணும் குமாரசாமி ஆட்சி... கர்நாடகாவில் அரசியல் புயல்!

ஆட்டம் காணும் குமாரசாமி ஆட்சி... கர்நாடகாவில் அரசியல் புயல்!
ஆட்டம் காணும் குமாரசாமி ஆட்சி... கர்நாடகாவில் அரசியல் புயல்!

"காங்கிரஸ் - ம.ஜ.த. கட்சியினர் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி மேலிடம் கூறியதால், அதற்கு அடிபணிந்து சித்தராமையா, கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டார். ஆனால், குமாரசாமி முதல்வராக இருப்பதை சித்தராமையா விரும்பவில்லை."

``சிவனைப்போல நானும் ஆலகால விஷத்தை விழுங்கிவிட்டேன். நான் முதல்வராக இருப்பதில் தொண்டர்களும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால், நான் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர் பதவி என்பது ரோஜாப்பூ படுக்கை அல்ல... முட்கள் நிறைந்த படுக்கையாகும். தொடர்ந்து எனக்கு நெருக்கடிகள் கூடினால் எந்த நேரத்திலும் முதல்வர் பதவியைவிட்டு விலக நான் தயாராக உள்ளேன். ஆட்சி, அதிகாரத்துக்காக நானில்லை'' - கர்நாடகா முதல்வர் குமாரசாமி, வருத்தத்துடன் கடந்த மாதம் சொன்ன வார்த்தைகள் இவை.

அன்றுமுதல் இன்றுவரை அவருடைய முதல்வர் பதவி என்பது கயிற்றின் மீது நடப்பதைப்போன்றே உள்ளது. ஆனாலும், பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தன்னுடைய ஆட்சியின் நூறாவது நாளை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார். இதற்கெல்லாம் காரணம், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதுதான். ``எனது கட்சி, தனிப் பெரும்பான்மை பெறுகிற அளவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு'' என்று அவரே வருத்தப்பட்டும் சொல்லியதுண்டு. 

கர்நாடக மாநிலத்தின் 222 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில் பி.ஜே.பி. 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களையும், இதர கட்சிகள் 2 இடங்களையும் பெற்றிருந்தன. பி.ஜே.பி. அதிக இடங்களில் வெற்றிபெற்றிருந்த போதும் அவற்றால் தன்னிச்சையாக ஆட்சி அமைக்க முடியவில்லை. அதற்குக் காரணம், ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கையில் அவர்களிடம் எம்.எல்.ஏ-க்கள் இல்லை. எனினும், பி.ஜே.பி. அதிக இடங்களில் பெற்ற வெற்றியை எடுத்துச் சொல்லி ஆளுநரிடம் ஆட்சி அமைக்கக் கடிதம் கொடுத்தது. அதன்படியே, ஆளுநரும் எடியூரப்பா தலைமையிலான ஆட்சிக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஆனால், அது கொஞ்ச நாள்கள்கூட நீடிக்கவில்லை. இதன் காரணமாக, பி.ஜே.பி-யை ஆட்சியில் அமர்த்துவதற்காகத்தான் மத்திய அரசு இப்படியெல்லாம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் எழுந்தது. எதிர்க் கட்சிகளும் இதற்கு எதிராகக் கொடிபிடிக்கத் தொடங்கின. 

இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களிடம் பி.ஜே.பி-யினர், `பதவியும், பணமும் தருகிறோம். எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்' என்று பேரம் பேசியதாக அந்தக் கட்சியினர் மீது புகாரும் எழுந்தது. இதற்கிடையே எதிரெதிர் துருவங்களாக இருந்த காங்கிரஸும் - ம.ஜ.த-வும் இணைந்து, ஆட்சியமைக்கும் நோக்கத்தில் காத்திருந்தன. இந்தச் சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு எடியூரப்பா வந்தபோது, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, 78 இடங்களை காங்கிரஸ் பெற்றிருந்தபோதும், முன்னரே பேசியபடி முதல்வர் பதவியை ம.ஜ.த-வுக்கு விட்டுக்கொடுத்தது. அதன்படி, அவர்கள் கூட்டணியுடன் குமாரசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். நேற்றுடன், அவர் கர்நாடக முதல்வராய் 100 நாள்களைக் கடந்தபோதும், நெருக்கடி மட்டும் அவரை எப்போதும் நெருக்கிக்கொண்டே இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையா, ``மக்கள் ஆசீர்வாதத்தால் மீண்டும் முதல்வராவேன்'' என்று சொல்லியிருப்பது கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து சித்தராமையா, ``இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று நான் முன்பு கூறினேன். தற்போது நான் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன் என்று எங்கும் சொல்லவில்லை. மக்கள் ஆசீர்வாதத்தால் மீண்டும் முதல்வராவேன் என்றுதான் சொன்னேன். இந்தக் கருத்துக்குப் பல்வேறு அர்த்தங்களைக் கற்பிக்க வேண்டாம். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் வேணுகோபாலுக்கு ம.ஜ.த. கட்சியினர் எந்தக் கடிதமும் எழுதவில்லை. பி.ஜே.பி-யினர் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார்கள். 

கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சிகள் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அனைத்து அமைச்சர்களும் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார்கள். எங்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. காங்கிரஸைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் சிலர் பி.ஜே.பி-யில் சேர்ந்து கூட்டணி ஆட்சியைக் கவிழ்ப்பார்கள் என்று சொல்வதில் அர்த்தமில்லை. அது தவறானது. கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. கூட்டணி ஆட்சியில் எந்த முடிவெடுத்தாலும் அதன் பயன், கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளுக்கும் சேரும். `நான் மீண்டும் முதல்வராவேன்' என்று கூறிய கருத்துக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் என்ன தவறுள்ளது. அடுத்து நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால், நான் மீண்டும் முதல்வராவேன். கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பி.ஜே.பி-யினர் பகல் கனவு காண்கிறார்கள். அந்தக் கனவு பலிக்காது'' என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கர்நாடக முதல்வராய்ப் பதவியேற்று 100 நாள்கள் நிறைவடைந்ததையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார், குமாரசாமி. அந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார், குமாரசாமி. அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ``மக்கள் ஆசீர்வாதத்தால் மீண்டும் முதல்வராவேன்'' என சித்தராமையா சொல்லியிருப்பது பற்றிக் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த குமாரசாமி, ``சித்தராமையா ஓர் அனுபவமிக்கத் தலைவர். அவர், முதல்வராக ஆசைப்படுவதில் தவறு எதுவும் இல்லை. காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கூட்டணி ஆட்சி தற்போது பாதுகாப்பாக உள்ளது; மக்கள் நலப் பணிகளையும் சிறப்பாகச் செய்துவருகிறது. ராகுலுடனான சந்திப்பில் சித்தராமையா கூறிய கருத்தைப் பற்றி விவாதிக்கவில்லை'' என்று தெரிவித்தார். 

இந்த நிலையில் மங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, ``காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணி ஆட்சிமீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கிடையாது. அவர்களாவே உருவாக்கிய ஆட்சி. மக்கள், பி.ஜே.பி-யை ஆதரித்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக மக்கள் விரும்பாத கூட்டணி ஆட்சி அமைந்துவிட்டது. காங்கிரஸ் - ம.ஜ.த. கட்சியினர் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி மேலிடம் கூறியதால், அதற்கு அடிபணிந்து சித்தராமையா, கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டார். ஆனால், குமாரசாமி முதல்வராக இருப்பதை சித்தராமையா விரும்பவில்லை. கூட்டணி ஆட்சியை, சித்தராமையா கவிழ்க்க முயன்றது அனைவருக்கும் தெரியும். தற்போது சித்தராமையா, தான் மீண்டும் முதல்வராவேன் என்று கூறியுள்ளதன் மூலம் அது நிரூபணமாகியுள்ளது. இன்னும் ஒரு மாதம் அல்லது 15 நாள்களில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும். கூட்டணி ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டாம். அது, தானாகவே கவிழ்ந்துவிடும்'' என்று சொல்லியிருப்பது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. 

```மக்கள் ஆசீர்வாதத்தால் மீண்டும் முதல்வராவேன்' என்று ம.ஜ.த. கூட்டணியில் அங்கம் வகிக்கும் சித்தராமையாவும், `இன்னும் ஒரு  மாதம் அல்லது 15 நாள்களில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும்' என்று சதானந்தா கவுடாவும் ஒரே நேரத்தில் சொல்லியிருப்பது, குமாரசாமியை இன்னும் அதிகமாகவே கவலைகொள்ளச் செய்திருக்கிறது'' என்கிறார்கள், விவரமறிந்தவர்கள்.  

கர்நாடகாவிலும் அரசியல் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு