பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

சுதாகர், மானாமதுரை

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

சிறை சென்று திரும்புபவர்கள் அனை​வருமே தியாகியா?

என்ன நோக்கத்துக்காகச் சிறை சென்றார்கள் என்பதை வைத்தே அதை அளவிட வேண்டும்!

சிறை என்றதும் சுப்பிரமணிய சிவாதான் நினைவுக்கு வருகிறார். சிவா​வும் வ.உ.சி-யும் நெல்லை சிறையில் இருந்தபோது பாரதி பார்க்கச் சென்றார். 'இவர்களுடைய பிரசங்கங்களை ஆயிரக்கணக்கான ஜனங்கள் கேட்டுப் புகழ்ச்சி கூறிக்கொண்டு இருந்த காலத்தில் பார்த்தபோது அவர்களுடைய முகங்கள் எவ்வளவு பிரசன்னமாகவும் தேஜஸுடனும் விளங்கியதோ... அதே மாதிரியே இப்போதும் இருக்கக் கண்டேன்’ என்று 'இந்தியா’ பத்திரிக்கையில் எழுதினார் பாரதி. எத்தனையோ முறை சிறையில் இருந்தது மட்டும் அல்ல... தீர்க்க முடியாத நோயையும் சிறையில் இருந்து வாங்கி வந்த சுப்பிரமணிய சிவாவுக்கு, அது குறித்த கவலை கடைசி வரை இல்லை.

'நாம் சத்தியத்துக்காகப் போராடு​வதால் சிறைச்சாலைகள் நமக்குத் தவச்சாலைகளே. ஜன சமுதாயத்​தினுடைய சுதந்திரத்தைக் காப்​பாற்று​வதற்காகக் கம்பீரமாகச் சிறைச்சாலைக்குச் செல்லுதல் வெகுமானமேயாம்’ என்றார் சிவம். ஆனால் இன்றைய 'தியாகிகள்(!)’ இப்படிப்பட்டவர்களா என்ன?

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்

கழுகார் பதில்கள்

எல்லாக் கட்சிகளும் வெளியேறிவிட அ.தி.மு.க. கூட்டணியில் சரத்குமார் மட்டும் தாக்குப்பிடிப்பது எப்படி?

சரத்குமார், அ.தி.மு.க.வை ஆதரிக்கிறார் என்பதுதான் உண்மையே தவிர... அவரை அ.தி.மு.க. கூட்டணியில் இன்னமும் ஜெயலலிதா வைத்திருக்கிறார் என்பது உண்மை அல்ல.

பலரும் வெளியேறி எதிர்ப்பு அரசியலை ஆரம்பித்துவிட்டார்கள். சரத்குமாருக்கு என்ன செய்வதென்று இன்னும் தெரியவில்லை.

 வாசுதேவன், வந்தவாசி

கழுகார் பதில்கள்

10-ம் வகுப்புத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புதுவை முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரத்திடம் 300 கேள்விகள் கேட்டுள்ளதே விழுப்புரம் போலீஸ்?

30 கேள்விகளை ஒழுங்காகப் படித்திருந்தால், இந்தச் சிக்கலே வந்திருக்காது!

 ரேவதிப்ரியன், ஈரோடு.1

கழுகார் பதில்கள்

தமிழக அரசின் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளதே. இனியாவது முதல்வர் புத்திசாலித்​தனமாக நடந்துகொள்வாரா?

##~##

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டிருக்கும் கேள்வி, மிக மிகக் கவலை தரும் விஷயம்!

மக்கள் நலப் பணியாளர்களை ஓர் ஆட்சி நியமிக்கிறது. அடுத்து வந்த ஆட்சி நீக்குகிறது. அடுத்த ஆட்சி அவர்களுக்கு மறுபடியும் பதவி கொடுக்கிறது. அடுத்து வந்தவர்கள் வேலையைவிட்டு நீக்குகிறார்கள். இதைப் பார்த்துத்தான் நொந்துபோயிருக்கிறார்கள் நீதிபதிகள். 'தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா?’ என்று கேள்வி கேட்டார்கள். சுய விருப்பங்களுக்கு ஏற்ற மாதிரி ஆட்சி இயந்திரத்தை சுற்றுவதை, சட்டத்தை மதிக்காத தன்மையைத்தான் உச்ச நீதிமன்றம் கண்டிக்கிறது. இதைப் பார்த்து புத்திசாலித்தனமாக முதல்வர் நடந்துகொள்வாரா என்பதை இப்போது சொல்ல முடியாது!

 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி

கழுகார் பதில்கள்

'ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் குதிரைப் பேரத்தைத் தடுக்க, தேர்தல் சட்டத்தில் விரைவில் திருத்தம் கொண்டுவரப்படும்’ என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியிருக்கிறாரே. சட்டம் வருமா சார்?

மொய்லி சொன்னதை அமர்சிங் படித்தால் சிரித்திருப்பார். காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்று​வதற்காக நடந்த பேரமும் அதற்குப் பணம் தரப்பட்டதும் அதைச் சிலர் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து கொட்டியதும் யாராலும் மறக்க முடியாத காட்சிகள். 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த இந்த சம்பவத்துக்கு, 2011 ஜூலை வரைக்கும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாமல் தடுத்தவர்களும் மொய்லி வகையறாக்கள்தான். உச்ச நீதிமன்றம் உச்சந்தலையில் கொட்டிய பிறகு சம்பிரதாயக் கைதுகளை நடத்தியது மத்திய அரசு. எனவே, மொய்லி சொன்ன சட்டம் வராது. வந்தாலும், அதனால் எந்தப் பிரயோஜனமும் இராது!

 ஜி.அர்ஜூனன், திருப்பூர்.7

கழுகார் பதில்கள்

காங்கிரஸ் கட்சியில் வயதான தலைவர்கள் ஒதுங்கிக்கொண்டு இளம் தலைவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறி இருக்கிறாரே?

ராகுலுக்கு மன்மோகன் வழிவிட வேண்டும் என்பதை பட்டவர்த்தனமாகச் சொன்னதற்காக ப.சிதம்பரத்தைப் பாராட்டத்தான் வேண்டும். டெல்லியில் நான்கு நாட்கள் நடந்த இளைஞர் காங்கிரஸ் கூட்டம், ராகுலுக்கு மகுடம் சூட்டுவதற்கான முதல் ஒத்திகையாக நடந்து முடிந்துள்ளது. அதில் பேசிய மன்மோகன், அதிகப்படியாக ராகுலுக்கு ஐஸ் வைத்திருப்பதைப் பார்க்கும்போது, இது இன்னும் உறுதிப்படுகிறது.

 டி.ஜெய்சிங், கோயமுத்தூர்

கழுகார் பதில்கள்

முல்லைப் பெரியாறு அணையைவிட பழைய அணைகள் எதுவும் இந்தியாவில் இல்லையா?

கழுகார் பதில்கள்

முல்லைப் பெரியாறு அணையைவிடப் பழமையானது கல்லணை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை இன்று வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கிறது. கல்லணையைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களையே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டவும் பென்னி குக் பயன்படுத்தினார். 1845 - 55 கால கட்டத்தில் கட்டப்பட்டவைதான் ஆந்திராவில் உள்ள கோதாவரி அணையும் கிருஷ்ணா அணையும். அப்பகுதி மக்கள் மிக நிம்மதியாக இருக்கும்போது முல்லைப் பெரியாறை வைத்து மட்டும் கேரளா பீதியைக் கிளப்புவது உள்நோக்கமானது. அந்தப் பகுதிக்குள் நுழைந்து அணையைச் சேதப்படுத்த கேரளக் கட்சிகள் முயற்சிக்கக்கூடும். எனவே, அங்கு ராணுவம் நிறுத்தப்பட வேண்டும். இனி ஏற்படும் அசாதாரணச் சூழல் அனைத்துக்கும் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்!

 அ.குணசேகரன், புவனகிரி

கழுகார் பதில்கள்

இனி கனிமொழி நம்பர் 1 ஆகிவிடுவாரா?

எதில்?

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு