Published:Updated:

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 61: 23.2.83

பிரீமியம் ஸ்டோரி
பழசு இன்றும் புதுசு

'இன்று நான் நானாக இருக்கக் காரணமாக இருப்பவர்கள்’ என்று எழுதினார் கமல். ''இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதலாமா?'' என்று கேட்டார். ''என்னையும் அறியாமல் ஏதோ ஒரு விதத்தில் சிலருடைய Influence என் மீது படிந்து விட்டிருக்கிறது. ஆரம்பம் முதல் என்னைப் பாதித்தவர்களைப்பற்றி ஒரு நாள் இரவு ஓர் பட்டியல் எடுத்தேன். அதாவது,‘About those who have influenced me’ என்று...'' என விவரித்தார்.

 இதோ, கமலின் டைரியில் இடம் பெற்ற சிலர்...

ராஜலட்சுமி: என்னுடைய கருப் பருவத்தில் இருந்து துவங்கி, என்னை, என் பாரங்களை, பலவீனங்களை, 24 ஆண்டுகள் சுமந்தவள். என் சிறகுகளை முறிக்காமல் பறக்கக் கற்றுத்தந்தவள். இணை இல்லாத இந்த உறவால் நிரப்ப முடியாத ஒரு சூன்யத்தைத் தன் பிரிவால் ஏற்படுத்தியவள் - என் தாய்.

ஸ்ரீநிவாசன்: நான் கரு உருப்பெறக் காரண​மானவர். எனக்கு எளிமையைக் கற்றுத்​தந்தவர். எனக்கு என் திறமை மேல் உள்ள நம்பிக்கையைவிட, அவருக்கு என் திறமைகளில் அபார நம்பிக்கை. நான் ஒரு சிகரத்தை எட்டிவிட்டதாக நினைத்தபோதெல்லாம்... அதைவிட உயரத்​தைக் காட்டி, என் லட்சியத்தை உயர்த்திக்கொண்டே செல்பவர் - என் தந்தை.

சிவாஜி: இந்த நடிகரின் பாதிப்பு இல்லாத தமிழ் நடிகன் 1954-க்குப் பிறகு இருப்பதாகத் தெரியவில்லை. நானும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

எம்.ஜி.ஆர்.: ஒரு நடிகன், மனிதனாக, மாபெரும் தலைவனாகத் தன்னை உயர்த்திக்கொள்ள முடியும் என்று என் போன்ற நடிகர்களுக்கு, சொல்லாலும் செயலாலும் செய்து காட்டிய முன்னோடி.

ஏவி.எம்.: என் வாழ்க்கையையே திசை திருப்பியவர். அவர் இல்லை என்றால், நான் இன்று லட்சணமான பெர்சனாலிட்டியோடு கூடிய ஒரு கிளர்க்காகவோ, பியூனாகவோ குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்துகொண்டு இருப்பேன்.

சாருஹாசன்: என் சிந்தனைகளில் ஓர் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியவர். கேள்வியும் பதிலாகவும், கேள்வியையே பதிலாகவும், பதிலையே கேள்வியாகவும் மாற்றும் இவரின் பரந்த சிந்தனையோட்டத்தின் பாதிப்பு எனக்கும் உண்டு. என்னை விட 24 வயது மூத்த ஒரு நண்பர்.

Incidentally என் சகோதரர்.

பழசு இன்றும் புதுசு

சந்திரஹாசன்: என் முதல் நடிப்பு குரு. கட்டபொம்மன் வசனத்தை மூன்று வயதில் என்னை மனப்பாடம் செய்ய வைத்தவர். என்னை எப்படியாவது வாழ்க்கையில் பொறுப்புள்ள ஒரு மனிதனாக, செலவுகளில் சிக்கனமாக, எதிர்காலத்துக்குச் சேர்த்து வைக்கும் தன்மை உடையவனாக மாற்ற வேண்டும் என்று பல வருடங்களாய் முயன்று தோற்றுக்கொண்டு இருப்பவர். தோற்றாலும் தொடரும் கஜினி முகம்மது - என் அண்ணன்.

திருமதி கோமளவல்லி: என் அண்ணி. ஈன்ற பொழுதுதான் பெரிதுவக்கும் என்றில்லை. என்னைச் சான்றோன் எனக் கேட்டால் பெருமைகொள்ளும் மனம் அது. கோமளவல்லி என்ற என் அறிமுகம் பிடிக்காது. நான் எழுதுகிற கோழிக் கிறுக்கல் தமிழை காப்பி எடுப்பவர்.

டி.கே. சண்முகம், டி.கே.பகவதி: என்னை Professional நடிகனாவதற்கு ஆயத்தப்படுத்தி​யவர்கள். கண்டிப்பும் கண்ணியமும் நிறைந்த இந்த நடிகர்களின் பாதிப்பு எனக்கு உண்டு.

என்.எஸ். நடராஜன்: எனக்குப் பரத நாட்டியம் கற்றுத்தந்தவர். இப்பொழுதும் கடினமான நடனக் காட்சிகள் வரும்போது, அவர் முகம் மனதில் தோன்றி மறையும்.

##~##

தங்கப்பன்: எனக்குப் புனர்ஜென்மம் தந்தவர். என்னை மீண்டும் திரை உலகுக்குக் கொல்லைப் பக்கமாய் அழைத்துச் சென்றவர் -நடன உதவியாளராக.

ஆர்.சி.சக்தி: என்னை ரசித்தே என் திறமை​யை வளர்த்தவர். சகோதரர் போன்றவர். நல்ல எழுத்தாளர். என் 19 வயதுச் சேட்டைகள் ஒரு சிலவற்றில் என்னோடு பங்குகொண்டவர்.

கே.பி. (பாலசந்தர்): என்னை மீண்டும் ஈன்ற தாய் - நடிகனாக. கண்டிப்பான தந்தையும்கூட.

அனந்து: என்னை இலக்கியத்தில், லட்சியத்தில் உயரச் செய்தவர். என்னைப் போலவே ஒரு சினிமா பைத்தியம் -  A Friend and a philosopher. சினிமாவைப்பற்றிய என் சித்தாந்தத்தை மாற்றிச் செதுக்கியவர்.

ராஜன்: எனக்கு நட்பு கற்றுத்தந்தவன். சிரிக்கக் கற்றுத்தந்தவன். நகைச்சுவையின் முக்கியத்துவத்தை உணர்த்தியவன். Blood cancer பற்றி நிறைய ஜோக்குகள் சொல்பவன். அவனைக் கடைசியாகக் கொல்லப்​போகும் வியாதி அது என்று தெரிந்தும், மரண தேதி​யைக் குறித்துவைத்துவிட்டுச் சிரித்துக்கொண்டு இருந்தவன்.

வாணி: என்னை சாந்தப்படுத்தியவள். எனக்குக் காதலிக்​கக் கற்றுத்தந்தவள். பெண்களின் மேல் எனக்குள்ள மதிப்பை உயர்த்தியவள். என் மனச் சுமைதாங்கி.

பாலுமகேந்திரா: நல்ல நண்பர், நல்ல மனிதர், நல்ல கேமெராமேன், நல்ல வசனகர்த்தா, நல்ல இயக்குநர், நல்ல கதாசிரியர், நல்ல ரசிகர். மேற்சொன்னவற்றில் சிலதைத்தான் சிலர் ஒப்புக்கொண்டுள்ளனர். அத்தனையும் உண்மை என்று எல்லோரும் உணரும் நாள் தொலைவில் இல்லை. நாங்கள் இருவரும் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள். சினிமா என்ற மாபெரும் மதத்தின் சக பூசாரிகள், சினிமாவை என் ஸிமீறீவீரீவீஷீஸீ ஆக ஆக்கியவர்.

பழசு இன்றும் புதுசு

பாரதிராஜா: தீர்க்க அறிவுக்கும் எளிமைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதைப் புரிய வைத்தவர். எனக்கும் ரசிகர்களுக்கும் சினிமாவில் மண் வாசனை காட்டியவர்.

பஞ்சு அருணாசலம்: என்னை கமர்ஷியல் சினிமா பக்கம் உந்தித் தள்ளியவர். (நல்ல) சினிமாவைப்பற்றி என் மனக் குமைச்சல்களையும் புரிந்துகொண்டு வாதித்து எனக்கு சினிமாவின் வர்த்தக நிஜத்தைத் தரிசிக்க வாய்ப்பு அளித்தவர்.

எல்.வி.பிரசாத்: என் வருமானத்தைக் கூட்டியவர். கலா ரசிகர். 26 வருடங்களுக்குப் பிறகு என்அழைப்​பை ஏற்று நடிக்க வந்தவர். தான் செய்த எந்தச் சாதனையையும் பெரிதென்று நினையாமல் தன்னையே பலமாக சுய விமரிசனம் செய்பவர் - இந்தக் கலையுலகில் உள்ள மிகச் சில ஜாம்பவான்களில் ஒருவர்.

நரேந்தர் பேடி: என் திறமை மேல் அபார நம்பிக்கைகொண்டவர். குடியால் வரும் கெடுதலை, தன் அகால மரணத்தால் என் மனத்தில் ஆழப் பதித்தவர்.

பர்க்கா ராய்: ஒரு மாபெரும் வர்த்தக ரிஸ்க் எடுத்து வென்றவர். மூன்று ஆண்களுக்குச் சமம் (மனோ பலத்தில்). என் கடுமையான விமர்சனங்களைப் பொறுமையாகக் கேட்டுக்கொள்பவர்.

எஸ்பி.முத்துராமன்: பணிவாய் நடந்துகொள்வது பிறவியில் வந்தது இல்லை. பழக்கத்தால்தான் வரும் என்பதற்கு உதாரணம் ஆனவர். ஆரவாரம் இல்லாமல் வெல்பவர்.

- கோபு, படங்கள்: ஏ.வி.பாஸ்கர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு