Published:Updated:

10 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மாயம்: மறுதேர்வு நடத்த அரசு பரிசீலனை!

10 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மாயம்: மறுதேர்வு நடத்த அரசு பரிசீலனை!
10 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மாயம்: மறுதேர்வு நடத்த அரசு பரிசீலனை!
10 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மாயம்: மறுதேர்வு நடத்த அரசு பரிசீலனை!

சென்னை: 10 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மாயமானதால், பாதிக்கப்பட்ட 221 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த அரசு பரிசீலித்து வருவதாக  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று பள்ளித் தேர்வில் வினாத்தாள் குறைபாடு, தேர்வுக்கு முன் வினாத்தாள் வெளியானது மற்றும் போக்குவரத்தின் போது விடைத்தாள்கள் காணாமல் போனது குறித்து அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர்.

அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன்," கடந்த 2 ஆம் தேதி நடைபெற்ற 10-ம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள், பிரிவு-1 வினா எண் 3 டி-ல் லூனல் என்பதற்கு பதிலாக லன்ஞ் என்று அச்சிடப்பட்டு இருந்தது. இதற்கு மதிப்பெண் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல் 10-ம் வகுப்பு தமிழ் 2-ம் தாளில் 38-வது வினாவிற்கு மாணவர்கள் பதில் அளிக்க முயற்சி செய்தாலே 5 முழுமதிப் பெண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வினாவிற்கான வங்கி செலான் இணைக்கப்பட வில்லை என்ற விபரம் காலை 9.45 மணி அளவில் தான் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து மையங்களுக்கும் 10.30 மணிக்குள்ளாக தகவல் தெரிவிக்கப்பட்டு வங்கி செலானில் பூர்த்தி செய்யும் விபரங்களை மட்டும் 1,2 என குறிப்பிட்டு எழுத அறிவுரை வழங்கப்பட்டது.

எனவே இந்த வினாவிற்கு விடையளிக்க முயற்சி செய்தாலே முழு மதிப்பெண் வழங்கப்படும். பிளஸ்-2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் குறிப்பிட்ட அச்சகத்தில் மட்டுமே அச்சிடப்படுகிறது. எந்த இடத்தில் அச்சிடப்படுகிறது என்பது யாருக்குமே தெரியாது. அந்த பணி ரகசியமாக நடைபெறும். அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படும். காலை 9.45 மணிக்கு தான் வினாத்தாள் கட்டு பிரிக்கப்படும். அப்போதுதான் அதில் என்ன தவறாக அச்சிடப்பட்டு உள்ளது என்பதே தெரிய வரும்.

பிளஸ்-2 பொதுத் தேர்வை பொறுத்தவரை, காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு என 5 கட்டமாக தேர்வுகள் நடக்கிறது. அந்த தேர்வுகளில் வங்கி செலான் இணைப்பதில்லை. விடைத்தாளில் படத்தை வரைந்து தான் பதில் எழுதுவார்கள். அது போல படம் வரைந்து இருந்தாலும் முழு மதிப்பெண் கொடுக்கப்படும். பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள்கள் எதுவும் தேர்வுக்கு முன்னாள் வெளியாகவில்லை. விடைத்தாள்கள் அஞ்சல் துறை மூலம்தான் திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த முறை கடந்த 30 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனாலும் விடைத்தாள்களை அனுப்பும் முறையில் நவீனமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். இது பற்றி முதலமைச்சரின் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும். விருத்தாச்சலம் ரயில் நிலையத்தில் ரெயில் திரும்பும் போது 357 விடைத்தாள்கள் கொண்ட கட்டு கீழே விழுந்தது. 240 விடைத்தாள்களுக்கு எந்த சேதமும் இல்லை. 54 விடைத்தாள்கள் சிறிது சேதம் அடைந்துள்ளது. மீதம் உள்ள 63 விடைத்தாள்கள் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.

##~~##
தி.மு.க. ஆட்சி காலத்தில் 2008-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் இது போன்று நடந்த சம்பவத்தில் 220 விடைத்தாள்கள் தீ விபத்தில் சேதம் அடைந்தது. அப்போது மாணவர்கள் நலன் கருதி கையாளப்பட்ட முறையை முன் உதாரணமாக கொண்டு, இந்த சம்பவத்திலும் சேதம் அடைந்த 10-ம் வகுப்பு தமிழ் 2-ம் தாள் 63 விடைத் தாள்களுக்கு தமிழ் முதல் தாளில் பெறப்படும் மதிப்பெண் 2-ம் தாளுக்கும் வழங்கப்படும்.
கடந்த 1 ஆம் தேதி ஆங்கிலம் முதல் விடைத்தாள்கள் 221 கொண்ட 2 பண்டல்கள் செஞ்சியில் தொலைக்கப்பட்டு இருக்கிறது. இந்த 2 சம்பவத்திற்கும் அஞ்சல் துறையின் மெத்தனப் போக்கே என கண்டறியப்பட்டு அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு வைக்கலாமா? என்று முதலமைச்சரிடம் பரிசீலித்து வருகிறோம். இது பற்றிய முடிவு விரைவில் தெரிவிக்கப்படும்.
காணாமல் போன விடைத்தாள் கட்டுகளை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். மாணவர் நலன் மற்றும் பொது மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு பாதகம் இல்லாமல் மதிப்பெண் வழங்கும்" என்றார்.