Published:Updated:

`பா.ஜ.க பிறப்பதற்கு முன்பே, அழகிரி-ஸ்டாலின் மோதல்!' - தி.மு.க-வை வறுத்தெடுக்கும் தமிழிசை #VikatanExclusive

`பா.ஜ.க பிறப்பதற்கு முன்பே, அழகிரி-ஸ்டாலின் மோதல்!' - தி.மு.க-வை வறுத்தெடுக்கும் தமிழிசை #VikatanExclusive
`பா.ஜ.க பிறப்பதற்கு முன்பே, அழகிரி-ஸ்டாலின் மோதல்!' - தி.மு.க-வை வறுத்தெடுக்கும் தமிழிசை #VikatanExclusive

``காங்கிரஸ் கட்சி இனி ஆட்சிக்கு வரப்போவதில்லை. அப்படியிருக்கும்போது, பா.ஜ.க ஆப்ஷனை ஏன் குளோஸ் செய்ய வேண்டும்?"

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது பா.ஜ.க. தமிழகத்தில் தி.மு.க கூட்டணிக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதால், அடுத்தகட்ட கூட்டணி முயற்சிகளைத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். கருணாநிதி நினைவேந்தல் நிகழ்வில் அமித் ஷா பங்கேற்காதது; காங்கிரஸ் முகாமில் தென்படும் உற்சாகம்; அ.தி.மு.க மீது படரும் ரெய்டுகள்; கூட்டணி முயற்சிகள் எனத் தமிழக அரசியலின் தட்பவெப்ப நிலையில் மாறுதல்கள் தென்படத் தொடங்கியுள்ளன. 

`நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன்தான் கூட்டணி' என்ற கேள்வியோடு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பேசினோம். 

``அரசியலில் கொள்கை என்று வரும்போது, சிலருடன் எங்களால் கூட்டணி வைக்க முடியாது. அதேநேரம், எதிரியை வீழ்த்த வேண்டியதும் அவசியம். அதற்குச் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அரசியலில் கொள்கையுடன்கூடிய கூட்டணி அல்லது எதிரியை வீழ்த்தும் கூட்டணி ஆகியவற்றில் எது வேண்டுமானாலும் அமையலாம். நாங்கள் ஒன்றும் சாதாரண கட்சியல்ல. ஏற்கெனவே, 22 மாநிலங்களை ஆண்டுகொண்டிருக்கிறோம். மத்தியில் ஆளும்கட்சியாக இருக்கிறோம். பா.ஜ.க-வுக்கு எதிர்ப்பு என்பதை, இங்குள்ள கட்சிகள் செயற்கையாக உருவாக்கி வருகின்றன. 30,000 கோடி துறைமுகத்தை வேறு மாநிலத்துக்கு எங்களால் கொண்டு சென்றிருக்க முடியாதா. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பா.ஜ.க செயல்பட்டது என வருங்கால சந்ததியினர் நினைத்துவிடக் கூடாது. இணையம், துறைமுகம், எட்டு வழிச்சாலை எனத் தாய், தந்தை ஸ்தானத்திலிருந்து தமிழகத்துக்கு மோடி செய்துகொண்டிருக்கிறார்." 

'காவி வண்ணம் அடிக்க நினைக்கும் பா.ஜ.க-வுக்குப் பாடம் புகட்டுவோம்' என ஸ்டாலின் பேசியதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

``அவருக்கு ஏதோ ஓர் அழுத்தம் இருக்கிறது. தலைவராகப் பதவியேற்ற அன்று அவர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. பொதுவாக, பதவியேற்பு விழாவில் ஆக்கபூர்வமான கருத்துகளைத்தான் பேச வேண்டும். எதிர்மறைக் கருத்துகளோடு சென்றால், மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர் அளவுக்கு வயதும் அனுபவமும் இல்லையென்றாலும், சிறு வயதிலிருந்தே அரசியலை உற்று கவனிப்பவள் என்ற முறையில் இந்தக் கருத்தைச் சொல்கிறேன். இதே இடத்தில் கருணாநிதி இருந்திருந்தால் இவ்வாறு பேசியிருக்க மாட்டார். அவர் எப்போதும் ஆப்ஷன்களை வெளிப்படையாகத்தான் வைத்திருப்பார். பாதையை அடைக்காமல், திரும்பி வருவதற்கும் வழி வைத்துக் கொள்ள வேண்டும் என அண்ணா கூறியதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஸ்டாலின் கருத்தை அவரது கட்சித் தொண்டர்கள் விரும்புவார்களா எனத் தெரியவில்லை. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களைக் கையில் வைத்திருப்பதைத்தான் அந்தக் கட்சியின் தொண்டர்கள் விரும்புகிறார்கள். காங்கிரஸ் கட்சி இனி ஆட்சிக்கு வரப்போவதில்லை. அப்படியிருக்கும்போது, 'பா.ஜ.க ஆப்ஷனை ஏன் குளோஸ் செய்ய வேண்டும்?' என அவருடைய கட்சிக்காரர்களே பேசுகிறார்கள். இந்தக் கருத்தை நான் பேசவில்லை." 

தி.மு.க-வோடு கூட்டணி அமையாமல் போனதற்கான பிரதான காரணத்தை விளக்க முடியுமா? 

"எங்களைப் பொறுத்தவரையில், எந்த இடத்திலும் தி.மு.க-வோடு நாங்கள் கூட்டணியைப் பற்றிப் பேசவில்லை. அதிகாரபூர்வமாக எந்த இடத்திலும் இதைப் பதிவு செய்யவில்லை. தி.மு.க-வோடு போகிறோம் என நாங்கள் எங்கேயும் சொல்லவில்லை. இதுதொடர்பாக, சில ஸ்பெகுலேஷன்கள் வெளியில் வந்தன. 'பா.ஜ.க கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஸ்டாலின்' என்கிறார்கள். இல்லாத புள்ளிக்கு எங்கே அவர் முற்றுப்புள்ளி வைத்தார். அது வெறும் புள்ளிதான். அது முக்கியமான புள்ளி கிடையாது. நாங்கள் பல கமாக்கள் போட்டு வைத்திருக்கிறோம். நல்லதை மக்களுக்குச் செய்ய வேண்டும் என நினைக்கிறோம். அதன் ஓர் அங்கமாகத் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவோம். அதற்காக ஆதரவு கொடுக்கும் கட்சிகளை எங்களுடன் இணைத்துக்கொண்டு செயல்படுவோம்." 

அதன் ஒருபகுதியாகத்தான் அழகிரியை, பா.ஜ.க இயக்குவதாகச் சொல்லப்படுகிறதே?

``தவறான கருத்து. 'அ.தி.மு.க-வை இயக்குகிறோம்; ரஜினியை இயக்குகிறாம்' எனக் கூறியவர்கள், இப்போது அழகிரியை இயக்குவதாகப் பேசுகிறார்கள். சொல்லப்போனால், அழகிரி-ஸ்டாலின் சண்டை என்பது, பா.ஜ.க பிறப்பதற்கு முன்பிருந்தே இருப்பவை. அழகிரி எங்களுடன் இணைந்து கூடுதல் பலம் சேர்த்தால், அதை மறுக்க மாட்டோம். அரசியல் பின்புலத்திலிருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். கட்சியை உடைத்துவிட்டு அங்கிருந்து ஆள்களைக் கொண்டு வரும் வேலைகளைச் செய்ய மாட்டோம். தமிழ்நாட்டில் எங்களைப் பலப்படுத்திக்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி வீழ்த்தப்பட வேண்டிய ஒன்று. ஒரு சதவிகிதம்கூட அதில் மாற்றுக் கருத்தில்லை. நாங்கள் எதையும் பேசாமல் இருக்கும்போதே, 'காவிமயமாகிறது' எனப் பேசுகிறார்கள். ஸ்டாலின் பேசியதை சவாலாகவே எடுத்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் அவர்கள் அமைக்க இருக்கும் கூட்டணியை நேர்மறையாகவே வீழ்த்துவோம். அதற்கு எங்களுக்கு உறுதுணையாக யார் இருந்தாலும் வரவேற்போம்." 

`கருணாநிதி அஞ்சலி கூட்டத்துக்கு அமித் ஷா வராத விரக்தியில் ஸ்டாலின் பேசுகிறார்' என டி.டி.வி.தினகரன் சொல்வது சரிதானா? 

``அது தினகரனின் கருத்து. அமித் ஷா ஆளுமைமிக்க தலைவர். பிரச்னைகளைப் புரிந்துகொள்பவர். நேற்று முன்தினம் நடந்த கருணாநிதிக்கான அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்க கட்கரி வந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசியவர்கள் கருணாநிதியை மறந்துவிட்டார்கள். மோடி எதிர்ப்பைத்தான் நினைவில் வைத்திருந்தார்கள். 'இதுபோன்ற நிலைப்பாட்டைத்தான் தி.மு.க எடுக்கும்' எனத் தெரிந்து அமித் ஷா வராமல் இருந்தது நல்லதுதான். ஸ்டாலின் இவ்வளவு மோசமாகப் பேசியும்கூட, எங்களுடைய வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தோம். அதனாலேயே கருணாநிதி என்ற மூத்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். நாங்கள் காண்பித்த மரியாதையைக்கூட தி.மு.க காட்டவில்லை. அவர்களின் கூட்டணிக் கட்சிகளும் காட்டவில்லை. மோடி எதிர்ப்புதான் அவர்களுக்குப் பிரதானம் என்றால், அதற்கென ஒரு மாநாட்டைப் போட்டுப் பேசியிருக்கலாம். கருணாநிதிக்காக நடத்தப்படும் கூட்டத்தில் அவர்கள் அப்படிப் பேசியது, அரசியல் உள்நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது."  

பா.ஜ.க-வோடு நல்ல அணுகுமுறையில்தானே அ.தி.மு.க இருந்தது. இப்போது அவர்கள் மீது ரெய்டு நடத்த என்ன காரணம்? 

"ஊழல் எதிர்ப்பு என்பது எங்கள் கொள்கை. எங்கள் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சியாகவே இருந்தாலும்கூட இந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்."

அடுத்த கட்டுரைக்கு