Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை.

‘என்னை, கட்சியிலிருந்து நீக்கிப் பாருங்கள்’ என்கிறரே பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா?


மகன் மத்திய அமைச்சராக இருக்கும் போது, அப்பாவை நீக்குவார்களா? அதுவும் வாஜ்பாய் அரசாங்கத்தில் முக்கியமான இடத்தை வகித்தவர். இன்று, அவரது ஒவ்வொரு சொல்லும் அகில இந்திய செய்தியாகிறது. அவருக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல், அவரைக் குற்றம் சொல்வதன் மூலமாக வாஜ்பாய் அரசாங்கத்தையும் சேர்த்து குற்றம் சாட்டியுள்ளார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. இதிலிருந்தே யஷ்வந்த் சின்காவின் முக்கியத்துவம் புரிகிறது.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை - 14.

தாஜ்மஹாலைச் சுற்றுலா தலங்களின் பட்டியலிலிருந்து உ.பி அரசு நீக்கிவிட்டதே?


நல்லவேளை, தாஜ்மஹாலை நீக்கவில்லை என்று சந்தோஷப்படுங்கள். எதிர்ப்பு வலுப்பட்டதும், ‘இது இந்திய மக்களின் வியர்வையில் உருவானது’ என்று சொல்லிச் சமாளித்துவிட்டார், உ.பி முதல்வர் ஆதித்யநாத். அரசாங்கத்தால் அறிவிக்கப்படுவதால் தாஜ்மஹால் போன்ற சுற்றுலா தலங்களுக்குக் கூட்டம் கூட்டமாக மக்கள் செல்வதில்லை. மக்கள் செல்வதால் அவை சுற்றுலா தலங்களாக அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகின்றன.

கழுகார் பதில்கள்!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

‘தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதனை வேண்டாம் என்று சொல்வதற்கு ஒரு கூட்டம் உள்ளது’ என்று சொல்கிறாரே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்?


தமிழகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி, எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவாருங்கள். யார் எதிர்ப்பார்?

இலங்கையால் பாதிக்கப்படும் தமிழக மீனவர், பாகிஸ்தானால் பாதிக்கப்படும் குஜராத் மீனவர் நலன்காக்க கூட்டமைப்பு தொடங்குங்கள். அதை யார் எதிர்ப்பார்? காவிரி மேலாண்மை ஆணையம் அமையுங்கள். யார் எதிர்ப்பார்?

இவையெல்லாம் மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள் தான். இவற்றை நிறைவேற்றுங்கள். யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

கழுகார் பதில்கள்!

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

மகாத்மா காந்தியின் மரணம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறதே?


மகாத்மாக்களுக்கு மரணமில்லை.

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

அரசியல் என்றதும் ஒரு கண்ணியமான எண்ணம் வர மறுப்பது ஏன்?

கண்ணியமற்றவர்கள் கையில் அது சிக்கியிருப்பதால். ஒரு காலம் இருந்தது. ‘நாட்டுக்காகத் தியாகம் செய்ய வந்தார்கள்’ என்று. அடுத்து, காலம் மாறியது. ‘நாட்டுக்காகச் சேவை செய்ய வந்தார்கள்’ என்று. அடுத்து, காலம் இன்னும் மாறியது. ‘பொதுவாழ்க்கையில் இருக்கிறார்’ என்றார்கள். இப்போது, ‘அவருக்கென்ன... அரசியலில் இருக்கிறார்... எந்தக் கவலையுமில்லை’ என்கிறார்கள்.

மக்களுக்காகத் தியாகம் செய்வது, சேவை செய்வது என்பதுபோல, ஒருவர் அரசியலுக்கு வருவது என்பது, ‘அவருக்கு எந்தக் கவலையும் இல்லை’ என்று நினைக்கும் பிசினஸாக மாறிவிட்டது.  முதலீடு போடாத தொழிலாக மாறிவிட்டது. இங்கு கண்ணியத்துக்கு எங்கே இடம்?

தீ.அசோகன், திருவொற்றியூர்.

அன்று நடிப்பில் போட்டி போட்ட எம்.ஜி.ஆரும், சிவாஜியும் அரசியலிலும் நுழைந்தார்கள். அதேபோல் போட்டி போடும் ரஜினியும், கமலும் அரசியலுக்கு வரப்போகிறார்கள் என்றே நினைக்கிறேன். இதில் எம்.ஜி.ஆர் யார்? சிவாஜி யார்?

இவர்களில் எவருமே எம்.ஜி.ஆரும் அல்ல, சிவாஜியும் அல்ல.

கழுகார் பதில்கள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்ன ஆனார்? பேச்சையே காணோமே?


காத்திருக்கிறார். அடுத்த வாய்ப்புக்காக. திருநாவுக்கரசரை நீக்கினால், அந்த வாய்ப்பு தனக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறார் இளங்கோவன்.

மரகதம், ஓசூர்.

எவ்வளவுதான் ஊழல் புகார் எழுந்தாலும், மெளனம் காக்கிறார்களே தமிழக அமைச்சர்கள்?


அவர்களது மெளனத்தைக் கலைக்கும் வகையில், ஊழல் புகார் உரக்கச் சொல்லப்படவில்லை என்று அர்த்தம். மக்கள் போராட்டங்கள், ஆதாரங்கள், பத்திரிகைகள், நீதிமன்றங்கள், அரசியல் கட்சிகளின் முஸ்தீபுகள் ஆகிய அனைத்தும் ஒரே நேர்கோட்டில் குவியும்போதுதான், எலிப்பொறியில் சிக்கியதுபோல அமைச்சர்கள் சிக்குவார்கள். தப்பிக்க முடியாமல் தவிப்பார்கள். அப்போதே மெளனம் கலைப்பார்கள்.

கழுகார் பதில்கள்!

திருப்பூர் அர்ஜூனன். அவிநாசி.

‘கவர்ச்சியான பக்கமெல்லாம் காலடி வைக்கிறவன், எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் ஒரே ஒரு துறையில்தான் முன்னேறு வான். மற்றபடி, குழப்பத்தில் வாழ்ந்து மடிந்து போவான்’ என்று கண்ணதாசன் சொல்வது நிதர்சன உண்மைதானே?

கண்ணதாசன் அன்று யாருக்காக, என்ன நோக்கத்தில் சொன்னார் எனத் தெரியவில்லை. ஆனால், இப்போது நீங்கள் யாருக்காக இதனை ஞாபகப்படுத்துகிறீர்கள் என்று தெரிகிறது.

வி.ஐ.பி கேள்வி

கழுகார் பதில்கள்!

எவிடென்ஸ் கதிர் - மனித உரிமை செயற்பாட்டாளர்

பிற்போக்குத்தனங்கள் மிகுந்த மாநிலங்கள் கூட தங்களுக்கான அரசியல் தலைவர்களை மிகச் சரியாகத் தேர்ந்தெடுக்கின்றன. ஆனால், சமூகநீதி மற்றும் வகுப்புவாத எதிர்ப்பு என முற்போக்கு விஷயங்களில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்குகிற தமிழகம் மட்டும், அரசியலையும் சினிமாவையும் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் குழம்புவது ஏன்?


அரசியலையும் சினிமாவையும் பிரித்துப்பார்க்கத் தெரியவில்லை என்று சொல்ல முடியாது. எம்.ஜி.ஆர் வென்ற இந்த நாட்டில்தான் சிவாஜி தோற்றார். ரஜினிக்கும் கமலுக்கும் விஜய்க்கும் வரவேற்பு வளைவுகள் வைக்கப்படும் இந்த மாநிலத்தில்தான் டி.ராஜேந்தரும், பாக்யராஜும், ராமராஜனும், சரத்குமாரும் தங்களின் கனவுகள் நிறைவேறாமல் கரைந்துபோனார்கள். பிரித்துப் பார்க்கத் தெரிந்ததன் விளைவுகள்தான் இவை.

சினிமாக்காரர்களுக்குக் கவர்ச்சியும், புகழும், அதனால் விளம்பரமும் அதிகமாக இருப்பதால், அதையே அரசியல் முதலீடாக மாற்ற நினைக்கிறார் கள். அந்தக் கவர்ச்சியையும், புகழையும், விளம்பர வெளிச்சத்தையும் மீறி நிற்கக்கூடிய அரசியல் தலைமைகள் இல்லாமல் போனதுதான் சிக்கலே. பெரியாரும், காமராஜரும், ஜீவாவும், அண்ணாவும் இருந்த காலத்திலும் நடிகர்கள் இருந்தார்கள். அரசியல் நோக்கங்களைப் பூர்த்திசெய்யும் தலைவர்களாக அவர்கள் இருந்ததால் அவர்களை மீறிய வேறொரு தேடல் பொதுமக்களுக்கு இல்லை. அதுபோன்ற மனிதர்கள் இல்லாமல் போனதால், திரையில் தேடுகிறார்கள் தலைவர்களை.

கொள்கைசார் அரசியல் முன்னெடுக்கப்பட்டால், அரசியல் பக்கமே நடிகர்கள் தலைவைத்துப் படுக்க மாட்டார்கள்.

 கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:  
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!