``நாத்திகவாதி ஒருவருக்கு, முக்திக்காகப் பிரார்த்திப்பது மகா துரோகம்" எனவும், "மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு மோட்ச தீபம் ஏற்றக் கூடாது'' எனவும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே வருகின்றனர். மு.கருணாநிதிக்குப் புகழ் இரங்கல் கூட்டம் நடத்தி, மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்வைக் கண்டித்துதான் இத்தனை சர்ச்சைகள் சுழன்றுகொண்டிருக்கின்றன.
ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையம் சார்பில், நாளை (4.9.2018), இந்த நிகழ்வு சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ளது. அதன் நிறுவனச் செயலரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். அந்த நிகழ்வில், `வழிபாடும் வாழ்த்தும்' என்ற பெயரில் திருவாசகம், தேவாரம், திவ்யப்பிரபந்தம், திருவருட்பா உள்ளிட்ட ஆன்மிகப் பாடல்கள் பாடப்பட இருக்கின்றன. கண் பார்வையற்ற பள்ளி மாணவர்கள் கருணாநிதிக்காக நினைவுச்சுடர் ஏற்றிவைக்க இருக்கிறார்கள். ராமாநுஜர் குறித்து ஆய்வுசெய்து, தொடராக வெளியிட்ட கருணாநிதிக்கு 1008 வைணவ பாகவத அடியார் குழுக்களால் ராமாநுஜர் நூற்றந்தாதி தமிழ்மறை அரங்கிசை முற்றோதல் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியின் இறுதியில், கருணாநிதியின் ஆத்மா சாந்தியடைய, மோட்ச தீபம் ஏற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வைக் கண்டித்து, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காகத் திருக்கோஷ்டியூர் மாதவன் அழைக்கப்பட்டிருக்கிறார். அவரைக் கண்டித்தும் பல கோஷங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இதையடுத்து, `கருணாநிதிக்கு மோட்ச தீபம் எதற்காக ஏற்றப்படுகிறது' என்பது குறித்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார். அதன் பிறகுதான் அவரை, சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகத் தாக்கி எழுதிவருகிறார்கள், அவரது சமூகத்தைச் சேர்ந்த சிலர். கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதியே மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினம் தி.மு.க-வின் பொதுக்குழு நடைபெற்றதால், செப்டம்பர் 4-ம் தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட சமூகத்தினரின் எதிர்ப்பால்தான், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையம், இந்த நிகழ்வு நிச்சயம் நடக்கும் என்று கூறி, தேதியை மட்டும் மாற்றி வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளாராக இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கும் திருக்கோஷ்டியூர் மாதவன், மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்று பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில், ``நாத்திகவாதி ஒருவருக்கு முக்திக்காகப் பிரார்த்திப்பது மகா துரோகம் என்கிறார். இது முற்றிலும் தர்மத்துக்குப் புறம்பானது. கருணாநிதி 99 சதவிகிதம் இறை மறுப்புக் கொள்கையாளராக இருந்தாலும், ராமாநுஜர் குறித்து 'மதத்தில் புரட்சி செய்த மகான்' என்று தொடர்ந்து எழுதியும், அதைக் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் ஆவண செய்தார். திருவரங்கம் கோயிலில் கும்பாபிஷேகம் செய்தபோது, திருப்பணியில் எம்பெருமானின் திருமேனியில் மகாலட்சுமி வாசம் செய்யும் இடம் பிண்ணமாகி இருந்தது. அதைச், சரி செய்யச் சொல்லி ஸ்தபதியிடம் கூறினோம். ஆனால், ஸ்தபதி அதை மறுத்துவிட்டார். இதையடுத்து, அதைக் கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். உடனே, இந்தப் பிரச்னையில் தலையிட்டு, சுமுகமாகத் தீர்த்துவைத்தார். இறை நம்பிக்கையுள்ளவர்கள் ஆட்சியில் இருந்தபோது, திருப்பணிகளிலும் வழிபாடுகளிலும் பல தொய்வுகள் ஏற்பட்டன. ஆனால் கருணாநிதி, காலத்தில் கோயில்களில் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்றன. நான் அரசியல் பேசவில்லை. எனக்கும் தி.மு.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; அவர்களின் கொள்கைக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, அந்தந்தக் கோயில்களுக்கு உரிய நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு வந்த ஆட்சியில், சம்பந்தமே இல்லாமல், சிலரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வேறு நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடத்தினார்கள். ராமாநுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திரத்தில், நாத்திகவாதியான கருணாநிதி தன் கையால் ராமாநுஜரின் சரித்திரத்தை எழுதியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவருக்கு மோட்ச தீபம் ஏற்றுவதில் என்ன தவறு? எத்தனையோ திருப்பணிகளில் தலையிடாமல், சிறப்பாக நடத்த உத்தரவிட்டாரே, இதற்காகவது, மோட்ச தீபம் ஏற்ற வேண்டும்.
சிவன் கோயிலை இரவோடு இரவாக இடித்துத் தரைமட்டமாக்கியபோது உங்கள் நெஞ்சம் வெடிக்கவில்லையா, பெரிய பெருமாளுக்கும் இன்னும் சில திவ்ய தேசங்களுக்கும் ஆபத்து தோன்றியபோது உங்கள் நெஞ்சம் வெடிக்கவில்லையா? ஏன், இதையெல்லாம் செய்தது உங்களைச் சேர்ந்தவர்கள்தானே? பூணூல் போட்டவர்கள் இதுபோன்ற தவறுகள் செய்தால் அது தர்மம்; அதுவே பூணூல் போடாதவர்கள் செய்தால் அது அதர்மமா? யோசித்துப் பாருங்கள், நாம் சமதர்மவாசியாக இருக்க வேண்டும். இறந்தவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பது நம் சமூகத்தினரின் கடமை'' என்று அதில் பேசி இருக்கிறார்.
இவரது பேச்சு, தற்போது பல சர்ச்சைகளைக் கிளப்பி இருக்கிறது. திருக்கோஷ்டியூர் மாதவனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் அவரின் சமூகத்தைச் சேர்ந்த பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருக்கோஷ்டியூர் மாதவனைத் தொடர்புகொண்டு பேசிய போது, ''கருணாநிதிக்கு மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்வை, பொது சமூகத்தினர்தான் நடத்துகிறார்கள். அதில், நான் ஓர் அழைப்பாளராக மட்டுமே கலந்துகொள்கிறேன். இறந்துபோன ஒருவருக்காகப் பிரார்த்திப்பதும், அவரின் ஆன்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றுவதும் கடமை'' என்று முடித்துக்கொண்டார்.
பின்குறிப்பு: திருக்கோஷ்டியூர் மாதவன் அவர்களின் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தால் கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.